ரசாயன சாத்தான்கள்- போபால் - சக்தி செல்லையா
தமிழ்நாட்டில் வசிப்பவர்கள் பெரும்பாலும் அறிவாளிகளாகவும் சோம்பேறிகளாகவும் தான் இருப்பார்கள் போலும். அது அவர்கள் தவறில்லை. மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் வசதிகள் அதிகம். வாய்ப்புகள் அதிகம். கைப்பேசி கட்டணம் முதல் ஆரம்பித்து பஸ் வசதி, ரயில் வசதி, பொழுது போக்கு இடங்கள், அரசாங்கத்தின் கவர்ச்சியான திட்டங்கள் என்று இங்குள்ள மனிதனின் மூளையை எவ்வித சிந்தனையிலும் ஈடுபட விடாமல் எப்போதும் களிப்படைய வைத்து, மழுங்கடித்த சோற்றுப் பிண்டங்களாகத் தான் வைத்திருக்கிறார்கள். எல்லோர் வீட்டிலும் சுட்டி .டி.வி, சன் டி.வி, சன் மியுசிக், கலைஞர் டி.வி, கே டி.வி என்று தமிழ்நாடே ஒரே குடும்பமாகத் தான் வாழ்கிறது. ஒரே குடும்பமாகத் தான் தூங்குகிறது. தேவையான அனைத்தையும் அரசாங்கமும் இந்த சமூகமும் பல வழிகளில் தந்துவிட்டால் சோம்பேறிகளாகாமல் என்ன செய்வோம்?. எல்லாம் கிடைத்த பின் எதற்கு சண்டை, எதற்கு பித்தலாட்டம்.?.
புரட்சியா?.
எதை நோக்கி?
யாரை நோக்கி?.
உங்கள் கொள்கை?.
அது அடைய இருக்கும் இலக்கு?
என்று கேட்டுவிட்டு,இந்தப் புத்தகத்தை படியுங்கள், அதில் அவர் புரட்சியின் மையம் எதுவாக இருக்க வேண்டும், எதிலிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்று உலகப் புகழ் பெற்ற மொழிபெயர்ப்பு புத்தகங்களை கண்முன் காண்பித்து விட்டு செல்பவர்கள் அதிகம். இவர்களை எப்போதும் வியந்து கொண்டிருக்கும், தன்னை அறியா அடிமைகளும் அதிகம். புத்தகங்களில் புரட்சியை எப்படி கையாண்டிருக்கிறார்கள் என்பதை படித்து, புரிந்து, சூது, வாது பார்த்து எச்சரிக்கையாக ஒரு படி மேல் சென்று பாதுகாப்பான அரசியல் நகர்வுகளை நடத்துபவர்களும் உள்ளனர். இந்தப் பிரச்சனை என் கொள்கைக்கு புறம்பானது, ஆனால் நியாயமானதாகத் தான் தோன்றுகிறது என்று கூறிக் கொண்டு எதிலும் தலையிடாமல் தூரத்தில் இருந்து வேடிக்கை பார்ப்பவர்களும் இருக்கின்றனர். ஈழயுத்தத்தில் நம் மக்கள் கொன்று குவிக்கப்பட்ட போது கூட அரசாங்கம் சொன்ன இடங்களில் போராட்டங்கள், சொன்ன தேதியில் ஊர்வலம், சொன்ன நேரத்தில் அஞ்சலிகள். “OUT OF THE BOX” யாரும் எதுவும் செய்யவில்லை, அங்கே யாரும் பிழைக்கவுமில்லை. இவர்கள் எவரையும் நம்பாமல் புரட்சிகர எண்ணங்களுடன் எதுவும் செய்ய முடியாமல் அல்லது என்ன செய்வது என்று தெரியாமல், வழிநடத்துவதற்கும், கலந்து ஆலோசிப்பதற்கும் ஆட்கள் இல்லாமல் சிதறி கிடக்கும் தனிமனிதர்கள் ஏராளம்.
உங்களால் இவர்களை அடையாளம் காணமுடியுமா?.
