தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

கொள்ளையனுக்கு ஒரு கட்சி; கொலையாளிக்கு ஒரு கட்சி!






இப்போது இல்லை... சில மாதங்களுக்கு முன்பும்கூட பெட்ரோலின் விலையும் டீசலின் விலையும் உயர்த்தப்பட்டது. பொதுமக்கள் எல்லாம் விலைவாசி உயர்வால் எரிச்சல் அடைய ஆரம்பித்த சமயம். அப்போது பார்த்து, தமிழகத்தில் தொலைக்காட்சி மூலம் பிரபல நடிகையுடன் சாமியார் நடத்தும் சல்லாப காட்சிகள் ஒளிபரப்பாயின. மணிக்கு ஒருமுறை இதையே காட்டி, இந்த 'ஆர்'நடிகை யார் என்று நேயர்களிடம் கேள்வி கேட்க..பார்த்தவர்களின் பல்ஸ் எகிறிது. வீடு, கடை, தெரு, பள்ளி, கல்லூரி, அலுவலகம்...என எங்கு பார்த்தாலும் மக்கள் இதையே பேச ஆரம்பித்தனர். சாமியாருடன் நடிகை எப்படியெல்லாம் சல்லாபம் செய்கிறார் என்பதை மாய்ந்து மாய்ந்து பேசி தீர்த்தது தமிழகம். இந்த மயக்கத்தில் அப்போதைய பெட்ரோல் டீசல் விலை உயர்வு மறந்தே போனது.

அரசியலில் எந்த பிரச்னையையுமே திசை திருப்ப கற்றுக் கொள்ள வேண்டும். மக்களை பாதிக்கும் விஷயங்களை மறக்கடிக்க வேண்டும், திசை திருப்ப வேண்டும். மக்களை யோசிக்கவோ கோபம் வரச் செய்யவோ மட்டும் கூடாது. கடைந்தெடுத்த அயோக்கியத்தனமான இந்த அணுகுமுறைக்கு அரசியல் வட்டாரங்களில் 'ராஜதந்திரம்' என்று பெயர்.

இந்த ராஜதந்திரத்தை இப்போது காங்கிரஸ் காட்டுகிறது. சமீபத்திய பெட்ரோல் டீசல் விலை உயர்வால், பொருட்களின் விலைகள் மற்றொரு மைல்கல்லை தொட்டுக் கொண்டிருக்கின்றன. மக்களிடம் அதிருப்தியும் வெறுப்பும் தென்பட ஆரம்பிப்பதற்குள் சுதாரிக்க துவங்கிவிட்டது காங்கிரஸ். அதன் விளைவுதான் 'போலி என்கவுன்டர்' விவகாரம். தலைப்புச் செய்திகளில் 'அமித்ஷா', 'ஷொராபுதீன்'... என பெயர்கள் வேறு.

குஜராத் மாநில முதல்வர் மோடியின் வலதுகரம் அமித்ஷா. உள்துறை இலாகாவுக்கு இணையமைச்சராக இருந்த இவரை கைது செய்துள்ளது சி.பி.ஐ. ஷொராபுதீன் என்ற நபரை என்கவுன்டர் செய்த விவகாரத்தில் உள்ளே தள்ளப்பட்டு இருக்கிறார். லோக்கல் போலீசும், அமித்ஷாவும் கைகோர்த்துக்கொண்டு திட்டம்போட்டு ஷொராபுதீனை தீர்த்துக் கட்டியது அம்பலமாகியுள்ளது.

சரி. யார் இந்த ஷொராபுதீன்? ஒரே வரியில் சொல்வதானால் ஹைகிளாஸ் ரவுடி. கொலை, கொள்ளை என கிரிமினல் பின்னணி உள்ள இவன் போலீசிடம் சிலமுறை சிக்கியவனும்கூட. ராஜஸ்தான் மார்பிள் பிஸினஸ் மாபியாவுடன் தகராறு ஏற்பட இவனை போட்டுத்தள்ள திட்டம் தீட்டப்படுகிறது. ராஜஸ்தானிலும், குஜராத்திலும் பி.ஜே.பி.யே ஆதிக்கம் செலுத்தியதால் வேலை சுலபமாக முடிந்தது. 2005-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி காந்திநகருக்கு வெளியே ஷொராபுதீனுக்கு என்கவுன்டர். இரு நாட்கள் கழித்து 28&ம் தேதி இவனது மனைவியும் காலி. பெட்ரோல் ஊற்றி எரித்து, நர்மதை ஆற்றில் சாம்பல் வீசப்படுகிறது.

இந்த வழக்கில்தான் சி.பி.ஐ.யை வைத்து வழக்கம்போல விளையாட்டு காட்ட ஆரம்பித்துள்ளது காங்கிரஸ். தனது நம்பிக்கைக்குரிய தளபதியான அமித்ஷாவை சி.பி.ஐ. வளைக்கிறதே என்பதால் மோடிக்கு பெரிய பதட்டம். பல மாநில முதல்வர்கள் பங்கேற்கும் முக்கிய ஆலோசனை கூட்டம் டெல்லியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தலைமை மோடி. தளபதியை போலீஸ் தேடுவதால் இந்த கூட்டத்திற்கு கூட போகாமல் குஜராத்திலேயே இருந்து கொண்டார் மோடி. உள்துறை அமைச்சரையே போலீஸ் தேடிய அதிசயம் இரு நாட்கள் நீடித்தது. கடைசியில் அமித்ஷா சரணடைய, சபர்மதி சிறையிலும் அடைக்கப்பட்டுவிட்டார். காந்தியும், படேலும் இருந்த செல்லில் இந்த கொலைகார அமித்ஷா அடைக்கப்பட்டுள்ளார் என்பதுதான் விசேஷம்.

