தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

நக்கீரனுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை ?


உலகம் ஒரு நாடக மேடை அதில் நாம் எல்லாம் நடிகர்கள்' என்ற மகா தத்துவத்தை அலாக்காய் தூக்கி விழுங்கிவிட்டு எம்மையே நாடக மேடையாக்கி இந்த உலகே ஆடுகிறதே ஒரு நாடகம். அப்பப்பா என்னவா ஆடுறாங்கப்பா.. என வடிவேல் பாணியில் கேட்கத்தோன்றுகிறது.

 

ஏன் இந்த ஆலாபனை என வாயைப் பிளக்காதீர்கள். நேரடியாகவே விடயத்திற்கு வருகிறேன். இந்தியாவின் தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் ஒரு வாரப் பத்திரிகை அண்மையில் வெளியிட்ட பரபரப்பு தகவலே எனது இந்த கொதிப்பிற்கு காரணம்.

அதற்கு முன் சில முக்கியமான தகவல்களை கூறிவிட்டு நான் விளக்கவந்த விடயத்திற்கு வருவது மிகப் பொருத்தம் எனக் கருதுகிறேன்.

2006 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் யுத்தத்தை ஆரம்பித்த சிங்கள அரசு அங்கு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை கைப்பற்றியதுடன் அவர்களின் தலைமறைவு செயற்பாடுகள் இடம்பெறக்கூடிய எனக் கருதப்படும் இடங்களையும் குறிவைத்து தாக்கத் தொடங்கியது.

இதனை அடுத்து, கிழக்கு மாகாணத்தில் விடுதலைப்புலிகள் மரபு ரீதியான படையணியாக மட்டுமல்ல கெரில்லா அணியாகவும் இலகுவாக நிலைகொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.

இதனை அடுத்து கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மாவட்டங்களில் விடுதலைப்புலிகள், படையணிகளாக நிலைகொள்வது சாத்தியம் அற்றுப் போனது. இதனை அடுத்து தளபதி கேணல் ஜெயம் தலைமையில் கிழக்குப் பகுதியில் நிலைகொண்டிருந்த விடுதலைப்புலிகளின் படையணிகள் கடல்வழியாக வன்னிப்பகுதிக்கு திரும்ப வேண்டியதாயிற்று. அவர்கள் கிழக்கில் நிலைகொண்டிருந்தபோது அவர்களுக்கான முக்கிய வழங்கல்கள் வன்னிப்பகுதியிலிருந்து கடல் வழியாக மிகுந்த அச்சுறுத்தல் சூழலுக்குள்ளாலேயே இடம் பெற்றன.

முல்லைத்தீவு மாவட்டத்தின் நாயாறு பகுதியில் தரை இறங்கி வன்னிப்பகுதிக்கு வந்த போராளிகளை அக்காலத்தில் நான் சந்தித்தபோது அவர்கள் கிழக்கு மாகாணத்தில் எதிர்கொண்ட சவால்கள் குறித்து என்னால் அறியமுடிந்தது.

தாம் பெருந்தொகையில் காடுகளுக்குள் நிலைகொண்டிருந்தபோது உணவுப் பொருட்களை பெற முடியாது சிரமப்பட்டதாகவும் இதனால் பல நாட்கள் பட்டினி கிடக்க நேர்ந்ததாகவும் இந்நிலையில் உணவுப்பொருட்களை எடுத்துவர ஊர்மனைகளுக்கு செல்கின்றபோது இராணுவத் தாக்குதல்களுக்கு உள்ளாகி உயிரிழப்புகளை எதிர் கொண்டதாகவும் இதன்போது காயமடைகின்ற போராளிகளுக்கு சிகிச்சை வழங்க முடியாத நிலை காணப்பட்டதாகவும் விபரித்த அவர்கள், தாம் வன்னிப்பகுதிக்கு வருவதற்குள் பல தடவைகள் இராணுவத்தை எதிர் கொண்டு பல போராளிகளை இழக்க நேர்ந்ததாகவும் தெரிவித்தனர்

இதன் பின்னர் கிழக்கு மாகாணத்தில் சிறு சிறு அணிகளாக செயற்படுவதே பொருத்தம் எனக் கருதிய தலைமை, ராம், நகுலன் ஆகியோரின் தலைமையில் கரந்தடி படையணிகளை செயற்பட பணித்தது.

