சாதி மாறி இளைஞரைக் காதலித்ததால் ஆதிவாசி இளம் பெண்ணை நிர்வாணப்படுத்தி 8 கிலோ மீட்டர் தூரம் ஓட ஓட விரட்டித் தாக்கி மானபங்கப்படுத்திய அதிர்ச்சியூட்டும் கொடூரச் சம்பவம் மேற்கு வங்கமாநிலத்தில் நடந்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம் `ரி பகுதியிலுள்ள செல்போன்களில், "ஆதிவாசி பெண்' என்ற தலைப்பில் பரவிய நிர்வாணமான காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 17 வயதுள்ள அந்த ஆதிவாசிப் பெண், வேறு சாதி இளைஞரைக் காதலித்ததால், கிராம மக்கள் ஒன்றுகூடி இந்தக் கொடூரக் காட்சியை அரங்கேற்றியுள்ளனர்.
ஏறத்தாழ 100 ஆதிவாசிகள் டிரம்ஸ் போன்ற வாத்தியங்களை முழங்கியபடி பின்னால் ஆர்ப்பரித்து வர, ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக்கப்பட்ட அந்த அபலைப் பெண் தன் இரு கைகளால் தனது அங்கங்களை மறைத்தபடி தட்டுத் தடுமாறி ஓடிக்கொண்டு இருந்தாள். பின்னால் கூச்சலிட்டபடி வந்த ஆண்கள் சிலர், கைகளால் மானத்தை மறைக்கவிடாதபடி, கைகளில் தடியால் தாக்கியபடி வந்தனர். பின்னால் வந்தவர்கள் அதைப் பார்த்து சிரித்தபடி அந்தப் பெண்ணை விரட்டி வந்தனர்.
சில சிறுவர்கள் அந்தப் பெண்ணை கற்களால் தாக்கினார்கள். அருகில் உள்ள 3 கிராமங்கள் வழியாக ஏறத்தாழ 8 கிலோ மீட்டர் தூரத்துக்கு இந்த அராஜகம் நடை பெற்றது. ஓடிக்களைத்த அந்த பெண், நடக்க முடியாமல் நின்றபோதெல்லாம் தாக்கி மானபங்கம் செய்தபடி விரட்டினார்கள். 11 நிமிடங்கள் ஓடும் வகையில் இந்தக் கோரக்காட்சி செல்போனில் படம் பிடிக்கப்பட்டு வெளியாகி இருந்தது.
4 மாதங்களுக்கு முன்பு, கடந்த ஏப்ரல் மாத சுட்டெரிக்கும் வெயிலில் கொடூரமான முறையில் கிராமத்தினர் சார்பில் இந்தச் சம்பவம் அரங்கேற்றப்பட்டு இருந்தாலும் தற்போது செல்போனில் பரவிய பின்னர்தான் அதுபற்றி தகவல் வெளியே தெரியவந்துள்ளது. இதையடுத்து போலிஸார் தாங்களே முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.