நீதிக்கும் நேர்மைக்கும் குரல் கொடுக்க வேண்டியது நம் கடமை என்று பல சினிமாக்களில் பார்த்திருப்பீர்கள். கேட்டிருப்பீர்கள். ஆனால் நேர்மை எது? நீதி எது? என்ற வரையறுப்பு மாறிவிட்டதால் தமிழ்நாட்டில் அவை எங்கு இருக்கின்றன என்று தெரியாமல் போயிருக்கும். என்னை பொறுத்த வரை மிகப்பெரிய அநியாயத்தை தடுப்பதற்கு கூட நாம் தெருவில் இறங்கா விட்டால், தமிழனாய் வாழ்கிறேன் என்று சொல்வதில் எந்த அர்த்தமும் கிடையாது. அப்படி ஒரு அர்த்தமற்ற நாளாகிப் போனது நேற்றைக்கு முந்தைய நாள், ஜூன் 7, 2010.
உங்களுடைய வயதில் இருபத்தைந்து வயதை குறைத்து கொள்ளுங்கள். நான் பிறந்து பத்து மாதங்கள் ஆகியிருக்கும். 1984, டிசம்பர் மாதம், நள்ளிரவில், நடந்தது அந்த சம்பவம். உலகத்தின் மிகப் பெரிய கோர சம்பவம்.
UNION CARBIDE (UCIL) என்ற தொழிற்சாலை, 1969ல் 50.9% UNION CARBIDE CORPORATION (UCC) நிறுவனத்தாலும், 49.1% ஆயிரக்கணக்கான இந்திய முதலீடுகளினாலும் போபாலில் இருந்து 5 கி.மீ தொலைவில் ஆரம்பிக்கப்பட்டது. முதலில் PESTICIDE CARBARYL மட்டும் தயாரித்துக் கொண்டிருந்தனர்.
பின் 1979ல் METHYL ISO-CYNATE (CONTACT POISON) என்ற விஷவாயுவையும் தயாரிக்கத் தொடங்கினர். 1984, டிசம்பர் 2-3 தேதியில் SHIFT முறைப்படி வேலை மாற்றத்துக்கு அந்த WORKER வரும் முன், இரவு 9:30 மணி அளவில் முந்தைய WORKER ஐ SUPERVISOR கூப்பிட்டு 25 அடி நீளமுள்ள ஒரு பைப்பை தண்னீரால் பாய்ச்சி கழுவ சொல்லியிருக்கிறார். அந்த பைப் TANK E610 மற்றும் TANK E619 உடன் இணைக்கப்பட்டிருந்தது. TANK E610 முழுவதும் 40 நாட்களுக்கு முன்பு 45 டன் METHYL ISO-CYNATE-ஆல் நிரப்பிவைத்துள்ளனர். அதற்கு பிறகு PLANT SHUTDOWN காரணமாக TANK E610வை கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. மீண்டும் வந்தவர்களுக்கு TANK E610ல் என்ன இருந்தது என்று ஞாபகமில்லாததால் அந்த பைப்பில் தண்ணீரை செலுத்தியுள்ளனர். கூடவே SUPERVISERம் இருந்திருக்கிறார். தண்ணீரை செலுத்தி விட்டு வெப்ப அளவை குறித்துள்ளனர். எப்போதும் போல் 2 PSI (POUNDS PER SQUARE INCH) இருந்துள்ளது. இது சரியான வெப்ப நிலை என்று பதிவு செய்து விட்டு சென்றுள்ளனர்.
இரவு 10:45 மணியளவில் அடுத்த SHIFTற்கு வந்தவர், வெப்ப அளவு 10 PSI இருப்பதை கண்டு NIGHT SUPERVISERடம் தெரிவித்துள்ளார். அவர் சரியாக கண்டு கொள்ளாமல் இருந்திருக்கிறார். நள்ளிரவு 12:15 தேநீர் இடைவேளை கழித்து பார்த்துக் கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார்.
