ஆனால்... 25.03.2010 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து, 'தமிழ்மொழியில் வாதாடுவதற்கு இன்னும் சட்டம் இயற்றப்படவில்லை. அதற்கென்று தனிக்குழு கூட அமைக்கப்படவில்லை' என்று அறிக்கை வெளியிட்டார் பதிவாளர். அடுத்தநாளே நீதிபதிகள் தமிழ் மொழியில் பேசுவதை ஏற்க மறுத்து விட்டார்கள்.
இதையடுத்து ஆரம்பமான வழக்கறிஞர்களின் போராட்டம்தான் ஜூன் 9 முதல் பகத்சிங், ராஜேந்திரன், நடராஜன், எழில் அரசு, ராஜா, பாரதி ஆகிய ஆறு வழக்கறிஞர்கள் மேற்கொள்ளும் சாகும் வரை உண்ணாவிரதமாக தீவிரமாகியிருகிறது. போராடும் வழக்கறிஞர்களுக்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு, மூவேந்தர் முன்னணிக் கழகத் தலைவர் சேதுராமன், 'நாம் தமிழர்' கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்தார்கள். பல்வேறு தமிழ் அமைப்புகளும் ஆதரவு தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
திடீரென உண்ணாவிரத வளாகத்தில் காங்கிரஸின் மாநிலங்களவை எம்.பி. சுதர்சன நாச்சியப்பன் நுழைந்தபோதே சலசலப்பு ஏற்பட்டது. சரி காங்கிரஸும் தமிழ் ஆதரவுக் கட்சி என்று காட்டிக்கொள்ளத்தான் இவரை அனுப்பி வைத்திருக்கிறதோ என அங்குள்ளவர்கள் நினைக்க... சுதர்சன நாச்சியப்பனோ, 'இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் அந்தந்த மாநில மொழியில் அதாவது தமிழில் வழக்காடலாம் என்று சட்டம் இல்லை' என சுட்டிக்காட்டினார்.
இதனால் கடும் கோபமடைந்த வழக்கறிஞர்கள், சட்டப் புத்தகத்தை எடுத்து வந்து, 'சட்டம் 348 பிரிவு 2-ன்படி மாநில ஆளுநர் முன் ஒப்புதலோடு அந்த மாநில அலுவல் மொழியை உயர்நீதிமன்ற மொழியாக்கலாம்' என்று சொல்லப்பட்டிருப்பதை எடுத்துக்காட்டினர். 'இப்போ என்ன சொல்றீங்க?' என கடும் தொனியில் வழக்கறிஞர்கள் கேட்க, பதில் சொல்ல வழியில்லாமல் வழக்கறிஞர்களிடம் சரணடைந்து, 'நான் நிச்சயமாக மத்திய சட்ட அமைச்சரிடம் பேசுகிறேன்' என்று உறுதியளித்தார் சுதர்சன நாச்சியப்பன்.
உண்ணாவிரதத்தின் ஒரு பகுதியாக மதுரை மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பாக உயர்நீதிமன்றத்தில் தமிழ்மொழியே வழக்காடு மொழியாக அறிவிக்க மத்திய அமைச்சர் மு.க. அழகிரி தலையிட வேண்டுமென தீர்மானம் நிறை-வேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை பார்த்த அழகிரி ஜூன் 15-ம் தேதி வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
'தமிழ்நாடு சட்டசபையும், மத்திய உள்துறை அமைச்சகமும் உறுதியளித்தால் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொள்கிறோம்' என்ற வாதத்தில் வழக்கறிஞர்கள் உறுதியோடு நின்றதால் பேச்சு வார்த்தை தோல்வி அடைந்தது. இதையடுத்து மதுரை உயர்நீதிமன்றத்தில் உள்ள காந்தி சிலையின் கையில் கறுப்புக் கொடியைக் கொடுத்து எதிர்ப்பு தெரிவித்தார்கள் வழக்கறிஞர்கள்.
உண்ணாவிரதம் இருந்து வரும் வழக்கறிஞர்களில் ஒருவரான பகத்சிங் நம்மிடம் பேசினார். ''தமிழை வழக்குமொழியாக்கக் கோரி பார் கவுன்சிலில் இருந்து தீர்மானம் போட்டு சென்னை உயர்நீதி-மன்றத்துக்கு அனுப்பினோம். அதற்கு, 'இதற்காக இடவசதி மற்றும் அடிப்படை வசதிகள் கேட்டு அரசுக்கு கடிதம் எழுதியிருக்கிறோம்' என்று சென்னை தலைமை நீதிபதி அலுவலகத்தில் இருந்து வந்த பதிலில் குறிப்பிடப்பட்டு இருந்தது. என்ன கொடுமை பாருங்கள்?
