தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

இந்தியாவுக்கு எதிராக இணைந்த அணி! அம்பலப்படுத்திய ‘விக்கிலீக்ஸ்’





உலகப் போலீஸ்காரன் என பெருமைப்பட்டுக் கொள்ளும் அமெரிக்காவின் அடிமடியில் இருந்தே முக்கியமான ரகசிய ஆவணங்களை 'ஆட்டை'யை போட்டு அம்பலப்படுத்தியிருக்கிறது, லண்டனைச் சேர்ந்த 'விக்கிலீக்ஸ்' இணையதளம்.

'நீ கொடுக்கும் நிதியை பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்குக் கொடுத்து இந்தியாவுக்கு எதிராக செயல்படத் தூண்டுகிறது. அதனால் நிதி கொடுக்காதே' என அமெரிக்காவிடம் பல தடவை சொல்லிவிட்டது இந்தியா. ஆனால், அமெரிக்காவோ... 'அப்படியெல்லாம் பயன்படுத்தக்கூடாது என்று பாகிஸ்தானுக்கு கண்டிப்பாக சொல்லிவிட்டோம். அப்படி பயங்கரவாதிகளுக்கு பணம் கொடுப்பதாகத் தெரியவந்தால் நிதி உதவியைக் குறைப்போம்' என பாசாங்கு பதிலையே சொல்லி வந்துள்ளது. இந்த நிலையில், அமெரிக்காவின் போர் ஆவணங்கள் எனப்படும் சுமார் 90 ஆயிரம் பக்க ஆவணங்களை லீக் பண்ணியிருக்கிறது விக்கிலீக்ஸ்.

இதன்மூலம் அமெரிக்காவுக்கு நன்கு தெரிந்தே வெள்ளை மாளிகையின் மேற்பார்வையிலேயே, ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபான்களோடு சேர்ந்து இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் செயல்பட்டு வந்ததும், வருவதும் அம்பலமாகியுள்ளது. இதனால் திருடனுக்கு தேள் கொட்டியது மாதிரி (எத்தனை தடவைதான் கொட்டுவது) பாகிஸ்தான் பசப்ப... அந்தத் தேள் கடிக்கு மருந்து போட்டுக்கொண்டிருக்கும் அமெரிக்காவும் ஒன்றும் நடக்காதது போல் இருக்கிறது.

அமெரிக்கா & தாலிபான்களின் போரால் சிதைந்து சின்னாபின்னமாகிக் கிடக்கும் ஆப்கானிஸ்தானை மீள் கட்டமைப்பதில் இந்தியா தீவிர ஆர்வம் காட்டி வருகிறது. ஆப்கானிஸ்தானை தனது அன்புப் பிடிக்குள் வைத்திருக்க நினைத்து இந்தியா மிக காஸ்ட்லியான உதவிகளை ஆப்கானுக்கு செய்துவருகிறது.

சரான்ஜு டெல்ராம் நெடுஞ்சாலை, பல அணைக் கட்டுகள், மின் திட்டங்கள் போன்ற பணிகளுக்காக இந்தியப் படையினரும், இந்திய இன்ஜினியர்கள் உள்ளிட்ட ஊழியர்களும் ஆப்கானிஸ்தானில் தங்கி பணியாற்றி வருகின்றனர். அவர்களை தாலிபான் பயங்கரவாதிகள் அடிக்கடி கடத்துவதும், சில நாட்கள் கழித்து கொடூரமாகக் கொலை செய்து உடலை அனுப்புவதும் தொடர்கதையாகி வருகின்றன. ஆப்கானிஸ்தானின் உள் கட்டமைப்பு வளர்ச்சிக்கு உதவுவதன் மூலம் ஆப்கன் மண்ணில் இந்தியா வலிமையாக நிலையூன்றுவதை தடுத்து நிறுத்த நினைக்கிறது பாகிஸ்தான்.

இந்த சூழலில்தான் கேரளாவைச் சேர்ந்த டிரைவர் மணியப்பன், ஆந்திராவைச் சேர்ந்த இன்ஜினியர் சூரியநாராயணா உள்ளிட்ட பல இந்தியர்கள் இதுவரை தாலிபான் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டு வருகின்றனர். ஆப்கனில் இத்தாலி பேக்கரி நிறுவனத்தில் வேலை செய்த கள்ளக் குறிச்சியைச் சேர்ந்த சைமனை தாலிபான்கள் கடத்திச் சென்றனர். 23 நாட்களுக்குப் பிறகு ஒரு கை வெட்டப்பட்டு பிணமாக கண்டெடுக்கப்பட்டார் சைமன். ஆப்கனின் நிம்ப்ரோஸ் மாகாணத்தில் இந்திய எல்லை சாலை நிர்மாணப் படையின் இன்ஜினியரான கோவிந்தசாமி வேலைபார்த்தார். கிருஷ்ணகிரி அருகே உள்ள கே.திப்பனப்பள்ளியைச் சேர்ந்த அவரோடு வேலை பார்த்த இன்னொரு இன்ஜினியரான காசியைச் சேர்ந்த மகேந்திர பிரதாப் சிங் ஆகியோர் தாலிபான்களின் தற்கொலைப் படைத் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