இரவு 11:30 -12:00 மணி அளவில் வேலை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கண் எரிச்சல் ஏற்படுவதை அறிந்து, அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது தான் தெரிந்துள்ளது, TANK E610ல் 1.5 டன் அளவு தண்ணீர் கலந்து வெள்ளை நிற ஆவி வெளியேறிக் கொண்டிருப்பதை. வெப்ப அளவோ 40 PSI ஆக இருந்துள்ளது. சரியாக 12:45 மணியளவில், யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு TANK E610ல் இருந்து 100 அடி உயரத்திற்கு வெள்ளை நிற விஷவாயுவு வெடித்தது. நிலைமையை புரிந்து கொண்டவர்கள் அபாயச் சங்கு மூலம் தொழிற்சாலையை சுற்றியுள்ள மக்களுக்கு அறிவித்துள்ளனர். பின்பு ஏதோ காரணத்தால், அறிவிப்பை நிறுத்தி விட்டனர்.
நள்ளிரவு 1 மணி அளவில் காவல் நிலையத்தில் இருந்து UCILக்கு தொலைபேசி வந்துள்ளது. 1:25 முதல் 2:10 வரை கிட்டத்தட்ட 3 தடவை மீண்டும் தொலைபேசியில் அழைத்துள்ளனர். இரண்டு முறை “EVERYTHING IS OK“ என்று பதிலளித்துள்ளனர். இந்த செய்தியை TIMES OF INDIA வெளியிட்டுள்ளது. METHYL ISO-CYNATEன் விபரீதத்தை அறிந்து சொன்னார்களா, இல்லையா என்று தெரியவில்லை.
நள்ளிரவு 2 மணி அளவில் ஊர் முழுக்க விஷவாயுவு பரவியுள்ளது. மக்கள் அங்கங்கே மூச்சு திணறி இறந்துள்ளனர். ITASI JUNCTIONல் இருந்து BUSHWAL JUNCTIONக்கு சென்று கொண்டிருந்த ரயிலை, ரயில்வே அதிகாரிகள் வழியிலேயே நிப்பாட்டியுள்ளனர். இதைப் போன்று நிறைய ரயில்களை வரவிடாமல் தடுத்து மக்களை அவர்களால் முடிந்த அளவிற்கு காப்பாற்றிய 23 அதிகாரிகளும் காலை 6 மணி அளவில் ரயில் நிலையத்தில் இறந்து கிடந்துள்ளனர். ரயில்வே நிலையம் முழுக்க பிணம். எங்கு பார்த்தாலும் பிணம்.
சாலை முழுக்க தப்பிப்பதற்கு ஓடி வந்தவர்கள் எங்கு செல்வது என்று தெரியாமல் பரிதாபமாய் இறந்துள்ளனர். சாலை முழுவதும் உயிரற்ற மக்கள். தூக்கத்திலேயே பலர் இறந்துள்ளனர். இதில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகள் நொடிப் பொழுதில் இறந்திருக்கின்றன.
குழந்தைகள் இறந்தது அம்மாவுக்கு தெரியாமலும், அம்மா இறந்தது குழந்தைக்கு தெரியாமலும், அவரவர் அந்த அந்த இடத்திலேயே மடிந்துள்ளனர்.
விஷவாயுவு தாக்கி கண்களை பறிகொடுத்தோர் எண்ணிக்கை கணக்கில் அடங்காதவை. கண்களின் மேலே உள்ள சில பகுதிகளை MIC விஷவாயுவு எரித்து விடுவதால் இப்படி ஒரு அவல நிலை. மூச்சுக்குழாய் அடைப்பு, உடல் உறுப்புகள் விஷவாயுவினால் அழுகிப் போதல் போன்று பல காரணங்களால் மக்கள் இறந்துள்ளனர்.
மத்திய பிரதேச முதலமைச்சர் அர்ஜூன் சிங், தகவல் அறிந்து உடனே விமானம் மூலம் சம்பவம் நடந்த இடத்தை விட்டு வெகு தூரம் பறந்து விட்டார். பாவம் அவர் தான் என்ன பண்ண முடியும். முதலமைச்சராக இருந்தார், தப்பித்து விட்டார்.
காலை 6 மணியளவில் கிட்டத்தட்ட 8000 சடலங்கள். அடுத்த நாள் , நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் மேலும் 8000 இருக்கக்கூடும். ஆனால், அரசு 3,750பேர் இறந்துள்ளனர் என்று தவறான கணக்கு கொடுத்தது. மருத்துவமனையில் இடம் இல்லாமல் வாசலிலேயே காத்திருந்து இறந்துள்ளனர். போபால் சம்பவம் உலகம் முழுக்க பரவியது.
