தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

வாய் கிழிய தமிழர் பெருமை , வரலாற்றை பேசலாம் . இன்னும் மூன்று லக்ஷம் தமிழர்களின் வாழ்வு நிர்கதியாகத்தான் உள்ளது.

செம்மொழி மாநாடே பழைய தமிழர் பெருமைகளை பேசி நிகழ காலத்தில் தமிழர்கள் படும் அவதிகளை மறைக்கத்தான் நடத்தபடுகிறது.

தமிழ் வீரம் , தமிழர் கொடை என்று வாய் கிழிய  தமிழர்களின் பெருமை பேசுவது , அடிமை தமிழராய் இன்னும் திறந்த வெளி சிறையில் இருக்கும் மூன்று லக்ஷம் பேரை அவர்களது பாடுகளை கேலி செய்வது போல் இருக்கிறது.

தமிழன் செத்து தமிழ் வாழ்ந்து யாருக்கு பயன் ?

வெட்டி தமிழ்  பெருமை பேச்சு இந்த மாநாடு எனபது  இன்றைய தலைமுறை தமிழ் இளைஞர்களுக்கு மிக நன்றாய் தெரியும்.

ராஜாதி ராஜன் செப்பெடுக்கு விளக்கம் கொடுப்பது இருக்கட்டும். இலங்கையில்  தமிழர்களின் இந்த சிறை வாழ்விற்கு , அல்லது அவர்களின் விடிவிற்கு என்ன விளக்கம் கொடுக்கபோகிறீர்கள்.

செய்தி இங்கே :

ராஜாதிராஜன் செப்பேட்டில் கூறப்பட்டுள்ளது என்ன?கருணாநிதி விளக்கம்.


சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட முதலாம் ராஜாதிராஜன் கால செப்பேட்டில் கூறப்பட்டுள்ளது என்ன என்பது குறித்து முதல்வர் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கைநாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறையிலிருந்து ஆனதாண்டவபுரம் சாலையில் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில், திருஇந்தளூர் எனும் ஊர் உள்ளது. அந்த ஊரின் உட்கிராமமாக, கழுக்காணி முட்டம் என்ற பகுதி உள்ளது. கழுக்காணி முட்டத்தில், பிற்காலச் சோழர் காலத்தில் கட்டப்பட்ட கைலாசநாதர் கோவில் உள்ளது.கோவிலுக்கு முன், மண்டபம் கட்டும் பணிக்காக குழி தோண்டியபோது, பத்து அடி ஆழத்தில் 12 செப்புத் திருமேனிகள், பூஜைப் பொருட்கள், வாத்தியக் கருவிகள், சோழர் காலத்தைச் சேர்ந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செப்பேடுகள் கிடைத்துள்ளன.பொதுவாக, செப்பேட்டு முத்திரைகளில் உள்ள சின்னங்கள் புடைப்பாக அமைக்கப்பட்டிருக்கும்.

இந்தச் செப்பேட்டில் சின்னங்கள் பள்ளமாக பொறிக்கப்பட்டு உள்ளன. இந்தச் செப்பேடு, முதலாம் ராஜாதிராஜன், தனது 35வது ஆட்சி ஆண்டில் (கி.பி. 1053) அளித்த அறக்கொடையைக் குறித்து வெளியிடப்பட்டது.இவர், கங்கைகொண்ட சோழன் என வரலாற்றில் மிகப் புகழ் பெற்ற முதலாம் ராஜேந்திரச் சோழனின் மூத்த மகன். ஆம், ராஜராஜ சோழனின் பேரனே முதலாம் ராஜாதிராஜன். இவரோடு உடன் பிறந்த மற்ற சகோதரர்கள், இரண்டாம் ராஜேந்திரன், வீர ராஜேந்திரன் மற்றும் அதிராஜேந்திரன் ஆகிய மூவர்.முதலாம் ராஜாதிராஜனின் தந்தையான முதல் ராஜேந்திரச் சோழன், தன்னுடைய இறுதிக்காலத்தில், தன்னுடைய மக்கள் நால்வரையும் அழைத்து, எப்போதும் ஒற்றுமையோடு இருக்க வேண்டும் எனவும், நாட்டு மக்களுக்கு நன்மை செய்வதையே குறிக்கோளாகக் கொள்ள வேண்டுமெனவும் கூறி, அவர்களிடம் அதற்கான உறுதியைப் பெற்றுக்கொண்டான் என, இந்தச் செப்பேடுகளில் காணப்படுகிறது.



முதலாம் ராஜாதிராஜனின் இறுதி ஆட்சி 36 ஆண்டுகள். மேலைச் சாளுக்கிய மன்னன் ஆகவமல்லன் சோமேஸ்வரனை எதிர்த்து, கொப்பத்தில் செய்த போரில், போர்க்களத்திலேயே யானையின் மீது அமர்ந்தவாறே உயிரை ஈந்தவன், இம்மன்னன்.ஏற்கனவே, அண்ணன் ராஜாதிராஜனால் இளவரசு பட்டம் சூட்டப் பெற்றிருந்த இரண்டாம் ராஜேந்திரன், அந்தப் போர்க்களத்திலேயே சோழ அரசனாக முடிசூட்டிக் கொண்டு, தலைமையின்றி சிதறிய சோழப்படையை ஒழுங்குபடுத்தி, தலைமையேற்று, ஆகவமல்லனின் தம்பி ஜெயசிம்மனைக் கொன்று, வெற்றிவாகை சூடி, கொல்லாபுரத்தில் தன் வெற்றித் தூணையும் நிறுவியவன்.


கொப்பத்துப் போருக்குச் செல்லும் முந்தைய ஆண்டில் (கி.பி., 1053), அண்ணனால் அளிக்கப்பட்ட இவ்வாணை, அவனது தனயன் இரண்டாம் ராஜேந்திர சோழனின் ஒன்பதாம் ஆட்சி ஆண்டில் (கி.பி., 1061) வரியிலிட்டுச் செப்பேடாக்கித் தரப்பட்டு உள்ளது. இரண்டாம் ராஜேந்திரச் சோழன், நாடு திரும்பிய பின், தன் அண்ணன் முதல் ராஜாதிராஜன் போருக்குச் செல்வதற்கு முன் வழங்கிய தானத்தை உறுதி செய்து வழங்கியதே, இப்போது கிடைக்கப் பெற்ற செப்பேடு.


தமிழகத்தில், ஏன், இந்தியாவிலேயே கிடைத்துள்ள செப்பேடுகளில் பெரிய செப்பேட்டுத் தொகுதியாகக் கருதப்பட்ட முதலாம் ராஜேந்திரனின் 57 கரந்தைச் செப்பேட்டுத் தொகுதிகளை விட அளவிலும், எண்ணிக்கையிலும் பெரிதாக விளங்குவது இச்செப்பேடு.தமிழ்ச் சிங்கக் கூட்டமாம் நம்மை, தடம் மாற்றிப் போடுவதற்கு இந்தத் தரணியில் எவரும் இல்லை. பழம்பெரும் தஞ்சை மண்ணில் சோழ மன்னர் ராஜாதிராஜன் வழிவந்தோர் அன்றைக்கே திட்டமிட்டு, நமக்கென புதைத்து வைத்த 86 செப்பேடுகளும் அதைத் தான் உறுதிப்படுத்துகின்றன.இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.