எங்கே வந்து முடிந்திருக்கிறது என்பதைச் சொல்லும் கதை.
ஐஸ்வர்யாராய்... ஐஸ்வர்யாராய்... என்னும் முன்னாள் உலகப் பேரழகியும்,
சல்மான்கான்... சல்மான்கான்... என்கிற இந்திப்பட நடிகரும் முன்னொரு
காலத்தில் நகமும் சதையுமாக இருந்து வந்தனர். பிற்பாடு யாருடைய கண்ணோ
காதோ பட்டதோ தெரியாது அந்த உறவு அம்போன்னு ஆக... ஐஸ்வர்யாராய் தனக்கு
ஆப்பு வைத்துவிட்டதாக நினைத்த சல்மான்கான் சலம்போ சலம்பென்று சலம்ப அது
போலீஸ் ஸ்டேசன் வரை போனது.
இது சினிமா செய்திகளைக் கண்ணும் கருத்துமாக வரி விடாது வாசிக்கும்
சகலருக்கும் தெரிந்த விசயம்.
அப்போது பார்த்து கண்ணியவானாய் உலக அழகியின் கண்முன்னே வந்து நின்ற
நடிகர் விவேக் ஓபராய் "சகல ஆறுதலின் தேவனாக" அவதாரம் எடுக்க... அதுவும்
கொஞ் சகாலம் ஓடியது.
ஐஸ்வர்யாராயின் அன்பைப் பெற அலப்பறை வழிமுறை செல்லுபடியாகாது என்பதைப்
புரிந்து கொண்ட மிஸ்டர். கண்ணியம், சலம்பல் சிங்கத்தின் கதி தனக்கும்
நேர்ந்துவிடக் கூடாது என்று முடிவுகட்டி சமூகசேவை சிங்கமாக அவதாரம்
எடுத்து சுனாமிக் கரையோரங்களில் சுற்றி வந்தார்.
ஆனால் அந்த ஆசாமிக்கும் வந்தது ஆப்பு அமிதாப்பச்சன் மகன் அபிசேக்பச்சன்
வடிவத்தில். அந்த அபிசேகப்பச்சனை கரம் பிடித்ததன் மூலம் ஆப்புகள் முறையே
சல்மான்கான் மற்றும் விவேக் ஓபராய் இருவருக்கும் சரிசமமாக
அடிக்கப்பட்டது. ஐஸின் ஆப்பால் அல்லோலகல்லோலப்பட்ட இருவரும் மரியாதை
நிமித்தமான மறு ஆப்புக்காகக் காத்திருந்த வேளையில்தான்...
இடைவேளை!
ஈழத்தில் சிங்களக்காடையர்களின் வெறியாட்டம் உச்சகட்டத்தை அடைந்ததும்
ஈவிரக்கமற்ற இனப்படுகொலையின் விளைவாக மயான அமைதி ஏற்படுத்தப்பட்டதும்
நடந்து முடிந்தது. ரத்தக்கறைகளை மறைக்க கேளிக்கை விழாக்களை கொண்டாட
வேண்டிய நிர்பந்தம் சிங்கள அரசுக்கு ஏற்பட்டது.
இந்த வேளையில்தான் இந்திய சர்வதேச திரைப்பட விழாவை கொழும்பில் கொண்டாட
அழைப்பு விடுக்கப்பட்டது. ''படுகொலைகளை மறைக்கத்தான் இந்தக்கூத்தும்
கும்மாளமும் இதில் எக்காரணம் கொண்டும் கலந்துகொண்டு விடாதீர்கள்" என
ஒட்டுமொத்த தமிழர்களது வேண்டுகோளையும் ஏற்று தமிழ்த் திரையுலகம்
மட்டுமல்லாது அமிதாப்பச்சன், ஷாருக்கான், ஐஸ்வர்யாராய், அமீர்கான்,
அபிஷேக்பச்சன் உட்பட பலர் இதில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தனர் என்பது
நாம் ஏற்கனவே அறிந்த செய்தி.
அதுவும் அதன் தூதுவராக இருந்த அமிதாப்பச்சனே தமிழர்களது வேண்டுகோளை
ஏற்று புறக்கணித்துவிட்டார் என்கிற செய்தி அவரது மருமகளின் ஆப்புகளால்
ஏற்கனவே அவதிப்பட்டு வந்த சல்மானுக்கும், அந்த ஓபராயுக்கும் ஏகப்பட்ட
எரிச்சலை ஏற்படுத்த... எதிரிக்கு எதிரி நண்பன் என்கிற ஒரு புரிந்துணர்வு
ஒப்பந்தம் ஏற்பட்டது அவர்களுக்குள்.
''மேய்ச்சா .... மேய்ப்பேன் இல்லாட்டி பரதேசம் போவேன்" என்று
ஒற்றைக்காலில் நின்றிருந்த இந்த இரண்டும் ''நீ இலங்கை போகாட்டி என்ன?
