ஆனால், நாகை மாவட்டத்திலிருந்து செம்மொழி மாநாட்டுக் காவல் பணிக்குச் சென்றவர்கள், தங்களின் உணவுப் படியை யார் சாப்பிட்டது? என குமைந்து கொண்டிருக்கிறார்கள்.
நாகை மாவட்டத்திலிருந்து செம்மொழி மாநாட்டுப் பணிக்குச் சென்ற காவலர்கள் வட்டாரத்தில் பேசினோம்.
''ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தனித்தனியே திருமண மண்டபம் ஒதுக்கப்பட்டது. அதன்படி எங்களுக்கும் ஒரு மண்டபம் ஒதுக்கி, அதில் ஆட்கள் மூலம் சமைத்து உணவு கொடுத்தார்கள். இதற்கு பொறுப்பு புதுப்பட்டினம் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன். எங்களுக்கான உணவுப்படி நாள் ஒன்றுக்கு 100 ரூபாய். ஆக, நாங்கள் தங்கியிருந்த 12 நாட்களுக்கும் நபர் ஒருவருக்கு ஆயிரத்து 200 ரூபாய்.
மற்ற மாவட்ட போலீஸாருக்கு எல்லாம் 'நான் வெஜ்' போட்டு அதிலும் மீதித் தொகையாக 400 முதல் 550 ரூபாய் வரை ஒவ்வொருவருக்கும் மண்டப வாசலிலேயே பிரித்துக் கொடுத்துவிட்டார்கள்.
ஆனால் 12 நாட்களும் தயிர் சோறு, பொங்கல் என வெறும் வெஜிடேரியன் சாப்பாடு போட்டு எங்களுக்கு இன்று வரை ஒரு பைசா கூட கொடுக்கவில்லை. இதில் ஊழல் செய்யப்பட்ட பல ஆயிரம் ரூபாய் பணம் யாரிடம் உள்ளது? ஏன் எங்களுக்கு மட்டும் கொடுக்கவில்லை? நாகையின் புதிய எஸ்.பி. சந்தோஷ்குமார்தான் இதுபற்றி விசாரித்து நியாயம் வழங்கவேண்டும்'' என்று புலம்புகிறார்கள்.
புதுப்பட்டினம் இன்ஸ்பெக்டர் கண்ணதாசனிடம் இதுபற்றிக் கேட்டோம். ''எங்களுக்கு ஒதுக்கப்பட்ட மண்டபத்தில் சைவம்தான் சமைக்க வேண்டும் என்று மண்டப மேனேஜர் சொல்லிவிட்டதால்தான் சைவம் சமைக்கப்பட்டது. நான் வெறும் சூப்பர்வைசர் மட்டும்தான். வரவு செலவு எல்லாம் ஆயுதப் படையில் எஸ்.எஸ்.ஐ.ஆக இருக்கும் ஆனந்தராஜ்தான் பொறுப்பு'' என்றார்.
ஆயுதப் படை எஸ்.எஸ்.ஐ., ஆனந்தராஜிடம் கேட்டோம், ''எனக்கு ஒதுக்கப்பட்டவர்கள் 120 பேர். ஆனால் சாப்பிட்டவர்களோ 148 பேர். நபருக்கு 100 ரூபாய் உணவுப் படி என்று அறிவிக்கப்பட்ட போதிலும், அவர்கள்(யார்?) ரூபாய் 25 எடுத்துக்கொண்டு 75 ரூபாய் வீதம்தான் என்னிடம் கொடுத்தார்கள். 5 சமையல் ஆட்கள் வைத்து சமைத்து போட்டு 52 ரூபாய் வீதம் செலவு செய்து மீதிப் பணத்தை ஆயுதப்படை ஆய்வாளரிடம் ஒப்படைத்துவிட்டேன்.
ஆனால் நாகை மாவட்டத்திலிருந்து செம்மொழி மாநாடு காவல் பணிக்கு 300 பேர் சென்றோம். பணம் பெற்றுத் தரும் பொறுப்பை ஏற்றவர்கள் நாகை ஸ்பெஷல் பிராஞ்ச் போலீஸ்தான். அவர்களோ 246 பேருக்குதான் பயணப் படி பெற்றிருக்கிறார்கள். மீதி நபருக்கு வாங்கவில்லையாம். அவை வந்த பின்புதான் பணம் பிரித்து கொடுக்க முடியும் என்கிறார்கள். இதுபற்றி ஸ்பெஷல் பிராஞ்ச்சில் கேளுங்கள்'' என்றார். ஸ்பெஷல் பிராஞ்ச் போலீஸை நான்கு முறை தொடர்பு கொண்டும், 'இன்ஸ்பெக்டர் இல்லை' என்ற பதிலையே சொன்னார்கள்.
மாநாடு நடத்தி தமிழுக்கு சோறுபோட்டார்களோ இல்லையோ... சிலர் தங்களுக்கு 'சோறு' போட்டுக் கொண்டுள்ளார்கள்!