பொதுவாகவே கதைக்காக ரொம்ப மெனக்கெடாத மணிரத்னம், இந்த முறை வால்மீகி- கம்பரின் ராமாயணம், சமகால ராபின்ஹுட்டான சந்தனக் காட்டு வீரப்பன் கதை என கலந்து கொடுத்துள்ள 'வீரப்பாயணம்', இந்த ராவணன்!.
தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகளாக ஹை-கிளாஸ் இயக்குநராக ஆராதிக்கப்படும் ஒரு கலைஞரிடமிருந்து 5 ஆண்டுகளுக்குப் பிறகு வந்திருக்கும் இந்த நேரடி தமிழ்ப் படம், தமிழ்ப் படமாக வந்திருக்கிறதா என்பதுதான் கேள்வி!.
பழங்குடி மக்களுக்கு சகலமுமாக இருப்பவன் வீரா (விக்ரம், அதாவது ராவணன்). அண்ணன் சிங்கம் (பிரபு- அதாவது கும்பகர்ணன்), தம்பி சக்கரை (முன்னா- அதாவது விபீஷணன்), தங்கை வெண்ணிலா (ப்ரியாமணி- அதாவது சூர்ப்பணகை) என வாழ்ந்து வருகிறார். ஊரே அவன் சொல்வதைக் கேட்கிறது. அவனுக்காக உயிரைத் தரவும் தயாராக உள்ளது. ஆனால் சட்டத்தின் பார்வையில் அவன் மோசமானவன்.
அவனை வேட்டையாட சிறப்பு அதிரடிப்படை வருகிறது, தேவ் (பிருத்வி ராஜ்-அதாவது ராமன்) என்ற அதிகாரி தலைமையில். இந்த ராமனின் காதல் மனைவி ராகினி (ஐஸ்வர்யா ராய்- அதாவது சீதா). இந்த ராம சேனையில் அனுமாராக கார்த்திக் வருகிறார்.
வீராவின் தங்கைக்கு திருமணம் நடக்கும்போது அதிரடிப் படை அந்த இடத்தில் நுழைந்து வீராவை போட்டுத் தள்ளப் பார்க்க, குண்டு காயத்துடன் அவர் தப்பிக்கிறார். உடனே அவன் தங்கை வெண்ணிலாவை தூக்கிப் போகும் அதிரடிப் படையினர், அவளை கற்பழிக்கிறார்கள். வீடு திரும்பும் அவள் வீராவிடம் அனைத்தையும் சொல்லிவிட்டு தற்கொலை செய்து கொள்கிறாள்.
அந்த கோபத்தில், போலீஸ் அதிகாரியைப் பழிவாங்க, அவன் மனைவி ராகினியை கடத்திப் போகிறார் வீரா. உடனே அவளைத் தேடி போலீஸ் அதிகாரி தேவ் பெரும் படையுடன் காட்டுக்குப் போகிறார்.
ஆரம்பத்தில் வீராவை வெறுக்கும் ராகினி, அவன் தங்கைக்கு நேர்ந்த சோகம், அதற்கு தன் கணவனும் ஒரு காரணம் என்பதை அறிந்து அமைதியாகிறாள். அவள் மீது வீராவுக்கு மோகம் பிறக்க, அதை அவளிடமே சொல்கிறான். அதை மறுக்காமல் அமைதி காக்கிறாள் ராகினி.
ஒரு கட்டத்தில் வீராவின் தம்பியையும் போலீஸ் அதிகாரி கொல்கிறான். இதைத் தொடர்ந்து வரும் சண்டையில் வீராவும் போலீஸும் கடுமையாக மோதுகிறார்கள். கடைசியில், ராகினிக்காக அவரது கணவரான போலீஸ் அதிகாரி தேவை கொல்லாமல் விடுகிறான் வீரா. ராகினியையும் விடுவித்து அனுப்பிவிடுகிறான்.
கணவனோடு ரயிலில் ஊர் திரும்பிக் கொண்டிருக்கும் ராகினியின் கற்பை சந்தேகப்படுகிறார் கணவர் தேவ். இதனால் கோபமடையும் ராகினி மீண்டும் வீராவிடமே திரும்புகிறாள் ராகினி... அதன் பிறகு நடப்பது தான் க்ளைமாக்ஸ்.