நாங்க போய்த்தான் தீருவோம். எந்தத் தமிழன் எதிர்க்கிறான்
பார்ப்போம்..." என்று தொடைதட்டிக் கிளம்பின.
அப்போதுதான் அரங்கேற ஆரம்பித்தது 'அறக்கட்டளை அரசியல்.' அதுவும் அறமே
இல்லாத நாட்டில்.
கொலைபாதகன் ராஜபக்ஷேவின் மகன் நாமல் ராஜபக்ஷே, தான் நடத்தி வரும்
'அறக்கட்டளை' யின் பெயரால் இலங்கையில் ஒரு விழாவை ஏற்பாடு பண்ண...
இந்தியாவில் 'அறக்கட்டளை' ஒன்றை நடத்திவரும் ஆப்பழகன் ஓபராய் அங்கு போய் இறங்க...
ஏற்கனவே மொரீசியசில் 'ரெடி' என்கிற தனது இந்திப்பட சூட்டிங்கை
நடத்துவதாக இருந்த முதலாம் ஆப்பழகன் சல்மான்கான் அதனை இலங்கைக்கு
மாற்றிக் கொண்டு கொழும்பில் கால்வைக்க...
எங்கியோ போற மாரியாத்தா...
எம்மேல வந்து ஏறாத்தா... என்கிற கதையாக ஏற்கனவே துயரத்தின் விளிம்பில்
நிற்கும் தமிழர்கள் மீது வந்து ஏறின இந்த ரெண்டு ஜென்மங்களும்.
கதாநாயகன் போனால் கதாநாயகி போக வேண்டாமா? அப்படிப் போனவர்தான் சேச்சி அசின்.
"என்னாத்தை சொல்வேணுங்கோ... வடு மாங்கா ஊறுதுங்கோ" என்று தமிழகத்தில்
'கலைச்சேவை' செய்து கொண்டிருந்த அசின் 'தயிர்சாதம் ரெடி பண்ண'
இந்திக்குத் தாவினார். அப்படியே இந்தி 'ரெடி' சூட்டிங்குக்காக
இலங்கைக்கும் தாவினார்.
ஈழத் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கும் வரை இலங்கையைப் புறக்கணிக்க
வேண்டும் என்ற தமிழ்த்திரை உலகினரின் தடை உத்தரவை தூக்கி குப்பைக்
கூடையில் வீசிவிட்டு ''ஐபா (திரைப்படவிழா) பிரச்னை முடிந்து விட்டது.
இலங்கைக்குள் செல்ல தொழில் துறையினருக்கும், விளையாட்டுத்
துறையினருக்கும் தடையில்லை. கலைஞர்களான எங்களுக்கு மட்டும் ஏன் தடை
விதிக்க வேண்டும்? இதையும் மீறி தடை விதிக்கப்பட்டால் அது குறித்து நான்
கண்டுகொள்ள மாட்டேன்" என்று முதலில் திமிர்த்தனமாக சிங்கள அரண்மனையில்
இருந்து பேட்டி கொடுத்தார் அசின்.
ஒருவேளை நாளை இந்திப்பட உலகம் தனக்கு அல்வா கொடுத்துவிட்டால்
தமிழ்நாட்டுப் பக்கம் தப்பித்தவறிக்கூட தலைவைத்தும் படுக்கமுடியாதே என்ன
செய்ய?
அட... இருக்கவே இருக்கு 'அறக்கட்டளை டெக்னிக்'.
ஒன்றைரை மாதமாய் ஈழத்தமிழர் அவலம் குறித்து அமைதி காத்த அம்மணி, வாழும்
தெரசாவாய் அவதாரம் எடுத்தார்.
''தமிழ் மக்களைக் காப்பாற்ற அறக்கட்டளை ஒன்று ஆரம்பித்து விட்டேன். ஐந்தே
நாட்களில் 300 பேருக்கு ஆபரேஷன் ஆகிவிட்டது. இன்னும் பலருக்கு பண்ண 5
கோடி ஒதுக்கி இருக்கிறேன்" என்று அம்மக்களது கண்களைப் பிடுங்கி இந்த
கதிக்கு ஆளாக்கிய ராஜபக்ஷேவின் தர்மபத்தினியை உடன் வைத்துக் கொண்டு
அள்ளிவீசினார் அம்மணி அசின்.
ஆக இனப்படுகொலை நடத்திய ராஜபக்ஷேவின் மகனும் ஒரு அறக்கட்டளை.
அமிதாப் மருமகளை லவட்டப் பார்த்த விவேக் ஓபராயும் ஒரு அறக்கட்டளை.
இலங்கைக்கு சூட்டிங் போன அசினும் ஒரு அறக்கட்டளை.
அப்புறம் என்ன ஒரே நான்ஸ்டாப் கொண்டாட்டம்தான்.
உண்மையில் இவர்களது அறக்கட்டளைகளுக்கு எங்கிருந்து பணம் வருகிறது?
இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார், யார்?
