தமிழகத்தில் கைதான சிரஞ்சீவி பற்றி தமிழ் வார பத்திரிகை செய்தி.
விடுதலைப்புலிகளின் புலனாய்வு பொறுப்பாளர்களில் முக்கிய நபரான சிரஞ்சீவி மாஸ்டர் தமிழக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் விசாரிக்கப்பட்டு வருவதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்த விடயங்கள் தொடர்பாக ஜுனியர் விகடன் இதழ் அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளது
விழுப்புரம் தண்டவாள அதிர்வுகளே இன்னும் அடங்காத நிலையில் சந்திரகுமார், அருள் செல்வம், பாலா, செல்வம் என்கிற புனைப் பெயர்களைக்கொண்ட 'சிரஞ்சீவி மாஸ்டரை' வளைத் திருக்கிறது தமிழக உளவுத் துறை பொலிஸ்!
சிரஞ்சீவி மாஸ்டர், புலிகளின் உளவுத் துறையில் பொட்டு அம்மானின் அடுத்த கட்டத் தலைவர்களில் ஒருவர் என்று கூறப்படுகிறது. 12 வருடங்களுக்கும் மேலாக மத்திய, மாநில உளவுத் துறைகளால் தேடப்பட்டு வந்த சிரஞ்சீவி மாஸ்டர், ஈழப் போரின் இறுதிக் காலத்தில் களத்தில் நின்றவர். கடைசிக்கட்ட நேரத்தில் கை, கால்களில் பலத்த காயமடைந்தவர், அதன் பிறகு என்ன ஆனார் என்பது தமிழீழ ஆர்வலர்களாலேயே நேற்று வரை யூகிக்க முடியாத விஷயம்.
தமிழீழ ஆர்வலர்கள் சிலரிடம் பேச்சுக் கொடுத்த போது, நம் தகவலையே முதல் செய்தியாகக் கேட்டு அதிர்ச்சியின் விளிம்புக்கே போனவர்கள், "சிரஞ்சீவி மாஸ்டர், பொட்டு அம்மானின் பேரபிமானத்தைப் பெற்றவர். புலிகளின் தமிழகப் புலனாய்வுத் தலைவராக இருந்தார். இலங்கைக்கும் தமிழகத்துக்கும் அடிக்கடி விசிட் அடிப்பார். ஈழப் போர் தீவிரம் எடுத்த கால கட்டத்தில் புலனாய்வுப் பிரிவிடம் இருந்து அழைப்பு வர… உடனடியாகக் கிளம்பிப் போனார். போரின் உக்கிரம் மிகக் கடுமையானபோது, தமிழகத்துக்கு வந்து அதன் பாதிப்புகளை பட்டவர்த்தனமாக எடுத்துச் சொல்லி, தமிழக அரசியல் தலைவர்களின் ஆதரவைத் திரட்டும் பொறுப்பு அவருக்குக் கொடுக்கப்பட்டது.
ஆனால், இந்திய - இலங்கை அரசுகளின் தீவிரக் கண்காணிப்புகளைத் தாண்டி, அவரால் இங்கே வந்து சேர முடியவில்லை. அதன் பிறகு அவர் என்ன ஆனார் என்பதே தெரியாத நிலையில்… அவர் தமிழகத்தில் பிடிபட்டிருப்பதாகச் சொல்வது பெரிய விந்தைதான்!" என்கிறார்கள்.
இன்னும் சிலரோ, "திருகோணமலையில் உள்ள பனகுளம் பகுதியில் பிறந்த சிரஞ்சீவி, 91-ம் ஆண்டு இயக்கத்தின் நம்பகத்தைப் பெற்று யாழ்ப்பாணம் பகுதியில் தீவிர ஆயுதப் பயிற்சி எடுத்தார். அதன் பிறகு புலிகளின் உளவுப் பிரிவுக்கு வந்தார். 98-ம் வருடம் கண்ணன் என்கிற கண்ணப்பனும், சிரஞ்சீவியும் தமிழகத்துக்கு அனுப்பப்பட்டார்கள். அசம்பாவிதச் சம்பவங்களிலோ, ஆயுதக் கடத்தலிலோ ஈடுபடும் 'அசைன்மென்ட்' இவர்களுக்குக் கிடையாது. தமிழகத்தின் அரசியல் நிலைமைகளைக் கணித்துக் கொடுக்கும் பணி மட்டும்தான். அதைச் செவ்வனே செய்யக்கூடியவர் சிரஞ்சீவி. அதனாலேயே அவரை 'தமிழ்நாட்டு பொட்டு அம்மான்' என்பார்கள்.
