அதிமுக கூட்டணியில் இணைகிறது மனித நேய மக்கள் கட்சி
மனித நேய மக்கள் கட்சி அதிமுக கூட்டணியில் இணையவுள்ளது. நேற்று இதுதொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது.சட்டசபைத் தேர்தலுக்கான முஸ்தீபுகளில் அதிமுக தீவிரமாக இறங்கியுள்ளது. முதல் கட்டமாக கூட்டணியை விஸ்தரிக்கும் நடவடிக்கைகளில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இறங்கியுள்ளார்.
இதையடுத்து சமீபத்தில் புதிய தமிழகம் கட்சி அதிமுககூட்டணிக்கு வந்து சேர்ந்தது. இதுதொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை, புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி சந்தித்துப் பேசினார். அப்போது எத்தனை இடங்களில் போட்டியிடுவது என்பது குறித்தும் பேசப்பட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லாஹ் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார்.
இதுகுறித்து அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முஸ்லீ்ம் முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், மனித நேய மக்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஜவாஹிருல்லாஹ், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயாலளர் ஹைதர் அலி, மனித நேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் அப்துல் சமது, தமுமுக பொருளாளர் ரஹமதுல்லாஹ், மனித நேயக் கட்சியின் பொருளாளர் ஹாரூண் ரஷீத் ஆகியோர் ஜெயலலிதாவை சந்தித்து அரசியல் நிலவரம் குறித்துப் பேசினர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டணியில் இணைவது குறித்தும், எத்தனை இடங்கள் தரப்படும் என்பது குறித்தும் அதிமுகவுடன் மனித நேய மக்கள் கட்சி பேசியுள்ளதாக கருதப்படுகிறது.
ஏற்கனவே அதிமுக கூட்டணியில் மதிமுக, சிபிஐ, சிபிஎம் ஆகியவை இடம் பெற்றுள்ளன. இது போக சில குட்டிக் கட்சிகளும் உள்ளன. இவற்றின் வரிசையில் புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சி ஆகியவை இடம்பெறவுள்ளன.
இரண்டாம் தர குடிமக்களாக தமிழர்களை நடத்தும் இலங்கை-உலகப் பெருந்தலைவர்கள் குழு கண்டனம்
இலங்கையின் பூர்வீக குடிகளான தமிழர்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்துகிறது இலங்கை அரசு என்று உலகப் பெருந்தலைவர்கள் குழு கண்டனம் தெரிவித்துள்ளது.2007ம் ஆண்டு உலகின் புகழ்பெற்ற பெருந்தலைவர்கள் குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டது.
இதில் உலகப் புகழ் பெற்ற உலக நாடுகளின் தலைவர்களான தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா, ஐ.நா.சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அனான், அமெரிக்கா வின் முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர், முன்னாள் அயர்லாந்து அதிபர் மேரி ராபின்சன், முன்னாள் அல்ஜீரிய வெளியுறவு அமைச்சர் லக்தர் பிராஹிமி, தென்னாப்பிரிக்க ஆர்ச்பிஷப் டெஸ்மாண்ட் டுடு உள்ளிட்ட தலைவர்கள் இடம் பெற்றுள்ளனர்.
குழுவின் தலைவராக டெஸ்மான்ட் டுடு பொறுப்பு வகித்து வருகிறார். இந்த உலகப் பெருந்தலைவர்கள் குழு இலங்கை அரசின் இனவெறியைக் கடுமையாக கண்டித்துள்ளது.
இதுகுறித்து பிபிசிக்கு டுடு அளித்துள்ள பேட்டியில், இலங்கையில் தற்போது மனித உரிமை ஆர்வலர்கள் சரமாரியாக கொல்லப்பட்டு வருகின்றனர். பத்திரிக்கையாளர்கள் கொல்லப்படுகின்றனர். அரசுக்கு எதிர்ப்பானவர்கள் கொல்லப்படுகின்றனர். இது மிகவும் பயங்கரமாக உள்ளது என்றார்.
