தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

ஊழலில் தொடர்புடையோர் பிடிபடும் நாள் வெகு தூரத்தில் இல்லை

ஊழலில் தொடர்புடையோர் பிடிபடும் நாள் வெகு தூரத்தில் இல்லை: ஜெ

போலி மதிப்பெண் சான்றிதழ் ஊழலில் தொடர்புடையவர்கள் பிடிபடும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த மார்ச் மாதம் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்ட பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியலில் இடம் பெற்றுள்ள பலர், ஜூலை 14ம் தேதி வெளியிடப்பட்ட பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளனர்.

பொதுவாக ஒருமுறை ஒருவர் ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுவிட்டால், அவருடைய பெயரை எப்படி மறுபடியும் வேலை வாய்ப்பு அலுவலகம் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு பரிந்துரை செய்ய முடியும்? ஒருவரை எப்படி இருமுறை தேர்வு செய்ய முடியும்?. ஒருவருக்கு எப்படி இரண்டு வேலை அளிக்க முடியும்?.

முதுநிலை ஆசிரியர் தேர்வுப் பட்டியலிலும் மிகப் பெரிய குளறுபடி நடந்துள்ளது. வேலை வாய்ப்பு அலுவலகத்தின் பரிந்துரைப் பட்டியலில் இடம் பெறாத பலர் முதுகலை ஆசிரியர் தேர்வுப் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாகவும், வேலை வாய்ப்பு அலுவலகம் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் பதிவு மூப்பு தேதி மாறுபட்டு இருப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 283 தமிழாசிரியர் பணியிடங்களுக்காக ஒரு இடத்திற்கு ஐந்து பேர் என்ற வீதத்தில், 1,415 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால், 256 பேர் தான் தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 27 பணியிடங்களுக்கு யார் நியமிக்கப்பட்டார்கள் என்ற விவரம் தெரியவில்லை.

இதே போன்று, கடந்த மே மாதம் 206 தமிழாசிரியர் பணியிடங்களுக்காக 1,030 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால் 196 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள பத்து பணியிடங்களில் யார் நியமிக்கப்பட்டார்கள் என்ற விவரம் தெரியவில்லை.

இதுபோன்ற கேள்விகள் எல்லாம் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களால் ஏற்கனவே எழுப்பப்பட்டு விட்டன. பத்திரிகைகளிலும் வெளி வந்திருக்கிறது.

இது மட்டுமல்லாமல், போலிகளின் வரிசையில், போலி மதிப்பெண் சான்றிதழ் வேறு சேர்ந்துவிட்டது. போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் [^] சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டு, இதன் விளைவாக கல்வித் துறை ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இவரை பார்வையாளர்கள் என்ற போர்வையில் சில மர்ம நபர்கள் சந்தித்து உண்மையைச் சொல்லக் கூடாது என மிரட்டியுள்ளதாக பத்திரிகைகளில் செய்திகள் [^] வந்துள்ளன. இந்த மர்ம நபர்கள் யார் என்ற விவரத்தை காவல் துறையினர் இதுவரை கண்டுபிடிக்கவில்லை.

இந்த ஊழலில் தொடர்புடையவர்கள் பிடிபடும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்பதை மட்டும் இந்தத் தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

ஜெ. பாதுகாப்பு [^]க்கு 23,400 பேர்:

இந் நிலையில் திருச்சி [^]யில் வரும் 14ம் தேதி நடக்கும் அதிமுக ஆர்பாட்டத்தில் பங்கேற்க வரும் ஜெயலலிதாவுக்கு தலைமையில் 23,400 ஜெயலலிதா பேரவை உறுப்பினர்கள் பாதுகாப்பு அளிக்க உள்ளனராம்.

இதற்காக அவர்களுக்கு கருப்பு, சிவப்பு, வெள்ளையில் சீருடைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டம் சேர்ப்பது தொடர்பாக திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் திருச்சி பாலக்கரை மீனாட்சி திருமண மண்டபத்தில் ஜெ.பேரவை செயலாளர் சீனிவாசன் தலைமையில் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் பேசிய மாவட்டச் செயலாளர் மனோகர், ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்த பேரவை நிர்வாகிகள் கடுமையாக உழைக்க வேண்டும். எல்லா இடங்களிலும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கழக பாடல்களை ஒலிக்க விடுங்கள் வரும் சட்டமன்றத் தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் 9 தொகுதிகளிலும் வெற்றி பெற்றோம். அம்மா தலைமையில் நடக்கும் ஆர்ப்பாட்டம் அதை உறுதி செய்யும் அதனால்தான் சிலர் இப்போதே தொகுதி மாற யோசித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றார்.

முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் பேசுகையில், அம்மாவின் பாதுகாப்புக்கு 234 சட்டமன்ற தொகுதிக்கு 100 ஜெ. பேரவை நிர்வாகிகள் வீதம் 23,400 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவர்களுக்கு சீருடை வழங்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றார்.

அமெரிக்காவின் ஒரு நீர்மூழ்கியில் 150 அணு ஆயுதங்கள்!


ஒரு பக்கம் பனிப் போர் காலத்தில் தயாரித்து குவித்து வைத்த அணு ஆயுதங்களை அமெரிக்காவும் ரஷ்யாவும் அழித்து வந்தாலும், இன்னொரு பக்கம் இரு நாடுகளுமே போட்டி போட்டிக் கொண்டு நவீன ரக அணு ஆயுதங்களை தயாரித்து வருவதாகத் தெரியவந்துள்ளது.

'Global nuclear weapons inventories, 1945-2010' என்ற ஆய்வறிக்கையில் இந்த விவரம் வெளியாகியுள்ளது.

ராபர்ட் நோரிஸ், ஹேன்ஸ் கிரிஸ்டென்சன் ஆகிய சர்வதே அணு ஆயுத நிபுணர்கள் வெளியிட்டுள்ள இந்த ஆய்வறிக்கையில்,

இந்தியா மற்றும் பாகி்ஸ்தானிடம் தலா 150 அணு ஆயுதங்கள் வரை இருக்கலாம் என்று தெரிகிறது. ஆனால், அமெரிக்காவின் ஒரு டிரைடன்ட் ரக நீ்ர்மூழ்கியிலேயே 150 அணு ஆயுதங்களுடன் கூடிய ஏவுகணைகள் உள்ளன.

அமெரிக்காவுடன் ஒப்பிடுகையில் இஸ்ரேல், வட கொரியா போன்ற நாடுகளிடம் உள்ள அணு ஆயுதங்கள் எல்லாம் ஒன்றுமே இல்லை.

இன்றைய நிலையில் உலகின் 9 அணு ஆயுத நாடுகளிடம் சுமார் 22,400 அணு ஆயுதங்கள் இருக்கலாம் என்று தெரிகிறது. இதில் 95 சதவீதம் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிடம் தான் உள்ளன.

இதில் அமெரிக்காவிடம் 9,400 அணு ஆயுதங்கள் உள்ளன. இவற்றில் 5,100 அணு ஆயுதங்கள் பென்டகன் வசமும் மற்றவை அமெரிக்க அணு சக்தித் துறையிடமும் உள்ளன.

அமெரிக்கா, ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக பிரான்சிடம் தான் அதிகமான அணு ஆயுதங்கள் உள்ளன. பிரான்சிடம் 300 அணு ஆயுதங்கள் உள்ளன.

அடுத்த நிலையில் சீனா உள்ளது. அந்த நாட்டிடம் சீனாவிடம் 240 அணு ஆயுதங்கள் தயார் நிலையில் உள்ளதாகத் தெரிகிறது. அடுத்த 15 ஆண்டுகளில் மேலும் 100 அணு ஆயுதங்களைத் தயாரிக்க சீனா திட்டமிட்டுள்ளது.

அதே நேரத்தில் பிரிட்டனும் பிரான்சும் தங்களது அணு ஆயுதங்களை பெருமளவு குறைத்துவிட்டன. பிரிட்டனிடம் 225 அணு ஆயுதங்கள் உள்ளன. ஆனால், தனது ஏவுகணைகளின் எண்ணிக்கையை பிரிட்டன் வெறும் 50 ஆக சுருக்கிவிட்டது. இவற்றால் மொத்தமே 150 அணு ஆயுதங்களையே ஏந்திச் செல்ல முடியும். மேலும் தன்னிடம் உள்ள 3 அணு ஏவுகணை தாங்கிய நீர்மூழ்கிகளில் ஒன்றை மட்டுமே பிரிட்டன் இயக்கி வருகிறது.

பிரான்ஸ் தனது அணு ஆயுத எண்ணிக்கையை தொடர்ந்து குறைத்து வருகிறது. 1964ம் ஆண்டில் 1,260 அணு ஆயுதங்கள் வைத்திருந்த பிரான்ஸ் அதை 1992ல் 540 ஆகக் குறைத்தது. இப்போது 300 ஆக்கிவிட்டது. தொடர்ந்து இவை குறைக்கப்படும் என்று பிரான்ஸ் அதிபர் சர்கோசி கூறியுள்ளார்.

