இனம் காக்க போரிட்ட என் தம்பி கொடியவனா?` இப்படி ஒரு கேள்வியை வைகோ கேட்டிருந்தால் அது அரசியல். கீரா கேட்டால்?
ஆமாம்... இந்த கீரா `பச்சை என்கிற காத்து` படத்தின் இயக்குனர். படத்தில் வரும் ஒரு பாடலில்தான் இப்படி ஒரு வரி. அது மட்டுமல்ல, இன்னொரு பாடலில் `தரை தட்டி நிக்குது வணங்காமண் கப்பல்` என்று இன்னொரு வரி.
படத்தின் பாடல்களும், காட்சிகளும் இது வேறு மாதிரியான படம் என்கிற உணர்வை வரவழைக்கிற அதே நேரத்தில் இப்படியெல்லாம் பாடல் வரிகள் வருகிறதே, படம் இலங்கை பிரச்சனை பற்றியதா என்ற கேள்வியை எழுப்ப தோன்றும்தானே? தோன்றியது. ஆனால் கீராவின் பதிலில் ஆவேசம் சற்று தூக்கலாகவே இருந்தது.
"நாமெல்லாம் தமிழர்கள். கொஞ்சம் சூடு சுரணை மிச்சம் இருக்கு என்பதை காட்டதான் அந்த வரிகள். மற்றபடி இந்த கதைக்கும் இலங்கை பிரச்சனைக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை என்றார்.
தங்கர்பச்சானிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் கீரா. இவரை பற்றி தங்கர் என்ன சொல்கிறார்? "எனக்கு உதவியாளர்களாக 150 பேர் பணியாற்றியிருக்கிறார்கள். எல்லாரும் வேலையை மட்டும்தான் கற்றார்கள். கீரா மட்டும்தான் என் சிந்தனையையும் சேர்த்து எடுத்துச் சென்றவர். எனக்கும் கீராவுக்கும் பல முறை சண்டை வந்திருக்கிறது. மற்றவர்கள் அமைதியாக இருக்கும்போது இவர் சண்டை போடுவதில் குறியாக இருப்பார். பல முறை என்னை விட்டு வெளியேறியும் இருக்கிறார். எல்லாமே ஆரோக்கியமான சண்டைதான். கருத்தியல் சண்டைதான்" என்கிறார் தங்கர்பச்சான்.
படத்தில் தேவதை என்ற மலையாளப் பெண்ணையும், வாசகர் என்ற இளைஞரையும் அறிமுகப்படுத்தியிருக்கிறார் கீரா. என் இயற்பெயரே வாசகர்தான். தேனிக்கு அருகில் பிறந்து வளர்ந்தவன் நான். எங்கள் ஊரில் மாணிக்கவாசகரின் கோவில் இருக்கிறது. அந்த நினைவாக வைக்கப்பட்ட பெயர்தான் இது என்றார் வாசகர். படத்தில்தான் செல்வி. நேரில் தேவதை போல தெரிவதால் அதையே பெயராக வைத்துவிட்டாராம் கீரா. மலையாளத்திலிருந்து வந்தாலும், தத்தி தத்தி தமிழ் பேசுகிறார் தேவதை.
"நான் பார்த்த பேன்ட்டசி டைட் படமல்ல இது. எங்க மாநிலத்தில்கூட சமீபகாலமாக நல்ல படங்கள் வர்றது குறைஞ்சு போச்சு. மலையாளத்தின் சிறந்த இயக்குனர்கள்கூட தமிழ் பக்கம் வர ஆரம்பிச்சிட்டாங்க. அதனால் என்னோட முதல் படம் தமிழ்ல இருக்கணும்னு நினைச்சேன். நான் நினைச்சதை விட ஒரு சிறந்த படத்துல ஹீரோவுக்கு இணையான ஒரு கேரக்டர்ல நடிச்சிருக்கேன்" என்று முகமெல்லாம் பூரிக்கிறார் தேவதை.