முப்பது வருடங்களாக வெற்றிகரமாக நடைபெற்ற தமிழீழ விடுதலைப் போரட்டத்தை நயவஞ்சக முறைகளில் அணுகிய இலங்கை அரசு. முள்ளிவாய்க்கால் படுகொலைகளுடன் போராட்டம் நடத்தியவர்களை சித்திரவதை செய்தும், பொதுமக்களை கொடூரமான முகாம்களிலும் தடுத்து வைத்திருக்கும் அதேவேளை புலம்பெயர் வாழ்தமிழ் மக்களுக்கு பாடம் புகட்ட இலங்கை அரசு. ஆயத்தமாகியுள்ளது
இலங்கை தீவில் வடக்கு கிழக்கு பிரதேசங்களை கொண்ட தமிழ் அரசு 1833ம் ஆண்டு சிங்கள அரசுக்களுடன் பிரித்தானியா அரசினால் இணைக்கப்பட்ட நாளிலிருந்து தமிழீழ மக்கள் படும் துன்பங்கள் கஷ்டங்கள் கணக்கில் அடங்காது.
1956ம் ஆண்டு பண்டா - செல்வா ஒப்பந்தத்தில் ஆரம்பமாகிய ஒப்பந்தங்கள் இறுதியில் 2002ம் ஆண்டு நோர்வேயின் மத்தியாஸ்தத்தில் இலங்கை அரசிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கிடையான ஒப்பந்தங்கள் வரை, தமிழீழ மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளார்கள். அரசியல் ரீதியாக தமிழ் மக்களுடனான இலங்கையின் நட்பு என்பது சிங்களவர்களின் ஆதிக்கத்தை இலங்கை தீவில் முழுமையாக நிலைகொள்ளச் செய்யும் தந்திர உபாயமே தவிர, இதில் தமிழீழ மக்களுக்கு ஏதுவித நன்மையும் கிடைக்க போவதில்லை.
ஆகையால் தமிழீழ மக்களுடைய சாத்வீகப் போராட்டம், ஆயுதப் போராட்டம் நன்மையான பிரதிபலிப்புக்களை கொடுக்காத காரணத்தினால் எதிர்காலங்களில் தமிழீழ மக்களுடைய ஜனநாயக விடுதலைப் போராட்டமானது ஒரு நாட்டுடைய உதவியுடன் மேற்கொள்ளவேண்டிய அவசியத்தை உணர்த்தியுள்ளது.
இலங்கை தீவில் தமிழ் மக்களுக்கான அரசின் போராட்டம் கடந்த இருபத்தேழு வருடங்களாக சர்வதேச மாயப்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஒரு யார் தன்னும் பின்னின்று மீண்டும் மீண்டும் மண் குதிரையான இலங்கை அரசுடன் சமரசம் பேச எந்த ஒரு ஈழத்தமிழனும் முன் வருவானானால, அவன் அரசியல் ஞானம் இராஜதந்திரம் விளங்காத தெரியாத ஒர் சுயநலம் கொண்ட பேர் வழியாகத் தான் இருக்கமுடியும்.
கடந்த கால நிகழ்வுகளை மீண்டும் நாம் நினைவுபடுத்த வேண்டிய அவசியமில்லையென நம்புகிறேன். என்றாலும் ஓர் உதாரணத்தை இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.
1987ம் ஆண்டு தமிழீழ மக்களின் தாயக பூமியான வடக்கு கிழக்கு பிரதேசங்களை இலங்கையின் பாதுகாப்புப் படைகள் தமது அநாகரீகமான யுத்த முறையினால் அபகரிக்க முனைந்த வேளையில், 1987ம் ஆண்டு யூலை மாதம் இலங்கை - இந்திய உடன்படிக்கை உருவாகியது. இவ் உடன்படிக்கையை தமிழீழ மக்களில் பெரும்பான்மையோரும் விடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகளும் ஏற்கவில்லை. ஆனால் தமிழீழ மக்களின் எதிர்காலத்துக்கு ஏற்ற ஒரு சில நல்ல விடயங்கள் இவ் உடன்படிக்கையில் காணப்பட்டன!
அவ்வேளையில,; இவ் உடன்படிகையில் கைச்சாத்திடுவதற்காக கொழும்பு சென்ற இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியை, இலங்கையின் கடற்படை சிப்பாய் ஒருவர் அங்கு நடைபெற்ற இராணுவ மரியாதையின் போது தாக்கினார்.
இதனால் இலங்கை - இந்தியா உறவு பாதிக்கப்படுவதை அவதானித்த அவ்வேளையில் அரசியல் நரி என வர்ணிக்கப்பட்ட இலங்கையின் ஜனாதிபதி ஜெயவர்த்தனவும், அவரது பாதுகாப்பு மந்திரியான அத்துலத் முதலியும் பல கபட நாடகங்களை நடித்து, இறுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இந்தியப் படைகளுக்கும் இடையில் யுத்தம் ஆரம்பமாகியது. இவ் யுத்தம் சில வருடங்கள் நீடித்ததை அவதானித்த இலங்கையின் புலனாய்வு, இந்திய அரசு தமிழீழ விடுதலைப் புலிகளை அழிக்க விரும்பவில்லையென ஊகித்தனர். இவ்வேளையில் இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ஆர். பிரேமதாச, தமிழீழ விடுதலைப் புலிகளை கபட நோக்குடன் பேச்சுவார்த்தைக்கென அழைத்து, புலிகளை இந்தியா அரசின் பகைமையை சம்பாதிக்க வழிவகுத்த அதேவேளை, தாம் தமிழீழ விடுதலைப் புலிகளை முடித்துக்கட்டவும் திட்டம் தீட்டினார்.
