பாதுகாப்பு, மின்சக்தி போன்ற துறைகள் உட்பட ஏழு ஒப்பந்தங்களில் சிறிலங்காவும், இந்தியாவும் நேற்று கையெழுத்திட்டுள்ளன.
இரு நாடுகளுக்கும் இடையில் பொருளாதார ரீதியான பிணைப்புகளை வலுப்படுத்தல், சக்திவளப் பாதுகாப்பு, அபிவிருத்தி மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஒத்துழைப்பை அதிகரித்துக் கொள்ளுதல் என்பன தொடர்பாகவே இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையில் மின் சக்தியை பரிமாறிக் கொள்வதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது. 1000 மெகாவாட் மின்சாரத்தை பரிமாறிக் கொள்வதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையானது மின்சாரம் பற்றாக்குறையாக இருக்கும் இலங்கையின் நிலைமையை மேம்படுத்த நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கும் என செய்திகள் தெரிவிக்கின்றன.
இலங்கைக்கான மின்விநியோகத்தை மேற்கொள்வதற்கான பூர்வாங்க ஆய்வை நடத்துவதற்கு இந்த உடன்படிக்கை வழிவகுத்திருக்கிறது. இரு நாடுகளுக்கும் மின் இணைப்பை மேற்கொள்ள கடலுக்கடியில் கேபிள்களை பயன்படுத்த முடியுமென கருதப்படுகிறது.
அதேவேளை, தண்டனை வழங்கப்பட்ட கைதிகளை மாற்றிக் கொள்ளுதல், குற்ற விடயங்களில் பரஸ்பர சட்ட உதவியைப் பெற்றுக் கொள்ளுதல் என்பன தொடர்பாகவும் இரு புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
இரு நாடுகளுக்கும் இடையில் பயங்கரவாத எதிர்ப்புக்கான ஒத்துழைப்பை அதிகரித்துக் கொள்வதை இந்த இரு உடன்படிக்கைகளும் நோக்கமாக கொண்டவையாகும்.
அத்துடன், தலைமன்னார் – மடு தொடரூந்துப் பாதையை ஏற்படுத்துவதற்கான உடன்படிக்கையும் கைச்சாத்திடப்பட்டுள்ளது. ஏனைய ஒப்பந்தங்கள் அபிவிருத்தி ஒத்துழைப்பை பிரதிபலிப்பவையாக அமைந்துள்ளன. விசேட திட்டங்கள் மற்றும் பெண்களுக்கான வர்த்தக அனுசரணை, சமூக கற்கை நிலையம் என்பன தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கைகளும் இதில் உள்ளடங்குவதாக செய்திகள் தெரிவித்துள்ளன.