-படித்ததில் இடித்தது
கொங்கு மண்டலம் தங்கள் கோட்டை என மார்தட்டிக் கொண்டிருக்கிறது, அ.தி.மு.க., தலைமை.
இக்கோட்டையை தகர்த்தெறியும் முயற்சியில் தி.மு.க., அதிதீவிரமாக களமிறங்கியுள்ளது. இதற்காக, சட்டசபைத் தேர்தலுக்கு முன் பல்வேறு அதிரடிகளை அரங்கேற்றவும் தயாராக உள்ளது. அ.தி.மு.க., வின் அசைக்க முடியாத தொகுதியாக கருதப்பட்ட திருப்பூர் தொகுதி, வடக்கு, தெற்கு என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கு தொகுதியில் அ.தி.மு.க., எளிதாக வெற்றி பெறும் என்றாலும் கூட, தெற்கு தொகுதியில் கடும் போட்டி நிலவும்.
இதில் வெல்ல கூட்டணி பலம் மிக அவசியம். இந்த சறுக்கலை பயன்படுத்தி, திருப்பூருக்குள் முதல் காலடியை எடுத்து வைக்க திட்டமிட்டுள்ளது தி.மு.க., இதற்காகவே, திருப்பூர் மாவட்டத்தை உருவாக்கி, மாவட்ட பொறுப்பாளராக அமைச்சர் சாமிநாதனை நியமித்துள்ளது கட்சித் தலைமை. திருப்பூரில் செல்வாக்கு பெற வேண்டுமெனில், பொதுமக்களிடம் செல்வாக்குள்ள, ஓட்டு வங்கியுள்ள நபர் தேவை என்பதை உணர்ந்த, தி.மு.க., இதற்கு என்ன செய்ய வேண்டுமென்று கூட்டிக் கழித்து பார்த்தது. திருப்பூரில் தேர்தல் வெற்றியைத் தீர்மானிப்பதில், தொழிலாளர்களின் பங்கு முக்கியமானது. தொழிலாளர்களை தாங்கிப் பிடிக்கும் தொழிற்சங்கங்களுக்கு கணிசமான ஓட்டுகளைப் பெற்றுத் தரும் சக்தி உண்டு. அந்த வகையில், திருப்பூரில் தி.மு.க., தொழிற்சங்கம் பின்தங்கியுள்ளது; தொழிலாளர்கள் நிறைந்த இப்பகுதியில் தொழிற்சங்கத்தை பலப்படுத்தினால், கட்சி தானாக பலம் பெறும் என்று கட்சி கணக்கு போட்டுள்ளது. தொழிற்சங்கத்தில் நீண்ட அனுபவம் பெற்ற கோவிந்தசாமியைக் கொண்டு இந்த வெற்றிடத்தை நிரப்ப ஆளுங்கட்சி திட்டமிட்டது. ஏற்கனவே கட்சித் தலைமையால், "கட்டம்' கட்டி வைக்கப்பட்டிருந்த, மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ., கோவிந்தசாமிக்கு வலை போட, விழத் தயாராக இருந்த அவரும் வீழ்ந்தார். தி.மு.க., எதிர்பார்த்தது போலவே, கோவிந்தசாமியை அக்கட்சியில் இருந்து விலக்கியது மார்க்சிஸ்ட்.
இதற்கு பதிலடி தரும் வகையிலும், தனது பலத்தைக் காட்டும் வகையிலும், துணை முதல்வர் ஸ்டாலினை வரவழைத்து, ஆதரவாளர்களை திரட்டி, பாராட்டு விழா நடத்தினார் கோவிந்தசாமி. அக்கூட்டத்தில், தி.மு.க.,வில் இணைய தயாராக இருப்பதாக, தன்னுடைய விருப்பத்தை,வெளிப்படையாகவே தெரிவித்தார். துணை முதல்வர் பேசும் போது, "கோவிந்தசாமியை நாங்கள் பயன்படுத்திக் கொள்கிறோம்; அவரை எந்த நேரத்தில் பயன்படுத்த வேண்டும் என்று முதல்வருக்கு தெரியும்; அது, கோவிந்தசாமிக்கும் புரியும்' என்று "செக்' வைத்தார். தி.மு.க.,வுக்குள் கோவிந்தசாமி ஐக்கியமாவதற்கு வெகுகாலமில்லை என்றாலும், முதல்வர் எடுக்கும் முடிவே இறுதியானது என்பதை புரியவைத்தார், ஸ்டாலின். அதன்பின், கோவையில் நடந்த தி.மு.க., பொதுக்கூட்டத்திலும் பங்கேற்றார். அந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில், கோவிந்தசாமிக்கு பேச வாய்ப்பளித்த முதல்வர், தனது பேச்சின்போது, "கம்யூனிஸ்டுகளால் தி.மு.க.,விற்கு அனுப்பி வைக்கப்பட்ட கோவிந்தசாமி' என தனக்கே உரிய பாணியில் பாசமழை பொழிந்தார். முதல்வர் முன்னிலையில், தனது ஆதரவாளர்ளுடன் தி.மு.க.,வில் இணைய கோவிந்தசாமி விரும்புகிறார். இதற்காக, நல்ல நாள் பார்த்து வருகிறார். இம்மாத மத்தியில் சென்னையில் இணைப்பு விழா நடத்தலாம் என முடிவு செய்து, முதல்வரின் இசைவுக்காக காத்திருக்கிறார். இப்போதே அழைப்பு வருமா அல்லது தேர்தல் வரை முதல்வர் காக்க வைப்பாரா என எம்.எல்.ஏ., தரப்பினர் திக்... திக்... மனநிலையில் காத்திருக்கின்றனர்.
வாய்ப்பு கிடைக்குமா? : கோவிந்தசாமியை தி.மு.க.,வுக்குள் இழுத்து, சட்டசபை தேர்தலை சந்திக்கும் பட்சத்தில், திருப்பூர் தெற்கு தொகுதியில் போட்டி கடுமையாக இருக்கும். அத்தொகுதியை கைப்பற்ற அ.தி.மு.க., போராட வேண்டியிருக்கும். அத்தொகுதியில் போட்டியிட, கோவிந்தசாமிக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்தால், கம்யூ., தோழர்கள் எதிர் வேலை பார்த்து, அவரை காலி செய்து விடுவர். இது, அ.தி.மு.க.,வுக்கே சாதகமாக அமையும். தி.மு.க.,வே நேரடியாக நின்று, நேருக்கு நேர் மோதினால் மட்டுமே தேர்தல் களம் சூடுபிடிக்கும். எனவே, கோவிந்தசாமிக்கு மீண்டும் தேர்தல் களம் கிடைக்குமா என்பது சந்தேகமே.