"இந்த வாய்தானே கலைஞருக்கு எதிராகப் பேசியது" என்று கூறிக்கொண்டே எழுத்தாளரும், பேச்சாளருமான பழ.கருப்பையாவின் வாயில் குத்தியிருக்கிறார்கள் சில நபர்கள். அவரது வீட்டில் உள்ள பொருட்களை அடித்து நொறுக்கியும் இருக்கிறார்கள். அ.தி.மு.கவின் இலக்கிய அணித் தலைவரான அவர் செம்மொழி மாநாட்டிற்கு எதிராக பத்திரிகைகளில் எழுதி இருந்திருக்கிறார். மேடைகளில் பேசியும் வந்திருக்கிறார்.
தமிழக முதல்வரால் பாராட்டப்பட்ட சிறந்த பேச்சாளர்களில் ஒருவராய் கருதப்படுகிற, தமிழருவிமணியனுக்கு அரசு ஒதுக்கிய வீட்டிலிருந்து, உடனடியாக வெளியேறுமாறு உத்தரவு ஒன்று அனுப்பப்பட்டிருக்கிறது. ஒப்பந்தத்தை புதுப்பிக்கவில்லை என்ற சப்பைக்கட்டு காரணம் ஒன்று சொல்லப்பட்டிருக்கிறது. இவரும் இந்த ஆட்சிக்கு எதிராக கட்டுரைகள் எழுதி வந்திருக்கிறார். பேசியும் வந்திருக்கிறார்.
அரசின் நோட்டிஸை எதிர்த்து தமிழருவி மணியன், "ஒப்பந்தத்தை புதுப்பிக்குமாறு எந்த நோட்டிஸும் அனுப்பாமல், வெளியேறுமாறு உத்தரவிடுவது பாரபட்சமானது" என்று வழக்கு தொடுத்திருந்திருக்கிறார். விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு அவர்கள் "வீட்டுவசதி வாரியத்தின் தலைமையலுவலகத்தில் தமிழ் வாழ்க என்ற கோஷம் இடம்பெற்றுள்ளது. இது நடைமுறைக்கு வரவேண்டுமென்றால் தமிழ் எழுத்தாளர்கள், த்மிழ் அறிஞர்கள், தமிழ் சிந்தனையாளர்கள் காப்பாற்றப்பட வேண்டும். கொள்கைகளில் மாறுபாடு கொண்டிருப்பதால் சாதாரண காரணங்களைக் கூறி அவர்களுக்கு வாழ்விடங்களை மறுக்கக் கூடாது" என்று அறிவுறுத்தி, அரசின் உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்திருக்கிறார். இந்த லட்சணத்தில்தான், தமிழைக் கொண்டாடுவதாகவும், தமிழை வளர்ப்பதாகவும் சொல்லி இங்கே செம்மொழி மாநாடு நடத்தப்பட்டு இருக்கிறது.
இத்தனை கோடி தமிழ்மக்களும் எவ்வளவு எவ்வளவு சகித்துக்கொண்டார்கள்! தமிழ்மண், தமிழிசை வாடையற்ற, ஏ.ஆர்.ரகுமானின் மேற்கத்திய பாணி இசையமைப்பில், கவுதம் மேனனின் மேட்டிமைப் பார்வையில் காட்சிப்படுத்தப்பட்ட தமிழர் வாழ்வு முறைகளும் திரும்பத் திரும்ப ஓடிக்கொண்டு இருந்தது. கலைஞரை புகழ்வதற்கென்றே எத்தனை அரங்க அமர்வுகள்! 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்னும் வள்ளுவரின் வரிகளால் அமைக்கப்பட்ட மாநாட்டில்தான், அற்புதமான பல கவிஞர்களின் படைப்புகள் கவனிக்கப்படாமல் இருக்க, கனிமொழியின் கவிதைகள் குறித்துக் கூட ஆய்வுக்கட்டுரைகள் வாசிக்கப்பட்டன். 'வானமே, வையகமே, மேற்குத் தொடர்ச்சி மலைகளே' என கூப்பாடு போட்ட வைரமுத்துவின் வெற்று வார்த்தைகளையெல்லாம் கேட்டுத் தொலைய வேண்டியிருந்தது. இத்தனை அலப்பறைகளுக்கும் இடையே, அமைதியான முறையில் தமிழுக்கு ஆக்கம் தரும் விதமாக எதாவது நடந்துவிடாதா என்ற எதிர்பார்ப்பில்தானே எல்லாவற்றையும் சகித்துக் கொண்டார்கள்! த்மிழின் பாரம்பரியம், தொன்மை எல்லாம் நவீனகாலத்துக்கு ஏற்ப தகவமைக்கப்படும் என்ற் நம்பிக்கையில்தானே பொறுத்துக் கொண்டார்கள்!
ஆனால், 'செம்மொழியான தமிழ்மொழியாம்' பாடலிசைக்க, பழ.கருப்பையா தாக்கப்பட்டதையும். தமிழருவி மணியன் வீட்டைவிட்டு விரட்டப்பட்டதையும், நீதிபதி கே.சந்துரு அவர்களின் தீர்ப்பின் வரிகளையும் காட்சிகளாக ஒடவிட்டுப் பார்த்தால், கலைஞருக்கு பொறுக்க முடியாதுதான். சகிக்க முடியாதுதான்.
அதிகாரத்தின் ருசி கொண்டவர்கள் பேசும் மொழி உலகம் முழுவதும் ஒன்றுதான். அதன் பேர் அடக்குமுறை!
பதிந்த இடம் : http://mathavaraj.blogspot.com/2010/07/blog-post.html