இலங்கையைக் கண்டித்து உலகப் பெருந்தலைவர்கள் குழு ஒரு அறிக்கையையும் வெளியிட்டுள்ளது. அதில், தமிழர்களுக்கு எதிராக மனித உரிமைகள் மீறப்படுவது தடுத்து நிறுத்தப்பட இலங்கை அரசை சீனா, இந்தியா, ஜப்பான், அமெரிக்கா போன்ற அதன் நட்பு நாடுகள் வலியுறுத்த வேண்டும்.
மனித உரிமைகள் பாதுகாக்கப்படுதல் மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலை நாட்டுதல் போன்ற பிரச்சனைகளில் சர்வதேச சமுதாயம் ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்ளக்கூடாது. தண்டனையில் இருந்து விலக்கு அளிப்பதுதான் சர்வதேச அமைதிக்கும், பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.
போரின் போது அமல் படுத்தப்பட்ட நெருக்கடி நிலை இன்னும் இலங்கையில் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருவது கவலை தருகிறது. போர் முடிந்து ஓராண்டு காலம் முடிந்த பிறகும் இலங்கை தமிழர்களின் பிரச்சனைக்கு அரசியல் ரீதியாக தீர்வுகாண இலங்கை அரசு இதுவரை உருப்படியான நடவடிக்கை எதையும் எடுக்காதது வேதனை அளிக்கிறது என்று கூறியுள்ளனர்.
இலங்கையில் நடந்து வரும் மனித உரிமை மீறல்கள் குறித்து உலக நாடுகள் செவிடுகள் போல இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. நல்லாட்சி அங்கு இல்லை, நம்பிக்கை இல்லை, நம்பகத்தன்மை என எதுவுமே இல்லை இலங்கையில். இதைப் பார்த்து பிற நாடுகளும் கெட்டுப் போகும் அவலமே மேலோங்கியுள்ளது .
பின்லாந்து நாட்டின முன்னாள் அதிபரான மர்ட்டி அதிசாரி கூறுகையில், அனைவரும் எதிர்பார்த்ததற்கு ஏற்ப இலங்கை அரசு நடந்து கொள்ளவில்லை. எந்தவித முன்னேற்றத்தையும் அது காட்டவில்லை. மீடியாக்களை கட்டிப் போட்டு வைத்துள்ளது. அவற்றின் கண்களை மூடி வைத்துள்ளது. மீடியாக்களை சுதந்திரமாக செயல்பட விட்டால்தான் உண்மை தெரிய வரும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
உலக நாடுகள் பலவும் இலங்கை அரசின் இனப்படுகொலை மற்றும் இனவெறிப் போக்கைக் கண்டித்து வரும் நிலையில் உலகப் பெரும் தலைவர்கள் அடங்கிய குழு ஒரேகுரலில் இலங்கை அரசின் இனவெறியைக் கண்டித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இதுபோன்று வரும் கருத்துக்களை இலங்கை அரசு காதிலேயே போட்டுக் கொள்வதில்லை. ஒரு காதை இந்தியாவை வைத்தும், இன்னொரு காதை சீனாவை வைத்தும் அது மூடிக் கொண்டுள்ளது. எனவே உலகப் பெருந்தலைவர்கள் குழுவின் விமர்சனமும் அதன் காதுகளையும், மனதையும் தொடாது என்பது உறுதி.
இளங்கோவன் பேச்சு கூட்டணியை வலுப்படுத்தாது-கருணாநிதி
தமிழகத்தில் குடிசை வீடுகளுக்குப் பதிலாக கான்கிரீட் வீடுகள் கட்டித் தரும் 'கலைஞர் வீட்டு வசதித் திட்டம்', மாநில அரசின் திட்டம் தான் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.இந்திரா வீட்டு வசதி திட்டத்திற்கும், தமிழக அரசு அறிவித்துள்ள கலைஞர் வீட்டு வசதி திட்டத்திற்கும் இடையே உள்ள வி்த்தியாசம் கூடத் தெரியாமல், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இவ்வாறு தவறான கருத்துக்களைத் தெரிவித்திருப்பதாகவும் முதல்வர் கூறியுள்ளார்.
