தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

தலையங்கம்: ஆகட்டும் பார்க்கலாம்!

புலியைப் பார்த்துப் பூனை சூடு போட்டுக் கொண்ட கதையாக, உலக வங்கி மற்றும் சர்வதேச நிதி ஆணைய அதிகாரிகளின் வழிகாட்டுதலை ஏற்றுக்கொண்டு சந்தைப் பொருளாதாரத்தை நாம் ஏற்றுக் கொண்டதன் விளைவுகளை தற்போது சந்தித்து வருகிறோம். சந்தைப் பொருளாதாரத்தை வரித்துக் கொண்டிருக்கும் அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியன் நாடுகளும் நேர்கொள்ளும் பொருளாதாரத் தடுமாற்றங்களுக்கு நாமும் ஆள்பட்டாக வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்.இந்த நிலையில், ரிசர்வ் வங்கி நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டு கணக்கெடுப்பு ஆய்வின் அடிப்படையில் சில மாற்றங்களை ஏற்படுத்த இருப்பதாக அறிவித்திருக்கிறது. சாதாரண இந்தியனின் கைக்கு எட்டாத உயரத்தில் பறந்துவிட்டிருக்கும் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவும், அதேநேரத்தில் தனியார் நிறுவனங்களின் உற்பத்தி பாதிக்கப்படாமல், விற்பனை குறைந்துவிடாமல் அதன் தொடர்விளைவாக பங்குச் சந்தையில் பாதிப்பு ஏற்பட்டுவிடாமல் பாதுகாக்கவும் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள ரிசர்வ் வங்கி உத்தேசித்திருப்பதாகத் தெரிகிறது.உணவுப் பொருள்களின் விலையும் சரி, நுகர்வோர் தேவைகளும் சரி இரண்டு இலக்க விலைவாசி உயர்விலிருந்து இன்னும் கணிசமாக இறங்கி வரவில்லை. ஓரளவுக்குக் கட்டுக்குள் வந்திருக்கிறது என்று வேண்டுமானால் சொல்லலாம். ஏனைய பொருள்களின் விலைகள் அரசின் கட்டுப்பாட்டு முயற்சிகளைப் பற்றிக் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. சாதகமான பருவநிலை, எதிர்பார்ப்புப் பொய்க்காமல் உணவு உற்பத்தி, உலக கச்சா எண்ணெய் விலையில் மாற்றமின்மை என்று சாதகமான நிலைமை இருக்குமேயானால், விலைவாசி ஏற்றம் அடுத்த நிதியாண்டுக்குள் 6 விழுக்காடாகக் குறைந்துவிடும் என்று ரிசர்வ் வங்கி எதிர்பார்க்கிறது.நாம் உலகமயமாக்கல் கொள்கையை ஏற்றுக் கொண்டதுமுதல், நமது உள்நாட்டுப் பொருளாதாரத்தையும், நமது நிதிநிர்வாகத்தையும் நிர்ணயிப்பது நமது உற்பத்தியோ, சேமிப்போ, செலவினங்களோ அல்ல. நமது ஏற்றுமதி, இறக்குமதி விகிதம் கட்டுக்குள் இருந்தாலும்கூட, நமது பொருளாதாரத்தை உலக நிகழ்வுகள் தீர்மானிக்கத் தொடங்கிவிட்டன. இதற்கு முன்பே ஒரு தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்தபடி, தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனைமரத்தில் நெறி கட்டும் விந்தையை, அமெரிக்கப் பொருளாதாரத் தடுமாற்றம் இந்தியாவைப் பாதித்தபோது நாம் சந்திக்க நேரிட்டது.ஐரோப்பிய யூனியனில், குறிப்பாக கிரேக்க நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதாரத் தடுமாற்றம் ஐரோப்பிய நாடுகளை மட்டுமல்ல, உலக நாடுகளையே பாதித்திருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை அன்னிய முதலீடுகள் கணிசமாகக் குறைந்திருக்கின்றன. அன்னிய முதலீடு குறையும்போது, வெளிவர்த்தகப் பற்றுவரவு (பாலன்ஸ் ஆப் பேமண்ட்) தடுமாற்றம் காண்பதைத் தவிர்க்க இயலாது. இதை முன்யோசனையுடன் நேரிட நமது ரிசர்வ் வங்கி எடுக்க இருக்கும் முடிவுகள், பல இந்திய முதலீட்டாளர்களை, குறிப்பாக ஓய்வூதியம் பெறும் நடுத்தர வர்க்கத்தினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.