தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

தோளில் சாதி தேடிய ஆசிரியரும், மை நேம் இஸ் பில்லாவும்

பெரியார் பேருந்து நிலையம் வழியாகச் செல்ல வடக்குமாசி வீதியைக் கடக்கும் போதெல்லாம் கண்ணில் படுகிறது சேதுபதி மேல்நிலைப்பள்ளி. இந்தப்பள்ளியில் தான் மகாகவி பாரதி சில நாட்கள் பணியாற்றினார். இப் பள்ளியில் நானும் படித்தேன் என்ற பெருமையும், பூரிப்பும் எனக்குண்டு.

இப்பள்ளியில் அவ்வப்போது இந்துமதம் சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் நடைபெறுவது உண்டு. சில நேரங்களில் காக்கி டவுசர்களும் தென்படும். திருச்சி கல்யாணராமன் என்பவர் இப்பள்ளியில் அடிக்கடி சொற்பொழிவை நடத்தி வருகிறார் என்பது தினமலர் நாளிதழைப் பார்க்கும் போது தெரியவரும். மகாபாரதம் என்ன சொல்கிறது ராமாயணம் என்ன சொல்கிறது என இவர் சொல்வதை கேட்கவும் ஆட்கள் இருக்கிறார்கள் என நினைக்கும் போது சிரிப்பு, சிரிப்பாய் வருகிறது. “கோபம் வந்தால் நான் சொல்வதை நானே கேட்க மாட்டேன்“ என்ற பில்டப் வசனங்களுக்கு கைதட்டி விசிலடிக்கும் கூட்டம் இருக்கும் ஊரில் கல்யாண ராமன் சொல்வதையும் கேட்கிறார்களே என்ற பரிதாபமும் ஏற்படுகிறது.

sethupathi_1சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் படித்து முடித்த பின் நான் வெகுநாட்கள் பள்ளியின் பக்கம் போகவேயில்லை. ஏனெனில், டை அடித்து தலை முழுவதும் பல வண்ணம் தோன்றும் தலையோடு காட்சி தரும் தலைமை ஆசிரியரை, “ஆட்டுத்தலையா“ என யாரோ கழிப்பறையில் எழுதியிருந்ததை நான் தான் எழுதினேன் என நினைத்து பின்னி எடுத்து விட்டார்கள். மார்க் சீட் வாங்கும் போது கூட அப்பாவோடு தான் போனேன். அப்போதும் தலைமை ஆசிரியர் என்மீது கோபத்தில் தான் இருந்தார் என்பது அவரது முகத்தைப் பார்த்த போதே தெரிந்து போனது.

இந்தப்பள்ளியில் மாணவர்களுக்கு மிகவும் பிடித்தமான இடம் என்றால் மாந்தோப்பு தான். ஒரு காலத்தில் மாமரங்கள் நிறைந்திருந்ததால் இப்பெயர் வைக்கப்பட்டதாம்! மாமரங்கள் தற்போது இல்லையென்றாலும் இன்னமும் அப்பெயரே அப்பகுதிக்கு நிலைத்து விட்டது. அந்தப்பகுதியில் வளர்ந்து நிற்கும் வேப்பமரங்களில் இருந்து வீசும் வேப்பங்காத்து பள்ளியறைகளில் அமர்ந்திருப்பவர்களுக்கு தூக்கத்தை உண்டு செய்யும். நிழல் நிறைந்த இப்பகுதியில் விளையாடுவது அனைவருக்கும் பிடிக்கும்.

சோளத்தட்டையை பந்தாக்கி எறியும் போது, அவ்வழியாக கடந்து செல்லும் சில ஆசிரியர்கள் மீதும் அடிபட்டு விடுவதுண்டு. அன்றைய தினம் விளையாடிய அனைவரையும் பிடித்து வெயிலாய் இருக்கும் விளையாட்டு மைதானத்தில் முட்டி போடச்சொல்லி விடுவார்கள். இரண்டு வகுப்புகள் நடைபெறும் நேரம் முட்டி போட்டிருக்க வேண்டும். இதனால், ஆசிரியர்களின் அடியில் இருந்து தப்பிப்பதற்காகவே மதிய உணவு இடைவேளையின் போது இந்த விளையாட்டு நடைபெறும்.

