'காற்றாலை மூலம் மின் உற்பத்தி அதிகரித்துள்ளதால், தமிழகத்தில் அமலில் உள்ள மூன்று மணி நேர மின்வெட்டை இரண்டு மணி நேரமாகவும், தொழிற்சாலைகளுக்கான மின்வெட்டு இருபது சதவிகிதமாக குறைக்கப்படும்' என்று கடந்த 27&ம் தேதி தமிழக அரசு அறிவித்தது.
அடுத்த ஒரு வாரத்திலேயே... 'காற்றாலை மூலம் கிடைத்த 500 மெகாவாட் மின்சாரம் 50 மெகாவாட்டாக குறைந்துவிட்டதால், மீண்டும் பழைய மின்வெட்டு நேரம் அமல்படுத்தப்படுகிறது' என பழைய குருடி கதவைத் திறடி கதையாக அரசு அறிவித்துள்ளது.
காற்றாலை மின்உற்பத்தி அரசு அறிவித்தபடி 500 மெகாவாட்டில் இருந்து ஒரே வாரத்தில் 50 மெகாவாட்டாக குறைந்தது எப்படி? காற்றாலை வட்டாரங்களில் விசாரித்தோம்.
''தமிழகத்தில் நெல்லை, குமரி, தூத்துக்குடி, கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளன. தமிழகம் முழுவதும் 9 ஆயிரத்து 500 காற்றாடிகள் உள்ளன. தினமும் 2 ஆயிரம் முதல் 2 ஆயிரத்து 500 மெகாவாட் மின்சாரம் காற்றாலை மூலம் தயாரிக்கப்படுகிறது. இவை அந்தந்த மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டு மீதம் இருக்கும் மின்சாரம், மற்ற மாவட்டங்களுக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவிலேயே காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் உள்ள காற்றாலை மூலம் 4 ஆயிரத்து 900 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. ஆண்டுக்கு ஆறு மாதங்கள் மட்டுமே காற்றாலையில் மின் உற்பத்தி இருக்கும். பொதுவாக காற்றாலை மின் உற்பத்திக்கு பெரிதும் கை கொடுப்பது, தென்மேற்கு பருவ மழை காலம்தான்.
இந்த மாதங்களில் காற்று இடைவிடாமல் வீசுவதால், காற்றாலைகள் தொடர்ந்து இயங்கு-கின்றன. இதனால் நாள் ஒன்றுக்கு 4.8 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இது தமிழகத்தின் மின் உற்பத்தியில் 20 சதவிகிதம். ஆனால் இந்த மின்சாரத்தை வாங்குவதில் அரசு சுணக்கம் காட்டுவதுதான் இப்போதைய மின்வெட்டுக்குக் காரணம்'' என்கின்றனர்.
இதுகுறித்து அகில இந்திய காற்றாலை சங்கத்தின் தலைவர் கஸ்தூரி ரங்கையனிடம் பேசினோம்.
''மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை காற்றாலை மின் உற்பத்தி அதிகமாக இருக்கும். இந்த மாதங்களில் காற்றாலை மின் உற்பத்தி ஒரு நாளுக்கு 2 ஆயிரத்து 500 மெகாவாட் இருக்கும். தற்போதைய தேவை 10 ஆயிரத்து 500 மெகாவாட். இதில் 8 ஆயிரம் முதல் 9 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தற்போது உள்ளது. சராசரியாக 2 ஆயிரம் மெகாவாட்தான் பற்றாக்குறை. ஆனால் காற்றாலை மூலம் 2 ஆயிரத்து 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகிறது. இதனை முழுமையாக மின்சார வாரியம் பெற்றுகொண்டால், தமிழகத்தில் மின்வெட்டே இருக்காது.
ஆனால் மின்சார வாரியம் வாங்க மறுக்கிறது. 'தேவைக்கு அதிகமாக மின்சாரம் உற்பத்தியானால், அதை உபயோகப்படுத்த முடியாது. ஹை வால்டேஜ் பிரச்னை ஏற்பட்டு விடும். அதோடு மின்சாரத்தை சேமிக்க முடியாததால் அரசிற்கு நஷ்டம் ஏற்பட்டு விடும்' என இதற்குக் காரணம் கூறுகிறது மின்சார வாரியம்.
தற்போது தமிழகத்தில் தினமும் மூன்று மணி நேரம் முதல் ஒன்பது மணி நேரம் வரை மின்வெட்டு உள்ளது. அதனால் தினமும் கிடைக்கும் 2 ஆயிரத்து 500 மெகா வாட் மின்சாரத்தை அந்த பகுதிகளுக்கு கொடுக்கலாம். இதன் மூலம் மின்வெட்டு உள்ள பகுதிகளில் மின்வெட்டை குறைக்கலாம். ஆனால் அப்படிக் கொடுத்துவிட்டால் மின் உற்பத்தி குறையும் போது மின்வெட்டு ஏற்படும், அப்போது மக்கள் பிரச்னை செய்வார்கள் என்று கூறுகிறது மின்வாரியம். காற்றாலை மூலம் மின்சாரம் கிடைக்கும் போது, மின் தட்டுப்பாட்டை ஓரளவுக்கு மட்டுமல்ல முழுவதுமாக தவிர்க்கலாம் என்பதுதான் எங்கள் கருத்து. உற்பத்தி அதிகமாக இருக்கும் போது அதை மின்தட்டுப்பாடு உள்ள பகுதிகளுக்கு பகிர்ந்தளிக்க முடியும், ஆனால் அதைச் செய்ய மறுப்பது வேதனையாக இருக்கிறது.
