தமிழ்நாட்டிலே அடக்குமுறைகளுக்குப் பஞ்சமில்லை. எத்தனையோ அடக்குமுறைகளை நாம் தொடர்ந்து பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். இந்தக் கூட்டத்தை நடத்துவதற்கு அரங்கம் தேடுவது கூட எவ்வளவு பெரும்பாடாக இருந்தது என்பதைச் சொன்னால் அது தனிக் கதையாக விரியும்.
கருத்துரிமை என்பது அரசமைப்பு உறுதி செய்கிற அடிப்படை உரிமை என்பதைக் காட்டிலும் அவ்வப்போதைய முதலமைச்சர்கள், காவல்துறை அதிகாரிகள் பார்த்து வழங்குகிற பிச்சை என்கிற பரிதாப நிலைதான் இந்தத் தமிழ்நாட்டிலே உள்ளது.
இன்றைக்கும் தமிழ்நாட்டினுடைய சிறைகளிலே அரசியல் காரணங்களுக்காக அடை பட்டிருப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். எல்லா வற்றிலும் குறிப்பாகச் செங்கல்பட்டு, பூந்தமல்லி சிறப்பு முகாம்களில் தண்டனை கழிந்த பிறகும் சிறையிலே இருப்பவர்கள், விசாரணை இலலாமல் சிறையிலே இருப்பவர்கள் என 39 பேர் இன்றும் அங்கே அடைபட்டுக் கிடக்கிறார்கள். மீண்டும் மீண்டும் அவர்கள் பட்டினிப் போராட்டங்கள் நடத்துகிறார்கள். எதற்கும் அவர்களின் விடுதலை கிடைத்தபாடில்லை.
தமிழ்நாட்டுச் சிறைகளிலே இசுலாமியக் கைதிகள் அவர்கள் இசுலாமியர்கள் என்கிற ஒரே காரணத்திற்காகவே விடுதலை மறுக்கப்பட்டு அடைபட்டிருக்கிறார்கள். மேலும் பல வழக்குகள், தமிழ்த் தேசியம் சார்ந்து தமிழீழ ஆதரவு என்ற நிலைப்பாட்டிற்காகப் பலர் சிறைகளிலே அடை பட்டிருக்கிறார்கள். இந்த அடக்குமுறைகளை யெல்லாம் நாம் எதிர்க்கிறோம். அடக்குமுறைக்கு எது காரணமாயினும் அதை நாம் எதிர்க்கிறோம்.
ஜெர்மானியக் கவிதை ஒன்று நமக்குத் தெரியும். நமது சூழலுக்கு ஏற்ப அதை மாற்றிச் சொல்லலாம். என்னைக் காவல்துறை தேடி வந்தது நான் தமிழ்த்தேசியன் என்பதால் மற்றவர்கள் துணைக்கு வரவில்லை. வேலுச்சாமியைக் காவல்துறை தேடி வந்தது. அவர் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம் என்பதால் யாரும் தட்டிக் கேட்கவில்லை. ரஜினிகாந்த்தைக் காவல்துறை தேடி வந்தது. அவர் சாதி ஒழிப்பு விடுதலை முன்னணியைச் சார்ந்தவர் என்பதால் சாதிக்காரர்கள் ஏன் என்று கேட்கவில்லை. முடிவிலே இங்கே நம்மைக் காவல்துறை தேடி வருகிற போது தட்டிக்கேட்பதற்கு யாருமே மிச்சமில்லை எனலாம். அடக்குமுறை என்பது எக்காரணத்தோடு வந்தாலும் சட்டப்படி வந்தாலும், சட்ட விரோதமாக வந்தாலும், எந்த முனை யிலே இருந்து வந்தாலும், எந்த நியாயத்தோடு வந்தாலும் அந்த அடக்கு முறையை எதிர்ப்பது என்ற முறை யிலே அந்தக் குறைந் தபட்ச வேலைத் திட்டத் தின் அடிப்படை யிலே நாம் இந்தக் கூட்டமைப்பை உருவாக்கியிருக்கிறோம். கூட்டமைப்பை உருவாக்குதவற்கானத் தூண்டுதல் பழங்குடி மக்கள் மீது இந்திய அரசு தொடுத்திருக்கிற பச்சை வேட்டை.
