தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

செம்மொழி மாநாடா இல்லை தற்பெருமை மாநாடா !

கோவை செம்மொழி மாநாட்டில் நேற்று கவியரங்கம் நடந்தது. தலைப்புக்கு சற்றும் பொருத்தமில்லாமல், முதல்வரை துதி பாடவும், அரசியல் பேசவும் மட்டுமே பயன்பட்ட இந்த கவியரங்கில், ஈழத்தமிழர் பிரச்னையும் ஆங்காங்கே எட்டிப் பார்த்தது. பேசிய அனைத்து கவிஞர்களும், முதல்வர் கருணாநிதி தான் தமிழுக்கு காவல்காரன் எனக் கூறி அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.

கோவையில் நடைபெற்று வரும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில், "தமிழுக்கும் அமுதென்று பேர்' என்ற கவியரங்குக்கு, கவிஞர் வாலி தலைமை தாங்கினார். பங்கேற்ற அனைவரும், முதல் வரிசையில் அமர்ந்திருந்த முதல்வர் கருணாநிதியை துதி பாடும் களமாகவே மேடையை பயன்படுத்திக் கொண்டனர்.


தலைமை வகித்து பேசிய கவிஞர் வாலி, ""தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, தமிழுக்கும் தமிழ் மண்ணுக்கும் கலைஞர் தான் காவல். அதனால் தான், அவரது நிழலில் ஒதுங்க எல்லாருக்கும் ஆவல்,'' என்றார். சமீபத்தில் அ.தி.மு.க., கட்சியில் இருந்து தி.மு.க.,வுக்கு தாவிய முன்னாள் அமைச்சர்கள் முத்துசாமியையும், சின்னசாமியையும் தனது கவிதையில் புகுத்த மறக்கவில்லை வாலி. ""ஆலயம் தானே சாமிகளுக்கு இடம். அதனால் தானோ, "சாமிகள்' அறிவாலயம் நோக்கி வருகின்றன. கலைஞர் தான் தமிழுக்கு காப்பு; அவருக்கு ஒரு கைகூப்பு,'' என்றார்.


கவியரங்கை துவக்கி வைத்து கவிஞர் மேத்தா பேசுகையில், ""இதுவரை தமிழ் உலகை பேசியது. இப்போது உலகமே தமிழைப் பற்றி பேசுகிறது. தமிழ்த் தலைவரைப் பற்றி பேசுகிறது. பேசப்படும் தலைவரைப் பற்றி நான் பேசாமல் வணங்குகிறேன். குழந்தைக்கு தாய் குவளையில் பால் ஊட்டுவாள்.ஒரு குவளை தமிழ்த் தாய்க்கே பால் ஊட்டியது; அது திருக்குவளை. நாத்திகன் என்றாலும் அவர் தினமும் ஆலயம் போய் வருவார்; அறிவாலயம் எனும் ஆலயத்துக்கு. இலக்கியத்தில் தலை கொடுக்க முன் வந்தார் குமணன்; குடியிருக்கும் வீட்டையே கொடையாகத் தந்து குமணனை வென்றார் கலைஞர். இப்போது அவர், கோடானுகோடி தமிழர்களின் இதயத்தில் குடியிருக்கிறார்,'' என்றார்.


முதல்வருடன் அமர்ந்திருந்த துணை முதல்வர் ஸ்டாலினையும் விட்டு வைக்கவில்லை. ""இவர் துணை முதல்வர் தான். ஒரு வழியில் இவர் முதல்வர். சுரேகாவின் வீட்டுக் கதவை முதலில் தட்டி கண் பார்வை கொடுத்ததில் முதல்வர். அகவை இவருக்கு 58; இவர் உதவிக்கு அழைத்தால் ஓடி வரும் 108. வாழும் வள்ளுவருக்கே குறள் சொல்பவர். தமிழ் படித்தால் வேண்டும் இங்கே வேலைவாய்ப்பு; தமிழுக்கும் வேண்டும் இங்கு வேலைவாய்ப்பு,'' என்றார்.


கவிஞர் தணிகாசலம் பேசுகையில், ""இன்று காவிரியை கடக்க ஓடம் வேண்டாம்; ஒட்டகம் போதும். அம்மா மண்டபம் அடியோடு காலி. இந்த மாமண்டபம் நிறைந்து வருவதே இன்றைய செய்தி. கணவனை இழந்த கண்ணகியின் சீற்றத்தில் நியாயம் இருந்தது. ஈழத்தில் அனைத்தையும் இழந்த எங்கள் கோபமும் நியாயம், நியாயம்,'' என்றார்.


கவிஞர் இளம்பிறை பேசுகையில், ""கடல் அலையாக பொங்கும் உணர்வை கம்பி வலைகளா தடுக்கும்? படுகாயங்கள் சருகாய் உருகும். விடுதலை பயிர்கள் விளையும். பதறி பறந்த பறவைகள் மீண்டும் ஒன்றாய் சேரும். தமிழினத்துக்கு இல்லை வீழ்ச்சி; அதற்கு இந்த மாநாடே சாட்சி,'' என்றார்.


கவிஞர் பழனிபாரதி பேசுகையில், ""நீ சுவாசிப்பது காற்றை அல்ல; தமிழ்ப் பாட்டை. முத்தமிழுக்கு தலைவன் என உன்னைக் கூறினால் ஏற்க மாட்டேன். நாடகத் தமிழ், கட்டுரைத் தமிழ், கலைஞர் தமிழ், பாட்டுத் தமிழ் போன்ற அத்தனை தமிழுக்கும் நீதான் தலைவன். வீடு வரை உறவு; வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை; கடைசி வரை கலைஞர். நேற்று கட்சி துவங்கியவர்கள் எல்லாம் முதல்வராகி விடுவதாகக் கூறுகின்றனர். நீ பிரதமர் ஆகலாம்; உன் உயரம் சூரியனின் உயரம்,'' என்றார்.


இறுதியாக பேசிய கவிஞர் பா.விஜய், தனது கவிதையால் முதல்வரை நனைத்தெடுத்தார். அவர் பேசுகையில், ""கலைஞர் கூட கோவைக்காரர் தான். கோவைக்காரர்கள் தங்கள் பேச்சில், "ஏனுங்கண்ணா, என்னங்கண்ணா' போட்டு பேசுவர். கலைஞரும் "அண்ணா, அண்ணா' என்று பேசுவதால் அவரும் கோவைக்காரர் தான். எனக்கு மூச்சில் தமிழ்; உனக்கு மூச்சே தமிழ். கலைஞருடன் நெருங்கி பழகுபவர் அனைவரும் பெரிய கவிஞர் ஆகி விடுவர். விரைவில் வெளிவரும் குஷ்பு எழுதிய குட்டிக்கவிதை புத்தகம். தமிழ்நாட்டில் செல்போன் போல் கட்சிகள். எத்தனை கட்சிகள் இருந்தாலும் அனைத்துக்கும் ரிங் டோன் கலைஞர் தான். செம்மொழி மாநாடு மிச்ச சாதனை அல்ல; உனது உச்ச சாதனை,'' என்றார்.


இவ்வாறு இறுதி வரை பேசியவர் எவரும், தலைப்பை மருந்துக்குக் கூட தொடவில்லை. அனைவரின் பாராட்டுப் பத்திரங்களையும் முதல்வர் கருணாநிதி முன்முறுவலுடன் கேட்டுக் கொண்டிருந்தார்.இறுதியில் மேடையை விட்டு இறங்கிய அனைவரும், முதல்வர் அருகில் வந்து நலம் விசாரித்து, கூட நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.