அமெரிக்காவில் இருந்து உடனே இந்தியா வந்த வாரன் ஆண்டர்சன் (WARREN ANDERSON, CHAIRMAN, UCIL) கைது செய்யப்பட்டார். பின் 25,000 ரூபாய் ஜாமீன் தொகை கட்டி, டிசம்பர் 7ஆம் தேதி பெயிலில் வெளியேறியுள்ளார். இந்த சம்பவத்திற்கான காரணம் அவரிடம் கேட்கப்பட்டது. 3 வாரத்தில் கூறுவதாக பதிலளித்துள்ளனர் கம்பெனி நிர்வாகிகள். ஆனால் பத்து வாரங்கள் ஆகியும் எந்த பதிலும் அளிக்கவில்லை. மீண்டும் 3 வாரத்தில் கூறுவதாக கூறியுள்ளனர். சம்பவத்திற்கான காரணத்தை மீண்டும் மீண்டும் கேட்ட போது “OUR REPORTS ARE RESTRICTED” என்று பதிலளித்துள்ளார். மேலும் சில நாட்களுக்கு பிறகு ஒரு WORKER வேண்டுமென்றே இப்படி செய்துவிட்டார் என்று கூறியுள்ளனர். யார் மீதாவது பழி சுமத்த வேண்டுமல்லவா?. அப்போது தானே தப்பிக்க முடியும். 15,000 பேர் இறப்புக்கு காரணமான அந்த தொழிற்சாலை அன்றுடன் மூடப்பட்டது.
டிசம்பர் 16, 1984ல் “OPERATION FAITH” என்ற பெயரில் TANK E610 மற்றும் TANK E619ல் மிஞ்சியிருந்த விஷவாயுவை செயலிழக்க வைத்தனர். ஒரு வருடம் கழித்து, 1985ல், விஷவாயுவு தாக்கிய அதே நாளில் பெரும் மக்கள் கூட்டம் முதலமைச்சர் அர்ஜூன் சிங் வீட்டை நோக்கி புறப்பட்டுள்ளனர். பல பேர் தங்களால் நடக்க கூட முடியாமல் வீட்டிலேயே இருந்துவிட்டனர்.
பல விதமான நோய்களுக்கு உட்படுத்தப்பட்ட அந்த மக்களுக்கு 1989ல் கிடைத்தது எல்லாம் (ஒவ்வொருவருக்கும்) 500 டாலர்.
5 வருடத்திற்கான மருத்துவ செலவு என்று கூறி வழங்கியுள்ளது. மொத்தமாக 470 மில்லியன் டாலரை UCC (UNION CARBIDE CORPORATION) கொடுத்தது. 25 வருடம் ஆகியும் அவர்களுக்கு உண்டான குறைபாடுகள் தீர்ந்தபாடில்லை. இறந்தவர்களை எல்லாம் எந்த கணக்கில் சேர்த்துக் கொள்வது என்றால் எதுவும் தெரியவில்லை, குடும்பம் குடும்பமாக இறந்தவர்களுக்கு யாரை பார்த்து காசு கொடுக்க முடியும். இதை தொடர்ந்து பல அமைப்புகளால் தொடரப்பட்ட வழக்கை ஒரேடியாக சுப்ரீம் கோர்ட் நிராகரித்தது.
