ஜூன் 8-ம் தேதி செவ்வாய்கிழமை இந்தியா வரும் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் இயக்கம் சார்பில் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும், என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் இயக்குநருமான சீமான் கூறினார்.
இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஈழத்தில் தமிழினத்தை கொன்றொழித்த இலங்கை அதிபர் ராஜபக்சே நாளை இந்தியா வருகிறார். அவருக்கு இந்திய அரசு ரத்தின கம்பள வரவேற்பு அளிக்க இருப்பது அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.
சர்வதேச மனித உரிமை அமைப்புகள் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் பற்றிய ஆதாரங்களை வெளியிட்டுள்ளன. உலகின் மிகப்பெரிய கொடுங்கோலர் ஒருவர் உயரிய மரியாதையுடன் இந்தியா வருவதை நினைக்கும்போது நாதியற்ற இனமா தமிழினம் என்னும் குரல் உலகம் முழுதும் எழுகின்றது.
நாதியற்ற இனமல்ல தமிழினம் என்று உலகுக்கு எடுத்து சொல்லவும், ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டிக்க வலியுறுத்தியும், தரணியெங்கும் வாழும் தமிழர்கள் தெருமுனைக் கூட்டங்கள் நடத்தி ராஜபக்சேவின் இனப்படுகொலையை உலகுக்கு அம்பலப்படுத்தி ராஜபக்சேவை தண்டித்தே தீர சூளுரை ஏற்க வேண்டும்.
ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்த ராஜபக்சே மீது ஐ.நா. மன்றம் எடுத்து வரும் போர்க்குற்ற விசாரணை முயற்சிகளுக்கு இடையூறு செய்து வருவதை கண்டிக்கும் வகையில், இந்தியாவுக்கு வருகைதரும் ராஜபக்சேவுக்கு எதிராக தமிழகம் முழுவதும் நாம் தமிழர் இயக்கத்தினர் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள்..." என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.