கடந்த 1996 முதல் நமது நிதியமைச்சகம் வங்கிகளில் போடப்படும் நிரந்தர வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை 12 விழுக்காட்டிலிருந்து படிப்படியாகக் குறைத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தது. மேலைநாடுகளில் குறைந்த வட்டிக்குக் கடன் கிடைப்பதால் பலரும் அங்கே கடன் பெற்று இந்தியாவில் உள்ள அரசு வங்கிகளில் வைப்பு நிதியாகப் போட்டு வட்டி வித்தியாசத்தில் கோடீஸ்வரர்களாகி விடுகிறார்கள் என்று இதற்கு ஒரு காரணம் காட்டப்பட்டது. மேலும், வைப்பு நிதிக்கு அதிக வட்டி தரும்போது கடன் வழங்கும்போது அதற்கான வட்டி விகிதமும் அதிகரிப்பதால் தொழில் தொடங்க முன்வருபவர்களை ஊக்குவிக்க முடியவில்லை என்பது சொல்லப்பட்ட இன்னொரு காரணம்.பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தினர்தான் தாங்கள் சிறுகச் சிறுகச் சேர்த்ததையும், ஓய்வுபெறும்போது பெற்ற பணிக்கொடை, வருங்கால வைப்பு நிதி போன்ற சேமிப்புகளையும் பாதுகாப்புக் கருதி அரசு வங்கிகளில் நிரந்தர வைப்பு நிதிகளாகப் போட்டு வைத்திருந்தனர். அரசு வங்கிகளில் பணத்தைச் சேமிப்பதில் இருக்கும் பத்திரத்தன்மை இதற்கு ஒரு முக்கிய காரணம். இந்தியப் பொருளாதாரம் சந்தைப் பொருளாதாரமாக மாற்றப்பட்டாக வேண்டும் என்கிற புதிய பொருளாதாரக் கொள்கை இந்தப் பத்திரத் தன்மையை ஏற்றுக் கொள்ளவில்லை. வங்கிகளின் வட்டி விகிதத்தைக் குறைப்பதன் மூலம், அவர்களைப் பங்கு மார்க்கெட்டில் பணத்தை முதலீடு செய்ய ஊக்குவிப்பது என்று  கொள்கை முடிவு செய்யப்பட்டது.பங்கு மார்க்கெட்டில் பணத்தைப் போட்டு விவரமில்லாமல் சூதாடி நஷ்டமடைந்த நடுத்தர வர்க்கத்தினரின் சோகக் கதைகளை சுதந்திர இந்தியாவின் சரித்திரம் பதிவு செய்யப் போவதும் இல்லை. அவர்களுக்காக நமது சந்தைப் பொருளாதார மேதைகள் அனுதாபப்படவும் போவதில்லை.இப்போதும் வங்கிகளில் பழைய நிலைமையிலான வட்டி விகிதம் வைப்பு நிதிக்கு வழங்கப்படுமானால், தங்கத்தில் முதலீடு செய்வதையும், பங்கு மார்க்கெட்டில் தங்களது அதிர்ஷ்டத்தைச் சோதனை செய்வதையும் விட்டுவிட்டு, பலரும் வங்கிகளிலான நிரந்தர வைப்பு நிதியில்தான் முதலீடு செய்வார்கள் என்பதும் நிஜம்.வங்கிகளின் நிரந்தர வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்த இருக்கிறது. புத்திசாலித்தனமான முடிவு. வரவேற்போம். வாகனக் கடனுக்கான வட்டி விகிதத்தை அதிகரிக்க யோசிக்கிறது. அதுவும்கூட ஏற்புடையதே. தொழில் முனைவோருக்கான வங்கி வட்டி விகித அணுகுமுறையில் மாற்றம் இருக்கப் போவதில்லை. உற்பத்திப் பின்னடைவு தடுக்கப்படும். வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் அதிகரிப்பு என்பது மட்டும்தான் ஏற்புடையதாகத் தெரியவில்லை.சேமிப்பை அதிகரிப்பது; மக்களின் கடன் வாங்கும் போக்கைக் கட்டுப்படுத்திக் குறைப்பது - இதுதான் சரியான நிதிநிர்வாகமாக இருக்க முடியும்! அதை ரிசர்வ் வங்கி உணரத் தொடங்கி இருப்பதுபோலத் தெரிகிறது. காலம் கடந்தாவது யோசிக்கத் தொடங்கி இருக்கிறதே, மகிழ்ச்சி!