ராஜீவ் படுகொலைக்குப் பிறகு தமிழகம் வந்த சீரஞ்சீவி, இங்கு உள்ள அரசியல் நிலவரங்களை ஊன்றி ஸ்டடி செய்த பிறகு, இங்கு இருந்தே ஆயுதப் பரிவர்த்தனைக்கான பொறுப்பையும் ஏற்றார். அப்போதுதான் தமிழக பொலிஸ் அவர் மீது கண் வைத்தது. அவரை மடக்கினால், புலிகளின் உளவு நெட்வொர்க்குகளைத் துல்லியமாகத் தெரிந்து கொண்டுவிடலாம் எனத் திட்டமிட்டு அவரை வளைக்க எவ்வளவோ முயன்றார்கள். ஆனால், சாதுர்யமாகத் தப்பிச் சென்றுவிட்டார்.
இலங்கைத் தமிழர் என சந்தேகிக்க முடியாத அளவுக்கு சென்னைத் தமிழிலும் சரளமாகப் பேசுவார். 2004-ல் அவர் மறுபடி சென்னைக்கு வந்து சென்றபோது, பல திசைகளிலும் ரூட் போட்டு அவரை வளைக்கத் துடித்தது போலீஸ். அவர் மீது எந்த வழக்குகளும் அப்போது இல்லை என்பதால் ஒன்றும் செய்ய முடியவில்லை. 2007-ல் சிவகரன் என்கிற போராளி வெடிமருந்து கடத்தியதாகப் பதிவான வழக்கில் சிரஞ்சீவி மாஸ்டர் பெயரும் சேர்க்கப்பட்டது. அப்போது போட்ட வழக்கு ஒன்றை வைத்தே அதன் பிறகு அவரை வெளிப்படையாக பொலிஸ் தேடத் தொடங்கியது.
தொண்டி வழியாக அவர் மீண்டும் சென்னைக்கு வரும் தகவலை அறிந்துகொண்ட உளவு பொலிஸ், புலிகளின் அபிமானம் பெற்ற புதுக்கோட்டை மாவட்ட அரசியல் புள்ளியை வளைத்து, அவர் மூலமாக சிரஞ்சீவியை வளைக்கத் திட்டமிட்டது. ஆனால், கண்ணப்பன் என்ற போராளி மட்டும் சிக்க, பொலிஸின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு எஸ்கேப் ஆனார் சிரஞ்சீவி.
தமிழகத்தின் முக்கிய அரசியல் புள்ளிகளை ஈழத்துக்கே அழைத்துச் சென்று… பிரபாகரன், பொட்டு அம்மான், தமிழ்ச்செல்வன் ஆகியோரிடம் அறிமுகம் செய்து வைத்தவர் சிரஞ்சீவிதான். போர் உக்கிரமான காலத்திலேயே தமிழகத்து அரசியல் புள்ளி ஒருவரை ஈழத்துக்கு அழைத்துப்போய், குண்டு மழைகளுக்கு நடுவே வீடியோ காட்சிகளைப் பதிவுசெய்து கொண்டுவந்தார். கடைசிக் கட்ட ஈழப் போரில் பல்வேறு படை அணிகளாகப் பிரிந்து ஊடறுப்புத் தாக்குதல் நடத்தி வெளியேறியவர்களில் சிரஞ்சீவியும் ஒருவர் என எங்களுக்குத் தகவல் வந்ததே தவிர, தப்பித்த அவர் எங்கே இருக்கிறார் என்கிற விவரங்கள் எங்களுக்குத் தெரியவில்லை!" என்றார்கள்.
மேற்கொண்டு நாம் விசாரித்தபோது, "ஒரு வாரத்துக்கு முன்னரே உளவுத் துறை போலீஸார் அவரை வளைத்து விட்டதாகவும், புலிகளின் உளவுப் பிரிவுத் தலைவரான பொட்டு அம்மான் குறித்து அவரிடம் துருவிக்கொண்டு இருப்பதாகவும் தெரிகிறது. கூடவே, தமிழக அரசியல் தலைவர்களின் புலித் தொடர்புகள் குறித்தும், அவர்களைச் சிக்கவைக்கும் விதமான தகவல்கள் குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறதாம். விழுப்புரம் தண்டவாளத் தகர்ப்பு விவகாரத்தில் ஆரம்பகட்ட விசாரணையின்போதே 'புலிகளின் ஆதரவாளர்கள் செய்திருக்கலாம்' எனச் சொன்ன பொலிஸார், தற்போது சிரஞ்சீவியைச் சிக்கவைக்கவும் வாய்ப்பு இருக்கிறது!" என்று கூறுகிறார்கள் காவல் வட்டாரத்தின் அசைவுகளை அறிந்தவர்கள்.