“ACTIVIST” என்ற பெயரில் சுற்றித்திரிந்து போராடிய அனைவரது முகத்திலும் கரியை பூசியது, சுப்ரீம் கோர்ட். அது மட்டுமல்லாமல் 1998ல் போபால் மெமோரியல் மருத்துவமனையும், 500 BED வசதியும், ஒரு ஆய்வுக்கூடமும் UCC, சுப்ரீம் கோர்ட்டின் கட்டளைக்கு இணங்க செய்து கொடுத்தது. நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 14 வருடம் கழித்து ஒரு மருத்துவமனை. 15000 மக்கள் இறந்து, மண்ணோடு மண்ணாக மக்கிப்போன பிறகு ஒரு மருத்துவமனை, ஒரு ஆய்வுக்கூடம். எதற்காக?. இந்தியாவில் மட்டும் தான் இப்படியெல்லாம் நடக்கும். கேட்பதற்கும் ஆள் கிடையாது. கேள்வி கேட்பவனையெல்லாம் பணத்தால் முகத்தில் அடி. மீண்டும் மீண்டும் கன்னத்தை காண்பித்து கொண்டே இருப்பான் என்று நினைத்தார்களோ என்னவோ?.ஆனால் அப்படியும் கன்னத்தை காண்பித்துக் கொண்டிருக்கும் நபர்கள் ஏராளம். இன்னும் கூடிக்கொண்டே தான் போகிறார்கள்.
1999ல் GREEN PEACE நிறுவனம், அமெரிக்காவில் UCC ஐ எதிர்த்து ஒரு வழக்கை தொடர்ந்தது. போபாலில் மூடப்பட்ட அந்த தொழிற்சாலையில் 400 டன் CHEMICALS இருப்பதாகவும், 15 வருடங்களாக அவை, மண்ணுடன் கலந்து, நிலத்தடி நீருடன் கலந்து மீண்டும் பெரிய ஆபத்தை விளைவித்து வருவதாகவும் கூறினர்.
அதை அப்புறப்படுத்தி நஷ்ட ஈடு வழங்குமாறு கேட்டுக் கொண்டது. இன்று வரை யாரும் அதை அப்புறப் படுத்தவில்லை. நிலத்தையும் நிலத்தடி நீரையும் கெடுத்துக் கொண்டிருக்கும் இதே அரசாங்கம் தான் நதி நீர் பிரச்சனை பற்றியெல்லாம் பேசுகிறது.
2001ல் DOW CHEMICALS நிறுவனம், UNION CARBIDE நிறுவனத்தை 9.3 பில்லியன் டாலருக்கு வாங்கியது. ஆனால் போபால் தொழிற்சாலையில் தேங்கிக் கிடக்கும் “CHEMICAL WASTESஐ அப்புறப்படுத்துவது பற்றி மறுத்திருக்கிறது. இதே DOW CHEMICALS நிறுவனத்திற்கு “US SECURITIES AND EXCHANGE COMMISSION”, இந்திய அரசாங்க ஊழியர்களுக்கு 200,000 டாலர் லஞ்சம் வழங்கியதற்காக 3,50,000 டாலர் ஃபைன் போட்டது. எல்லோருக்கும் பணம் தேவை தானே, அதில் 2 லட்சம் டாலர் இந்தியனுக்கா, அப்ப எனக்கு? அதை விட அதிகமா என்று 3.5 லட்சம் டாலர் போட்டுள்ளது. கொள்ளை அடிப்பவனிடம் இருந்து தானே கொள்ளை அடிக்க முடியும். பாவப்பட்ட மக்களை தானே கொல்ல முடியும். இதில் சம்மந்தப் பட்ட ஆட்களை அவ்வப்போது ஒரு சிலர் நபர்கள் விட்டு வைத்ததில்லை.
குவாலியரை சேர்ந்த DEFENCE RESEARCH DEVELOPMENT டைரக்டர் விஜயராகவனும், நாக்பூரை சேர்ந்த NATIONAL ENVIRONMENTAL ENGINEERING RESEARCH தலைவரும் போபாலில் உள்ள CHEMICAL WASTESஐ ஆராய்ந்து ”ORALLY INGESTIBLE “ என்று தெரிவித்துள்ளனர். அதாவது, நிலத்தில் இருந்து கிடைக்கப்பெறும் அனைத்து பொருட்களிலும், உதாரணத்திற்கு தண்ணீர், காய்கறிகள் போன்றவையுடன் அந்த கெமிக்கல்ஸ் கலந்து விடுவதாகவும், மேலும் வருங்கால சந்ததியருக்கு மற்றுமொரு “BHOPAL TRAGEDY” ஆக இருக்கக் கூடும் என்று தெரிவித்துள்ளனர். இன்றுவரை அப்புறப்படுத்தாமல் இருப்பது அரசாங்கத்தின் தவறு என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
உள்துறை அமைச்சர் பி. சிதம்பரம், சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஸ், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் கமல் நாத் மற்றும் இதர மத்திய அமைச்சர்கள் பலரும் DOW CHEMICALS நிறுவனத்தின் காலடியில் விழுந்து கிடக்கிறார்கள் என்பதை “LACKEYS OF DOW CHEMICALS” என்று கூறியுள்ளனர். LACKEYS = FOOTMAN. காலடியில் இருப்பவர்கள் என்று அர்த்தம். நம்ம வீட்டில் காலடியில் விழுந்து கிடப்பவை எவை? என்று உங்களுக்கு சொல்லிப் புரியவைக்க வேண்டிய அவசியமில்லை என்று நம்புகிறேன்.