இந்தப்பள்ளியில் மிக அழகான பகுதி ராமண்ணா ஹால். மொசைக் கல்லால் பளபளப்புடன் நிறைய புகைப்படங்களுடன் காட்சி தரும். என்னுடைய தந்தை மொசைக் தொழிலில் பணிபுரிந்ததால் இந்த அறையைக் கடந்து போகும் போது பளபளக்கும் தரையைக் கண்டு மெய்மறந்து நிற்பேன். மதுரை மாவட்டத்தில் டைப்ரைட்டிங் தேர்வு நடைபெறும் மையமாக பல ஆண்டுகளாக இந்த ஹால் திகழ்ந்ததுண்டு.

மகாகவி பாரதி 1904-ம் ஆண்டு இந்தப் பள்ளியில் பணியாற்றினார். அவர் பணியாற்றியதற்கான ஆவணங்கள், இன்றும் பள்ளிக்கூடத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. பாரதியார் பணியாற்றியதை நினைவுகூறும் வகையில் கடந்த 1966-ஆம் ஆண்டு சேதுபதி பள்ளி வளாகத்தில் அவரது மார்பளவு சிலை அமைக்கப்பட்டது. அச்சிலையை, அன்றைய தமிழக முதல்வர் எம். பக்தவத்சலம் திறந்துவைத்தார். பாரதியார் பணியாற்றிய பெருமைமிகு சேதுபதி பள்ளி, அதன் பின் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. பாரதியார் பணியாற்றியதை நினைவுகூறும் வகையில், இந்திய தபால் துறையும் சேதுபதி மேல்நிலைப் பள்ளி படம் பொறித்த அஞ்சல் உறையை பாரதியார் படத்துடன் கடந்த 2004-ம் ஆண்டு வெளியிட்டது.

மதுரையில் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பணியாற்றிய சேதுபதி மேல்நிலைப் பள்ளியும், மகாத்மா காந்தி மதுரை வந்தபோது தங்கிய இடமான மேலமாசி வீதி வீட்டையும் (தற்போதைய காதி பவன்) சிறப்பு நிதி மூலம் மேம்படுத்த மத்திய அரசு தயாராக இருந்தும் அதற்கான திட்ட கருத்துருவை தமிழக அரசு அனுப்பவில்லை என்று கூறப்படுகிறது.

பள்ளியில் படித்து முடித்து அந்தப்பக்கம் போகாமல் இருந்த நான், பாரதியின் பிறந்தநாள் விழாக்களுக்கு தோழர்களுடன் போக ஆரம்பித்தேன். ஒவ்வொரு ஆண்டும் பாரதியின் பிறந்த நாள் அன்று அவரது சிலைக்கு மாலை அணிவித்து கவிதை மூலம் அஞ்சலி செலுத்தும் நிகழ்வை தமுஎகச மூலம் செய்து வருகிறோம்.

இந்த பள்ளியில் பாரதிக்காக நான் தண்டிக்கப்பட்ட நிகழ்வும் நடைபெற்றது. அவர் சில நாட்கள் பணியாற்றிய வகுப்பறையை பழைய பொருட்கள் அதாவது, உடைந்து போன சேர், டேபிள் ஆகியவற்றைப் போட்டு வைக்கும் அறையாக வைத்திருந்தார்கள்.

“பாரதி பணியாற்றிய பெருமையுடைத்து“ என்று பள்ளியின் முகப்பில் உள்ள பெயர் பலகையில் பெருமை கொண்டு விட்டு, நடைமுறையில் பள்ளி நிர்வாகம் இப்படி நடந்து கொண்டது எனக்கு கூடுதல் கோபத்தை ஏற்படுத்தியது. அவர் பணியாற்றிய வகுப்பை சுத்தமாக வைத்திருக்கத் தெரியாதவர்கள் அவர் பணியாற்றியதை மட்டும் பெயர் பலகையில் வைத்து விளம்பரம் தேடலாமா என்ற இயல்பான கோபத்தை நண்பர்களிடம் சொன்னேன். பெரியார், சக்கரவர்த்தி உள்ளிட்ட சில மாணவர்களுடன் சேர்ந்து பெயர்பலகையில் இருந்த பாரதி பணியாற்றிய பெருமையுடைத்து என்ற பகுதியில் இருந்த “யுடைத்து“ பகுதியை அகற்றி விட்டோம். இதனால் நான் உள்ளிட்ட 13 பேர் சில நாட்கள் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டோம். அதன் பின் பெற்றோர்கள் தலையிட்டதால் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டோம்.

பாரதி கவிதை மீது நான் கொண்ட காதல் என் மகளுக்கும் அவரது பெயரையை வைக்கத்தூண்டியது. நரிமேட்டில் உள்ள பள்ளியில் படித்து வரும் என் மகள், ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பாட்டுப்படிக்கப் போகிறேன் என்றாள். அதற்காக பாட்டுப்புத்தகம் வேண்டும் என்றாள்.

