விழுப்புரத்தில் நேற்று முன் தினம் தண்டவாளம் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டது. ஈழ விடுதலை ஆதரவாளர்கள் ராஜபக்சேவின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இதைச்செய்திருக்கிறார்கள் என்று பேசப்பட்டது.
இது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவ்வறிக்கையில், ''விழுப்புரம் அருகே மர்ம நபர்கள் சிலர் ரயில் தண்டவாளத்தை வெடி வைத்துத் தகர்த்ததாகவும் விழிப்புணர்வுடன் துரித கதியில் ரயில்வே ஊழியர்கள் செயல்பட்டதால் பெரும் அசம்பாவிதம் நடைபெறுவது தடுத்து நிறுத்தப்பட்டதாகவும்,
சம்பவ இடத்தில் ராஜபக்சவின் வருகைக்கு எதிரான துண்டுப் பிரசுரம் ஒன்று கிடந்ததாகவும் அப்பிரசுரத்தில் பிரபாகரனின் தம்பிகள் என்று எழுதப்பட்டிருந்ததாகவும்,
ஆகவே பிரபாகரனின் ஆதரவாளர்கள் அல்லது ஈழ விடுதலை ஆதரவாளர்கள் இந்த தண்டவாளத் தகர்ப்பில் ஈடுபட்டிருக்கலாம் என்ற நோக்கில் விசாரணை நடந்து வருவதாகவும் போலீஸார் கூறியதாக நாளிதழ்களில் செய்திகள் வருகின்றன.
ஆனால் இந்த தண்டவாளத் தகர்ப்பு தொடர்பாக முன்னுக்குப் பின் முரணாக பல்வேறு தகவல்கள் வெளிவருகின்றன.இதனை தெளிவுபடுத்த வேண்டியது அரசின் கடமை.
முதலாவதாக ரயில் தடம் புரள்வதையும், மோதலையும், நூற்றுக் கணக்கான மக்கள் அழிவையும் எதிர்பார்த்து குண்டு வெடிப்பு மேற்கொள்ளப்பட்ட நிலையில் ஒரு சிறிய காகிதத்தில் எழுதப்பட்ட சில வரிகள் தாக்குப் பிடிக்க முடியுமா என்ற கேள்வியெல்லாம் தொக்கு நிற்கிறது.
அப்படித்தான் உரிமை கோர வேண்டுமானால், சிறிய காற்றுக்குக் கூடத் தாக்குப்பிடிக்க முடியாத கையால் எழுதப்பட்ட காகிதத் துண்டு தான் அவர்களுக்கு கிடைத்ததா? மின்னியல் யுகத்தில் இவையெல்லாம் சோடிக்கப்பட்ட சிறுபிள்ளைத் தனமானவையாகவே தோன்றுகின்றன.
இப்படி இருக்கையில் சம்பவ இடத்தில் கிடந்த துண்டுப் பிரசுரத்தின் அடிப்படையில் விசாரணையைக் கொண்டு செல்வதாக போலீஸார் கூறும் போது விசாரணை நேர்மையாக நடைபெறுமா? என்கிற அச்சம் எழுகிறது.
அதே போல மாநிலக் காவல்துறைத் தலைவர் லத்திகா சரண் முழுமையான விசாரணை நடைபெறும் முன்பே சம்பவம் நடைபெற்ற ஒரு சில மணி நேரத்தில் இந்தச் சம்பவத்துக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் தொடர்பு இல்லை என்று அவசர அவசரமாக அறிவிக்க வேண்டிய அவசியம் என்ன என்பது தெரியவில்லை.
புலனாய்வுத்துறை ஐ.ஜி.யான ஜாபர் சேட், இது விடுதலைப்புலி ஆதரவாளர்களால் நடத்தப்பட்ட செயல்தான் என்று விசாரணைக்கு முன்பே அறிக்கை கொடுத்தது ஏன் என்பதும் புரியவில்லை.
சம்பவ நடந்த இடத்தில் கிடந்ததாக இவர்களால் சொல்லப்படும் துண்டுக் காகிதத்தை வைத்து இவர்களாகவே முடிவைச் சொல்வது எவ்வாறு சரியாகும்?
விழுப்புரம் அருகே ரயில் தண்டவாளம் தகர்ப்பு விஷயத்தில் போலீஸார், முழுமையான விசாரணை செய்து, குற்றவாளிகளைப் பற்றிய தகவல்கள் பெறுவதற்கு முன்பே சம்பவம் நடந்த ஒருசில மணி நேரங்களில் அவசரப்பட்டு கருத்துத் தெரிவிக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது என்பது புரியவில்லை.
அதே போல முந்தைய சேலம் வண்டியின் டிரைவர் பயங்கர வெடிச்சத்தம் கேட்டவுடன் நிலைய அதிகாரி ருத்ரபாண்டிக்கு தெரியப்படுத்தியதாகவும் அவர் பேரணிக்கு முந்தைய ரயில் நிலையமான முண்டியம்பாக்கம் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து உஷார்படுத்தினார் என்றும் அதன் பின்பு திருச்சி வண்டியின் டிரைவர் 10 கிலோ மீட்டர் வேகத்தில் ரயிலை இயக்கியதாகவும் கூறப்பட்டுள்ளது.
இது நம்ப முடியவில்லை. ஏனென்றால் வெடிச்சத்தம் கேட்டவுடன் ரயிலை நிறுத்துவார்களே தவிர இயக்க மாட்டார்கள். இது போன்று பல சந்தேகங்கள் எழுகின்றன.
தண்டவாளத் தகர்ப்பில் உண்மை நிலையை அரசு விளக்க வேண்டும். அதை விட்டு விட்டு பேரினவாத இலங்கை அரசிற்கு எதிராக போராடுகிறவர்களை அச்சுறுத்தும் நோக்கோடு முன்கூட்டியே திட்டமிட்டு விசாரணையை முன்னெடுப்பது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் விஷயமாக உள்ளது''என்று கூறியுள்ளார்.