வடகலை, தென்கலை என்றும் கருத்து வேறுபாடுகளின் அடிப்படையில் பிளவுகள்
ஏற்பட்டு பிரச்னை ஆவதுண்டு. ஆனால், பிராமணர்களை ஒருங்கிணைப்பதற்காக
முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் பிராமணர் சங்கத்திலேயே
(தாம்ப்ராஸ்) இப்போது பிளவு ஏற்பட்டுவிட்டது.
''திருவொற்றியூர் நாராயணன் தலைமையிலான பிராமணர் சங்க நிர்வாகிகளை
முற்றாக நீக்கிவிட்டு, சேலம் ஆடிட்டர் ஸ்ரீராமன் தலைமையில் தமிழ்நாடு
பிரமாணர் சங்கத்தை முறையாக பதிவு செய்திருக்கிறோம். நாங்கள்தான் இனி
ஒரிஜினல் பிராமணர் சங்கம்'' என அறிவித்திருக்கிறார் இந்த சங்கத்தின்
பொதுச் செயலாளரான பம்மல் ராமகிருஷ்ணன். இந்த அறிவிப்புக் கூட்டத்தில்
மகளிரணி செயலாளர் லலிதா சுப்ரமணியன், கொளத்தூர் ஜெயராமன், மந்தைவெளி
பிரபா ராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
என்னதான் தடதடப்பு தாம்ப்ராஸுக்குள்? பம்மல் ராமகிருஷ்ணனிடமே கேட்டோம்.
''பல ஆண்டுகளாக தமிழகத்தின் ஏறக்குறைய எல்லா மாவட்டங்களிலும் இயங்கி
வரும் தமிழ்நாடு பிராமணர் சங்கத்துக்கு சமீபத்தில் தேர்தல் அறிவித்தார்
திருவொற்றியூர் நாராயணன். வழக்கமாக ஒரு கிளையின் நிர்வாகிகள் ஓட்டு
போட்டு மாவட்ட நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பார்கள். பிறகு கிளை, மாவட்ட
நிர்வாகிகள் ஓட்டுப் போட்டு மாநில நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பார்கள்.
இதுதான் சங்கத்தின் வழக்கம்.
சமீபத்தில் நடந்த தேர்தலில் தனக்கு எதிர்ப்பு வலுக்கும் என்பதைத்
தெரிந்துகொண்ட நாராயணன், பல தில்லுமுல்லுகளில் இறங்கினார். அதாவது
நெல்லை மாவட்டத்தில் 25 கிளைகளாக இருந்த பிராமணர் சங்கத்துக்கு திடீரென
ஒரு மாத காலத்துக்குள் 75 கிளைகள் முளைத்தன. தனது ஆதரவாளர்களைக் கொண்டு
போலியான கிளைகளை உருவாக்கி தனது ஓட்டுகளை அதிகப்படுத்துவதற்காக நாராயணனே
செய்துகொண்ட ஏற்பாடு இது.
இதை நாங்கள் வீடு வீடாகப் போய் விசாரித்து உறுதி செய்தோம். மேலும் ஒரே
குடும்பத்தில் கணவன் கிளைத்தலைவர், மனைவி மகளிரணி செயலாளர், அவர்களது
மகன், மகள் ஆகியோர் துணைத் தலைவர், செயலாளர்கள் என புதுப் புது போலிக்
கிளைகளை உருவாக்கியிருக்கிறார் நாராயணன். இதுமட்டுமல்ல... போலி
வாக்காளர்களையும் உருவாக்கியிருக்கிறார்.
உதாரணத்துக்கு நெல்லை மாவட்டத்தில் ஒரு கிளையில் சீனிவாச வாத்யார்
என்பவர் ஓட்டு போட்டிருக்கிறார். இன்னொரு கிளையில் வாத்யார் சீனிவாசன்
என்ற பெயரில் அவரையே வாக்காளராக சேர்த்திருக்கிறார். இதைக் கண்டுபிடித்து
அவரிடமே நாங்கள் கேட்டதற்கு,'ஓட்டை நாங்க போட்டுக்கறோம். பேரை மட்டும்
கொடுங்கோன்னு நாராயணனின் ஆட்கள் சொன்னார்கள். அதனால்தான் கொடுத்தேன்'
என ஓப்பனாகச் சொல்கிறார் அவர். இப்படி தனக்கென சுமார் நானூறு வரையிலான
கள்ள ஓட்டுக்களைப் பெற்று தேர்தலை சந்தித்தார் நாராயணன்.
