தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

ராஜபக்சே சொல்லியே இந்திய பிரதிநிதி வருகிறார்: இலங்கை

இலங்கை அதிபர் ராஜபக்சே கேட்டுக்கொண்டதால் தான் இந்தியப் பிரதிநிதி இலங்கைக்கு வர உள்ளார் என்று இலங்கை அரசின் செய்தித் தொடர்பாளர் கெகலிய ராம்புகவெல கூறியுள்ளார்.

தமிழக முதல்வர் கருணாநிதி கேட்டுக் கொண்டதால் அவரை பிரதமர் இலங்கைக்கு அனுப்பவில்லை என்றார்.

இலங்கையில் தமிழர் பகுதிகளைப் பார்வையிட இந்தியப் பிரதிநிதி அனுப்பப்பட உள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங், முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

அதில், வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி அங்கு அனுப்பப்படுவார். அவர் அங்குள்ள இந்திய தூதரக மற்றும் உள்ளூர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவார். மேலும், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பிராந்தியப் பகுதிகளை பார்வையிட்டு அங்குள்ள நிலைமையை ஆராய்ந்து வருவார் என்று பிரதமர் தெரிவித்திருந்ததாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருந்தது.

மேலும் முதல்வர் கருணாநிதியின் வேண்டுகோளை ஏற்று இலங்கைக்கு இந்திய அதிகாரி அனுப்பப்படுவதாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், இதை இலங்கை அரசு மறுத்துள்ளது.

இது குறித்து ராம்புகவெல கூறுகையில், அதிபர் ராஜபக்சே டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தபோது, இந்தியப் பிரதிநிதி இலங்கை வந்து அகதி முகாம்களை பார்வையிடுவதை இலங்கை அரசு வரவேற்கிறது என்று தெரிவித்திருந்தார்.

ராஜபக்சேசவின் இந்த வேண்டுகோளை ஏற்றே இலங்கைக்கு இந்தியப் பிரதிநிதி அனுப்பப்படுகிறார். முதல்வர் கருணாநிதி கேட்டுக் கொண்டதற்காக அல்ல என்றார்.