06.12.2006 அன்று தமிழக சட்டசபையில் கலைஞர் முன்னிலையில் உயர்நீதிமன்றத்தில் தமிழ் மொழியை வழக்கு மொழியாக்கப்பட வேண்டும் என்று அனைத்து கட்சி உறுப்பினர்களின் ஒருமித்த கையெழுத்தோடு தீர்மானம் இயற்றி, அதை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது தமிழக அரசு. மத்திய அரசோ, 'நாங்கள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி விட்டோம். அங்கேதான் தாமதமாகிறது' என்கிறது. ஆனால், அப்போதைய குடியரசு தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அலுவலகத்தில் இருந்து, 'உயர் நீதிமன்றத்தில் தமிழ் மொழி வழக்கு மொழியாக அறிவிக்கச் சொல்லி தமிழக அரசு அனுப்பிய தீர்மானக் கோப்பு எங்கள் அலுவலகத்திற்கு இதுவரை வரவில்லை' என்று சொன்ன செய்தி பத்திரிகைகளில் வந்தது.
காங்கிரஸ் அரசின் பித்தலாட்டம்தான் இது. தமிழர்களுக்கு எந்த உரிமையும் வழங்கக் கூடாது என்பதிலேயே தீர்க்கமாக இருக்கிறது மத்திய அரசு. தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், 'தமிழ் மொழி பிராந்திய மொழி. அதனால் உயர்நீதி-மன்றத்தில் தமிழ் மொழியை வழக்காடும் மொழியாக அறிவிக்க முடியாது' என்று குறிப்பிட்டார். ஆனால் இதைச் சொல்ல அவருக்கு அதிகாரம் கிடையாது. மத்திய அமைச்சரவை கூடி முடிவெடுத்தாலே போதும்.
தமிழ் மொழிக்கென்று நான்காயிரம் ஆண்டு தொன்-மையான இலக்கணம், இலக்கியம் இருந்ததற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. பிறகு எப்படி பிராந்திய மொழி என்று சொல்ல முடியும்? 1970&ல் இருந்தே உத்திரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், பீகார், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் இந்தி மொழியை உயர்நீதிமன்றத்தில் பேச அனுமதித்தது ஏன்?
அலகாபாத் நீதிமன்றம், 'அந்தந்த மாநில மொழியில் வாதாடலாம். அதற்கு எந்தத் தடையும் இல்லை. அதற்கு யாருடைய ஒப்புதலையும் பெற வேண்டிய அவசியம் இல்லை. அரசிய-லமைப்பு சட்டத்திலேயே அதற்கான உரிமை கொடுக்கப்-பட்டிருக்கிறது' என்று தீர்ப்பு சொல்லியிருக்கிறது. பிறகென்ன தடை தமிழில் வாதாட?'' என ஆவேசமாகக் கேட்டார்.
''அரசாணைகள் தமிழில் இல்லை. கடைகளின் பெயர்ப் பலகைகளில் தமிழ் இல்லை. மதுரை உயர்நீதிமன்றத்தில் தமிழில் பெயர்ப் பலகை இல்லை. பிறப்புச் சான்றிதழ் கூட ஆங்கிலத்தில்தான் இருக்கிறது. இந்த லட்சணத்தில் தமிழ் மொழிக்கு கரும்புள்ளி குத்திவிட்டு கோவையில் செம்மொழி மாநாடு நடத்துகிறார்கள். செம்மொழி மாநாடு நடத்தும் கலைஞர் ஆட்சியில் தமிழ் அழிக்கப்பட்டு வருகிறது'' என்கிறார்கள் வழக்கறிஞர்கள் நாகராஜன், எழில் அரசு ஆகியோர்.
உண்ணாவிரத்தின் ஏழாம் நாளான ஜூன் 15&ம் தேதி காலை பத்திரிகைகளில், 'வழக்கறிஞர்களின் லட்சியமும், இந்த அரசின் லட்சியமும் ஒன்றுதான். அதனால் வழக்கறிஞர்கள் போராட வேண்டாம்'' என கேட்டுக் கொண்டிருக்கிறார் தமிழக சட்ட அமைச்சர் துரைமுருகன்.
ஆனால் உண்ணாவிரத உஷ்ணமோ தமிழகம் முழுக்க பரவிக் கொண்டிருக்கிறது.