அடக்குமுறையின் புதியதொரு வடிவம் இது. அடக்குமுறைச் சட்டங்களைக் கொண்டு வருகிற அடக்குமுறை அல்ல. தனிப்பட்டப் போராளிகளுக்கு எதிராக மோதல் கொலைகள் நடத்துகிறார்களே அப்படிப்பட்டச் சட்டவிரோதக் கொலைகார அடக்குமுறையும் அல்ல. இது நேரடியாகப் போர் என்ற முறையிலே வந்திருக்கிற அடக்குமுறை.
இது நமக்கு ஓரளவுக்கு ஈழத்திலே இருந்து தெரிந்த செய்தி. மக்கள் மீது பேரினவாத அரசு, கொடுங்கோலன் இராசபட்சேவின் அரசு ஒரு போரைத் தொடுத்தது. இந்தப் போருக்கு அது உலகளவிலே சொன்ன நியாயம் - அது பயங்கரவாதத்துக்கு எதிராக விடுதலைப் புலிகளு க்கு எதிராக நடத் தப்படுகிறபோர் என்ப துதான். ஒர் அடிப் படை உண் மையை நாம் நினைவிலே வைத் துக் கொள்வோம். விடுதலைப் புலிகள் துப்பாக்கிகளை மவு னித்ததாக அறி வித்த பிறகு வந்த மே 16,17,18 நாட்களி லேதான் போரிடுவதற்கு யாரு மில்லாத போது தான் போரிலிருந்து ஒதுங்கி அரசால் பாதுகாப்பு வளையம் என்றும் போர் நிறுத்த வளையம் என்றும் அறிவிக்கப்பட்ட பகுதிகளிலே இருந்த 40,000 மக்கள் மூன்றே நாட்களில் படுகொலை செய்யப்பட்டார்கள். பெரும் கனரக ஆயுதங்களைக் கொண்டும் வான் குண்டு வீச்சு கொண்டும் அவர்கள் அழிக்கப் பட்டார்கள். போர் என்ற வடிவிலான அடக்கு முறையைத் தமிழினம் ஈழத்திலே சந்தித்தது. அதையே வழிகாட்டுதலாகக் கொண்டுதான் இந்திய அரசு பழங்குடி மக்கள் மீது போர் தொடுத்திருக்கிறது.
இங்கே அமித் பாதுரி அவர்கள் விளக்கமாக எடுத்துச் சொன்னார்கள் - இந்தப் போர் எதற்காகத் தொடுக்கப்பட்டிருக்கிறது என்று. ஒன்றை நாம் நினைவில் கொள்வோம்: இந்தப் போராட்டத்தில் அல்லது இந்தப் போராட்டத்தினுடைய ஒரு பகுதிக்கு மாவோயிஸ்டுகள் தலைமை வகிக்கிறார்கள். வசந்தத்தின் இடிமுழக்கமாய் எழுந்த நக்சல்பாரி இயக்கத்தினுடைய அந்தப் புதிய வடிவம் அந்தப் போரை வழிநடத்துகிறது. ஆனால் அவர்கள் மட்டும் இல்லை. காந்தியவாதிகள் இந்தப் போராட்டத்திலே இருக்கிறார்கள். வன்முறையை ஏற்காதவர்கள் இந்தப் போராட்டத்திலே இருக்கிறார்கள். இன்னும் பல்வேறு பிரிவினர் இருக்கிறார்கள். பலரும் சேர்ந்து அரசின் இந்த அடக்குமுறைக்கு எதிராக அணிவகுத் திருக்கிறார்கள்.
இந்தவகை அடக்குமுறை குறித்து இந்தியத் துணைக்கண்டத்திலே மட்டுமல்ல, உலகெங்கிலும் நாம் கேள்விப் பட்டிருக்கிறோம். பழங்குடி மக்க ளிடமிருந்து இயற்கையை, நிலத்தை, வளத்தைப் பிடுங்குவதற்காக நடத்தப் படுகிற போர்.
