தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

தமிழகத்தில் ஐடிஐ வினாத்தாள் வெளியானது-தேர்வு ரத்து

ஐடிஐ பரீட்சைக்கான வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதால், தமிழகம் முழுவதும் ஐடிஐ தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஐடிஐ படிக்கும் மாணவர்களுக்கான ஆண்டு இறுதி தேர்வு கடந்த 23-ந் தேதி தமிழகம் முழுவதும் தொடங்கியது. தேர்வு அட்டவணைப்படி நேற்று ஃபிட்டர் பாடப்பிரிவுக்கு கருத்தியல் தேர்வு நடக்க வேண்டும்.

ஆனால், நேற்று முன்தினம் ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இருந்து இந்த தேர்வுக்கான கேள்வித்தாள் லீக் ஆனதாகவும், மாணவர்களுக்கு வினாத்தாள் வினியோகம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.

இதைத்தொடர்ந்து நேற்று நடைபெற வேண்டிய 2-ம் ஆண்டு பிட்டர் கருத்தியல் தேர்வு உடனடியாக ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து நடந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

அந்தியூர் குருநாதசாமி கோவில் அருகே உள்ள சத்தி ஐ.டி.ஐ. தொழிற் பள்ளியில் படிக்கும் மாணவர் வரதராஜன் என்பவர்தான் வினாத்தாளை அவுட் செய்துள்ளார். அவர் உள்பட 3 பேருக்கு பிட்டர் கருத்தியல் வினாத்தாள் மயிலாடுதுறையில் இருந்து ஒருவர் பேக்ஸ் மூலம் அனுப்பி வைத்து உள்ளார்.

இந்த வினாத்தாளை பெற்ற மாணவர்கள் அதை ஜெராக்ஸ் எடுத்து, ஈரோடு மாவட்டத்தில் ஐ.டி.ஐ. படிக்கும் மாணவர்களுக்கு வினியோகித்துள்ளனர்.

இந்த வினாத்தாளை பிட்டர் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரம் வரை விற்பனை செய்து உள்ளார்கள். இந்த வினாத்தாள் 100-க்கும் மேற்பட்டவர்களின் கைகளில் கிடைத்து உள்ளது. இந்த வினாத்தாளை வினியோகம் செய்தவர் யார் என்பது தெரியவில்லை.

வினாத்தாள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் இருந்தது. மேலும் வினாத்தாளில் உள்ள கேள்விகளுக்கு உரிய விடைகளும் டிக் செய்யப்பட்டுள்ளதை அதிகாரிகள் கண்டுபிடித்து உள்ளார்கள்.

இச்சம்பவம் குறித்து கோபி ஆர்.டி.ஓ. மணிமேகலை, நேற்று அந்தியூரில் உள்ள சக்தி ஐ.டி.ஐ. முதல்வர் அப்துல் ரசூல் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினார்.

வினாத்தாளை அவுட் செய்ததாக சந்தேகப்படும் மாணவர் வரதராஜ், மோட்டார் மெக்கானிக் படிக்கும் மாணவர் விஸ்வநாதன், ஒயர்மேன் பிரிவில் படிக்கும் மாணவர் உதயகுமார், எலக்ட்ரீசியன் பிரிவில் படிக்கும் மாணவர்கள் தவசி, குணசேகரன் ஆகியோரிடம் ஆர்.டி.ஓ. மணிமேகலை ரகசிய விசாரணை நடத்தினார்.

கேள்வித்தாள் அவுட் ஆன விவகாரத்தில் சக்தி ஐ.டி.ஐ. மாணவர்களுக்கு தொடர்பு உள்ளதா? இந்த கேள்வித்தாள்கள் எங்கிருந்து மாணவர்களுக்கு கொண்டுவரப்பட்டது. ஐ.டி.ஐ. ஆசிரியர்கள் மூலம் இந்த கேள்வித்தாள்கள் வாங்கப்பட்டதா? இதில் ஆசிரியர்களுக்கு தொடர்பு உள்ளதா? எத்தனை ஆண்டுகளாக கேள்வித்தாள்களை வெளியிடும் சம்பவங்கள் நடந்து வருகின்றன? என்ற பல்வேறு கோணங்களில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த விவகாரம் குறித்து தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் செயல்படும் ஐ.டி.ஐ.களுக்கான அகில இந்திய தொழில் தேர்வுகள் கடந்த 23-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் 125 தேர்வு மையங்களில் நடைபெறும் இந்ததேர்வை வேலைவாய்ப்பு பயிற்சி துறை அதிகாரிகள், வருவாய்த்துறை சப்-கலெக்டர்கள் ஆகியோர் கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டு தேர்வு பாதுகாப்பாக நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் பிட்டர் தொழிற்பிரிவிற்கான தேர்வு வினாத்தாள் வெளியானதாக செய்தி வெளியிடப்பட்டது. இது அரசின் கவனத்திற்கு வந்தநிலையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் எடுத்த நடவடிக்கையின் படி வினாத்தாள் தமிழகத்தில் வெளியானதா? அல்லது வினாத்தாள் இந்தியா முழுவதும் ஒரே மாதிரியாக உள்ளதால் வேறு மாநிலங்களில் இருந்து வரப்பெற்றதா? என்பதற்கான விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

நேற்று நடைபெறுவதாக இருந்த 2 வருட அனைத்து தொழிற்பிரிவிற்கான கருத்தியல் தேர்வை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.

விரிவான விசாரணைக்குப்பின் இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரத்துசெய்யப்பட்ட கருத்தியல் தேர்வு நடைபெறும் தேதி தேர்வு வினாத்தாள் தயார் செய்து தேர்வு நடத்தும் டெல்லியில் உள்ள மத்திய வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை தலைமை ஆணையரிடம் இருந்து அனுமதி பெறப்பட்டு பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.