ஆப்கானிஸ்தானில் இந்தியர்களைக் குறிவைத்து நடந்த இத்தனைக் கொடூரங்களுக்கும் பைனான்ஸியர் பாகிஸ்தான்தான் என்பது இப்போது 'விக்கிலீக்ஸ்' இணையதளத்தால் அமெரிக்க ஆதாரங்களின்படி மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ''காபூலில் உள்ள இந்திய தூதகரத்தின் மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. ஏஜென்டுகள் தாலிபான்களுக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் டாலர்களை முதல் கட்டமாகக் கொடுத்திருக்கிறார்கள். மேலும், எந்த வெடிகுண்டுகளைக் கட்டிய தற்கொலை பயங்கரவாதி எந்த காரில் போய் தூதகரத்தின் எந்த இடத்தில் வெடிக்கவேண்டும் என்பது போன்ற கட்டளைகளையும் ஐ.எஸ்.ஐ.யே பிறப்பித்திருக்கிறது. இதுபோன்றத் தாக்குதல் திட்டங்களை ஐ.எஸ்.ஐ. & தாலிபான் &ஹக்கானி பயங்கரவாத ஒருங்கிணைப்புக் குழு ஆகியவை சேர்ந்துதான் செய்திருக்கின்றன.

இந்திய தூதரகத்தின் மீது தாக்குதல் உள்ளிட்ட பல தாக்குதல் திட்டங்கள் எல்லாம் 2007&ம் வருடம் நவம்பர் மாதமே அமெரிக்க உளவுத்துறைக்கு தெரிந்துவிட்டது. ஆனாலும், இதுபற்றி அலட்டிக்கொள்ளவில்லை. உரிய முன்னெச்சரிக்கை தகவல்களையும் இந்தியாவுக்குத் தரவில்லை'' என அமெரிக்காவின் ஆதாரங்களை அடிப்படையாக வைத்தே செய்திகளை வெளியிட்டிருக்கிறது விக்கிலீக்.

ஆப்கானிஸ்தானில் வேலை செய்யும் இந்தியர்களை எப்படி கடத்துவது, கொல்வது என்பது பற்றிய ஐ.எஸ்.ஐ.யின் திட்டங்கள் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்பதும் அந்த ஆவணங்களில் உள்ளன.

முதலில் இந்தியர்கள் வேலை செய்யும் பகுதிகளில் உள்ள லோக்கல் ஆப்கானியர்களோடு தாலிபான்கள் நெருக்கத்தை ஏற்படுத்தவேண்டும். அவர்கள் மூலம் இந்தியர்களின் டிரைவர், பணியாளர்கள் ஆகியோரை பழக்கம் பிடிக்கவேண்டும். அவர்கள் மூலம் தாக்குதல் திட்டங்களை நிறைவேற்றவேண்டும். மேலும் சாலைப் பணியில் ஈடுபட்டுள்ள இந்திய ஊழியர்களிடம் நல்லவிதமாகப் பழகி அவர்களுக்கு ஆப்கன் விஷச் சாராயத்தை ஊற்றிக் கொடுத்து அதன்மூலம் கொல்லவேண்டும்... என பல கொலைத் திட்டங்களை வகுத்துக் கொடுத்து ஒவ்வொரு திட்டத்துக்கும் பல்லாயிரம் அமெரிக்க டாலர்களை கொட்டிக் கொடுத்துவருகிறது பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.

இவையெல்லாம் சாதாரண பேப்பர்கள் அல்ல, அமெரிக்க அரசுப் புலனாய்வுத்துறையின் முக்கிய ஆவணங்கள் என்பதை பலமுறை உறுதிப்படுத்திக் கொண்டே வெளியிடுவதாக அறிவித்திருக்கிறது விக்கிலீக்ஸ்.

அமெரிக்காவின் மேற்பார்வையில் பாகிஸ்தானும் தாலிபானும் இந்தியா மீது நடத்தும் 'சிவில் போர்' பற்றி இவ்வளவு உறுதியாகத் தெரிந்த பிறகும்... மன்மோகன் சிங்கின் அமெரிக்க பாசம் குறையாவிட்டாலும் அதிகமாகாமல் இருந்தாலே இந்தியாவுக்கு நல்லது!