அமெரிக்கக் கண்டத்தில் செவ் விந்தியர் கள் என அறியப்பட்ட அந்தப் பழங்குடி மக்கள் மீது பழைய உலகம் என்று சொல்லிக்கொண்டு நாகரிகத்தைக் கற்றுத்தருவதற் குப் புறப்பட்ட அய்ரோப்பிய வெள் ளையர்கள் நடத் திய கொடுமைகள் கொஞ்சமா நஞ்ச மா! ஆஸ்திரேலி யாவிலும் நிய+சிலாந்திலும் தொல்குடி மக்கள் மீது வெள்ளையர்கள் நடத்திய போர்கள் ஏராளம். கூட்டம் கூட்டமாக அந்த மக்கள் அழிக்கப்பட்டார்கள். ஆனால் அவர்கள் யாரும் எதிர்ப்பின்றி அழிந்து போகவில்லை. ஒரு புழுவை நசுக்க முற்படுகிற போது அது நெளிந்து தன் எதிர்ப்பைக் காட்டுவது போல, ஒரு பூனையைக் கூட விரட்டி விரட்டி மூலைக்குத் துரத்துகிற போது புலியாக மாறி எதிர்த்துப் பாய்வதைப் போல அந்தப் பழங்குடி மக்கள் ஆயுத, ஆள் வலிமைகளில் மிகக் குறைவாக இருந்தும் கூட ஆதிக்கர்களை எதிர்த்துப் போராடினார்கள் என்பது புகழ்மிக்க வரலாறு. போராடினார்கள் என்பது மட்டுமல்ல, இன்றைக்கும் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
தென்னாப்பிரிக்காவில் வெள்ளையர்கள் படையெடுத்துச் சென்ற போது பிரித்தானிய வெள்ளையர்களின் பீரங்கிப் படையை எதிர்த்து இசாந்திலவானா போர்க்களத்தில் சூலுப் பழங்குடி இன மக்கள் வெறும் வில்லும் வேலும் தாங்கி எதிர்த்து நடத்திய போர். அந்தப் போரிலே அவர்கள் தோற்கவில்லை. பீரங்கிகளையும் சுடுகருவிகளையும் வெடிமருந்துகளையும் வைத்திருந்த வெள்ளை இராணுவத்தை, மலையின் அடிவாரத்திலிருந்து புறப்பட்டவர்களை மலையின் மேட்டிலிருந்து ஓடிவந்து தாக்கி வரிசை வரிசையாக வீரர்கள் வீழ்ந்தபோதும் கடைசிவரை நெருங்கிவந்து பீரங்கிகள் மீது ஏறி நின்று தங்கள் நிலத்தை, தங்கள் பண்பாட்டை, இயற்கையை, நீரூற்றுகளை, மலைக் குன்றுகளை, தங்கள் மண்ணிலே உறங்கிக் கிடந்த செல்வங்களைப் பறிக்க வந்த வெள்ளையர்களை நெஞ்சிலே வேல் பாய்ச்சிய அந்த வீரத்தை அய்ரோப்பாவிலிருந்து படித்துவிட்டு ஏங்கெல்ஸ் போற்றி எழுதினார். கேள்விப்பட்டவுடன் ஏங்கெல்ஸ் இசாந்திலானாவில் கிடைத்த வெற்றி என்று எழுதினார். அந்த இசாந்திலானாவின் தொடர்ச்சியைத்தான் நான் தந்தேவாடாவில் பார்க்கிறேன். (கைதட்டல்)
அதனுடைய தொடர்ச்சிதான் நிலத்தை, நீரை வளத்தைப் பறிப்பதற்கு படையெடுத்து வந்தவர்களுக்கு எதிரான போர். - அது சிறப்புக் காவல்படையாக இருந்தால் என்ன! அவர்களே என்ன பெயர் வைத்திருக்கிறார்கள் பாருங்கள் - நாம் யாராவது கோபத்திலே போலீஸ் நாய் என்று சொன்னால் வருத்தப்படுவார்கள் அல்லவா! ஆனால் அங்கே ஒரு படைக்குப் பெயரே வேட்டை நாய்கள்தான். ஹவுஸ் என்று பெயர் வைத்துக் கொண்டு ஒரு படை. தேள் என்றொரு படை. பாம்பு என்றொரு படை. இவையெல்லாம் இந்திய அரசின் படைகள். பாம்பு அவர்களைக் கொத்தப் பார்க்கிறது. தேள் அவர்களைக் கொட்டப் பார்க்கிறது. நாய்கள் அவர்களை விரட்டிக் கடிக்கின்றன. மனிதர்கள் எதிர்க்காமல் இருந்தால் மனிதத் தன்மை இருக்க முடியுமா! (கைதட்டல்) அவர்கள் எதிர்க்கிறார்கள், எதிர்த்துப் போராடுகிறார்கள். அவர்கள் மட்டும் போராடவில்லை. பலதரப்பட்டவர்கள் பல வடிவங்களில் போராடுகிறார்கள்.