இதெல்லாம் போக, DOW CHEMICALS நிறுவனத்தை பற்றி உங்களுக்கு மேலும் ஒரு தகவலை கூறுகிறேன். DOW CHEMICALS நிறுவனம் “NAPALM” என்ற ரசாயனத்தை தயாரித்து வியட்நாம் போர் நடைபெறுகையில் அமெரிக்காவிற்கு கொடுத்துள்ளது.
“NAPALM” அணுஆயுதமாக பயன் படுத்தப் பட்டு பல ஆயிரக்கணக்கான வியட்நாம் வீரர்களை கொத்து கொத்தாக கொன்று குவித்துள்ளது. உலகத்தையே நடுங்கச் செய்த இந்த “NAPALM”ஐ எதிர்த்து பல வடிவங்களில் போராட்டங்கள் தோன்றியும் DOW CHEMICALS நிறுவனம் இதை தயாரிப்பதை நிறுத்தவில்லை.
இதே போல் “AGENT ORANGE” என்ற கொடூரமான ரசாயனத்தையும் தயாரித்துள்ளது. “AGENT ORANGE”ன் விளைவு கற்பனையிலும் எட்டாதது. அமெரிக்க ராணுவம், ஹெலிகாப்டரில் இந்த “AGENT ORANGE”ஐ வியட்நாம் காடுகளில் பெருமளவு தூவியுள்ளனர்.
காடுகளை அழித்து அதன்மூலம் ஒளிந்திருக்கும் எதிரிகளையும், கரையில் நிறுத்தப்பட்டிருக்கும் கப்பலில் இருந்து குண்டுகள் சரியான இடத்தை அடைவதற்கும் இது செய்யப்பட்டதாக கூறுகின்றனர்.
ஆனால், இந்த ரசாயனம் காடுகளை அழித்தது மட்டுமல்லாமல், மண்ணோடு கலந்து FOOD CHAINலும் கலந்து விட்டது. உணவினில் கலந்ததின் விளைவு ஊனமுற்ற குழந்தைகள்.
2005ல், இதனால் பாதிக்கப்பட்ட வியட்நாம் மக்கள் DOW CHEMICALS நிறுவனத்தின் மீதும், MANSANTO என்ற அமெரிக்க நிறுவனத்தின் மீதும் வழக்கை தொடர்ந்தது. இந்த MANSANTO நிறுவனமும் “AGENT ORANGE”ஐ தயாரித்துள்ளது. இதே நிறுவனம் நம் தமிழ்நாட்டிலும் விதை உற்பத்தி பண்ணுவதில் ஈடுபட்டுள்ளது. ஒரு முறை மட்டுமே விளைச்சலை கொடுக்கும் விதைகளை உருவாக்கி கேடு விளைவித்துக் கொண்டிருக்கிறது. இதிலும் நம் ஊர்க்காரர்கள் வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். பல கோடிகளை கொடுத்து எந்த வித பிரச்சனையிலும் சிக்காமல், பலரது வாயை அடைத்திருக்கும் DOW CHEMICALS நிறுவனம், போபால் கெமிக்கல்ஸ்களை அப்புறப்படுத்தவில்லை. ஏன்? எதற்கு? என்று புரியவில்லை.
