தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

இந்த நாடகம் தேவைதானா?

ஜூலை 15 -ம் தேதி முதல் 3 நாட்கள் பாகிஸ்தானில் அந்நாட்டு
வெளியுறவுத்துறை அமைச்சர் குரேஷியுடன் இந்திய வெளியுறவு அமைச்சர்
எஸ்.எம்.கிருஷ்ணா நடத்திய பேச்சுவார்த்தைகளின் முடிவில் இருவரும்
சொன்னது என்ன? கிருஷ்ணா: "இந்தப் பேச்சுவார்த்தை இரு தரப்பினரும்
ஒருவரையொருவர் புரிந்து கொள்ள உதவியுள்ளது. எனவே இது ஒரு பயனுள்ள
பேச்சுவார்த்தைதான்."

குரேஷி: "இந்தப் பேச்சுவார்த்தை ஒரு முடிவுக்கு வரவில்லை என்பதைத் தவிர
வேறொன்றும் கூறுவதிற்கில்லை"

'பாகிஸ்தான் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ.தான் மும்பை தாக்குதலை முன்நின்று
நடத்தியது' என்று ஹெட்லி சாட்சியம் அளித்ததோடு, மும்பை தாக்குதலில்
ஈடுபட்ட 10 பாகிஸ்தான் தீவிரவாதிகளை வழி-நடத்திப் பேசிய
பேச்சுவார்த்தைகளின் தொலைபேசி பதிவு-களி-லிருந்து இரண்டு ஐ.எஸ்.ஐ.
அதிகாரிகளின் குரல்களை ஹெட்லி அடையாளம் காட்டினான். அதன்பிறகும்
பாகிஸ்தானில் சுதந்திரமாக உலவும் லஷ்கர் இயக்கத் தலைவன் ஹபீஸ் சையத்தின்
மீதோ, தொடர்புள்ள மற்றவர்கள் மீதோ எந்த நடவடிக்கையும் எடுக்காத
பாகிஸ்தானுடன் ஓர் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையை நடத்த முடியாது என்று
தெரிந்திருந்தும், இந்த பேச்சுவார்த்தை நாடகத்தில் இந்தியாவும் நடித்துக்
கொண்டிருப்பது ஏன்?

இப்பேச்சுவார்த்தைகளின் போது குரேஷி பேசிய பேச்சுக்களில் இருந்து
அவர்களின் சிரத்தை இன்மையை யாரும் எளிதில் புரிந்து கொள்ளலாம்.
"பேச்சுவார்த்தையின் போது இந்திய வெளியுறவு அமைச்சர் அடிக்கடி வெளியே
சென்று, டெல்லியுடன் தொலைபேசியில் உரையாற்றிக் கொண்டிருந்தார்.
இதிலிருந்து எந்த முடிவும் எடுக்கும் அதிகாரத்துடன் அவர் இங்கு வரவில்லை
எனத் தெரிகிறது."

உண்மையில் இவரது அரசுக்குத்தான் எந்த முடிவும் எடுக்கும் உரிமை இல்லை.
எடுத்தாலும் அதனை இவர்களால் அமுல்படுத்த முடியாது. இந்தியாவின் முன்னாள்
வெளியுறவுத் துறைச் செயலர் ஏ.ஜி.பார்த்தசாரதி 'பாகிஸ்தான் அரசுக்கு
பொறுப்பு உண்டு; ஆனால், அதிகாரம் இல்லை. பாகிஸ்தான் ராணுவத்திற்கு
பொறுப்பு இல்லை; ஆனால் அதிகாரம் உண்டு' என்று கூறியது போல்,
பாகிஸ்தானில் இரட்டைத் தலைமை நீண்டகாலமாக நிலவி வருகிறது.

'பயங்கரவாதத்தை மட்டும் இந்தியா முன் நிறுத்திப் பேசுகிறது. காஷ்மீர்
உள்ளிட்ட எல்லாப் பிரச்னைகளையும் பேசவேண்டும்.' இதுவும் குரேஷி உதிர்த்த
முத்துக்களில் ஒன்று. இதை இந்தப் பேச்சுவார்த்தைக்குப்பின் பாகிஸ்தான்
சென்றுள்ள அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஹிலாரி கிளிண்டனும்
வழிமொழிந்துள்ளார். 'நீண்ட காலமாக இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும்
இடையே பிளவை உருவாக்கி வரும் காஷ்மீர் பிரச்னையை உடன் தீர்க்க வேண்டும்
என்பதுதான், பாகிஸ்தான் மற்றும் அமெரிக்காவின் கூட்டு ஆவல்' என்று அவர்
கூறியுள்ளார். இதன்மூலம் காஷ்மீர் இந்தியாவின் பகுதி என்பதை அவர்
மறுப்பதோடு, அது சர்ச்சைக்குரிய பகுதி என்றும் பகர்ந்துள்ளார்.

குரேஷி அத்தோடு நிறுத்திவிடவில்லை. மும்பை தாக்குதலில் ஐ.எஸ்.ஐ.ன் பங்கு
உள்ளதாக ஹெட்லி தெரிவித்ததை இந்தியாவின் உள்துறைச் செயலர் பிள்ளை
பத்திரிகையாளர் கூட்டத்தில் தெரிவித்-ததற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த
குரேஷி, அவரை பயங்கரவாதி ஹபீஸ் சயத்துடன் ஒப்பிட்டுப் பேசியுள்ளார்.

'குறிப்பிட்ட காலவரையறையுடன் கூடிய பயன்தரும் பேச்சுவார்த்தை
இல்லை-யென்றால், அடுத்து நடைபெற இருக்கும் டெல்லி பேச்சுவார்த்தையில்
நான் கலந்து கொள்ளப்-போவதில்லை. டெல்லிக்கு உல்லாசப்பயணம் செல்ல எனக்கு
விருப்பமில்லை' என்று தெள்ளத்தெளிவாக கூறிவிட்டார்.