உலகமயத்தையும் தாராளமயத்தையும் தனியார்மயத்தையும் இந்திய நாட்டின் தேசிய இனங்கள் மீதும் பழங்குடிகள் மீதும் சுமத்துவதற்கு மன்மோகன் சிங்கும் சிதம்பரமும் படையெடுத்து வருகிற போது எதிர்க்காமல் விட்டால் அவர்கள் மனிதர்கள் இல்லை. எதிர்ப்பது மனிதக் குணம். அதைத்தான் அவர்கள் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அடக்குமுறை எதிர்ப்பு என்பது அந்த மக்களுக்கு ஆதரவான ஒரு குரல்! ஒரு போர் அவர்கள் மீது சுமத்தப்படுகிற போது அந்தப் போரிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காக அவர்கள் நடத்துகிற போராட்டத்திற்கு ஆதரவாக எழுப்பப்படுகிற குரல். இதை மாவோயிஸ்டுகளுக்கு எதிரான போர் எனக் காட்ட முற்படுகிறார்கள்.
அருந்ததி ராய் அழகாக எழுதினார் : 99 சதவீதப் பழங்குடி மக்கள் மாவோயிஸ்டுகள் அல்ல. ஆனால் 99 சதவீத மாவோயிஸ்டுகள் பழங்குடிகளே! (கைதட்டல்). வேறு யார் அவர்களுக்காகப் பரிந்து பேசுவார்கள். புத்ததேவ் பட்டாச்சார்யா பேசுவாரா? சிங்கூரையும் நந்திகிராமத்தையும் டாடாவிற்கும் பன்னாட்டுக் குழுமத்திற்கும் விற்றுவிட்டு அவர் எப்படி வந்து பேசுவார்? பழங்குடி மக்கள் மீது வான்படையைப் பயன்படுத்த வேண்டும் என்று யோசனை சொல்கிற சீதாராம் எச்சூரிக்கு மக்களைப் பற்றி, சனநாயகத்தைப் பற்றி, புரட்சியைப் பற்றி பேசுவதற்கு இனி அருகதை உண்டா? (கைதட்டல்)
டாடாவை சிங்கூரிலிருந்து விரட்டியடித் தார்கள் வங்காள மக்கள். புத்ததேவ் பட்டாச்சார்யாவின் புளுகு நடவடிக்கைகள் தோற்றன. அவர் எங்கே போய் அடைக்கலம் தேடுகிறார் என்று பாருங்கள் - செங்கொடி ஆட்சி தனக்கு செய்த உதவியைப் பெற முடியாமல் மக்கள் முறியடித்த போது அவர் காவி ஆளுகிற குசராத்திலே போய் அடைக்கலம் தேடுகிறார். டாடாவுக்கு நிலத்தை இலவசமாக வழங்குவதில்... உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்ற முழக்கத்தை வைத்திருந்த இயக்கமும் இந்துத்துவம் பேசுகிற இசுலாமியர் களைப் படுகொலை செய்த பயங்கரவாதி நரேந்திரமோடியின் அரசாங்கமும் ஒரே மாதிரியாகத் தான் இருக்கிறது.
தமிழ்நாட்டில் தேரிக்காட்டை டாடாவுக்கு வாரிக்கொடுக்கத் துடித்த கருணாநிதி அரசாங்கமும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. (கைதட்டல்) நமக்கெல்லாம் மழை நீர் சேகரிப்பைப் போதித்துவிட்டு தாமிரபரணித் தண்ணீரைக் கோக்குக்கும் பெப்சிக்கும் விற்ற செயலலிதாவும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறார். (கைதட்டல்) இதில் எங்கே வேறுபாடு பார்ப்பது? எனவேதான் பதவி வேட்டை அரசியல் நடத்துகிற இந்தக் கட்சிகள், நிலவுகிற அமைப்பைப் பாதுகாக்கத் துடிக்கிறவர்கள், நாட்டைப் பாத்தி கட்டிப் பன்னாட்டுக் குழுமங்களுக்கு விற்கத் துடிக்கிறவர்கள். கோதாவரித் தீரத்திலே கிடைக்கிற எண்ணெய் எனக்கா உனக்கா என இரண்டு அண்ணன் தம்பிகள் சண்டை போடுகிறார்கள். பஞ்சாயத்துப் பண்ணுகிறது உச்சநீதிமன்றம். இந்த மண்ணை, நிலத்தை, வளத்தை யாரை நம்பிக் காப்பது. நாம் யாரையும் நம்ப வேண்டாம் - நாம் நம்மை நம்புவோம். நம் கைகளை நம்புவோம் என்று முடிவெடுத்திருக்கிறோம்.
