"கேள்வி எண்.161க்கான பதில் சபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது,' - நாடாளுமன்றத்தில் அழகிரியின் முதல் வார்த்தைகள்.
மத்திய உரத்துறை அமைச்சராக பதவியேற்ற மு.க.அழகிரிக்கு, லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் உறுப்பினர்களின் கேள்விக்கு ஆங்கிலம் மற்றும் இந்தியில் பதில் அளிப்பது சிரமமாக இருந்ததால், கேள்வி நேரத்தின் போது சபைக்கு வருவதை தவிர்த்தார். தன் துறை தொடர்பாக எம்.பி.,க்கள் எழுப்பும் கேள்விகளுக்கு தமிழில் பதில் அளிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் சபாநாயகரிடம் அனுமதி கேட்டிருந்தார். அவரின் கோரிக்கையை பரிசீலித்த சபாநாயகர் மீரா குமார், "பிரதான கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் தரப்படும் பதிலை சபையில் அமைச்சர் அழகிரி வாசிக்கலாம். துணை கேள்விகளுக்கு இணை அமைச்சர் ஸ்ரீகாந்த் ஜெனா பதில் அளிப்பார்' என கூறினார்.
இந்நிலையில், லோக்சபாவில் நேற்று கேள்வி நேரத்தின் போது சபையில் இருந்த அமைச்சர் அழகிரியை, பிரதான கேள்விக்கு பதில் அளிக்கும்படி சபாநாயகர் அழைத்தார். உடன் எழுந்த அமைச்சர் அழகிரி, ""கேள்வி எண்.161க்கான பதில் சபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது,'' என்றார். எம்.பி.,க்கள் எழுப்பிய துணை கேள்விகளுக்கு ரசாயனத்துறை இணை அமைச்சர் ஸ்ரீகாந்த் ஜெனா பதில் அளித்தார்.