அமெரிக்கச் செயலர், அவரது இந்த பொறுப்பற்ற பேச்சை கண்டித்தவுடன், தனது
பேச்சுக்கு அவர் வருத்தம் தெரிவித்து, பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான்
அரசுக்கு நம்பிக்கை இருப்பதாக அறிவித்துள்ளார். பேச்சுவார்த்தையில்
நம்பிக்கையற்ற நிலையில் பாகிஸ்தான் இவ்வாறு அறிவித்து, இந்த
பேச்சுவார்த்தை நாடகத்தை அடுத்த எல்லைக்கு எடுத்துச் செல்வது ஏன்?

அமெரிக்கா சொன்னால் கேட்கவேண்டிய நிலையில் இருநாடுகளும் உள்ளன என்பதைப்
படம் போட்டுக்-காட்டுவதைத் தவிர இந்த பேச்சுவார்த்தையால் எந்தப் பயனும்
இல்லை. ஆப்கான் தீவிரவாதிகளை ஒழிக்கும் வரை பாகிஸ்தான் படைகள் அதன்
மேற்கு எல்லையில் குவிக்க வேண்டிய தேவை இருப்பதால், இந்தியாவுடனான
கிழக்கு எல்லையில் படைக்குவிப்பை பாகிஸ்தான் தவிர்க்க வேண்டும்.
எல்லையில் பதட்டத்தை தற்காலிகமாகவாவது தணிக்க இந்தப் பேச்சுவார்த்தை
பயன்படும் என்று அமெரிக்கா கருதுவதால், இந்த நாடகம் தொடர்கிறது.

பாகிஸ்தானுடன் நாம் நடத்திய முந்தைய பேச்சுவார்த்தைகளின் நிலை என்ன?
இந்திரா காந்தியும் பூட்டோவும் ஆரவாரத்துடன் போட்ட சிம்லா ஒப்பந்தத்தை
அமல்படுத்த, பாகிஸ்தான் ராணுவம் பூட்டோவை அனுமதித்ததா? ஆக்ரா
பேச்சுவார்த்தைக்குப்பின் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய வாஜ்பாயின்
லாகூர் பயணத்தின் சில நாட்களிலேயே, பாகிஸ்தான் கார்கிலில்
ஊடுறுவவில்லையா? இதுதான் பேச்சுவார்த்தைகளுக்கு பாகிஸ்தான் அரசுகள் தரும்
மரியாதை!

ஹெட்லி கொடுத்த வாக்குமூலத்தின் மீது பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுக்க
வேண்டும் என்று கூறிய ஹிலாரி, அதன் முழுமையான விபரங்கள் தனக்குத்
தெரியாது என்று செய்தியாளர்கள் கூட்டத்தில் மழுப்பியுள்ளது அமெரிக்காவின்
இரட்டைத் தன்மைக்கு நல்ல உதாரணம். அமெரிக்கப் படைகள் ஆப்கானை விட்டு
2011&ல் வெளியேறிய பிறகு, தாலிபான் தலைமையில் உருவாக வாய்ப்புள்ள
அரசுக்கு பாகிஸ்தான் ஏற்கனவே பச்சைக்கொடி காட்டிவிட்டது.

2011 வரை தாலிபான்களை ஒழிக்க பாக். தீவிர நடவடிக்-கைகளில் ஈடுபடுமாம்.
அதன்பின் தாலிபான் அரசை நிறுவ கூட்டு நடவடிக்கைகளில் தற்போது இருந்தே
ஈடுபடுமாம். இந்த வித்தை அமெரிக்காவுக்குத் தெரியாமல் இல்லை. இருந்தும்,
ஆப்கன் போரில் தீவிரமாய் இறங்க பாகிஸ்தான் ராணுவத்திற்கு மேலும் அதிக
நவீன ஆயுதங்களை வழங்க முன்வந்துள்ளது. அந்த ஆயுதங்களை இந்தியாவிற்கு
எதிராகவே பாகிஸ்தான் பயன்படுத்தும் என்று நமது பிரதமர் அறிவுறுத்திய
பின்பும், மேலும் அதிக ஆயுதங்கள் தரப்படுகின்றன. இந்தியாவும் அதை
வேடிக்கை பார்க்கிறது.

உண்மையில் இந்தியா என்ன செய்ய வேண்டும்? பயங்கரவாதத்திற்கு உதவுவதை
பாகிஸ்தான் அரசு நிறுத்தும் வரை அதனுடன் பேச்சுவார்த்தை இல்லை என்ற
உறுதியான நிலையை எடுக்க வேண்டும். காஷ்மீர் இந்தியாவின் பிரிக்க முடியாத
பகுதி என்றும் அது குறித்து பேசுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்றும்
உறுதியான நிலையை எடுக்க வேண்டும். திபெத்தை சீனாவின் பகுதி என்பதை
ஏற்றுக் கொள்ளாத நாடுகள் தற்போது தங்கள் நிலையை மாற்றிக் கொண்டுள்ளன.
அதற்கு சீனாவின் நீண்டகால உறுதிதான் காரணம். அதே உறுதியை காஷ்மீர்
விவகாரத்தில் இந்தியா காட்டவேண்டும். அதற்கு முன்பாக காஷ்மீர் பகுதியில்
அமைதியை நிலைநாட்ட உறுதியான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். பலன் தராத
பேச்சுவார்த்தைக்கு செலவிடும் நேரத்தை இதற்காவது பயன்படுத்தலாம்!