முடியும் என்றால்... கக்கன் என்று சொல்லலாம்.
அப்படி வாழ்ந்து காட்டிய தமிழகத்தின் முன்னாள் உள்துறை அமைச்சரும்
காங்கிரஸ் தலைவருமான கக்கனின் நூற்றாண்டு விழாவை நடத்துவதிலும்...
கோஷ்டிச் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறது காங்கிரஸ் கட்சி.
காமராஜரின் ஆட்சியில் உள்துறை அமைச்சராக இருந்த கக்கன், அமைச்சர்
பதவிக்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர். பொதுமக்களோடு பொதுமக்களாக
மதுரை ராஜாஜி மருத்துவமனையில் வராண்டாவில் படுத்து சிகிச்சை பெற்று உயிரை
விட்டவர். இப்பேர்ப்பட்ட கக்கனின் நூற்றாண்டு விழா வருகிற ஜுலை மாதம்
31&ம் தேதி காங்கிரஸ் கட்சி சார்பில் நடத்தப்பட இருக்கிறது. இந்த
நூற்றாண்டு விழாவை எந்த கோஷ்டி முன்னின்று நடத்துவது என்பதுதான்
இப்போதை போட்டி.
மதுரை காங்கிரஸில் வாசன், சிதம்பரம், தங்கபாலு, சுதர்சன நாச்சியப்பன்,
இளங்கோவன், என பல கோஷ்டிகள். இவற்றில் வாசன் அணிக்கே செல்வாக்கு
அதிகம். மதுரை மேற்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ராஜேந்திரன்,
முன்னாள் எம்.பி. ராம்பாபு, மதுரை மாநகர் காங்கிரஸ் தலைவர் தெய்வநாயகம்
ஆகியோர் வாசன் அணியைச் சேர்ந்தவர்கள். ஆனால், மாவட்ட இளைஞர் காங்கிரஸில்
துணைத் தலைவர்கள் சிதம்பரம் அணியை சேர்ந்தவர்கள்.
இந்த நிலையில் கக்கன் நூற்றாண்டு விழாவை கொண்டாடுவது பற்றி ஜுலை 4&ம்
தேதி தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு மதுரை ரேஸ்கோர்ஸ் அருகே உள்ள
தமிழ்நாடு ஹோட்டலில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
அப்போது விழாவை யார் பொறுப்பேற்று நடத்துவது என கோஷ்டிகளுக்கிடையே
விவாதம் வெடித்தது. இதனால் வேதனை அடைந்த தங்கபாலு, 'இப்படி கோஷ்டி சண்டை
போட்டால் அது நாம் கக்கனுக்கு மரியாதை செலுத்துவதாக அமையாது' என்று
அறிவுரை கூறினார். ஆனாலும் கோஷ்டிச் சண்டை ஓயவில்லை. அதனால், விழாவை
எந்த இடத்தில் நடத்துவது யார் பொறுப்பேற்று நடத்துவது என்ற முடிவை
எடுக்காமலேயே ஆலோசனைக் கூட்டத்தை முடித்தார் தங்கபாலு.
இதற்கிடையில் சிதம்பரம் கோஷ்டியைச் சேர்ந்த காஞ்சிபுரம் எம்.பி.,
விஸ்வநாதன், கக்கன் நூற்றாண்டு விழாவை மதுரை மருத்துவக் கல்லூரி
மைதானத்தில் நடத்த அனுமதி வேண்டி மதுரை போலீஸ் கமிஷனரிடம் மனு
கொடுத்தார். இந்தத் தகவல் வாசன் தரப்புக்கு கிடைத்ததும் மதுரை மாநகர்
காங்கிரஸ் தலைவரான தெய்வநாயகம், கக்கன் நூற்றாண்டு விழாவை வடக்கு
-மேலமாசி வீதியில் நடத்த அனுமதி கேட்டு போலீஸ் கமிஷனரிடம் தனியாக மனு
கொடுத்திருக்கிறார். இது மட்டுமல்ல... 'கக்கன் நூற்றாண்டு விழா வடக்கு
மேலமாசி வீதியில் நடை-பெறுகிறது, மத்திய அமைச்சர் வாசன் கலந்து
கொள்கிறார்' என்று வாசன் அணியினர் சுவர் விளம்பரங்களும் செய்ய
ஆரம்பித்துவிட்டன.