இதற்குமேல் வரலாறு கூறத்தேவை இல்லை என நினைக்கிறேன். தொடர்ந்து விடயத்திற்கு வருகிறேன்

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் சுமார் 6000 போராளிகளை அணிதிரட்டி எதிர்காலத் திட்டத்திற்காக காத்திருக்கிறார்களாம் விடுதலைப்புலிகள். இந்த தகவலை ஒரு பத்திரிகையாளரை வலிந்து அழைத்து கூறியிருக்கிறாராம் தளபதி ராம். அதற்கு ஆதாரமாய் சில புகைப்படங்களையும் வெளியிட்டிருக்கிறது நக்கீரன் பத்திரிகை.

தேவையென்றால் இதனை நம்ப தமிழக மக்கள் தயாராய் இருக்கலாம். ஆனால் கள நிலையை அறிந்த ஈழத்தமிழர்கள் நம்பத் தயாரில்லை என்பதுடன் இது குறித்த சந்தேகங்களையும் வெளியிடத் தொடங்கியுள்ளனர்.

விடுதலைப்புலிகள் எப்போதுமே செயற்பாடுகள் மூலமாகவே வெளியில் தெரிந்த அமைப்பு. அவர்கள் மக்கள் மத்தியில் 'கீறோ'க்களானதும் அவர்கள் நடாத்திய அசாத்திய தாக்குதல்களாலேயே. அவர்கள் எப்போதுமே தமது உறுப்பினர்களின் எண்ணிக்கையை வெளியிட்டதில்லை. தமது பயிற்சி தந்திரோபாயங்களையும் வெளியிட்டதில்லை. கூப்பிட்டு வைத்து தம்மைப்பற்றி பேட்டி கொடுத்ததுமில்லை.   

குறிப்பாக தம்மைப்பற்றிய இரகசியங்களை காத்தலையே முதல் வெற்றியாகக் கருதினர். இரகசியம் காத்தலுக்காக தமது உயிரையே இழக்கத் தயாராய் இருந்தனர். உயிரையும் மாய்த்தனர். இதன் அடையாளமே 'சையனற்'.

இந்தத் தகவல்களை வைத்துக்கொண்டு தளபதி ராம் கொடுத்த பேட்டியின் சாராம்சத்திற்கு வருகிறேன்.

'காட்டுக்குள் இருந்து போரைத் தொடரவேண்டும் என்று விருப்பமாக இருக்கும் எங்களுடன் இருந்த 4000 புலிகளுடன், முள்ளிவாய்க்கால் தாக்குதல்களின்போது, வெளியேறி வந்த புலிகளையும் சேர்த்து தற்போது 6000 புலிகளாக பலம் பெற்றிருக்கிறோம. பெண் புலிகளும் இருக்கிறார்கள். சிங்கள ராணுவத்தின் கண்கள் எங்களைத் தேடுகின்றன. நீங்கள் காட்டுக்குள் 4 கி.மீ. சிரமப்பட்டு நடந்து வந்திருப்பீர்கள். நான் 20 கி.மீ. நடந்து வந்து உங்களைச் சந்திக்கிறேன். இது 100 கி.மீ.க்கு பரந்திருக்கும் மலைக்காடு. இதுதான் எங்களுக்கான பாதுகாப்பு கேடயம்…படம் எடுக்காதீர்கள் அதன்மூலம் நாம் இருக்கும் இடம் தெரிந்துவிடும்.'