அந்த மக்கள் மீது தொடுக்கப்படுகிற அடக்குமுறை நேற்று ஈழத்தில் போராக மாறியது. இன்று இந்தியாவின் நடுப்பகுதியிலே போராக மாறிக் கொண்டிருக்கிறது. நாம் இதை எதிர்க்கத் தவறுவோமானால் இதே நிலை நாளை நமக்கும் வரும். சில நண்பர்கள் நினைக்கிறார்கள,; நாம் ஏதோ அவர்கள் மீது அனுதாபப்பட்டோ பரிவு காட்டி அவர்களுக்காகக் குரல் கொடுக்கிறோம் என்று. இல்லை நண்பர்களே… நாம் நமக்காகப் போராடுகிறோம் என்பதை மறந்து விடாதீர்கள். இன்று அவர்கள்; நாளை நாம் என்ற உணர்வோடு போராடுவோம்.
ஒரு காலத்தில் லெனின் சொன்னார்: அய்ரோப்பியப் புரட்சிக்கும் உலகப் புரட்சிக்கும் பெரும் தடையாகப் பிற்போக்கின் அரணாக இருப்பது எது என்றால் அது ஜார் ஆட்சி. ஜார் ஆட்சி ஒழிய வேண்டும் என்பது ருஷ்ய மக்களின் விருப்பம் மட்டுமல்ல் அது உலக மக்களின் விருப்பம்; குறிப்பாக அய்ரோப்பிய உழைக்கும் மக்களின் விருப்பம் என்று சொன்னார்.
இன்று அதே நிலையிலேதான் இந்தியக் கட்டமைப்பு, அரசமைப்பு இருக்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். இந்தக் கட்டமைப்பை, அரசமைப்பை உடைத்து நொறுக்காமல் அடக்குமுறை எந்திரத்தின் கால்களை வெட்டி எறியாமல் இந்தியாவில் மட்டுமல்ல, தென் ஆசியத் துணைக் கண்டத்திலேயே எந்தத் தேசிய இனத்திற்கும் விடுதலை இல்லை; எந்தப் பழங்குடி மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை. (கைதட்டல்)
மேலெழுந்த வாரியாகப் புரிந்து கொள்கிற நண்பர்கள்; தவறாகப் புரிந்து கொள்கிற தேசபக்தியின் அடிப்படையில் பாரதத் தாய் என்பார்கள்; தாய் அல்ல, பேய் என்பதை ஈழ மக்கள் தெரிந்து கொண்டார்கள். (கைதட்டல்) தாய் என்றா உன்னைச் சொன்னார்கள் - பிள்ளை அழுதால் பால் கொடுக்கிறவள்; தாய்; பிள்ளைக்குப் பசித்தால் தன் வயிறு பசிக்கிறதே என்று துடிக்கிறவள் தாய்; நீ தாயல்ல பேய்; எம் மக்களைக் காலால் மிதித்தழித்த பேய்! ஓ பேயே! உன்னை அழிப்பதற்கு இன்றைக்கு இந்தியத் துணைக் கண்டத்தின் நான்கு திசைகளிலும் புறப்பட்டு வருகிறார்கள் எங்களுடைய மக்கள். (கைதட்டல்)
பாரதப் பேயின் தலையைக் காசுமீரிகள் துண்டாடுவார்கள்; பாரதப் பேயினுடைய கரங்களை நாகாலாந்து, மணிப்பூர் பழங்குடி மக்கள் வெட்டி எறிவார்கள்; எம் ஈழத்து மக்களை முள்ளிவாய்க் காலில் அழுத்தி அழுத்தி உயிரோடு புதைத்த உன் கால்களை இந்தத் தமிழகம் வெட்டி வீழ்த்தும்.(கைதட்டல்) எம் தண்ட காரண்யப் பழங் குடி மக்கள் ஆறு தேசிய இனங் களுக்கு நடுவிலே தொடர்ச்சியாகப் பரந்துகிடக்கிற மக்கள் நிலத் திற்காகவும் இயற்கை வளத் திற்காகவும் மட்டு மல்ல் தமக்கான ஆட்சி உரிமைக் காகப் போராடுகிற அந்த மக்கள உன்னுடைய குடலை உறுவுவார்கள். இதயத்திலே வேல் பாய்ச்சுவார்கள் எங்கள் தண்டகாரண்ய மக்கள். (கை தட்டல்)
