புதுடில்லி : கடந்த 26 ஆண்டுகளாக நடந்தபோபால் விஷவாயு கசிவு வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு குறைவான தண்டனை வழங்கப்பட்டதன் மூலம் அநீதி இழைக்கப் பட்டுள்ளதாக அரசியல் கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பினரும் புகார் தெரிவித்துள்ளனர். விஷவாயுவால் உயிரைவிட்ட 15 ஆயிரம் பேரின் மரணத்திற்கு விடை கிடைக்கவில்லை.
போபால் நகரில் செயல் பட்ட யூனியன் கார்பைடு இந்தியா நிறுவனத்தில், 1984ம் ஆண்டு நிகழ்ந்த, "மிக்' என்னும் "மிதைல் ஐசோ சயனைடு' என்ற விஷவாயு கசிவால், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மூச்சுத்திணறல், கண் பார்வை பாதிப்பு, முடங்கிப் போய் உயிர்இழப்பு என்று சோகங்கள் தொடர்ந்தன. அமெரிக்க கம்பெனி நிர்வாகம் அன்று ஏதும் கண்டு கொள்ளவில்லை. சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க இரு ஆண்டுகள் ஆனது. தொழிற்சாலை விபத்து என்று எளிமையாக வர்ணிக்கப்பட்ட இந்த பயங்கரம், கறுப்பு நாளாக இந்தியாவுக்கு அமைந்தது. இதுதொடர்பான வழக்கில் 26 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று தீர்ப்பு வழங்கப் பட்டது. குற்றம் சாட்டப் பட்டவர்களுக்கு இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை மட்டுமே விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.
விரக்தி: இந்த தீர்ப்பால், விஷவாயு கசிவால் உயிரை விட்டவர்களின் குடும்பத் தினர், விஷவாயுவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களுக்கு நீதி கிடைக்க போராடியவர்கள் எல்லாம் விரக்தி அடைந்துள்ளனர். விஷவாயு கசிவால் பாதிக்கப் பட்டவர்களுக்கும், இறந்தவர்களின் குடும்பத்திற்கும் அநீதிஇழைக்கப் பட்டுள்ளது என்று கூறியுள்ளனர்.
பிரபலவக்கீல் கே.டி.எஸ்.துல்சி கூறுகையில், ""ஒரு வழக்கில் பணக்காரர்கள் மற்றும் அதிகார வர்க்கத்தினருக்கு தொடர்பு இருந்தால், அதை மூடி மறைக்கவும், அவர்களை காப்பாற்றவும் முயற்சி மேற்கொள்ளப்படும். இந்த வழக்கில் அது வசதியாக நடந்துள்ளது. அதைப் பத்திரிகைகள் கண்டு கொள்ளவில்லை. விஷவாயு கசிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை,'' என்றார். "நீதி புதைக்கப்பட்டு விட்டது' என்பதற்கு போபால் விஷவாயு கசிவு வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு ஒரு உதாரணம். தாமதிக்கப்படும் நீதி, மறுக்கப்படும் நீதி என, சொல்லப்படும். இந்த வழக்கில் நீதி புதைக்கப் பட்டு விட்டது. இதுபோன்ற நிகழ்வு மீண்டும் நடக்கக் கூடாது. அதுவே எனது கவலை' என, மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி கூறியுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், "போபால் விஷவாயு வழக்கில் 26 ஆண்டுகளுக்குப் பின் தீர்ப்புவழங்கப் பட்டுள்ளது நீதியை கேலிக் கூத்தாக்கும் செயல். இந்தியர்கள் எட்டு பேருக்கு மட்டுமே குறைவான தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. முக்கிய குற்றவாளி வாரன் ஆண்டர்சன் பற்றி ஒரு வார்த்தை கூட தீர்ப்பில் குறிப்பிடப்படவில்லை' என, கூறியுள்ளது.
பாரதிய ஜனதா கட்சி தகவல் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், "போபால் விஷவாயு கசிவு வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு துயரம் தருவதாக உள்ளது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை புலனாய்வுத் துறையினர் மேற்கொள்ள வேண்டும். இந்த சம்பவத்தில் இருந்து மத்திய அரசு பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். அணு உலை விபத்து நஷ்டஈடு மசோதாவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். முக்கியத்துவம் வாய்ந்த அந்தச் சட்டத்தை அவசரப்பட்டு நிறைவேற்றக் கூடாது' என்றார். போபால் விஷவாயு சம்பவத்தின் போது, உயிர் பிழைத்த ஹமீதா பீ கூறுகையில், "எங்களுக்கு முடிவற்ற துயரத்தை அளித்த குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும்' என்றார். இதேபோல், வேறு பலரும் ஆவேசமான கருத்துக்களைக் கூறியுள்ளனர்.
7 பேருக்கு இரு ஆண்டு சிறை: போபால் விஷவாயு கசிவு வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. 26 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில், யூனியன் கார்பைடு இந்தியா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கேசுப் மகேந்திரா மற்றும் ஏழு பேர் குற்றவாளிகள் என, அறிவிக்கப்பட்டனர். இவர்களில் ஏழு பேருக்கு இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. ஒருவருக்கான தண்டனை அறிவிக்கப்படவில்லை. தண்டனை விதிக்கப்பட்டவர்களில் ஒருவர் ஏற்கனவே மரணம் அடைந்து விட்டார்.