கலைஞர் வீட்டு வசதி திட்டம் தொடர்பாக இளங்கோவன் தெரிவித்துள்ள கருத்துக்கு பதிலளித்து முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் பாணி அறிக்கை:
கேள்வி: ஈரோட்டில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசும்போது, காங்கிரீட் வீடு கட்டித்தரும் திட்டத்துக்கு மத்திய அரசு வழங்கும் நிதி ரூ.45 ஆயிரம், மாநில அரசு வழங்குவது ரூ.15 ஆயிரம் தான். ஆனால் இத்திட்டத்துக்கு கருணாநிதியின் பெயரைச் சூட்டியுள்ளனர். இது என்ன நியாயம் என்று கேட்டிருக்கிறாரே?
பதில்: அவர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவராகவும், மத்திய அரசின் அமைச்சராகவும் இருந்தவர். அவர் சொல்லுகின்ற திட்டம் வேறு, தமிழக அரசு அறிவித்துள்ள திட்டம் வேறு. இரண்டையும் புரியாமல் குழப்பிக் கொண்டிருக்கிறார். காங்கிரீட் வீடுகட்டித் தரும் திட்டம் என்று அவர் கூறுவது ஜவகர் வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் ஒரு அங்கமாக இருந்த இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டமாகும். இத்திட்டம் 1997-98ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் கிராமப் பகுதிகளில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும், வீடில்லாத ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர், கொத்தடிமைகளாக இருந்து விடுவிக்கப்பட்டவர்கள், வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் ஆதிதிராவிடர்கள் அல்லாத ஊரக ஏழை மக்கள் ஆகியோருக்கு இலவச வீடுகள் கட்டித் தரப்படும்.
இத்திட்டத்திற்கு 75:25 என்ற விகிதத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகளால் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இத்திட்டம் இந்திராகாந்தி அம்மையாரின் பெயரால் உள்ளத்திட்டம். இதற்கும் இப்போது இந்த ஆண்டு தமிழகஅரசால் அறிவிக்கப்பட்டுள்ள திட்டத்திற்கும் எந்தவிதமான சம்மந்தமும் இல்லை.
தற்போது இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ள திட்டம் பற்றி ஆளுநர் உரையிலே கூறும்போது, இந்திரா வீடு வசதித் திட்டத்தின் கீழ் மட்டும் குடிசைகளை நமது மாநில அளவில் நிரந்தர இல்லங்களாக மாற்ற வேண்டும் என்றால், அதற்கும் இன்னும் 30 ஆண்டுகள் ஆகும்.
இந்த நிலையை நெஞ்சில் நிறுத்தி, முதல் கட்டமாக ஊரகப்பகுதிகளில் 21 லட்சம் வீடுகளில் வசிக்கும் ஏழை எளியோரின் வாழ்வில் ஒளியேற்றும் வகையில் இந்த வீடுகள் அனைத்தையும் கான்கிரீட் கூரை கொண்ட நிரந்தர இல்லங்களாக தமிழக அரசின் நிதியைக் கொண்டே மாற்றி அமைத்து, அவற்றை இலவசமாக அளிக்கும் மாபெரும் திட்டம் ஒன்றை இந்த அரசு வகுத்துள்ளது.
2010-2011ம் ஆண்டு தொடங்கி, இந்தத் திட்டத்தின் கீழ் ஆறு ஆண்டு காலத்தில் மண்சுவர்களால் ஆன 21 லட்சம் கூரை வீடுகளுக்குப் பதிலாக, நிரந்தர வீடுகள் இந்த அரசால் கட்டித் தரப்படும்.
இத்திட்டத்தின் முதல் ஆண்டான வரும் நிதி ஆண்டில், 3 லட்சம் நிரந்தர வீடுகள் ரூபாய் 1,800 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும். கிராமப் பகுதிகளில் கூரை வீடுகளே இல்லாத நிலையை உருவாக்கும் இந்த உன்னதத் திட்டம் கலைஞர் வீட்டு வசதித்திட்டம் என்று அழைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு அது அறிவிப்போடு இல்லாமல் நிதிநிலை அறிக்கையிலும் கூறப்பட்டு நடைமுறைக்கும் வந்துள்ளது.