மாவட்ட காங்கிரஸார் சிலரிடம் இதுபற்றிப் பேசினோம்.
''மாவட்ட தலைவர் தெய்வநாயகம் மதுரை வடக்கு மேல மாசி வீதி இடத்தில் கக்கன்
நூற்றாண்டு விழா நடத்தலாம் என மாநிலத் தலைமைக்கு கடிதம் அனுப்பினார்.
சிதம்பரம் அணியினரோ நாங்கள் முடிவு செய்ததுதான் இடம் அதில் இருந்து
பின்வாங்க முடியாது என்று ஒற்றைக்காலில் நிற்கிறார்கள்.
மாநிலத் தலைவர் தங்கபாலு, 'பாதுகாப்பு கருதி மருத்துவக் கல்லூரி
மைதானத்தில் நடத்த சம்மதியுங்கள். போலீஸ் கமிஷனரிடம் நீங்கள் அனுமதி
கேட்டு கொடுத்த விண்ணப்பத்தை வாபஸ் வாங்குகள்' என்று வாசன் அணியினரிடம்
வற்புறுத்திக் கேட்டதால் அவர்கள் சம்மதித்துள்ளனர். சமீப காலமாகவே
சிதம்பரம் அணியினர் கைதான் மேலோங்கி வருகிறது. ஒரு மாவட்ட கமிட்டி
எடுத்த முடிவை மாற்றி அமைக்கக் கூடிய அளவுக்கு அவர்கள்
வளர்ந்திருக்கிறார்கள்.
கோஷ்டிப் பூசல் மேலும் பெரிதாகிவிடக் கூடாது என்பதற்காக... 'அழைப்பிதழை
நானே டிசைன் செய்து அனுப்பு-கிறேன். வேறு யாரும் தனித்தனியாக நோட்டீஸ்
அடித்து குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம்' என்றும் கேட்டுக்
கொண்டிருக்கிறார் தங்கபாலு. ஜுலை 31&ம் தேதி நடக்கும் இந்த விழா...
கோஷ்டிப் பூசல் காரணமாக, கடைசி நாள் வரை மாறுதலுக்கு உட்பட்டதாகவே
இருக்கும்'' என்கிறார்கள்.
மதுரை மாநகர் காங்கிரஸ் தலைவர் தெய்வ-நாயகத்திடம் இதுபற்றிப் பேசினோம்.
''கக்கன் நூற்றாண்டு விழாவுக்கு மத்திய அமைச்சர்கள் வாசன், சிதம்பரம்,
குலாம் நபி ஆசாத் ஆகியோர் வருகிறார்கள். அதனால் பாதுகாப்பு நலன் கருதி
மருத்துவக் கல்லூரி மைதானத்தில் விழா நடத்த சம்மதித்திருக்கிறோம்.
காங்கிரஸ் கட்சியில் ஒவ்வொருத்தரும் அவர்களின் கோஷ்டித் தலைவரை காக்கா
பிடிக்க அவர்கள் இஷ்டத்துக்கு நடக்கின்றனர்'' என்றார் கோபத்தோடு.
விழா நடைபெறும் மருத்துவக் கல்லூரி மைதானம் மதுரை மேற்கு தொகுதிக்கு
உட்பட்டது. இந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ.வும், வாசன் அணியைச்
சேர்ந்தவருமான ராஜேந்திரனிடம் பேசினோம். ''மதுரை கமிட்டி எனக்கு எந்த
பொறுப்பு கொடுத்தாலும் செய்து கொடுப்பேன். எளிமை, நேர்மையின் சின்னமான
கக்கனின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவதில் கோஷ்டிப் பூசல் ஏதும்
இல்லையே'' என்றார்.
ஆனால் இந்த விழாவுக்கான காங்கிரஸ் கோஷ்டிகளின் தனித் தனி விளம்பரங்களைப்
பார்த்து மக்கள் சிரிக்கிறார்கள். கக்கனின் ஆன்மா அழுகிறது.