தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

கி.வீரமணியின் கார் மீது தாக்குதல்: துடிப்பான இளைஞர்களுக்கு கடிவாளம் போட முடியாது





எப்போதும் கருத்துக்களின் அடிப்-படையிலேயே மோதிக்-கொள்ளும் தி.க.வினரும்,- பெரியார் தி.க.-வினரும் தற்போது வன்-முறையால் மோதிக்கொண்டிருக்கும் செய்திகள் பரபரப்பாக நாளிதழ்களில் இடம்பெறுகின்றன. பெரியார் தி.க. பிரமுகர் திருவாரூர் தங்கராசுவின் கார் மீது தாக்குதல், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கார் மீது தாக்குதல் என தொடரும் இந்த நிகழ்வுகள் இயக்கம் சாராத பெரியாரிய வாதிகள் பலருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளன.

இந்நிலையில் ஒரு வழக்கு விசாரணைக்காக திருச்சி வந்த பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணியை நீதிமன்ற வளாகத்தில் சந்தித்தோம்.

''கருத்துக்கு முக்கியத்துவம் கொடுத்த பெரியாரின் தொண்டர்கள் தற்போது கார் உடைப்பு சம்பவங்-களில் ஈடுபடுகிறார்களே?''

''கருத்துக்களை கருத்துக்களால் மட்டுமே எதிர்க்க வேண்டும் என்ற சிந்தனை, மன-முதிர்ச்சியுடன் சிந்தனைகளை உள்வாங்கிக் கொண்டவர்களுக்கு மட்டுமே சாத்தியம். நடக்கும் சம்பவங்களால் நம்முடைய நியாயமான நட-வடிக்கைகளுக்கு பலன் இல்லையோ என்று கருதும் துடிப்பான இளைஞர்களால் எல்லா நேரமும் அமைதியாக இருக்க முடியாது. எல்லா செயல்-வீரர்களையும் கட்டிப்-போடும் கடிவாளம் எங்களிடம் இல்லை. அதே சமயத்தில் எங்களது தோழர்கள் தங்களது எதிர்ப்புகளையும் கண்ணியமான முறையிலேயே வெளிப்படுத்தி இருக்கிறார்கள். திருவாரூர் தங்கராசுவின் காரை இரவில் உடைத்ததற்கு எதிர்ப்பாக வீரமணியின் காரை பகலில்தான் உடைத்தார்கள். மற்றபடி வேறு எந்த தனிநபர் தாக்குதலிலும் ஈடுபடவில்லை''

''ஈழம் அமைவதற்காக ஆட்சியை இழக்கவும் தயாராக இருந்தேன் என்று கலைஞர் கூறி-யிருக்கிறாரே?''

''ஈழத்தில் கொத்து குண்டுகள் போட்டு பல்லாயிரம் தமிழர்களைக் கொன்று குவித்துக் கொண்டிருந்தபோது 3 மணி நேர உண்ணாவிரத நாடகம் நடத்தினார். முள்வேலி முகாம் தமிழர்களை 3 நாட்களில் அவர்களது வீட்டுக்கு அனுப்பிய தலைவர் கலைஞர் வாழ்க என்று கடந்த டிசம்பரில் மாநிலம் முழுவதும் போஸ்டர் ஒட்டினார்கள். ஆனால் தற்போது தி.மு.க. எம்.பி.க்களே முகாமில் இருக்கும் 57 ஆயிரம் தமிழர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று ராஜபக்ஷேவிடம் தாழ்மையுடன் மனு கொடுக்கிறார்கள். இப்பேர்ப்பட்ட கருணாநிதி, தற்போது ஈழம் குறித்து கூறுவதை எல்லாம் எப்படி நம்ப முடியும்?''

''நடந்து முடிந்த செம்மொழி மாநாடு குறித்து?''

''உலக அளவில் செம்மொழிக்கான தகுதிக் காலம் 2 ஆயிரம் வருடங்களாக இருக்கையில் இந்தியாவில் மட்டும் அது ஆயிரத்து 500 வருடங்-களாக குறைக்கப்பட்டது. விரைவில் இது ஆயிரம் ஆண்டுகளாக குறைக்கப்படலாம் என்றும் கூறப்-படுகிறது. அப்படி ஒரு நிலை வந்தால் தமிழகத்தில் கலைமாமணி பட்டம் சந்தி சிரிப்பது போது இந்தியாவில் அனைத்து மொழிகளும் செம்மொழித் தகுதி பெறும். உண்மையிலேயே செம்மொழி மாநாடாக அது நடந்து இருந்தால் செம்மொழிக்கான தகுதிகளை குறைத்து இருப்பதை கண்டித்திருக்க வேண்டும். வாழும் பெரியார் என்று கூறிக்கொள்ளும் கருணாநிதி ஏன் இதைச் செய்யவில்லை? கருணாநிதி சொல்வது, செய்வது எல்லாமே நாடகம்தான்!'' என்று சொல்லிவிட்டு வழக்கு தொடர்பான வேலைகளில் மூழ்கினார் கொளத்தூர் மணி.