மின்வாரியத்தின் இந்தப் போக்கு, அதன் நிர்வாக குளறுபடியை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. அரசிடம் பல முறை விரிவாக எடுத்துக் கூறியும், எந்தப் பலனும் இல்லை. அதனால் காற்றாலை மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தை பயன்படுத்துமாறு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளோம்'' என்றவர் மேலும்,
''மின்சாரத்தைப் பயன்படுத்தாதது ஒரு பிரச்னை என்றால், பயன்படுத்திய மின்சாரத்துக்கு விலை நிர்ணயிப்பதிலும் பிரச்னை.
2006-ம் ஆண்டுக்கு முன் நிறுவப்பட்ட காற்றாடி-களில் இருந்து கிடைக்கும் மின்சாரத்துக்கு ஒரு யூனிட்டுக்கு 2 ரூபாய் 75 பைசாவும், 2008-க்குப் பிறகு நிறுவப்பட்ட காற்றாடிகளில் இருந்து கிடைக்கும் மின்சாரத்துக்கு, யூனிட்டுக்கு 2 ரூபாய் 90 பைசாவும், 2009-ம் ஆண்டுக்குப் பிறகு நிறுவப்பட்ட காற்றாடிகளில் இருந்து கிடைக்கும் மின்சாரத்துக்கு ஒரு யூனிட்டிற்கு 3 ரூபாய் 30 பைசா எனவும் பிரித்துக் கொடுக்கிறார்கள். எதற்கு இந்த முரண்பாடு என்பது தெரியவில்லை. காற்றாலைகளில் இருந்து கிடைக்கும் மின்சாரத்தை, மின்வெட்டு உள்ள பகுதிகளுக்கு பகிர்ந்து அளித்தால், தமிழகத்தில் மின் வெட்டே இருக்காது. இதனால் காற்றாலை உரிமையாளர்களுக்கும் நஷ்டம் ஏற்படாது. காற்று அதிகமாக இருக்கும் போது, காற்றாலைகளை இயங்கவிட்டு, எங்களின் மின்சாரம் மூலம் தமிழகத்தில் உள்ள மின் தட்டுப்பாட்டை போக்குங்கள் என்று தமிழக அரசிற்கு மீண்டும் கோரிக்கை வைக்கிறோம்.
தற்போது காற்றாலை மின் உற்பத்தி அதிகமாகவே உள்ளது. அரசு கூறுவது போல் காற்றாலை மின் உற்பத்தி குறையவில்லை. கடந்த இரு வாரங்களில் அதிகரித்து வருகிறது என்பதுதான் உண்மை'' என விளக்கினார் கஸ்தூரி ரங்கையன். தொழிற்சாலை உரிமையாளர்கள் சிலரிடம் பேசினோம். ''தமிழகத்தில் உள்ள பல்வேறு பெரிய நிறுவனங்கள், வெளிநாட்டு நிறுவனங்கள்தான். அவை தமிழகத்தில் தொழிற்சாலை அமைக்க முன்வரும்போது அரசிடம் வைக்கும் முதல் நிபந்தனையே, 'தேவையான அளவு தடை இல்லா மின்சாரம் வேண்டும்'என்பதுதான். அரசும் இதை ஏற்றுக்கொண்டு அனுமதி அளிக்கிறது. இதனால் வெளிநாட்டு நிறுவனங்கள் வளர, பெரிதும் பாதிக்கப்படுவது நமது சிறு, குறுந்தொழிற்சாலைகள்தான். அதனால் அளவுக்கு அதிகமாக வெளிநாட்டு தொழிற்சாலைகள் அமைவதைத் தவிர்க்க வேண்டும் அல்லது அனுமதி அளித்தால், அவர்களுக்கு தேவையான மின்சாரத்தை காற்றாலைகள் மூலம் அவர்களே உற்பத்தி செய்துகொள்ள அறிவுறுத்த வேண்டும்'' என்றனர்.
இந்நிலையில் செம்மொழி மாநாட்டுப் பணிகள் ஆய்வுக்காக கோவை வந்த தலைமைச் செயலாளர் ஸ்ரீபதியிடம், ''ஒரே வாரத்தில் காற்றாலை மின்சார உற்பத்தி பெருமளவு குறைந்தது எப்படி?'' எனக் கேட்டோம். ''லைலா புயல் காரணமாக வீசிய காற்றால் மின்சார உற்பத்தி அதிகமானது. பின் குறைந்துவிட்டது. அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை மின்வெட்டு நிலவும்'' என 'லைலா' மீது பழியைப் போட்டார்.
தமிழகமே மின்வெட்டால் வியர்த்துக் கிடக்கும் இந்த நிலையில் செம்மொழி மாநாட்டுக்காக தினமும் 50 மெகாவாட் மின்சாரம் தேவைப் படுகிறதாம். என்ன செய்யப்போகிறதோ அரசு?