போலி ரூபாய் நோட்டுகள், போலி முத்திரைத்தாள், போலி பாஸ்போர்ட், போலி மருந்துகள், போலி கல்வி நிறுவனங்கள் என போலிகள் பலவிதம். இந்த வரிசையில் போலி வீட்டுப் பத்திரம், போலி அதிகாரப் பகிர்வு பத்திரம், போலி இருப்பிட சான்றிதழ், போலி ஜாதிச் சான்றிதழ், போலி வருமானச் சான்றிதழ் உள்ளிட்டவை அடங்கும். இவற்றையெல்லாம் மிஞ்சும் வகையில், படித்தவர், பாமரர் என எல்லா தரப்பிலும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பது இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ள போலி மதிப்பெண் சான்றிதழ் விவகாரம். எம்.பி.பி.எஸ்., பி.இ. உள்ளிட்ட படிப்புகளில் சேருவதற்கு மாணவர்கள் போலி மதிப்பெண் சான்றிதழ்களைப் பயன்படுத்தியிருப்பதும், பல ஆண்டுகளாக இந்த மோசடி தொடர்ந்துள்ளதும் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. போலீஸôர் 5 தனிப்படைகள் அமைத்து இதனை விசாரித்து வருகின்றனர்.போலி புதிதல்ல... போலி மதிப்பெண் சான்றிதழ் என்பது காலம் காலமாக நடைமுறையில் உள்ளது என்ப அரசுத் தேர்வுகள் துறையே பறைசாற்றும். அரசு துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர்ந்த மாணவி. பி.ஏ., எம்.ஏ., எம்.பில்., ஆகிய படிப்புகளை எல்லாம் போலி மதிப்பெண் சான்றிதழ்கள் மூலமாகவே கொடுத்து சேர்ந்த மாணவர் என போலி சான்றிதழ்களைப் பயன்படுத்தியவர்கள் நிறைய பேர் உள்ளனர்.வேலைவாய்ப்புகளிலும், உயர்கல்வியிலும் சேர்ந்தவர்களின் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை ஆராய்வதற்காக அவர்களின் சான்றிதழ்கள் தேர்வுத் துறைக்கு வருகின்றன. அவர்களுடைய சான்றிதழ்கள் போலி என்று கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் மீது நடவடிக்கையைத் தொடங்கியவுடனேயே சம்பந்தப்பட்டவர்கள் நீதிமன்றத்துக்குச் சென்று விடுகின்றனர். பெரும்பாலானவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை. சிலர் பணியில் இருந்து வெளியேற்றப்படுகின்றனர்' என்றார். உதவுவது யார்? அரசு துறைகளைச் சேர்ந்த அல்லது அவற்றில் இருந்து ஓய்வுபெற்ற பலரது ஒத்துழைப்புடன் இந்த போலி சான்றிதழ்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இப்போது நடைபெற்று வரும் போலீஸ் விசாரணையும் அதை உறுதி செய்துள்ளது. கல்வித் துறையில் உள்ள ஊழியர்களே போலி சான்றிதழ் தயாரிக்க உதவுவது, அத்துறையில் மோசடி எந்த அளவுக்கு மலிந்து விட்டது என்பதை உணர்த்துகிறது. நடவடிக்கைகள்தான் என்ன?போலி மதிப்பெண் சான்றிதழ்கள் தொடர்பாக இதுவரை அமைச்சர், அதிகாரிகள் அளவில் பல கட்டங்களாக ஆலோசனை நடைபெற்றுள்ளன. அவற்றில் எதிர்காலத்தில் போலி சான்றிதழ்களைத் தவிர்க்க என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது பற்றி பேசியதாகத் தெரியவில்லை. வருமுன் காப்போம் என்பதை அறிவுறுத்தும் அரசு, போலி மதிப்பெண் சான்றிதழ் விஷயத்தில் மெüனமாக இருப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. மாணவர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய மதிப்பெண் சான்றிதழ் வழங்குவது குறித்து கடந்த சில ஆண்டுகளாக பேசப்பட்டு வருகிறது. அது வெறும் பேச்சாகவே உள்ளது. புகைப்படத்துடன் சான்றிதழ் வழங்கினால் ஒரு சான்றிதழுக்கு ரூ.20 செலவாகும். இதை மாணவர்களிடம் வசூலித்தால், தேர்தல் நேரத்தில் அது சரியாக இருக்காது என்று அதைக் கொண்டு வர அரசு தயங்குவதாகக் கூறப்படுகிறது. சந்தையில் எந்தவொரு பொருள் வந்தாலும், அதை அப்படியே ஒத்துப் போவது போல் போலி பொருளைத் தயாரித்து உலவவிடும் நிலை உள்ளது. அப்படியிருக்கும்போது மதிப்பெண் சான்றிதழைப் போலியாக தயாரிப்பது ஒன்றும் பெரிதல்ல. தவிர, மாணவர்களுக்கு இப்போது வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழ் மிகச் சாதாரணமாக உள்ளது. அதில் சொல்லும்படியாக ரகசியக் குறியீடுகள் எதுவும் இல்லை. பல்கலைக்கழகங்களின் மதிப்பெண் சான்றிதழ்கள், பட்டப்படிப்புச் சான்றிதழ்கள் போன்றவற்றில் ரகசிய பாதுகாப்பு குறியீடுகள் உள்ளன. இவை நடைமுறைக்கு வந்த பின்னர், அவற்றின் போலி சான்றிதழ்கள் பயன்படுத்தப்படுவது குறைந்துள்ளதாக கூறப்படுகின்றன. எனவே, போலி மதிப்பெண் சான்றிதழைத் தவிர்க்க, மதிப்பெண் சான்றிதழில் ரகசிய குறியீடுகளை அதிகப்படுத்துதல், போலி சான்றிதழ்களைப் பயன்படுத்தினால் ஏற்படும் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை மாணவர், பெற்றோர் மத்தியில் ஏற்படுத்துதல், கல்வி நிறுவனங்களை ஈடுபடுத்துதல் உள்ளிட்டவை குறித்து அரசு சிந்திக்கலாம். போலி மதிப்பெண் சான்றிதழ்கள் சமூகத்தின் உயிர்த் துடிப்பையே நிறுத்திவிடும். இதை அரசு உணர வேண்டும். போலி மதிப்பெண் சான்றிதழ் வழக்கு விசாரணையின் வேகம் இப்போது குறைந்து வருவதாகத் தெரிகிறது. மற்ற விவகாரங்களைப் போல் போலிச் சான்றிதழ் விவகாரமும் ம(û)றந்து விடும் நிலை ஏற்படக் கூடாது.