சின்ன வயதில் எனக்கு எம்ஜிஆர் மீது இருந்த மோகத்தால் அவருடைய படப்பாடல்கள் அனைத்தையும் மனப்பாடம் செய்து விடுவேன். வீடு நிறைய பாட்டுப்புத்தகங்களாக கிடக்கும். அத்துடன் என் வீட்டில் எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கும் வானொலி எனக்கு பல பாடல்களை ஒப்புவிக்கும் ஆசிரியராக இருந்திருக்கிறது. பாட்டுச்சத்தம் என்பது எனது வீட்டில் வானொலியில் இருந்து மட்டுமின்றி எங்களிடமிருந்தும் கேட்டுக் கொண்டேயிருக்கும்.

புதூரில் உள்ள ஆர்.சி. நடுநிலைப்பள்ளியில் படிக்கும் போது அன்றாடம் பிரேயர் நேரத்தில் ஒலிபெருக்கி முன் நின்று நாளிதழில் உள்ள முக்கிய செய்திகளை வாசிக்கச்சொல்வார்கள். வீட்டில் காலையில் எழுந்தவுடன் பேப்பரை எடுத்து உரக்கப்படி என அப்பா கொடுத்த பயிற்சி, பள்ளியிலும் கிடைத்தது. இதனால், அப்பணி எனக்கு மிகவும் பிடித்துப் போனது.

பேசுவதோடு மட்டுமின்றி பள்ளியில் நடைபெறும் பாட்டுப்போட்டி, நாடகப்போட்டி அனைத்திலும் கலந்து கொள்வேன். தற்போது நூறாண்டு கண்டுள்ள புதூர் புனித லூர்து அன்னை திருத்தலத்தில் உள்ள மேடையில் பல முறை ஏறி நடித்துள்ளேன். பாடியுள்ளேன்.

பள்ளி நேரத்தை விட்டால், ஆத்திக்குளத்தில் இருந்த வீரலெட்சுமி திரையரங்கு தான் என் இருப்பு. எம்ஜிஆர் நடித்த படம் என்றால் அத்தனை நாளும் ஆஜராகி விடுவேன். எனது பெரியப்பா அந்த தியேட்டரில் பணியாற்றியதால் எப்போதும் எனக்கு டிக்கெட் கிடையாது என்ற சலுகை தினமும் படம்பார்க்க வைத்தது. முதல் முதலாக ஆற்று மணலை தரிசித்தது அந்த காலங்களில் தான். மதுரையில் வைகை இருந்தாலும், சித்திரைத் திருவிழாவிற்கு வீட்டினர் அழைத்துச் செல்லும் போது கால் நினைக்கும் தண்ணீரில் நின்று கொண்டு அழகரைக் கண்ட நான், ஆற்று மணலை வைகையில் கண்டதில்லை.

வீரலெட்சுமி தியேட்டரில் மணலில் அமர்ந்து கொண்டு படம் பார்ப்பது சுகமான அனுபவம். பின்னால் இருப்பவர் சுரண்ட, சுரண்ட உயரம் குறைய, மீண்டும் மணலைக் குவித்து படம் பார்க்கும் அனுபவம் எத்தனை பேருக்கு கிடைத்தது? கிடைக்கும் என்ற எண்ணங்கள் எனக்கு இப்போதும் தோன்றும். தற்போது கார்பரேட் வணிகமயமாகி விட்ட திரையரங்குகளில் கையில் கொண்டு வந்துள்ள பொருட்களை விட்டு விட்டுப் போகச் சொல்கிறார்கள். இன்னும் சில நாட்களில் குழந்தைகளையும் விட்டு விட்டுப் போகச்சொன்னாலும் சொல்வார்கள்!

அப்போதெல்லாம் திரையங்கு முன்பு பாட்டுப்புத்தகங்கள் விற்பனை செய்யப்படும். எந்தப்படம் வெளியாகிறதோ அந்தப்படத்தின் பாட்டுப்புத்தகம் அன்றைய தினங்களில் கூடுதலாக விற்கும். அதன் பின் சில ஆண்டுகளுக்குப் பிறகு திரையரங்குகளில் டிக்கெட்டுடன் சேர்த்து பாட்டுப்புத்தகங்களை தர ஆரம்பித்தார்கள். அதில் படத்தின் கதைச்சுருக்கம் போடப்பட்டிருக்கும். தற்போது பாட்டுப்புத்தகங்கள் கிடைக்கும் கடைகளைத் தேடியலைய வேண்டியதுள்ளது.