இஸ்ரேலிடம் 80 அணு ஆயுதங்கள் இருப்பதாக அமெரிக்க உளவுப் பிரிவுகள் மதிப்பிட்டுள்ளன.

1945ம் ஆண்டு முதல் உலகில் சுமார் 1.28 லட்சம் அணு ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டன. இதில் 55 சதவீத ஆயுதங்கள் அமெரிக்காவிலும் 43 சதவீத ஆயுதங்கள் சோவியத் யூனியன்/ரஷ்யாவிலும் தயாரிக்கப்பட்டன. 1986ம் ஆண்டில் தான் உலகில் மிக மிக அணு ஆயுதங்கள் இருந்தன.

சோவியத் யூனியன் உடைந்த பிறகு அமெரிக்காவும் ரஷ்யாவும் 'Strategic Arms Reduction Treaty (New START)' ஒப்பந்தம் செய்து கொண்டு இந்த ஆயுத ஸ்டாக்குகளை குறைத்து வருகின்றன. அணு ஆயுதங்களை செயலிழக்கச் செய்ய ரஷ்யாவுக்கு அமெரிக்கா பல பில்லியன் டாலர்கள் நிதியுதவியும் அளித்து வருகிறது. இதன்படி ஆண்டுக்கு சுமார் 1,000 அணு ஆயுதங்களை ரஷ்யா அழித்து வருகிறது.

அமெரிக்கா இதுவரை 60,000 அணு ஆயுதங்களை அழித்துவிட்டது. ஆனால், இதிலிருந்த 14,000 புளுட்டோனியம் கருக்களை அமெரிக்கா பாதுகாத்து வருகிறது. இதைக் கொண்டு எந்த நேரமும் புதிய அணு ஆயுதங்களைத் தயாரித்து விடலாம். இந்த புளுட்டோனியம் பேன்டெக்ஸ் பிளாண்ட் மற்றும் டென்னசி மாகாணத்தி்ல் ஒரு ரகசிய இடத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

பிரிட்டனிடம் 1970ம் ஆண்டில் தான் மிக அதிகபட்சமாக 350 அணு ஆயுதங்கள் இருந்தன. இதில் மூன்றில் ஒரு பகுதி ஆயுதங்களை அந்த நாடு அழித்துவிட்டது.

ஆனால் அதே நேரத்தில் சீனா, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் ஆயுதத் தயாரிப்பை தீவிரமாக்கியுள்ளன. அதே போல அமெரிக்காவும் ரஷ்யாவும் ரகசியமாக நவீன ரக அணு ஆயுதத் தயாரிப்பை தீவிரப்படுத்தியுள்ளன.

மேலும் அமெரிக்காவின் அணு ஆயுதங்களில் 500 ஆயுதங்கள் ஐரோப்பிய நாடுகளில் வைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிடம் சுமார் 60 முதல் 80 அணு ஆயுதங்கள் இருக்கலாம் என்றும் மேலும் 105 அணு ஆயுதங்கள் தயாரிக்கத் தேவையான புளுட்டோனியமும் இருக்கலாம் என்று தெரிகிறது.

பாகிஸ்தானிடம் 90 அணு ஆயுதங்கள் தயார் நிலையில் உள்ளன. மேலும் 90 ஆயுதங்களைத் தயாரிக்கத் தேவையான அணு கதிர்வீச்சு பொருட்கள் பாகிஸ்தான் வசம் உள்ளன.

இவ்வாறு அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஹிரோஷிமா-65வது ஆண்டு நினைவு தினம்:

இந் நிலையில் ஜப்பானின் ஹிரோசிமா, நாகசாகி நகரங்கள் மீது 1945ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி, அமெரிக்கா அணுகுண்டு வீசி தாக்கியதன் நினைவுநாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது.

இதில் பங்கேற்க ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் ஜப்பான் சென்றுள்ளார். நாகசாகி நகரில் நினைவு அருங்காட்சியகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் தாக்குதலில் உயிர் தப்பியவர்களை மூன் சந்தித்துப் பேசினார்.

பத்தாம் வகுப்பு மட்டும் படித்தவருக்கு ஐ.ஏ.எஸ். பதவி!



தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மட்டுமே படித்த மூத்த அதிகாரிக்கு ஐ.ஏ.எஸ். அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

18 வயதில் இளநிலை உதவியாளராக அரசுப் பணியில் சேர்ந்த அவருக்கு இன்னும் 5 ஆண்டு பதவிக் காலம் உள்ளது.