இந்த இரண்டு திட்டங்களுக்கும் உள்ள வித்தியாசம் புரியாமல், மத்திய அரசின் நிதி உதவியோடு செய்யப்படும் திட்டத்திற்கு கலைஞர் பெயரா? அது என்ன நியாயம்? என்றெல்லாம் இளங்கோவன் கேட்பது, கூட்டணியை வலுப்படுத்துகின்ற செயல் அல்ல, வலிப்படுத்துகின்ற காரியமாகும் என்று கூறியுள்ளார் கருணாநிதி.
கலைஞர் வீட்டு வசதி திட்டம்: 'இது என்ன நியாயம்?'- இளங்கோவன் சாடல்
குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக்கும் திட்டத்தில், ஒரு வீட்டுக்கு 45 ஆயிரம் ரூபாய் மத்திய அரசு வழங்குகிறது. தமிழக அரசு, வெறும் 15 ஆயிரம் ரூபாய் தான் வழங்குகிறது. ஆனால், இந்த திட்டத்துக்கு, "கலைஞர் வீட்டு வசதி திட்டம்' என பெயர் வைத்துள்ளனர். இது என்ன நியாயம்? இதை கேட்டால் பொல்லாப்பும், கோபமும் வருகிறது என்று கூறியுள்ளார் முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் .ஈரோட்டில், மாவட்ட காங்கிரஸ் கூட்டத்தில் இளங்கோவன் பேசுகையில்,
தமிழகத்தில் மத்திய அரசின் திட்டங்களே முழுமையாக செயல்படுத்தப்படுகின்றன. ஆனால், சில திட்டங்களில் மத்திய அரசு 75 சதவீதம், மாநில அரசு 25 சதவீதம் பங்களிக்கிறது.
குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக்கும் திட்டத்தில், ஒரு வீட்டுக்கு 45 ஆயிரம் ரூபாய் மத்திய அரசு வழங்குகிறது. தமிழக அரசு, வெறும் 15 ஆயிரம் ரூபாய் தான் வழங்குகிறது. ஆனால், இந்த திட்டத்துக்கு, "கலைஞர் வீட்டு வசதி திட்டம்'' என பெயர் வைத்துள்ளனர். இது என்ன நியாயம்? இதை கேட்டால் பொல்லாப்பும், கோபமும் வருகிறது.
அதே போன்று, ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில், கூலியாக 100 ரூபாய் வழங்குவதற்கு பதில், ரூ 70 முதல் ரூ 80 மட்டும் தான் வழங்குகின்றனர். அரசுக்கு வேண்டியவர்கள் தான் இதை தைரியமாக செய்து வருகின்றனர்.
திமுகவுக்கு ஆதரவளிக்கும் 36 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு ஒரு அமைச்சர் பதவி கூட இல்லை. ஆனால், 15 எம்.பிக்களை வைத்து மத்தியில் ஐந்து மத்திய அமைச்சர் பதவிகளை பெற்றுள்ளனர். இதில் யார் தியாகி என்றால், காங்கிரஸ் கட்சி தான் தியாகி.
எங்கள் தயவில் ஆட்சி செய்பவர்கள் சுகபோகமாக வாழ்கின்றனர். எங்களுக்கு கோவிலில் தர்மகர்த்தா வேலை கூட கிடைப்பதில்லை. அதிகாரிக்காக, காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ வீட்டை இடித்து சீல் வைக்கின்றனர். இதை தட்டிக் கேட்க ஆளில்லை.
தமிழக முதல்வர் கருணாநிதி யை சந்திக்க இரண்டு முறை நேரம் கேட்டேன். ஆனால், அவர் நேரம் ஒதுக்கவில்லை. குறை சொல்பவர்களை முடித்துவிட நினைத்தால், ஜனநாயகத்தில் என்ன நியாயம் இருக்கிறது?.
தமிழகத்தில் காமராஜர் ஆட்சி அமைய, 40 ஆண்டுகளாக நாங்கள் காத்திருக்கிறோம். இன்னும் எங்களால் காத்திருக்க முடியும். உங்களால் பதவி இல்லாமல் இருக்க முடியுமா?.
தமிழகத்தில் மைனாரிட்டி எனப்படும் சிறுபான்மை அரசுதான் நடைபெறுகிறது. அதுவும் காங்கிரஸின் தயவில்தான் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறோம் என்பதை திமுக மறந்துவிடக்கூடாது என்றார்