இன்னும் சில பொலிஸார், "இலங்கையில் போர் தொடங்கியபோது புலிகள் பலரும் தமிழகத்துக்குள் ஊடுருவினார்கள். சென்னை மடிப்பாக்கம் அருகே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து பரமேஸ்வரன் என்பவரும் போராளிகளும் தங்கி இருந்தது தெரிந்து அவர்களை வளைத்தோம். அப்போது சிரஞ்சீவி மாஸ்டர் குறித்து பரமேஸ்வரன் சொன்ன தகவல்கள் படுபயங்கரமானவை. அப்போதே,சிரஞ்சீவி குறித்துத் தீவிர விசாரணையைத் தொடங்கிவிட்டது எங்கள் துறை. போர்க் காலத்தில் அவர் ஈழத்தில் இருந்தார் என்ற தகவல் உறுதியானதாகத் தெரிகிறது. தற்போது சிக்கி இருக்கும் அவரிடம் பொட்டு அம்மான் குறித்து எங்கள் துறை அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு லேசான புன்னகையை மட்டுமே சிரஞ்சீவி மாஸ்டர் பதிலாக்கியதாகவும் தெரிகிறது. ஈழத்தின் கடைசிக்கட்டப் போர்க் கொடூரங்களை மட்டும் மனம்விட்டுச் சொன்னவர், புலித் தலைவர்களின் நிலை குறித்த கேள்விக்கு எந்த பதிலையும் சொல்லவில்லை!" என்றார்கள்.
தமிழக உளவுத் துறை ஐ.ஜி-யான ஜாஃபர் சேட்டிடம், சிரஞ்சீவி கைது குறித்துக் கேட்டோம். "விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவில் சிரஞ்சீவி மிக முக்கியமான ஆள். தீவிரமாகத் தேடப்பட்ட இவர், இலங்கைப் போருக்குப் பிறகு சந்திரகுமார் என்ற பெயரில் தமிழகத்துக்கு வந்திருக்கிறார். 2007-ம் ஆண்டு வெடிமருந்து கடத்தல் விவகாரத்தில் சிவா என்கிற சிவகரனுடன் சிரஞ்சீவி சம்பந்தப்பட்டிருப்பதாக வழக்கு இருக்கிறது. மற்றபடி இலங்கைப் போருக்குப் பிறகு தமிழகம் வந்த சிரஞ்சீவி தவறான நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. அவர் மீது புதிதாக வழக்குகள் ஏதும் இல்லை. மற்றபடி மேற்கொண்டும் அவரிடம் விசாரித்து வருகிறோம்!" என்றவரிடம்,
"விழுப்புரம் தண்டவாளத் தகர்ப்பில் சிரஞ்சீவியைச் சிக்க வைக்க முயற்சிகள் நடப்ப தாகச் சொல்லப்படுகிறதே?" எனக் கேட்டோம். "கிடையவே கிடையாது. விழுப்புரம் தண்டவாளத் தகர்ப்பு விவகாரத்தில் சிரஞ்சீவிக்கு எவ்விதச் சம்பந்தமும் கிடையாது. தண்டவாளத் தகர்ப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைப் பிடிக்கத் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறோம்!" என்றார்.
கை மற்றும் கால்களில் காயங்களோடு பொலிஸ் விசாரணையில் இருக்கும் சிரஞ்சீவி புலிகள் குறித்தும்… குறிப்பாக பொட்டு அம்மான் குறித்தும் என்ன சொல்லப் போகிறார் என்பது மில்லியன் டாலர் கேள்வி!
'பிரபாகரன் இருக்கிறாரா?' என்ற உலகளாவிய கேள்விக்கும் அவரிடம்… உறுதியான பதில் இருக்கலாம்!
'பார்வதி அம்மாளின் உடல்நலம் மோசமாகிறது. கடந்த ஒரு வாரமாக அவரால் திட உணவு சாப்பிட முடியவில்லை' என்று அவசர தகவல் வரவும்… அந்த நேரத்தில், கண் அறுவை சிகிச்சைக்காக கண்டி சென்றிருந்த டாக்டர் மயிலேறும் பெருமாள், அடித்துப்பிடித்து வல்வெட்டித்துறை மருத்துவமனைக்குப் போய்ச் சேர்ந்தார். பார்வதி அம்மாளைப் பரிசோதித்தபோது, அவருக்கு இரண்டு சிறுநீரகங்களும் வீங்கியிருந்ததுடன், வயிற்றில் புண்களும் உண்டாகியிருப்பது தெரிந்ததாம். மேலும் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைக்காக யாழ்ப்பாண மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரபாகரனின் தாயாரை அனுப்பியுள்ளனர்.