இதனால் 1991ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கைக்கும் இடையில் இரண்டாவது ஈழப்போர் ஆரம்பமாகியது மட்டுமல்லாது, தமிழீழ விடுதலைப் புலிகள் இந்தியாவின் நிரந்தர எதிரியாக ஒரு காரணி என்பது சரித்திரம்.
இப்படியாக தமிழீழ மக்களை, தமிழீழ மக்களின் விடுதலையை முன்னெடுத்தோரையும் தனிமைப்படுத்திய இலங்கை அரசு, தொடர்ந்து படுகொலைகள், காணாமல் போதல், பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள், சொத்தழிப்புக்கள் போன்றவற்றை பிரமாண்டமாக வருடக்கணக்கில் செய்தார்கள். உலகில் யாரும் இவற்றைத் தட்டிக் கேட்க முன்வரவில்லை. இறுதியில் தாம் விரும்பியவற்றையும் கடந்த வருடம் மே மாதம் வெற்றிகரமாக செய்து முடித்துள்ளனர்.
இவை யாவற்றுக்கும் ஈழத் தமிழார் தொடாந்து செய்யும் அரசியல் இராஜதந்திர தவறுகளே காரணம். முதலாவதாக 1987ம் ஆண்டு இலங்கை - இந்தியா ஒப்பந்தத்தின் பின்னர், இலைங்கைத் தீவில் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனை ஓர் உள்நாட்டுப் பிரச்சனை அல்ல என்பதை இலங்கை ஏற்ற பின்னர், தமிழ் மக்கள் ஜனாதிபதி பிரேமதாசாவுடன் பேச்சுவார்த்தைக்குப் போகவேண்டிய அவசியமில்லை. இதேபோல் 2002ம் ஆண்டு நோர்வேயின் மஸ்தியத்தின் அடிப்படையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கைக்கு மிடையில் கைச்சாத்தான உடன்படிக்கையை இலங்கை நல்ல சந்தர்ப்பம் பார்த்து அதை இரத்துச் செய்துள்ளது.
இவ் உடன்படிக்கையின் பிரகாரம் தமிழீழ மக்களின் அரசியல் பிரச்சனை ஓர் உள்நாட்டு பிரச்சனையல்ல என்பது ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
ஆகையால் தொடர்ந்தும் நாம் மண் குதிரையான இலங்கை அரசிடம் சென்று உள்ளதையும் பறிகொடுக்காமல், ஆழ்ந்து சிந்தித்து எமக்கு சரித்திர, கலாச்சார, சமய ரீதியாக உதவக்கூடியவர்களுடன் இணைந்து அவர்கள் உதவியுடன் சரியான முறையில் ஜனநாயக ரீதியாக எமது சுயநிர்ணய உரிமைகயை பெற வேண்டும்.
அபிவிருத்தி என்ற பெயரில் எமது இனத்தை அழித்து, எமது மண்ணை அபகரித்து, எமது சரித்திரத்தையே மாற்றியமைத்து வரும் இலங்கையின் பௌத்த சிங்கள அரசிற்கு நாம் அறிந்தோ அறியாமல் துணை போகக்கூடாது.
உண்மையில் இலங்கை அரசு தமிழீழ மக்களில் அக்கறை கொண்டவர்களானால் இன்றுவரை இடம்பெயர்ந்து வருடக்கணக்கில் வடக்கு-கிழக்கில் வாழும் மக்களுக்கு என்ன புனர்வாழ்வு, புனரமைப்பு செய்துள்ளனர்?
தொடர்ந்து தமிழ் மக்களை உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பயமுறுத்தி, அலுவல்களை புரியும் இலங்கை அரசை யார் நம்புவார்கள்?
புலம்பெயர்ந்து தமிழ் மக்கள் வாழும் நாடுகள் யாவும் ஜனநாயகமானது மட்டுமல்லாது சீர்சிருத்தமான நாடுகளும் கூட. இவ் நாடுகளில் சட்ட ஒழுங்குகளை மதித்து நல்ல பிரஜைகளாக வாழும் எவரும் இலங்கையின் மிரட்டல்களுக்கு அஞ்ச வேண்டிய அவசியம் ஒரு பொழுதுமில்லை.
அப்படி தவறான தகவல்களை கொண்டு ஐரோப்பிய நாடுகளில் தவறுதலாக யாரும் தண்டிக்கப் பட்டாலும், ஐரோப்பிய சபையின் ஒருங்கிணைப்பின் பிரகாரம், ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றத்தில் அல்லது ஐ. நா. மனித உரிமைக் குழுவிடம் பாதிக்கப்பட்டோர் நீதி காணும் நிலையே ஐரோப்பிய நாடுகளில் உண்டு.
இலங்கையை நம்பி நாம் அனுபவிப்பவை, அனுபவித்தவை போதும். நாம் தொடர்ந்து எமக்கு வழிகாட்டக் கூடிய நண்பரை மீண்டும் தேடுவோம்.