தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

தமிழினத்தைக் கைவிட்ட வரலாற்றுப் பழியைக் கருணாநிதி சுமக்க வேண்டி வரும் : தமிழ்ப் படைப்பாளிகள் கழகம்.

இலங்கையால் கொல்லப்படும் மீனவர்கள் சார்பாக குரல் கொடுக்கும் தமிழ் உணர்வாளர்களைச் சிறையில் அடைத்து அழகு பார்ப்பதைக் கைவிட்டு கச்சதீவை மீட்க முதல்வர் கருணாநிதி தமிழகத்தை ஒன்றிணைத்துப் போராட முன்வர வேண்டும். அதற்கு முனனோடியாக சிறையில் அடைக்கப்பட்ட தலைவர்களும் தமிழ் உணர்வாளர்களும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். இல்லையேல் முதல்வர் கருணாநிதி தமிழினத்தைக் கைவிட்ட வரலாற்றுப் பழியைக் காலம் எல்லாம் சுமக்க வேண்டி வரும் என்று கனடா தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் தெரிவித்துள்ளது.


இதுதொடர்பாக கனடா தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் விடுத்துள்ள அறிக்கை: 


கேடு வரும் பின்னே, மதி கெட்டுவரும் முன்னே என்றொரு பழமொழி தமிழில் உண்டு.


இந்திய இறையாண்மைக்கும் இரு சமூகத்தினரிடையே மோதலை உருவாக்கும் வகையில் பேசியதாகக் காரணம் காட்டி நாம் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமானை தமிழக அரசு கைது செய்து வேலூர் சிறையில் அடைத்துள்ளது. இந்தக் கொடுமையை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.


இதேபோல் இலங்கையில் போர்க் குற்றங்களை விசாரிக்க ஐ.நா. நியமித்த நிபுணர் குழுவை இலங்கை செல்ல அனுமதிக்க வலியுறுத்தியும் தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படையினர் படுகொலை செய்வதைக் கண்டித்தும், சென்னையில் புதன்கிழமை (ஜூலை 14 ) இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், பெரியார் திராவிடக் கழகப் பொது செயலாளர் விடுதலை இராஜேந்திரன், திருமலைக்குமார் எம்எல்ஏ உள்ளிட்ட நூற்றுக்கணக்கான தமிழ் உணர்வாளர்கள் தமிழக அரசினால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதையும் நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

சட்டம் ஒழுங்கு என்ற போர்வையில் தமிழக அரசு தமிழின உணர்வாளர்களது பேச்சுச் சுதந்திரத்தை மறுத்து அவர்களது வாய்களை அடைப்பது மக்களாட்சி முறைமைக்கு முரணானது எனச் சுட்டிக் காட்ட விரும்புகிறோம். பேச்சுச் சுதந்திரத்துக்காக சிறை சென்ற பெரியார், அண்ணா பெயர்களை மூச்சுக்கு முந்நூறு தரம் உச்சரிக்கும் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் இந்த அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்படுவது மன்னிக்க முடியாத குற்றமாகும். ஏறிய ஏணியை உதைக்கும் செயலாகும். தமிழக மீனவர்கள் தவணை முறையில் சிங்களக் கடற்படையினரால் கொல்லப்பட்டு வருகிறார்கள். கொல்லப்பட்ட மீனவர்களது எண்ணிக்கை 450 யும் தாண்டியுள்ளது. இறுதியாக செல்லப்பன் என்ற மீனவர் சிறிலங்கா கடற்படையால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். இந்தக் கொலையைக் கண்டித்து திமுக சிறிலங்கா துணைத் தூதரகம் முன் ஆர்ப்பாட்டம் செய்துள்ளது.

போர் முடிந்த பின்னரும் தமிழக மீனவர்கள் தொடர்ந்து சிங்களக் கடற்படையினரால் கொல்லப்படுவது முழுத் தமிழினத்துக்குமே இழிவையும் தலைக் குனிவையும் ஏற்படுத்தியுள்ளது.சிறிலங்கா அரசைத் தட்டிக் கேட்க வேண்டிய இந்திய அரசு வழக்கம் போல் மவுனம் சாதிக்கிறது. சாகிறவன் தமிழன் என்ற இளக்காரம் இந்திய மத்திய அரசுக்கு இருக்கலாம்! தமிழக அரசுக்கு இருக்கலாமா? தமிழினத்துக்கு என்ன கேடு நடந்தாலும் பதவி போகக் கூடாது அதிகாரம் கைநழுவக் கூடாது என்பதிலேயே முதல்வர் கருணாநிதி முனைப்போடு இருக்கிறார் எனக் குற்றம் சாட்டுகிறோம்.

பதவி என்பது தோளில் போடும் துண்டு கொள்கை என்பது இடுப்பில் கட்டும் வேட்டி என்று பேரறிஞர் அண்ணா முழங்கினார். ஆனால் இன்று அந்த முழக்கம் கனவாய் பழங்கதையாய் போய்விட்டது. இன்று கொள்கை தோளில் போடும் துண்டு பதவி இடுப்பில் கட்டும் கோவணம் எனத் தலைகீழாக மாறிவிட்டது!நக்கினார் நாவிழந்தார் என்பதற்கு ஒப்ப இந்திய அரசைத் தட்டிக் கேட்க முதல்வர் கருணாநிதி தயங்கலாம். அல்லது பேசா மடந்தையாக இருக்கலாம். ஆனால் தன்மானமும் பெருமிதமும் படைத்த தமிழ் உணர்வாளர்கள் அப்படி இருக்க முடியுமா? இருக்கத்தான் வேண்டுமா? அப்படி இருப்பது இழுக்கல்லவா? நாளாந்தம் தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையினரால் கொல்லப்படுவதற்கும் தாக்கப்படுவதற்கும் அடிப்படைக் காரணம் 1974 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் கச்சதீவை மத்திய அரசு சிறிலங்காவிற்குத் தாரவார்த்துக் கொடுத்ததுதான்.

இதனால் தமிழகத்துக்கும் இலங்கைக்கும் இடையில் உள்ள கடல் எல்லை சுருங்கிவிட்டது. எனவே கொல்லப்படும் மீனவர்கள் சார்பாக குரல் கொடுக்கும் தமிழ் உணர்வாளர்களைச் சிறையில் அடைத்து அழகு பார்ப்பதைக் கைவிட்டு கச்சதீவை மீட்க முதல்வர் கருணாநிதி தமிழகத்தை ஒன்றிணைத்துப் போராட முன்வர வேண்டும். அதற்கு முனனோடியாக சிறையில் அடைக்கப்பட்ட தலைவர்களும் தமிழ் உணர்வாளர்களும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். இல்லையேல் முதல்வர் கருணாநிதி தமிழினத்தைக் கைவிட்ட வரலாற்றுப் பழியைக் காலம் எல்லாம் சுமக்க வேண்டி வரும் என்று அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.