தமிழ் இணைய மாநாட்டை "உத்தமம்' (இன் பிட்) என்கிற அமைப்பு நடத்தி வருகிறது. தற்போது நடக்கும் இணைய மாநாட்டுக்கு வந்த பலருக்கும், முறையாக தங்குமிட ஏற்பாடு செய்யவில்லை, அடையாள அட்டை வழங்கப்படவில்லை என்று வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் மத்தியில் பரவலான புகார் இருந்தது. ஆயினும், நேற்று துவங்கிய இந்த மாநாட்டில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டின் முகப்பரங்க பொழிவினை சிங்கப்பூர் அமைச்சர் ஈஸ்வரன் துவக்கி வைத்துப் பேசினார். அவர் பேசுகையில், ""சிங்கப்பூரில் தமிழர்கள் குறைவாக இருந்தாலும், தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஆட்சி மொழிகளில் ஒன்றாக அந்த அரசு அங்கீகரித்துள்ளது. பள்ளிகள், வானொலி, தொலைக்காட்சி எல்லாவற்றிலும் தமிழுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது,'' என்றார். மத்திய தகவல் தொழில் நுட்பத்துறையின் சார்பில் 2 இலவச தமிழ் மென்பொருள் குறுவட்டுக்களை அத்துறையின் அமைச்சர் ராஜா வெளியிட, ஈஸ்வரன் பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சிக்கு, தமிழ் இணைய மாநாட்டுக் குழுவின் தலைவரும், கான்பூர் ஐ.ஐ.டி. தலைவருமான ஆனந்த கிருஷ்ணன் தலைமை வகித்தார்.
மாநாடு துவங்கி, கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டு, விவாதங்கள் நடந்தன. மாநாடுக்கு "பிளாக்கர்ஸ்' எனப்படும் வலைப்பதிவாளர்கள் 30க்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். அவர்களின் கட்டுரைகளைச் சமர்ப்பிக்க நேரம் ஒதுக்குவதாக, தகவல் தரப்பட்டு இருந்ததாகத் தெரிகிறது. அதை நம்பி வந்த இவர்களுக்கு, நேரம் ஒதுக்கப்படவில்லை. மாநாடு நடத்தும் "உத்தமம்' அமைப்பின் செயலர் மணியம் கூறியதன்பேரில் வந்ததாக அவர்கள் கூற, உத்தமம் அமைப்பின் துணைத்தலைவர் வெங்கட்ரங்கன் உள்ளிட்டோர், "முறைப்படி பதிவு செய்யாதவர்களுக்கு நேரம் ஒதுக்க முடியாது' என்று கூறியுள்ளனர். இதனால், அவர்கள் மாநாட்டு அரங்கிற்கு வெளியே வந்து சத்தம் போட ஆரம்பித்தனர். தகவலறிந்து, மாநில தகவல் தொடர்புத்துறை அமைச்சர் பூங்கோதை வந்து, அவர்களை சமாதானப்படுத்த முயன்றுள்ளார். அவர்கள் ஏற்கவில்லை. வெளிநாட்டைச் சேர்ந்த தமிழ் ஆய்வாளர்கள் முன் வந்து சமாதானப்படுத்தினர். தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தைக் குறைத்துக் கொண்டு, வலைப்பதிவாளர்கள் கட்டுரை சமர்ப்பிக்க வாய்ப்பு வழங்குவதாகக் கூறியுள்ளனர். அதனால், இன்று அவர்கள் தங்களது கட்டுரைகளைச் சமர்ப்பிப்பார்கள் என்று தெரிகிறது.
இது குறித்து தமிழ் இணைய மாநாட்டுக்குழுவின் உறுப்பினரும், "உத்தமம்' அமைப்பின் துணைத்தலைவருமான வெங்கட்ரங்கனிடம் கேட்டபோது, ""அவர்கள் இதுபற்றி முறைப்படி தகவல் தெரிவிக்கவில்லை; அதனால், அவர்களுக்கு நேரம் ஒதுக்க இயலவில்லை. ஆனாலும், அவர்களை புறக்கணித்து விடவில்லை. நாளை அவர்களுக்கு நேரம் ஒதுக்க ஏற்பாடு செய்துள்ளோம். தமிழில் வலைப்பூக்கள் அதிகரிப்பது, வரவேற்கப்பட வேண்டியது. வலைப்பூக்களில் எழுதுவோரைப் புறக்கணிக்கவும் தேவையில்லை. வேறு எந்த சர்ச்சையும் இல்லை,'' என்றார்.
முதல் தமிழ் இணைய மாநாடு, 1997ல் சிங்கப்பூரில் கோவிந்தசாமியால் நடத்தப்பட்டது. இரண்டாவது மாநாடு, 1999ல் சென்னையிலும், 3வது மாநாடு, 2000வது ஆண்டில் சிங்கப்பூரிலும், அதற்கடுத்த ஆண்டில் மலேசியாவிலும், 5வது மாநாடு, 2002ல் அமெரிக்காவிலும் நடத்தப்பட்டன. மீண்டும் சென்னையில் 6வது தமிழ் இணைய மாநாடு, 2003ம் ஆண்டில் நடந்தது. ஏழாவது மாநாடு, 2004ல் சிங்கப்பூரிலும், எட்டாவது மாநாடு, 5 ஆண்டுகள் இடைவெளியில் 2009ல் ஜெர்மனியிலும் நடத்தப்பட்டன. ஆனால், ஒரே ஆண்டிற்குள் 9வது இணைய மாநாடு, செம்மொழி மாநாட்டுடன் நேற்று துவங்கியது.
கணினியில் தமிழின் பயன்பாட்டை அதிகப்படுத்துதல்,
கணினி வழி தமிழ் கற்றல் மற்றும் கற்பித்தல்,
கணினி மொழியியல் ஆகிய பிரிவுகளில் 20 கட்டுரைகள் ஆய்வுக்கு சமர்ப்பிக்கப்படுகின்றன.
இணைய வழிக்கல்வி- 6,
கணினி வழி தமிழ் மொழி சொற்திருத்திகள்-6,
கணினியில் தமிழ்ப்பேச்சு மற்றும் சொற்பகுப்பு ஆய்வு-13,
இணைய தொழில் நுட்பத்தில் தமிழ் மொழி மற்றும் திறவூற்று செயலிகள் என்ற தலைப்பில்-5,
தமிழ் மின் தரவு மற்றும் மின் அகராதிகள்-12,
கணினி வழி தமிழ் எழுத்து உணரி செயல்பாடுகள்-7,
தமிழில் சிந்தனைத் திறன் கணினிச் செயல் திரல்கள்-10,
கணினியில் தமிழ் தட்டச்சு=3,
தமிழ் வலைப்பூக்கள்-4,
மின்னரசும்,
தமிழ் தகவல் தொழில் நுட்பமும்-6,
கணினி வழி கல்வி-8,
தமிழில் தேடு பொறிகள்-7,
கையடக்கக் கருவிகளில் தமிழ்-5,
தமிழ் ஒருங்குறி-4,
போன்ற தலைப்புகளில் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படுகின்றன.