தேர்வெழுதி ஐ.ஏ.எஸ். அதிகாரியாவது ஒரு வகை. பதவி உயர்வு மூலம் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாவது இன்னொரு வகை.

அந்த வகையில் இப்போது தமிழகத்தில் 19 பேருக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

இதில் சென்னை [^] மாவட்ட வருவாய் அலுவலர் முனுசாமியும் ஒருவர். இவரது கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு மட்டுமே.

1973ம் ஆண்டு குரூப் 4 தேர்வு மூலம் அரசுப் பணியில் சேர்ந்த இவர் பள்ளிப்பட்டு தாலுகாவில் இளநிலை உதவியாளராக பணியைத் தொடங்கியவர். பின்னர், வட்டாட்சியர், துணை ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் என பதவியுயர்வுகள் பெற்றார்.

அரசுத்துறையில் பல்வேறு பணிகளில் 37 ஆண்டு கால அனுபவம் பெற்றவர். இந்த நீண்ட அனுபவமும் பணியில் சிறப்பாக செயல்பட்டதுமே அவருக்கு ஐ.ஏ.எஸ். அந்தஸ்தை அளித்துள்ளது.

ஐ.ஏ.எஸ். தேர்வெழுதி நேரடியாக அதிகாரிகளாகும் நபர்களைவிட பெரும்பாலான நேரங்களில் அனுபவம் வாய்ந்த அதிகாரிகளே சிறப்பான முடிவுகளை எடுக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் முனுசாமியின் அனுபவத்துக்கு இந்த ஐ.ஏ.எஸ் அந்தஸ்து பொறுத்தமானதே என்கிறார்கள் தலைமைச் செயலக அதிகாரிகள்.

பிரணாபுக்கே வீட்டு லோன்-தேவையில்லாத தொலைபேசி அழைப்புகளை தடை செய்ய ராஜா உத்தரவு


மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி [^] முக்கிய கூட்டத்தில் இருந்தபோது வீட்டுக் கடன் வேண்டுமா என்று கேட்டு வந்த தொலைபேசி அழைப்பால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. இதையடுத்து தேவையில்லாத தொலைபேசி அழைப்புகளுக்குத் தடை விதிக்க தொலைத் தொடர்புத்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் [^] ராஜா உத்தரவிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் மேற்கொண்டு வரும் அமளியை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் பிரணாப் முகர்ஜி தீவிரமாக ஆலோசனை நடத்திக் கொண்டிருந்த நிலையில் அவருக்கு வந்த செல்போன் அழைப்பில் வீட்டுக் கடன் தேவையா என்று கேட்டதால் டென்ஷனாகி விட்டார் பிரணாப்.

இந்த பிரச்சினை நேற்று நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது. அப்போது பேசிய அமைச்சர் அம்பிகாசோனி, இதுபோன்ற அழைப்புகளைத் தடுக்க வசதி உள்ளது. அதை நான் செய்துள்ளேன். ஆனால் அதையும் மீறி வருகிறது. இதைத் தடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது என்றார்.

பாஜக மூத்த தலைவர் வெங்கையா நாயுடு பேசுகையில், ஒரு நாளைக்கு 40 அழைப்புகள் வரை எனக்கு வருகிறது. இப்போது நிதியமைச்சருக்கே வந்து விட்டது. இதைத் தடுத்தாக வேண்டும் என்றார்.

காங்கிரஸ் கட்சியின் எம்.பி. ரஷீத் கூறுகையில், மிகவும் முக்கியமான நேரங்களில்இதுபோன்ற தேவையற்ற அழைப்புகள் வருவது பெரும் தொல்லையாக உள்ளது என்றார்.

பல்வேறு எம்.பிக்களும், இந்த தேவையற்ற அழைப்புகளால் ஏற்படும் அவஸ்தையை ஒரே குரலில் நாடாளுமன்றத்தில் எதிரொலித்தனர். இதையடுத்து மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராஜா, தேவையற்ற அழைப்புகளை முழுமையாக தடை செய்ய நடவடிக்கை [^] எடுக்குமாறு தொலைத் தொடர்புத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு துறை செயலாளர் பி.ஜே. தாமஸுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

இதனால் இனிமேல் செல்போன்களுக்கு தேவையற்ற தொலைபேசி அழைப்புகள் வருவது முழுமையாக தடை செய்யப்படும் எனத் தெரிகிறது.