அதனால்தான் நாங்கள் நிறுத்திய சேலம் ஆடிட்டர் ஸ்ரீராமனை விட மிக குறைவான
ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியை எதிர்த்து
நாங்கள் நீதிமன்றம் செல்ல முயன்றபோதுதான்... 'பிராமணர் சங்கத்தை இதுவரை
முறையாக பதிவு செய்யவே இல்லை' என்பது எங்களுக்குத் தெரிந்தது. சட்டப்படி
பதிவு செய்திருந்தால்தான் நீதிமன்றத்துக்கு போகலாம் என்பதால்
இப்போதுதான் தமிழ்நாடு பிராமணர் சங்கத்தை முறையாக பதிவு
செய்திருக்கிறோம். இதுவரை பதிவு செய்யாமல் தனது இஷ்டப்படி, சங்கத்தை
தனது சுய பலன்களுக்கு பயன்படுத்திக் கொண்ட நாராயணனிடமிருந்து சங்கத்தைக்
காப்பாற்றியுள்ளோம். அண்மையில் மயிலாடுதுறையில் நடந்த எங்கள் மாநில
சிறப்புப் பொதுக்குழுவில் சேலம் ஆடிட்டர் ஸ்ரீராமன் தலைவராக
தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்'' என விளக்கி முடித்தார்.
பதிவு செய்யப்பட்ட பிராமணர் சங்கத்தின் மாநிலப் பொருளாளரான ஆலங்குடி
வெங்கட்ராமன் நம்மிடம்,
''பிராமணர்களுக்காக மட்டுமன்றி சமூகத்தின் பலதரப்பு மக்களுக்காகவும்
பாடுபடும் தமிழ்நாடு பிராமணர் சங்கத்துக்கு சென்னை மடிப்பாகத்தில் திருமண
மண்டபம் உள்ளது. மேலும் பல கட்டட சொத்துக்களும், பல கிளைகளில் வங்கிக்
கையிருப்புகளும் உள்ளன. இவற்றையெல்லாம் நாராயணன் கையிலிருந்து
காப்பாற்றும் நடவடிக்கையில் இறங்கியுள்ளோம். உண்மையிலேயே பிராமணர்களின்
நலனுக்காக செயல்பட வைராக்கியம் பூண்டிருக்கிறோம்'' என்றார். இவர்களின்
புகார் பற்றியெல்லாம் நாராயணனிடமே கேட்டோம்.
''என் மீது குற்றம் சாட்டியிருக்கும் பம்மல் ராமகிருஷ்ணன், ஆலங்குடி
வெங்கட்ராமன் உள்ளிட்ட பலரை சங்க விரோத நடவடிக்கைக்காக சங்கத்திலிருந்து
நீக்கிவிட்டேன். எனவே அவர்கள் இப்போது தனி நபர்கள்தானே தவிர சங்கத்தைச்
சேர்ந்தவர்கள் அல்லர். மேலும், பிராமணர் சங்கத்தில் அரசியல் தலையீடுகளைத்
தவிர்ப்பதற்காக அதை பதிவு செய்வதில்லை என்பது எங்கள் கொள்கை முடிவு.
நேர்மையாக நடந்து முடிந்த தேர்தலில் நான் மாநிலத் தலைவராக வெற்றி
பெற்றுள்ளேன். அவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு சட்டரீதியான தடை
வாங்கியிருக்கிறேன். வழக்கம் போல எங்கள் சேவையை தொடர்ந்து செய்வோம்''
என்றார் பதட்டமில்லாமல்.
'பொதுவாகவே இந்த அரசியல்... கோஷ்டி... மோதல்... போன்ற விஷயங்களில்
இருந்து கொஞ்சம் தள்ளியே நிற்கும் வழக்கம் கொண்ட இன்றைய பிராமணர்களை,
ஒருங்கிணைக்கும் வகையில் ஏற்படுத்தப்பட்ட இந்த சங்கத்திலேயே இப்படி
அரசியல் புகுந்ததை பிராமணர்களில் பெரும்பகுதியினர் விரும்பவில்லை.
'எங்களின் இந்த உணர்வை இரண்டு தரப்பும் புரிந்துகொள்வது நல்லது' என்று
ஆதங்கம் கலந்த கோரிக்கை வைக்கிறார்கள் இந்த கோஷ்டி அரசியலை விரும்பாத
பெரும்பாலான பிராமணர்கள்.