புதூரில் உள்ள ஆர்.சி. நடுநிலைப்பள்ளியில் பாட்டுப்பாடிய தைரியத்தில், சேதுபதி மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழாவிலும் பாட வேண்டும் என்ற ஆசை எனக்கு கிளம்பியது. பள்ளி ஆண்டு விழாவில் யார், யார் பாடுகிறார்கள் என ஆசிரியர் கேட்கவும், பல மாணவர்களுடன் நானும் சேர்ந்து கையை உயர்த்தினேன். சிவத்த தோல் உடைய மாணவர்களின் பெயர்களைக் குறித்துக் கொண்ட வகுப்பாசிரியர், என்னைப் பார்த்ததும் ஆச்சரியத்தோடு,“ நீயும் பாடுகிறாயா“ என சந்தேகமாக கேட்டார். ஆமாம் என்றேன். அருகில் வந்து அவரது இரு கைகளாலும் என் தோளைப் பிடித்துக் கொண்டு என்ன பாட்டு தெரியும் என்றார். சினிமா பாட்டு பாடுவேன் என்றேன். அவருடைய கைகள் என்னுடைய தோளை பிசைந்து கொண்டிருந்தன. எங்கே பாடு என்றார்.“ மை நேம்ஸ் பில்லா என்ற பாடலைப்பாடவும் வகுப்பு மாணவர்கள் ரசித்து கைதட்டினார்கள்.

தோளில் தனது தேடலை நிறுத்திக் கொண்ட ஆசிரியர், உன் அப்பா என்ன வேலை செய்கிறார் எனக்கேட்டார். கூலி வேலை என்றேன். உதட்டைப் பிதுக்கிக் கொண்டே,“ அடுத்த ஆண்டு நீ பாடு“ என்றார். ஆண்டுவிழாவில் பாட வேண்டும் என்ற ஆவலில் இருந்த எனக்கு இது பெரும் ஏமாற்றமாக இருந்தது. விளையாட்டு நேரத்தின் போது விளையாட்டு ஆசிரியர் ரவி, “என்ன சோகமாக இருக்க?“ எனக்கேட்ட போது நடந்ததைக் கூறினேன். “பாட்டு பாடுவதென்றால், அய்யரா, அய்யங்காரா இருக்கணும், நீ ரெண்டும் இல்ல. அப்புறம் எப்படிடா உன்னை பாடவிடுவார்“ என அவர் கேட்டார். அனைத்து மாணவர்களுக்கும் பிடித்த ஆசிரியர் ரவி தான். பிடிக்காத ஆசிரியரும் அவர் தான். கையில் உள்ள விசில் கயிறு கொண்டு மாணவர்களை விளாசுவதால் அவரைக் கண்டாலே பலருக்குப் பயம். ஆனாலும், அனைவரிடமும் பிரியமாக இருப்பார்.

வகுப்பாசிரியர் எனது தோளில் நீண்ட நேரமாக சாதியைத் தேடியது பிறகு தான் தெரிந்தது. என்னுடன் படித்த பெரியார் என்ற சக நண்பன், நீ எப்படியாவது பாட வேண்டும். வாத்தியார் மூஞ்சியில் கரியைப் பூசவேண்டும் என்றான். அவனது தந்தை, திராவிடர் கழகத்தில் இருந்தவராவார். காவல்துறையில் பணிபுரிந்தாலும், பெரியார் மீது அவருக்கு மிக ஈடுபாடு. சாதி பார்த்து பாட்டு பாடாதே என்று சொன்ன வகுப்பாசிரியரின் நோக்கத்தை எப்படியாவது சிதைக்க வேண்டும் என்பதற்காக, ஆண்டு விழாக்குழு ஆசிரியரான கட்டப்பொம்மு என்பவரைப் பார்த்து நானும் பாடுகிறேன் அய்யா என்றேன். எங்கே பாடு என்றார். நானும் வழக்கம் போல பாடவும், நல்லாத்தான் இருக்கு. உன் பெயரையும் சேர்த்துக் கொள்கிறேன் எனக்கூறினார்.