சர்வதேச தொண்டு நிறுவனங்களைக் கூட இலங்கைக்குள் கால் வைக்க அனுமதிக்காத
சிங்கள அரசு இவர்களை மட்டும் உலா வர எப்படி அனுமதிக்கிறது?
சர்வதேச பொது மன்னிப்புச் சபை, ஐரோப்பிய யூனியனது மனித உரிமை
அமைப்புகள் என எவரையுமே அனுமதிக்காத சிங்களம் எப்படி ஓபராய்களுக்கும்,
சல்மான்களுக்கும், அசின்களுக்கும் சிவப்புக் கம்பள வரவேற்பு அளித்து,
கண்ணொளி வழங்கும் திட்டம்... காதொலி வழங்கும் திட்டம் என சகல
திட்டங்களுக்கும் அனுமதி வழங்குகிறதே... இதன் பின்னிருக்கும் திட்டம்
என்ன? இவைதான் நம் முன்னே உள்ள மிக எளிமையான கேள்விகள்.
போதாக்குறைக்கு மருத்துவமனையில் ராஜபக்ஷே பெண்டாட்டியைப் பக்கத்தில்
வைத்துக் கொண்டு பேட்டி அளித்த அசின் சேச்சி, ''இலங்கை ஒரு அருமையான
நாடு. இங்கு தமிழர்கள் அனைவரையும் அத்தனை சிரத்தையுடன் பார்த்துக்
கொள்கிறது ராஜபக்ஷே அரசு. சர்வதேச தரத்தில் இங்கு வைத்திய வசதிகள்
தரப்படுகின்றன. தமிழர்களுக்கு ராஜ வைத்தியம் அளிக்கப்படுகிறது. எனவேதான்
இங்குள்ள தமிழர்களுக்கு சுதந்திரமோ சுயாட்சியோ முக்கியமில்லை" என்று
முழங்கியதைக் கேட்டதும் நம் காலில் இருப்பதைக் கழட்டி நம்மை நாமே தலை
தலையாய் அடித்துக் கொண்டால் கூட தப்பில்லை என்று தோன்றியது.
இதற்கிடையே அறக்கட்டளை புகழ் விவேக் ஓபராயுடன் கொங்குச் சீமைச் சிங்கம்
சூர்யா சேர்ந்து நடித்த 'ரத்த சரித்திரம்' படம் வெளிவருமா வராதா என
பெங்களூர் மிரர் பத்திரிகை கேள்வி கேட்டபோது "அதெல்லாம் முடிந்து போன
கதை. விவேக் ஓபராய் செய்தது சரிதான்" என தன்னை வளர்த்து விட்ட தமிழக
மக்களுக்கும் சேர்த்து சூர்யா வைத்தார் ஒரு ஆப்பு.
எது எதன் பின்னாடி அலைஞ்சா என்ன?
எது எதைக் கல்யாணம் கட்டிகிட்டா என்ன?
எது எதை ஆப்படிச்சா என்ன?
இந்தக் கர்மம் எல்லாம் நமக்குத் தேவையா? என நீங்கள் எரிச்சலின்
உச்சத்தில் நின்று கேட்பது புரிகிறது.
என்ன செய்ய? கண்ட கண்ட கருமாந்திரமெல்லாம் விடுதலைக்காக ஏங்கித்
தவிக்கும் ஒரு இனத்தின் தலையில் கை வைக்கிறதே... அதன் பின்னணி என்ன...
யார் இயக்குகிறார்கள் என்கிற சதிகளையெல்லாம் புரிந்து கொள்ள
வேண்டுமானால் சில கழிசடைகளின் கடந்த காலத்தையும் கவனித்துதான் தீர வேண்டி
இருக்கிறது.
அதன் விளைவே துர்நாற்றம் வீசும் இந்த ஆப்பு வரலாறு.
யானை இளைத்தால், 'குடும்பம் நடத்தலாம் வா' என்று எலி கூப்பிடுமாம். அதைப்
போல ஆயிற்று தமிழர்களின் நிலை.
ஆனால் கவலையும் கோபமும் பொங்க தமிழீழ மக்களும் தமிழக மக்களும் இவர்களது
ஆட்டத்தை அவதானித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
அது சல்மான்கானாய் இருந்தாலும் சரி...
சேச்சி அசினாயிருந்தாலும் சரி...
விவேக் ஒபராயாய் இருந்தாலும் சரி...
அந்த ஜந்துவுக்கு ஒத்தூதும் சூர்யாவாகவே இருந்தாலும் சரி... யாராக இருந்தாலும்
சரியான நேரம் வரும்போது ஒட்டுமொத்தத் தமிழர்களும் சேர்ந்து வைப்பார்கள்
ஒரு ஆப்பு.
ஆனால் அது சாதாரண ஆப்பாக இருக்காது... உலகத் திரைப்பட வரலாற்றில் முதல்
முறையாக வைக்கும் மெகா ஆப்பாக இருக்கும் அது!