படம் துவங்கியதிலிருந்து முடியும்வரை ஏகப்பட்ட குளறுபடிகள்...
நடப்பது தமிழ்ப் பழங்குடியினரின் கல்யாணம்... பின்னணியில் காசி, மதுரா நகரங்களில் உள்ளது போன்ற மாட மாளிகைகள், கூட கோபுரங்கள்... திருநெல்வேலி க்குப் பக்கத்தில் உள்ள அம்பாசமுத்திரத்தில் ஏது இதெல்லாம் என்ற கேள்வி நெஞ்சுக்குள் எழ அதை கப்பென்று அமுக்கிவிட்டு அடுத்தக் காட்சிக்குப் போகிறோம்.
ஹோ வென்ற இரைச்சலுடன் அருவி... கட்டற்று ஓடும் வெள்ளத்துக்கு நடுவே ஒரு மெகா சைஸ் சிலை, இரண்டு கால்களும் துண்டிக்கப்பட்ட நிலையில். வெள்ளத்தின் இன்னொரு பக்கம் கோட்டை கொத்தளம் மாதிரி செட்டப். நாயகனோ போலீசால் தேடப்படும் ஒரு குற்றவாளி... இப்படி சமீர் சந்தாவின் கலை இயக்கத்தில் எக்கச்சக்க ஓட்டைகள். தன்னை முன்னிருத்தும் அவரது முயற்சியில் காட்சிகள் தோற்றுப் போவதை கவனிக்கவில்லையே!.
திடீர் திடீரென்று திருநெல்வேலி, தஞ்சாவூர், கோவை என கதாபாத்திரங்களின் ஸ்லாங் மாறிக் கொண்டே இருக்கிறது... வசனங்களில் அபத்த நெடி. யார் எழுதியது... ஆ... சுஹாசினி. ரொம்பக் கொடுமை!.
எத்தனை அடி உயரத்திலிருந்து குதித்தாலும், எரியும் பாலத்திலிருந்து விழுந்தாலும் கதாநாயகனுக்கோ, வில்லனுக்கோ சின்ன சிராய்ப்புதான். ரியலிஸம்?.
தங்கையைக் கொன்றவனைப் பழிவாங்க, அவன் மனைவியைக் கடத்தி வந்த ஹீரோ, பின்னர் அந்த நினைப்பை தூக்கிப் போட்டுவிட்டு குடி- கும்மாளம், தூக்கி வரப்பட்ட இன்னொருத்தன் மனைவி மீது காதல் என அலைபாய்கிறான்...
அட, கூடப் பிறந்த தம்பியை அதே போலீஸ்காரன் போட்டுத் தள்ளியும் கூட, அவன் மனைவி மீது கொண்ட ஆசையால், அவனைத் தப்பிக்க வைக்கிறான் ஹீரோ... ஆனால் 'தாய் மாதிரி' அன்பானவன் என்று அதே பாத்திரத்துக்கு பில்ட் அப் வேறு!
ரஹ்மான் இசையில், கெடா கெடா கறி, வீரா வீரா என இரண்டு பாடல்கள் அட்டகாசம். எல்லோரும் ஓஹோவென்று கொண்டாடும் உசுரே போகுதே... பாடல் நன்றாக இருந்தாலும், பாடப்படும் சூழல் படத்தின் மீதான மதிப்பைக் குறைக்கிறது. அதுஎன்ன காட்டுப் பகுதி பயணம் என்றால் இன்ஸ்டன்டாக ஒரு கிழவி ஈனஸ்வரத்தில் முனகுவதாக ஒரு பின்னணி?.
தமிழ் உணர்வோ, தமிழருக்கான குறியீடுகளோ, தமிழ் இடவமைப்பு பின்னணியோ இல்லாமல் இருப்பதால் ஏதோ வேறு உலகத்தில் நடக்கும் நிகழ்வுகளைப் பார்ப்பது போன்ற உணர்வு.
