தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

நழுவும் பவார்; மெழுகும் காங்கிரஸ் யார் புத்திசாலி?





ஐ.சி.சி. என்றழைக்கப்படும் இன்டர்நேஷனல் கிரிக்கெட் கவுன்சிலுக்கு நம்நாட்டைச் சேர்ந்த ஒருவர் தலைவராகியிருக்கிறார். அவர் பெயர் சரத்பவார். 'எண்ணற்ற சர்க்கரை ஆலைகள், காற்றாலை நிறுவனங்கள், தொழில் வர்த்தக நிறுவனங்களுக்கு உரிமையாளர். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு ஆலோசகர். தேசியவாத காங்கிரஸ் என்ற கட்சிக்கு தலைவர். பாரமதி தொகுதியின் எம்.பி. மத்திய அரசில் அமைச்சர்' என்றிருக்கும் சரத்பவாரின் லேட்டஸ்ட் அவதாரம் ஐ.சி.சி. சேர்மன்!

மத்திய விவசாயத்துறைக்கு அமைச்சர், உணவுத் துறைக்கும் இவரே அமைச்சர். தவிர இந்த உணவுப்பொருட்களை விநியோகம் செய்வதற்கும் இவர்தான் அமைச்சர். பயிரிடுவது அதை பாதுகாப்பது பின்னர் பத்திரமாக கொண்டுபோய்ச் சேர்ப்பது என மூன்று முக்கிய ஜீவாதார துறைகளை கையில் வைத்து இருப்பவருக்கு எத்தனை பொறுப்பு இருந்திட வேண்டும்? இந்த மூன்றுக்கும் தனித்தனியே கூட ஒரு அமைச்சரை நியமிக்கலாம். காரணம் மக்களின் அடிப்படை தேவையான உணவு சம்பந்தப்பட்ட துறைகள் இவை. ஒவ்வொரு ஆண்டும் பொருளாதார வளர்ச்சி அறிக்கையை நிதியமைச்சர் வெளியிடும் போதெல்லாம் நம்நாட்டின் மற்ற துறைகளின் வளர்ச்சி எல்லாம் இரட்டை இலக்கத்தில் ஜம்மென்று இருக்கும். ஆனால் விவசாயத்துறை மட்டும் கூனிக் குறுகிப் போய் நிற்கும். ஒற்றை இலக்கம் என்றாலும் பரவாயில்லை. அட பூஜ்யமாக இருந்தாலும் பரவாயில்லை. சில நேரங்களில் மைனஸ் வளர்ச்சியாக இருக்குமேயானால்?

அப்படியெல்லாம் விவசாயத்துறையை கவனித்து கவனித்து முன்னேற்றிய நமது நாட்டின் விவசாயத்துறை அமைச்சர் சரத்பவார்தான் ஐ.சி.சி. எனப்படும் கோடானுகோடி ரூபாய்கள் புழங்கும் அமைப்புக்குத் தலைவராகியுள்ளார்.

ஐ.சி.சி. தலைவர் பதவி என்பது ஒரு இடத்தில் அமர்ந்து வேலைபார்க்கும் பதவியும் அல்ல. நாடு விட்டு நாடு பறந்து கொண்டே இருக்க வேண்டும். நிச்சயம் ஒரே நாட்டில் இருந்து கொண்டு கவனித்துவிட முடியாது. அப்படிப்பட்ட பதவியில் அமர்வதற்கு எத்தனையோ திறமைசாலிகள் இருக்கின்றனர்.

ஆனால் ஐ.சி.சி. என்ற அந்த பணக்கார அமைப்பைக்காட்டிலும் அதிமுக்கியத்துவமும், கோடான கோடி மக்களின் வாழ்வாதாரத்தையே நிர்ணயிக்கக்கூடியதும்தான் மத்திய விவசாயத்துறை அமைச்சர் என்ற பதவி. ஐ.சி.சி.க்கு தலைவராக இருந்து கொண்டு அடித்தட்டு விவசாயிகளின் பிரச்னைகளை யோசிக்க இவருக்கு மட்டும் எத்தனை மூளைகள் உள்ளன?

அரிசியில் ஆரம்பித்து அத்தனை அத்தியாவசிய உணவுப்பொருட்களும் விண்ணை முட்டும் விலைகளில் விற்கப்படுகின்றன. வங்கியிலோ வட்டிக்கடைக்காரனிடமோ வாங்கிய கடனை கட்டமுடியாமல் பருத்திக்கும் வாழைக்கும் நெல்லுக்கும் வாங்கிய பூச்சிக்கொல்லி மருந்தையே தனக்கும் ஊற்றி, தன் மானத்தை இழக்க மனம் இல்லாமல் கொத்துக் கொத்தாய் செத்துக் கொண்டுள்ளனர் விவசாயிகள்.

பொது விநியோக முறை சரிவர செயல்படாமல் கள்ள மார்க்கெட்டில் பதுக்கும் வேலைகள் நாடெங்கும் ஜோராக நடைபெறுகின்றன. உணவு விநியோக துறைக்கு அமைச்சராக இருப்பவர் உலக கிரிக்கெட் கவுன்சிலுக்கு தலைவராகிவிட்டார். வழக்கம்போல இந்த நாட்டின் படித்த, நடுத்தர வர்க்கம் ஆஹா...எத்தனை பெரிய பதவி... இந்தியர் ஒருவர் இத்தனை பெரிய பதவிக்கு வருவது பெருமையல்லவா என்று வாய் பிளக்கிறது. கிரிக்கெட் பார்த்துப் பார்த்து பாழாகிப்போனவர்களுக்கு இப்படித்தான் யோசிக்கத் தோன்றும்.