இதையறிந்த எனது வகுப்பாசிரியருக்கு என் மீது பயங்கர கோபம். என்ன பாட்டு படிக்கப்போகிறாய் எனக்கேட்டார். சினிமா பாட்டு தான் என்றேன். கர்நாடக இசையை மையப்படுத்திய பாடலாக இருக்க வேண்டும் என அவர் கூறவும், எனக்கு பயமாய் போனது. எனக்கு தெரிந்தது கர்நாடகம் என்ற மாநிலத்தின் பெயர் தான். கர்நாடக சங்கீதப்பாடல் எது என்ற அறிவு அப்போது இல்லை. அதோடு விட்டு விடாமல், “ராகவனே ரமணா , ரகு நாதா“ என்ற பாடலைத்தான் பாட வேண்டும் என்று வகுப்பு ஆசிரியர் கட்டளை போட்டார். இதற்காக மாலை நேரத்தில் ஒரு ஆசிரியரிடம் அழைத்துச் சென்று பயிற்சி அளித்தார்கள். “இளமைக்காலங்கள்“ படத்தின் பாட்டுப்புத்தகத்தை தேடிப்பிடித்து வாங்கி ராகவனே ரமணாவை மனப்பாடம் செய்தேன். ஆனாலும் தோளில் பூணூல் தேடிய வகுப்பு ஆசிரியரை எப்படியாவது பழிதீர்க்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் மனதில் ஓடிக்கொண்டேயிருந்தது.

பள்ளியின் ஆண்டு விழா தேதியும் வந்தது. உள்ளுக்குள் உதறல் எடுக்க ஆரம்பித்தது. ஆண்டுவிழாவிற்கு முதல் நாள், வகுப்பு ஆசிரியர் என்னைப் பார்த்து, “உன்னையில்லாம் பாடலைன்னு யாரு அழுதது?“ எனக்

கேட்டது உள்ளுக்குள் இருந்த உதறல்களை உதறச் செய்தது. முடிவுக்கு வந்தப்பின் பின்வாங்கக்கூடாது என்ற வைராக்கியம் மட்டும் ஆழமாய் பதிந்து போனது.

என்னுடைய பெயரைச்சொல்லி ராகவனே ரமணா என்ற பாடலைப் பாடுவார் என ஆசிரியர் கட்டப்பொம்மு வாசிக்க, மைக் முன் நின்று, “ஒன், டூ, த்ரீ“ என்றேன். புதூர் ஆர்.சி பள்ளிக்குப் பிறகு நீண்ட நாளுக்குப் பின் வேறு பள்ளியில் மைக் முன் நிற்கும் ஒரு சந்தர்ப்பம் எனக்கு அப்போது தான் வாய்த்தது. எங்கள் தெருவில் தேசிய விநாயகர் கோவில் திருவிழாவின் போது ரேடியோ செட் போடுபவர்களைப் பார்த்து அதே பழக்கத்தில் “ஒன், டூ, த்ரீ“ என்றேன். பாடுடா என திரைக்குப் பின் இருந்து ஆசிரியர் சத்தம் போட்டார். முன்வரிசையில் அமர்ந்திருந்த வகுப்பாசிரியர் என்னை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தார்.

“ மை நேம்ஸ் பில்லா“ என நான் உற்சாகமாகப் பாட ஆரம்பிக்கவும் மாணவர்கள் உற்சாகமாக கைதட்டி விசிலடிக்க மைதானம் முழுவதும ஆராவாரம். திரையின் பின் இருந்து சத்தம் போட்ட ஆசிரியரின் குரலைக் கணக்கில் கொள்ளாமல் முழுமையாக அந்தப் பாடலைப் பாடி முடித்தேன். விழா முடிந்த பின் கட்டப்பொம்மு காதைத் திருகி சத்தம் போட, அதற்காகவே காத்திருந்தது போல் இருந்த வகுப்பு ஆசிரியர், ஸ்கேலால் பின்னி எடுத்து விட்டார். இரண்டு கைகளும் பழுக்கும் அளவிற்கு அடி விழுந்தது. வீட்டில் இருந்து பெற்றோரை அழைத்து வரவேண்டும் என ஆசிரியர் சொன்னார். இதனால் இரண்டு நாட்கள் பள்ளிக்குச் செல்லவில்லை. பாட்டுப்புக்த்தகம் வாங்கி வரச்சொன்னா என்னத்த யோசிக்கிறீங்க என என் நினைவுக்குளத்திற்குள் கல்லை எறிந்தாள் மகள் பாரதி. ஆண்டு விழாவில் என்ன பாட்டு படிக்கப் போகிற என ஆவலுடன் கேட்டேன். “ராகவனே, ரமணா, ரகுநாதா” என்றாள்.

- ப.கவிதா குமார் ( kavithamukil@rediffmail.com)