க்ளைமாக்ஸ் காட்சி படு சொதப்பல். ரயிலில் கணவனோடு போகிறாள் மனைவி... கணவனுக்கு அவள் நடத்தை மீது சந்தேகம். உடனே ரயில் சங்கிலியைப் பிடித்து நிறுத்துகிறாள். இறங்கி நேராக தன்னைக் கடத்தியவனிடம் போய், 'என்னைப் பற்றி என் புருஷன்கிட்ட என்ன சொன்னாய்?' என்று கேட்பதாகக் காட்சி. நம்பகத்தன்மை என்பதை விட... சிறுபிள்ளைத்தனமான சித்தரிப்பு என்பதே பொருத்தம்.
குறைகள் மட்டுமேவா என்றால்... நிறைகளும் உண்டு.
அதில் முதலில் நிற்பது சந்தோஷ் சிவனின் அசாதாரண ஒளிப்பதிவு. தமிழில் வேறு எந்தப் படத்திலும் இத்தனை அழகான இயற்கைக் காட்சிகளைப் பார்த்திருக்க முடியாது எனும் அளவுக்கு அருமை. மலைகள், அருவிகள், காட்டு வழிகள், அந்த எரியும் பாலம், ஆரம்பத்தில் ஐஸ்வர்யா ராய் அருவியில் விழும் காட்சி என அனைத்தையுமே கண்முன்னே நிறுத்தியிருக்கிறார். பார்க்கும் நமக்கே ஜில்லிடும் அளவு தத்ரூபமான ஒளிப்பதிவு.
அடுத்து விக்ரமின் நடிப்பு. அது ஒரு முழுமையற்ற பாத்திரம், பெரிய ஈர்ப்பைக் கிளறாத ஒன்றுதான் என்றாலும் அதற்காக அபாரமாக மெனக்கெட்டிருக்கிறார் அந்த மனிதர்.
ஐஸ்வர்யா ராயின் அழகை அள்ளி அள்ளித் தந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர். ஐஸும் அம்சமாக வருகிறார். அந்த இறுதிக் காட்சியில் விக்ரம் மீது அவருக்கு காதல் வரும் உணர்வைக் காட்டியுள்ள விதம் க்ளாஸ். ஆனால் ப்ருத்வி ராஜூக்கு ஜோடியாக.. நல்லாவே இல்லை!.
மலையாளம் கலந்த தமிழில் சதா கத்திக் கொண்டே வரும் ப்ருத்வி ராஜ் வந்தாலே அலர்ஜியாகி விடுகிறது.
கம்பீர எண்ட்ரிக்கு காத்திருந்த கார்த்திக்கை காமெடி பீஸாக்கிவிட்டிருக்கிறார் மணி ரத்னம். ஏற்கெனவே குண்டாக இருக்கும் பிரபுவை மகா குண்டாகக் காட்டியுள்ளார். ஆனாலும் நடிப்பு மிகவும் ரசிக்கும்படியாகவே உள்ளது.
பெரிய பில்டப் தரப்பட்ட ரஞ்சிதாவை ஸ்கிரீனில் தேட வேண்டியிருக்கிறது. ஒரு மசாஜ், ஒரு ஜலக்கிரீடை காட்சியுடன் அவரை பேக்கப் பண்ணிவிட்டார் போலிருக்கிறது.
நாயகன், பம்பாய் என மணி ரத்னத்தின் மாஸ்டர் பீஸ்களோடு ஒப்பிடாமல் பார்த்தால், டைம் பாஸ்!ஒப்பிட்டு பார்த்தால் தமிழனின் சாபக்கேடு .......
நன்றி
தட்ஸ் தமிழ்
ஹா ஹா. விமர்ச்சனத்தைப் பார்த்து ஒரே சிப்பு சுப்பா வந்துடுச்சி. எப்பா மணி உனக்கு ராமாயணத்தை பத்தி எடுக்கனும்னு ஆசை இருந்திருந்தால் சன் டிவிக்கு நிஜ ராமாயணத்தையே ஒரு தொடர் நாடகமாக எடுத்து கொடுத்திருக்க வேண்டியது தானே?
கலாச்சாரம் சீரழிந்துவிட்டதற்கு உதாரணமான படம்.....
படம் வோடும். ஆனா வோடது.