மத்திய பிரதேச தலைநகர் போபாலில், அமெரிக்காவின் யூனியன் கார்பைடு நிறுவனத்தின் பூச்சிக்கொல்லி மருந்து தயாரிப்பு தொழிற்சாலை இயங்கி வந்தது. இந்த ஆலையிலிருந்து 1984 டிசம்பர் 2ம் தேதி திடீரென விஷவாயு கசிந்தது. போபால் நகரம் முழுவதும் இந்த விஷவாயு பரவியதால், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மூச்சுத் திணறி பலியாயினர். இந்தியாவில் நடந்த மிகப்பெரிய தொழிற்சாலை விபத்து இதுதான். இந்த வழக்கை விசாரித்த சி.பி.ஐ., போபால் தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. யூனியன் கார்பைடு இந்தியா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கேசுப் மகேந்திரா, அந்த நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் விஜ கோகலே, துணைத் தலைவர் கிஷோர் காம்தர், பணி மேலாளர் முகுந்த், உதவி பணி மேலாளர் ஆர்.பி.ரா சவுத்ரி, உற்பத்திப் பிரிவு மேலாளர் எஸ்.பி.சவுத்ரி, கண்காணிப்பாளர் ஷெட்டி, உற்பத்தி பிரிவு உதவியாளர் குரேஷி ஆகிய எட்டு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு, அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது.
கவனக்குறைவால் மற்றவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துதல் உட்பட இந்திய தண்டனை சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ், அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டன. 23 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. போபால் தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட் மோகன் பி.திவாரி, 100 பக்கங்கள் அளவில் தீர்ப்பை வழங்கினார். அதில், குற்றம் சாட்டப்பட்ட எட்டு பேரும் குற்றவாளிகள் என, அறிவித்தார். ஏழு பேருக்கு தலா இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை அளிக்கப்பட்டது. அத்துடன் ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. குரேஷி என்பவருக்கான தண்டனை மட்டும் அறிவிக்கப்படவில்லை. தண்டனை விதிக்கப்பட்டவர்களில் ஆர்.பி. ரா சவுத்ரி என்பவர் மரணம் அடைந்து விட்டார். தண்டனை விதிக்கப்பட்ட அனைவர் சார்பிலும் உடனடியாக, ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு 25 ஆயிரம் ரூபா ரொக்க ஜாமீனில் செல்ல நீதிபதி அனுமதி அளித்தார்.
தீர்ப்பு வழங்கப்பட்ட போது, யூனியன் கார்பைடு இந்தியா நிறுவனத்தின், முன்னாள் தலைவர் கேசுப் மகேந்திரா மற்றும் ஆறு பேரும் ஆஜராகி இருந்தனர். இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக தீர்ப்பு வாசிக்கப்பட்டது. அதே நேரத்தில், அமெரிக்காவில் அப்போது யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தலைவராக இருந்த வாரன் ஆன்டர்சன் (வயது 85) பற்றி தீர்ப்பில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. இந்த வழக்கில் ஆன்டர்சன் ஆஜராகாததால், அவர் தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். மேலும், இவ்வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளாக 178 பேர் விசாரிக்கப்பட்டனர். 3,008 ஆவணங்களை சி.பி.ஐ., தாக்கல் செதது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் எட்டு பேர் சாட்சியம் அளித்தனர். நேற்று தீர்ப்பு வழங்கப்பட்ட போது, கோர்ட் வளாகத்தில், விஷவாயு கசிவு சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பலர் குவிந்திருந்தனர். தீர்ப்பு வெளியானவுடன் அவர்கள் கோஷமிட்டனர்.
"தண்டனை மிகவும் குறைவாக உள்ளது. அமெரிக்காவில் யூனியன் கார்பைடு நிறுவனத்தின் அப்போதைய தலைவராக இருந்த வாரன் ஆன்டர்சனை தூக்கிலிட வேண்டும்' என்றும் கோஷமிட்டனர். தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்யப்படும் என்றும் தெரிவித்தனர். அதேநேரத்தில், விஷவாயு கசிவு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்காக சட்ட ரீதியாக போராடிய சிவில் உரிமை அமைப்பினர், "இந்தத் தண்டனை மிக குறைவானது, மிகவும் காலதாமதமானது' என, கூறியுள்ளனர். "போபால் விஷவாயு கசிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது கறுப்பு நாள்' என்றும் விஷ வாயு சம்பவத்தால் பாதிக்கப்பட்ட சிலர் தெரிவித்தனர்.
தலையங்கம் :
பல வருட காத்திருப்பு, கட்டாயம் மிக பெரிய தண்டனை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எல்லாம் வீண்.நீதி துறையும் அரச பயங்கரவாதத்தின் ஒரு தூணாக மாறி வருகிறது. எங்கும் இருக்கும் ஊழல் நீதி துறையிலும் இல்லாமல் இல்லை. சட்டத்தின் பிற வாசல் எப்போதும் குற்றம்-இளைத்தவருக்கு திறந்து இருக்கும் எனபது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
யூனியன் கார்பைடு இந்தியா நிறுவன நிர்வாகத்தினரை தண்டிக்க முடியாவிட்டாலும் , அதிக பட்ச நிவாரண தொகைகளையாவது இந்த தீர்ப்பு பெற்று கொடுத்திருக்கலாம். பாதிக்கப்பட்ட அந்த சுற்று வட்டார மக்களுக்கு அல்லது பாதிப்பின் பின் உள்ள தலைமுறைகளுக்காவது அது பயன் பட்டிருக்கும் அதுவும் இந்த தீர்ப்பின் சாராம்சத்தில் இல்லை.
இந்தியாவில் யாரும் எத்தகைய குற்றத்தை செய்யலாம். சட்டத்தின் பிறவாசல் வழியே தப்பிக்கலாம். என்பது மறுபடியும் நிரூபணம் ஆகி உள்ளது.