இன்றும் நோயால் பாதிக்கப்பட்டு மடிந்து கொண்டு தான் இருக்கிறார்கள். 2008ல் பாதிக்கப் பட்டவர்கள், மத்திய பிரதேசத்திலிருந்து டெல்லி வரை 900 கி.மீ தூரம் நடந்து சென்று, தங்களுக்கு மறுவாழ்வு அளிக்குமாறு கேட்டிருக்கின்றனர். அதற்கும் பதிலில்லை. இந்த மக்களுக்கு அரசாங்கம் செய்தது எல்லாம் ஒன்றே ஒன்று தான். ஜூன்,7, 2010 அன்று தீர்ப்பு வழங்கியது.
போபால் சம்பவத்துக்கு காரணமான எட்டு குற்றவாளிகளுக்கும் 2 வருடம் ஜெயில் தண்டனை. நபருக்கு தலா 1 லட்சம் ரூபாய் நஷ்டஈடும், UCC நிறுவனத்திற்கு 5 லட்சமும் அபராதமாம். இதில் 25,000 ரூபாய் கட்டி பெயிலில் செல்லலாம் என்றும் கூறியுள்ளனர். சென்றுவிட்டனர்.
இந்த தண்டனையை கோடி கோடியாக லஞ்சம் வாங்கிய அதிகாரிகளே இவர்களுக்கு பதிலாக கட்டிவிடலாம். 25,000 மக்கள் இறந்திருக்கின்றனர். 1,20,000 க்கும் மேற்பட்டோர் அன்றாட வாழ்க்கையை வாழ முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு கொடுக்கப்படும் நீதி இரண்டு வருடம் ஜெயில் தண்டனை. இதை வழங்கிய நீதிபதி தான் மக்கள் மத்தியில் இன்றைய முதல் குற்றவாளி.
காங்கிரஸ் ஆட்சியில் நடந்தது இந்த போபால் சம்பவம். காங்கிரஸ் ஆட்சியில் தான் தீர்ப்பும் வருகிறது. அப்போது ராஜீவ் காந்தி, இப்போது சோனியா காந்தி. அப்போது இந்திராகாந்தி அம்மையார் இறந்து அதன் மறுநாள் 3000 சீக்கியர்கள் கொல்லப்பட்ட 32 நாள் கழித்து இந்த சம்பவம் நடந்தது. ஒரு வேலை தொழிற்சாலையை சுற்றி சீக்கியர்கள் இருந்தனரோ தெரியவில்லை. ஆனால் அப்போதெல்லாம், இது மாதிரியான ஆபத்தான கெமிக்கல்ஸை அமெரிக்கா தன் சொந்த நாட்டில் உற்பத்தி செய்தது இல்லை. வேறு ஏதாவது மூன்றாம் உலக நாடுகளில் தான் சோதனை செய்யும். அப்போது தான் அங்கு வாழும் மக்களின் மீதும் சோதனை செய்யலாம். இதற்கு அந்த அந்த நாடுகளின் தலைவர்களும் உடந்தையாக இருந்திருக்கலாம். இருந்து தானே ஆக வேண்டும். போபால் சம்பவம் நடந்து முடிந்த பிறகு, இவ்வுளவு ஆபத்தான தொழிற்சாலையில் இந்த கெமிக்கல்ஸை ( METHYL ISO CYNATE) தயாரிக்க வேறு வசதி கொண்ட இயந்திரம் இருக்கும் போது ஏன் அதை பயன் படுத்தவில்லை? என்று கேட்ட போது இந்தியாவில் அதிக அளவில், குறைந்த சம்பளத்தில் வேலைக்கு ஆட்கள் கிடைப்பார்கள் என்ற காரணத்தால் அதை உபயோகப் படுத்தவில்லை என்று கூறியுள்ளனர். ஆக நம் மக்களையும் மூன்றாம் உலக நாட்டு மக்களாக பாவித்து இச்செயல் செய்யப்பட்டதோ என்று அச்சப்பட வேண்டியுள்ளது.