படம் எடுக்காதீர்கள் அதன்மூலம் நாம் இருக்கும் இடம் தெரிந்துவிடும் என்று வலிந்து இரகசியத்தை காப்பதாய் காட்டிக்கொள்ள முயலும் ராம், ஒரு பத்திரிகையாளரை அழைத்து தாம் இருக்கும் காட்டுப்பகுதி பற்றியும் தமது படை எண்ணிக்கை குறித்தும் தாம் சந்திக்கும் நெருக்கடிகள் குறித்தும் தாம் பலம் பெறுவது குறித்தும் கூறுவது, அவர் வாயாலேயே தான் உண்மையான புலி இல்லை என்பதை தெளிவுபடுத்தும் செயல் அல்லவா.

6000 உறுப்பினர்களுக்கான உணவுப் பொருட்களை பெற எப்படியோ ஊர் மனைக்கு சென்றாக வேண்டும். அப்போது சிஙகளப்படைகள் கண்ணைகட்டிக் கொண்டிருக்கும் மர்மம் என்ன? இந்த 6000 பேருக்குமான உணவுக்கான நிதி எஙகிருந்து பெறப்படுகிறது?

வாகனத்தில் காட்டுப்பகுதிக்கு சுதந்திரமாகச் செல்லமுடிகிறதென்றால் அங்கு இராணுவமே இல்லையா?

இப்படிப்பட்ட கேள்விகளுக்கு விடையும் அங்கேயே இருக்கிறது. ராமினை மையமாக வைத்து உருவாக்கப்படும் இந்த கதையின் உண்மைத் தன்மை மிகவும் விபரீதமானது. தமிழ் மக்களில் எஞ்சியிருக்கும் போராட்ட உணர்வை ராம் தலைமையில் ஒன்று திரட்டி அதனை தேக்க நிலைக்கு கொண்டுபோய் செயலிழக்க வைப்பதுதான் இந்தச் சதியின் நோக்கமாக இருக்கமுடியும். இந்த சதித்திட்டத்தின் பங்குதாரர்கள் இந்தியாவும் இலங்கையும்தான் என்கிறது உள் தகவல் ஒன்று.

தற்போது சர்வதேச அளவில் செயற்படதொடங்கி உள்ள ஈழத்தமிழர்களின் போராட்ட வீச்சையும் அதற்கான அவர்களின் முன்னெடுப்புக்களையும் திசை திருப்பி, அவர்களின் நம்பிக்கைகளையும் எதிர்பார்ப்புகளையும் ராம் என்ற பொறிக்கிடங்கிற்குள் விழுத்திவிட நடக்கும் சதித்திட்டமே இது என்பதை ஓரளவிற்கு ஊகிக்க முடிகிறது.

இது தவிர ஈழத்தில் போராட்ட உணர்வில் உள்ள இளைஞர்களை வலிந்து இழுத்து அழிக்கும் நயவஞ்சக திட்டமும் ராம் என்ற புள்ளியை வைத்து நடப்பதாக ஏற்கனவே தகவல் வந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்திய மத்திய அரசின் கைப்பொம்மையாகிவிட்ட தமிழக அரசின் ஊதுகுழலாகச் செயற்படும் நக்கீரன் இந்தச் சதித்திட்டத்தின் விளம்பர ஒப்பந்தத்தை பெற்றுக்கொண்டுள்ளதாக சக பத்திரிகை நண்பர்கள் விசனப்படுகின்றனர்.

சத்தியமங்கல பெருங்காட்டுக்குள் சில உறுப்பினர்களுடன் இயங்கிய வீரப்பன் எப்படியெல்லாம் சிரமங்களை எதிர்கொள்ளவேண்டி வந்தது என்பது நக்கீரன் ஆசிரியருக்கு தெரியாதது அல்ல.

நிலமை அப்படியிருக்க ஒரு குறிப்பிட்ட காட்டுக்குள் 6000 புலிகள் எந்தவித தாக்குதலையும் நடத்தாது தலைமறைவாக காட்டுக்குள் இருக்கமுடியும் என்பது எவ்வளவு பெரிய பொய் என்பது நக்கீரன் கோபாலுக்கு தெரியாதது அல்ல. அப்படி இருக்க ஏன் இந்த கோடாலிக் காம்பு வேலை.