தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

தீக்குளித்த ஒன்பது வயது மாணவி: பள்ளிக் கூடங்களா? பலி பீடங்களா?

கடலூர் மாவட்டம் அத்தப்பட்டு என்ற கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவரின்
9 வயது சிறுமி அபினா தோட்டப்பட்டு நடுநிலைப் பள்ளியில் 5-ம் வகுப்பு
படித்து வந்தார். எப்போதும் பள்ளியிலிருந்து துள்ளிக் குதித்து வீடு
வரும் அபினா, ஜூலை 13-ம் தேதி துவண்டுபோய் வீட்டுக்கு வந்திருக்கிறாள்.

மறுநாள் 14-ம் தேதி அபினா பக்கத்து வீட்டு கேட்டை ஏறிக் குதித்து உள்ளே
சென்று தான் எடுத்துச் சென்றிருந்த மண்ணெண்ணெயை மேலே ஊற்றி தீவைத்துக்
கொண்டாள். துடிக்கத் துடிக்க அந்த சிறுமியின் தசையைப் பிய்த்து உயிரைத்
தின்றுவிட்டது தீ!

கடலூர் மாவட்டத்தில் பள்ளிக் குழந்தைகள் மீதான வன்கொடுமைச் சம்பவங்கள்
கடந்த வாரத்தில் மட்டும் 6-க்கும் மேல் நடந்துள்ளன. இதில் உச்சம்தான்
அபினாவுக்கு நேர்ந்த கொடுமை.

சோகத்தில் இருந்த அபினாவின் தந்தை கண்ணனுக்கு ஆறுதல் கூறிவிட்டு அவருடன்
பேசினோம்.

"ஜூலை 13-ம் தேதி காலையில பள்ளிக்குச் சென்ற என் மகள் வீடு திரும்பிய
பிறகு யாரிடமும் பேசலை. உடம்பு சரியில்லைனு நினைச்சோம். ஆனா, இப்படி
அவளே தீய வச்சிக்கிட்ட பிறகுதான் அவ கூடப் படிச்ச-வங்கக்கிட்ட
விசாரிச்சோம். அப்போது, 'சாந்தி மிஸ் 'ஊஞ்சல்' என்று உச்சரிக்கச்
சொன்னாங்க. ஆனா அபினா வாயில வரல. அதனால ஆத்திரமடைஞ்ச அந்த சாந்தி
டீச்சர், 'படிக்கத் தெரியாம ஏன் எங்க உசுர வாங்குற?'ன்னு சொல்லி
அடிச்சிட்டு 5-&ம் வகுப்பிலிருந்த அபினாவை, '1-வது வகுப்புல போய்
உட்காரு. இனிமே அதுதான் உன் வகுப்பு'னு சொல்லிட்டாங்க. அபினா போகாததால
இரண்டு பையன்களை அனுப்பி தூக்கிக் கொண்டுபோய் விடச் சொன்னார்' என்று
சொன்னார்கள்.

இப்படி தன்னை 5-வதிலேர்ந்து 1-வதுக்கு மாத்தினதால பயந்துபோயிருக்கா
அபினா. அதனாலதான் இப்படி பண்ணிக்கிட்டா. கடலூர் மருத்துவமனைக்கு
தூக்கிட்டுப் போனோம். மேல் சிகிச்சைக்கு புதுவைக்கு அனுப்பினாங்க. எந்த
பலனும் இல்லை. இவ்வளவு நடந்தும், காவல்துறையினரோ என் பெண்ணுக்கு வயிற்று
வலி காரணமாக இறந்துவிட்டதாக வழக்குப் பதிவு செஞ்சிருக்காங்க. என்
பெண்ணுக்கு இதுவரை வயிற்றுவலி வந்ததே இல்லை. கல்வித் துறை அதிகாரிகளும்,
போலீஸாரும் அந்த டீச்சரை தப்பிக்க வைக்கிறதுக்காக இப்படி
பண்ணியிருக்காங்க'' என்று தலையில் அடித்தபடி அழுதார் கண்ணன்.