போலி என்கவுன்டர் ரொம்ப சாதாரணம். போலீசில் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் என்றே கூட பலர் உண்டு. எந்த என்கவுன்டர் ஆனாலும் பத்திரிகைகளில் இரண்டு படங்கள் வரும். ஒரு படத்தில் ரவுடி மட்டும் செத்துப் பிணமாய் கிடப்பார். இன்னொன்றில் இரண்டு போலீஸ்காரர்கள் கைகளில் கட்டுடன் ஆஸ்பத்திரியில் படுத்தபடி இருப்பர். கூடவே உயர் அதிகாரி பேட்டி, இப்படியிருக்கும்: ''தாக்கிவிட்டு தப்பிஓடினான்.சுட்டு வீழ்த்தினோம்''. அவ்வளவுதான். அதிகபட்சம் மனித உரிமை கமிஷனுக்கு புகார் போகும். உண்மையில் என்ன நடந்தது என்பது எப்போதும் வெளிவரவே வராது.

நாடு முழுவதும் ஆயிரக்கணக்கில் போலி என்கவுன்டர் சம்பவங்கள் நடந்துள்ளன. சமீபத்தில்கூட ஆசாத் என்ற மாவோயிஸ்ட் தலைவரை அடிலாபாத் என்ற இடத்தில் ஆந்திரா போலீஸ் என்கவுன்டர் செய்தது. இத்தனைக்கும் அரசுடனான அமைதி பேச்சுகளில் பாலமாக விளங்கியவர் இவர். போதாக்குறைக்கு இவரை பேட்டிகாண சென்ற ஹேமசந்தர் பாண்டே என்ற பத்திரிகையாளரையும் என்கவுன்டரில் போலீசார் போட்டுத் தள்ளினர். டெல்லியில் உள்ள மனித உரிமை ஆணையத்திடம் மட்டும் 700க்கும் அதிகமான போலி என்கவுன்டர் கேஸ்கள் உள்ளன. இவற்றில் எத்தனை கேஸ்களில் விசாரணை நடக்கிறது? முழு உண்மை வெளிவந்துள்ளது? ஏன் ஷொராபுதீன் வழக்கை மட்டும் சி.பி.ஐ. தோண்டித் துருவ வேண்டும்? அதுவும் ஐந்து ஆண்டுகள் கழித்து? அதுதான் காங்கிரசின் அரசியல். கேட்டால், ''சி.பி.ஐ.யை காங்கிரஸ் ஆட்டுவிக்கவில்லை. சுப்ரீம்கோர்ட் சொல்லி விசாரணை நடக்கிறது'' என்று சீரியஸாக போய்க் கொண்டிருக்கும் எபிசோடின் இடையே காமெடி சீன் வருவது போல பிரதமர் மன்மோகன்சிங் பேட்டியளிக்கிறார். கூட்டிக் கழித்துப்பார்த்தால் கொள்ளைக்காரனுக்காக ஒரு கட்சியும் கொலைகாரனுக்காக இன்னொரு கட்சியும் களத்தில் உள்ளன.

விலைவாசி பிரச்னை என்றுதான் இல்லை. போபால் சம்பவம், ஆண்டர்சன் தப்பிய விவகாரம், கர்நாடக இரும்புத் தாது கொள்ளை, பாகிஸ்தான் பேச்சுவார்த்தை தோல்வி, காஷ்மீர் கலவரம், ஸ்பெக்ட்ரம் ஊழல் என நிறைய பிரச்னைகள் இருக்கும் நேரத்தில் உப்புக்கும் உதவாத போலி என்கவுன்டர் விவகாரத்தை வைத்து இரு கட்சிகளும் கண்ணாமூச்சி ஆடுகின்றன. கூட்டாளிகளும் குதூகலிக்கின்றன. காரணம், நாடாளுமன்றத்தில் தங்கள் பிரச்னைகள் பெரிதாக வராமல் போகும் அல்லவா? உதாரணத்திற்கு தொடர் ரயில்விபத்துகள் பிரச்னையாகாது என்பதால் திரிணாமுலுக்கு திருப்தி; ஸ்பெக்ட்ரம் பெரிதாகாது என்பதால் தி.மு.கவுக்கு மகிழ்ச்சி; ஐ.சி.சி. சேர்மனானது மறக்கடிக்கப்படும் என்பதால் பவாருக்கு நிம்மதி! எப்போதுமே பிரச்னைகளை திசை திருப்புதில் காங்கிரஸ் கில்லாடி. பெட்ரோல் டீசல் விலை உயர்வால் விலைவாசி எங்கோ போய்விட்டது. இதை மையமாக வைத்து மன்மோகன் அரசை நாடாளுமன்றத்தில் கார்னர் செய்ய நினைக்கும் எதிர்க்கட்சிகளை ஒன்று சேர விட்டால் அது ஆபத்து அல்லவா? அதனால்தான் காங்கிரஸ், ஷொராபுதீன் வழக்கை தூசி தட்டுகிறது. விளைவு? பி.ஜே.பி. தும்முகிறது! நடத்தட்டும் நாடகத்தை... பார்க்கத்தான் நாம் இருக்கிறோமே!