இப்போது தீர்ப்பு என்று ஒன்று வந்திருக்கிறது. நாளை இதுவே மேல்முறையீட்டிற்கு செல்லும். மேல்முறையீட்டிற்கு செல்வதற்குரிய காரணம், மக்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்குகிறார்கள். கொந்தளித்து போய் இருக்கிறார்கள். இவர்களை சமாதான படுத்த என்ன செய்யலாம்?. தீர்ப்பை மறு விசாரனை செய்யலாம். செய்வது மாதிரி வழக்கை ஒத்தி வைக்கலாம். இன்னும் வழக்கை ஜவ்வாக இழுக்கலாம். மக்களின் போராட்ட குணமும் காணாமல் போய்விடும், வீரியமும் குறைந்து விடும். அதற்குள் மீதமுள்ள 7 குற்றவாளிகளும் இறந்துவிடுவர் அல்லது விஷவாயுவினால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் இறந்து விடுவர். அடுத்து வழக்கும் இறந்துவிடும். இவர்கள் விட்டுச்சென்ற கெமிக்கல்ஸும், இதற்காக பெரும் புழக்கத்தில் கிடந்த பல கோடிகளும் தான் மிஞ்சும். அதன் பின் இந்த பணத்தை அபகரிக்க சில அரசுசாரா நிறுவனங்கள் (NGO) தோன்றும். பல ஒட்டுண்ணிகள் சமுதாய தொண்டு என்ற பெயரில் நாடு முழுவதும் வலம் வருவார்கள். இப்படியே முடிவில்லாமல் சென்று கொண்டிருக்கும்.
இத்தனை வருட காலத்தில், 25,000 பேர் இறந்த குடும்பத்தில் இருந்தோ அல்லது 1,20,000 பேர் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திலிருந்தோ ஒருவர், ஒரே ஒருவர் கூட தீவிரவாதத்தை கையில் எடுக்கவில்லை, ஒருவருக்கு கூட கோபம் உச்சத்தை தொடவில்லை என்றால், அம்மக்கள் எப்படிப்பட்ட கீழ்தங்கிய நிலையில் இருந்திருப்பார்கள் அல்ல எப்படி அடிமை படுத்தப்பட்டிருப்பார்கள் என்று நினைத்துப் பாருங்கள்.
ராஸ்ட்ரிய ஜனத்தா தல் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் சில தினங்களுக்கு முன் கொடுத்த பேட்டியில், “என் கட்சியில் நிறைய தொண்டர்கள் துப்பாக்கியுடன் அலைகிறார்கள், இது எனக்கு வேதனை அளிப்பதாக உள்ளது என்று கூறியுள்ளார். ஐயா ஒரு காலத்தில் எப்படி அலைந்தார் என்பது வேறு. ஆனால் துப்பாக்கியுடன் திரியும் ஒரு தொண்டன் கூடவா போபால் சம்பவத்தில் பாதிக்கப் படவில்லை. முதலாளித்துவத்தை எதிர்த்து போராடிய அமைப்புகள் இன்றும் தீவிரமாகத் தான் செயல் பட்டுக் கொண்டிருக்கிறது. அவர்களுக்கு கூட இவர்களின் முதலாளித்துவ அரசியல் தெரியவில்லையா?.
2006ல் போபாலில் ராஜ்பவனை நோக்கி பாதிக்கப்பட்ட மக்கள் பெரும்பாலோனர் காந்திய வழியில் போராட்டத்தை நடத்தியுள்ளனர்.
"It is the Government's duty to provide safe drinking water".
மகாத்மா காந்தி படங்களை எடுத்துக் கொண்டு சுத்தமான குடிநீர் வேண்டும், மருத்துவ வசதிகள் வேண்டும் என்று கோஷமிட்டுக் கொண்டே சென்றுள்ளனர். போலீஸார் எப்போதும் போல் பாதி வழியிலேயே போராட்டத்தை நிறுத்திவிட்டனர். எப்போதும் போல் மக்களும் கூட்டம் கூட்டமாக பேசிவிட்டு சென்றுள்ளனர். ஆக, காந்திய வழி போராட்டமும் காலத்தால் பின் தங்கிய போராட்டமாக மாறிவிட்டது. மிச்சமிருப்பது ஒன்று தான்.
-
- சக்தி செல்லையா
- சக்தி செல்லையா