இந்த விவகாரத்தைக் கையிலெடுத்து புகார்கள் அனுப்பி அதிரடி நடவடிக்கையில்
ஈடுபட்டிருக்கும் மனித உரிமைகள் அமைப்பைச் சேர்ந்த பாபுவிடம் பேசினோம்.

"கடலூர் மாவட்டத்தைப் பொறுத்த-வரை குழந்தைகள் மீதான சித்திரவதை
தொடர்ந்து கொண்டே வருகிறது. பண்ருட்டியைச் சேர்ந்த தான்சீரா பெல்லா
என்ற மூன்று வயது சிறுமி இரண்டு ஆசிரியர்களால் அடித்து சித்திரவதை
செய்யப்பட்டுள்ளார். இதே போல பரங்கிப்பேட்டை மேல்நிலைப் பள்ளியில்
ரஹ்மான் என்ற மாணவனை நிர்வாணமாக்கி சித்திரவதை செய்த கொடுமை
நடந்திருக்கிறது. இதில் கணேசன் என்ற ஆசிரியர் தற்காலிக பணிநீக்கம்
செய்யப்பட்டுள்ளார். இவர் மீது நீதிமன்றத்தில் வழக்கும் பதிவு
செய்யப்பட்டுள்ளது. இதே போன்று திருமாணிக்குழி விஜயா, காராமாணிகுப்பம்
மல்லிகா, சிங்காரத்தோப்பு வதனா என 10 வயதுக்குட்பட்ட சிறுமிகள்
சித்திரவதைக்கு ஆளாகியுள்ளனர். பெற்றோர்கள் இதுபற்றியெல்லாம் குழந்தைகள்
பாதுகாப்பு ஆணையத்திடம் புகார் கொடுக்கலாம். ஆனால், அவர்களுக்கு
இதுபற்றிய விழிப்புணர்வு இல்லை.

அதன் விளைவுதான் இன்று, இந்த சிறிய வயதில் மனஅழுத்தம் ஏற்பட்டு அபினா
தற்கொலை செய்து-கொண்டுள்ளார். ஆனால் காவல்துறையினரும்,
கல்வித்துறையினரும் இந்த சிறுமிக்கு வயிற்றுவலி உள்ளதாக பொய்யான வழக்கு
பதிவு செய்து வழக்கையே முடித்துவிட்டனர். எங்களின் முயற்சியின் பேரில்
உண்மையை வெளிக்கொண்டு வருவோம். அதன் முதல்படிதான் அபினாவை அடித்த
ஆசிரியை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்'' என்றார்.

கடலூர் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் அமுதவள்ளியிடம் பேசினோம்.
"இதுபோன்று புகார்களில் சிக்கக்கூடிய ஆசிரியர்களை கண்காணித்து
வருகிறோம். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்துவருகிறோம். அதன்பேரில் கடந்த
மாதத்தில் மட்டும் ஏழு ஆசிரியர்களை இடமாற்றமும் தற்காலிக பணிநீக்கமும்
செய்துள்ளோம். மேலும் இவர்களைக் கண்காணித்தும் வருகிறோம். குழந்தைகளை
வளர்ப்பது மட்டுமே பெற்றோர்களின் கடமை அல்ல. அவர்களைப் புரிந்துகொண்டு,
அவர்கள் மனதையும் பாதுகாக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல்
நடக்காதவாறு கடுமையான நடவடிக்கையை கல்வித்துறை நிர்வாகம் எடுக்கும்"
என்றார்.

கடலூர் மாவட்ட எஸ்.பி.யான அஸ்வின் கோட்னீசிடம் இதுபற்றிக் கேட்டபோது,
"இது சம்பந்தமான புகார்கள் எங்களுக்கு வருவதே இல்லை. எங்கே நமது
குழந்தையின் எதிர்காலம் வீணாகிவிடுமோ என்ற அச்சம்தான் இதற்குக் காரணம்.

தைரியமாக புகார்கள் கொடுக்கலாம். கண்டிப்பாக தனிப்பட்ட முறையில்
பாதுகாப்பான விசாரணையை நாங்கள் மேற்கொள்வோம்'' என்றார்.