துபாய்க்கு சென்று பதவியேற்றுக் கொண்டுவிட்டு திரும்பியபோது, ''ஐ.சி.சி.யின் தலைவர் பதவி கிடைத்தது நாட்டுக்கு பெருமை,'' என்று அளந்தார் சரத்பவார். இதற்குமுன்பும் ஜக்மோகன் டால்மியா என்ற இந்தியர் அதே பதவியில் இருந்தார். அவரை உண்டு இல்லை என்று ஆக்கியதும் இவரே. அப்படியானால் இந்தியாவின் பெருமையை குலைத்ததும் இவர்தானே?

'இரு பதவிகளை எப்படி கையாள முடியும்?' என்று கேட்டால், ''ஐ.சி.சி.யின் தலைமை அலுவலகம் துபாயில் உள்ளது. இது எனது அதிர்ஷ்டம். துபாயில் சனி,ஞாயிறு கிழமைகளில்தான் பணி இருக்கும். விமானத்தில் ஏறினால் சில மணி நேரத்தில் துபாய் வந்துவிடும். எனவே அமைச்சர் பணிகளில் பாதிப்பு ஏற்படாது'' என்கிறார். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த மத்திய அமைச்சர் பதவியை 'பார்ட் டைம் ஜாப்' என நினைக்கிறாரா சரத்பவார்?

ஐ.சி.சி.க்கு சரத்பவார் தலைவர் ஆவது இப்போதுதான். இதற்கு முன்பே இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கும் தலைவராக இருந்துள்ளார். நாட்டின் விலைவாசி அனைத்தும் உயர்ந்து கொண்டே உள்ளது என்பதைப் பற்றி துளியும் கவலைப்பட்டதில்லை அப்போதே!

விலைவாசி உயர்வுக்காக மன்மோகன்சிங் அரசு ஏற்கனவே சிலமாதங்களுக்கு முன்பும் கடுமையான விமர்சனங்களை சந்தித்துக் கொண்டிருந்தது. பவார் மீது மொத்த பழியையும் போட்டு அவரின் நிர்வாக திறமையின்மை பற்றி மறைமுகமாக விமர்சித்தது காங்கிரஸ். பார்த்தார் பவார்... நேரடியாக சிவசேனா தலைவர் பால்தாக்கரேயை சந்தித்தார். அவசியமே இல்லாத சந்திப்பு அது. விலைவாசி பின்னுக்குப் போனது; பவார்-தாக்ரே சந்திப்பு மீடியாக்களை ஆக்கிரமித்தது.

அடுத்து ஐ.பி.எல். ஊழல் சர்ச்சையில் நாடே பற்றி எரிந்தது. இவரும், இவரது மகள் மருமகன் என உறவுகளின் பெயர் ஊழலில் அடிபட்டு நாடாளுமன்றமே கொதித்துக் கொண்டிருந்தது. லலித்மோடியை மொத்தமாக பலிகடா ஆக்கிவிட்டு தன்மீதான குற்றச்சாட்டுகளை தூசி போல ஊதித்தள்ளினார். போதாக்குறைக்கு வாயில் உள்ள கேன்சருக்கு வைத்தியம் பார்க்கிறேன் என கூறி ஆஸ்பத்திரியில் போய் படுத்துக் கொண்டு மீடியாக்களை தவிர்த்தார். அப்போது படுக்கப் போனவர்தான். இப்போது ஐ.சி.சி.யின் தலைவர் ஆன பிறகுதான் வெளியில் வருகிறார்.

ஐ.சி.சி. தலைவராக இருப்பவர் எப்படி விவசாயத்-துறையை கவனிப்பார் என்று எதிர்ப்பு வலுத்தது. போதாகுறைக்கு விலைவாசி உயர்வை கண்டித்து எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்றுசேர்ந்து நடத்திய பாரத் பந்த் வெற்றி பெற்றது. இதையெல்லாம் பார்த்த பிரதமர், பவாரை அழைத்துப் பேசுகிறார். 'எனது பணிச்சுமையை குறைக்கும்படி பிரதமரை கேட்டுக் கொண்டேன்' என்கிறார் பவார். அப்படியும் கூட தன்னிடம் விவசாயத்துறையை அப்படியே வைத்துக் கொண்டு வேறுசில துறைகளை மட்டுமே விட்டுத்தருவாராம். மீடியாக்கள் சொல்கின்றன.

கடைசியில், விலைவாசி பிரச்னைக்கு காரணமாக இருந்தவரை நீக்கிவிட்டோம் என்று தன் பங்குக்கு சொல்லி தப்பிக்கப் போகும் காங்கிரஸ் புத்திசாலியா? விவசாயத்துறை நாசமாகியும் விலைவாசி விண்ணை தொடும்வரை ஆறு ஆண்டுகளாக அமைச்சராக நீடித்து பதவி சுகத்தை அனுபவித்துவிட்டு, தார்மீக ரீதியில் தண்டனை எதுவும் பெறாமல் இப்போது ஐ.சி.சி.க்கு தலைவராகிறேன் என கிளம்பும் சரத்பவார் புத்திசாலியா? ஏமாந்த சோனகிரிகளாகவே இருந்து பழக்கப்பட்டுவிட்ட மக்கள்தான் பதில் சொல்ல வேண்டும்!