இந்தப் பேயை அழித்து இந்தத் துணைக் கண்டம் புதிய தேசங்களின் இருப்பிடமாக, விடுதலை பெற்ற தேசிய இனங் களின் புதிய ஆட்சிப்புலமாக மலருகிற போது மலைகளிலே இருக்கிற கனி வளத்தை யார் எடுத்துக் கொள் வது, எப்படிப் பயன்படுத்துவது என்பதைத் தீர்மானிப்போம். எந்தச் சட்ட உரிமையின் அடிப்படையிலே தண்டகாரண்யத்துக் காடுகளிலும் மலைகளிலும் இருக்கிற இயற்கை வளங்களுக்கு, இந்தியாவே நீ உரிமம் கொண்டாடுகிறாய். இந்திய அரசமைப்பின் அடிப்படையிலா? இந்த அரசமைப்பை அந்த மக்களைக் கேட்டுக் கொண்டு வகுத்தாயா? எப்போது அந்த மக்கள் இந்த அரசமைப்பை ஏற்றுக் கொண்டார்கள். நாகாலாந்து மக்கள் சொல்கிறார்கள,; 47 ஆகஸ்ட் 15 இந்தியா விடுதலை பெற்ற நாள்! நாங்கள் 47 ஆகஸ்ட் 14ஆம் நாள் விடுதலை பெற்றோம். முன்கூட்டி விடுதலை பெற்ற எங்களை அடிமைப்படுத்த நீ யார் என்று இந்திய அரசைப் பார்த்துக் கேட்கிறார்கள்.
இந்தக் கேள்வியை மறைப்பதற்கான பட்டுத்திரைகளே தேர்தல், சனநாயகம், அரசமைப்பு, நீதிமன்றம் - இந்தத் திரைகள் ஒவ்வொன்றாகக் கிழிந்து தொங்குவதைத்தான் அருந்ததிராய் தண்டகாரண்ய மக்களை நேரில் பார்த்து நமக்குச் சொன்னார்கள். உளப்பூர்வமான ஒரு படப்பிடிப்பு: walking with comrades படித்தீர்களா இல்லையா? தமிழில் போட்டி ருக்கிறோம். எங்கே அருந்ததிராயைத் தங்க வைக்கலாம் - ஐந்து நட்சத்திர விடுதியிலா மூன்று நட்சத்திர விடுதியிலா கவலையே பட வேண்டாம். நீங்களும் நானும் ஒருபோதும் அனுபவித்திராத ஆயி ரம் நட்சத்திர விடுதியி லே தண்டகாரண்ய மக்களோடு வாழ்ந்து விட்டு வந்திருக்கிறார் (கை தட்டல்) A Thousand Star Hotel கற்பனையிலே நினைத்துப் பாருங்கள்.
மக்களின் வாழ்க்கையை நமக்குப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார். எனவே நண்பர்களே! இந்த அடக்குமுறை எதிர்ப்புக் கூட்டமைப்பினை நாம் வலுப்படுத்துவோம். என்ன அரசியல், பொருளியல், பண்பாடு வேண்டும் என்பதை உறுதி செய்கிற உரிமை எம் மக்களுக்கே உண்டு எந்த அரசுக்கும் கிடையாது. எம் மக்களிடம் அந்தத் தீர்ப்பை நாம் விடுவோம். ஆனால் அதற்கான சனநாயக உரிமை வெளியை நாம் பாதுகாப்போம். அடக்குமுறை வென்றதாக வரலாறு இல்லை உரிமைப் போர் தோற்றதாக வரலாறு இல்லை; வெல்க உள்நாட்டு அடக்குமுறை எதிர்ப்புக் கூட்டமைப்பு!
வணக்கம்!
தொகுப்பு : அரிகரன்
(சென்னையில் 2010 சூன் 4ஆம் நாள் உள்நாட்டு அடக்குமுறை எதிர்ப்புக் கூட்டமைப்பு நடத்திய அரங்கக் கூட்டத்தில் தோழர் தியாகு ஆற்றிய உரை)