தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

என்ன தைரியம், எந்த பின்னணி என்று தெரியவில்லை

என்ன தைரியம், எந்த பின்னணி என்று தெரியவில்லை. ஈழ தமிழர்களுக்கு ஆதரவான படம் என்ற போர்வையில், சிங்களர் புராணம் பாடும் ஒரு மலையாள படம் ஒன்று சென்னையில் திரையிடப்பட்டது.

சுரேஷ்கோபி, நெடுமுடிவேணு, பிஜுமேனன், மித்ரா நடித்துள்ள படம் 'ராம ராவணன்'. மலையாளத்தில் உருவாகியுள்ள இப்படத்தை பிஜுவட்டப்பாரா இயக்கியுள்ளார். நாளை மறுநாள் (11-06-10) கேரளாவில் இப்படம் வெளியாகிறது. தமிழகத்திலும் இதனை வெளியிடும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அதன் முன்னோட்டமாக பத்திரிகையாளர்களுக்கு நேற்று மாலை 'ராம ராவணன்' திரையிடப்பட்டது.

படம் திரையிடுவதற்கு முன்பாக பத்திரிகையாளர்களுக்கு படம் பற்றிய குறிப்பு ஒன்று வழங்கப்பட்டது. அதில் நாவலாசிரியர் கமலா தாஸ் எழுதிய 'மனோமி' என்ற நாவலை தழுவிய கதை என்று குறிப்படப்படிருந்தது.

சிங்கள அரசால் தமிழ் மக்கள் அனுபவிக்கும் கொடுமைகளை எதிர்த்து போராடும் கவிஞர் திருச்செல்வம் (சுரேஷ்கோபியின் பாத்திரம்) போராளியாக மாறுகிறான். ஆயுத போராட்டத்தில் குண்டடி பட்டு இந்தியா வரும் அவனுக்கு சிங்கள பெண் ஒருத்தி (மித்ரா) உதவி செய்கிறார். அது கவிஞர் திருச்செல்வம் என்று தெரிந்ததும் அவன் மேல் காதல் கொள்கிறாள். காதலை மறுக்கும் திருச்செல்வம் மீண்டும் ஈழத்திற்கு செல்கிறான்.

புலிகளில் பெருந்தலைகள் பலர் வஞ்சகமாக கொல்லப்பட்டு பின்னடைவு ஏற்படும் நேரத்தில் மீண்டும் இயக்கத்தால் இந்தியாவிற்கு அனுப்பிவைக்கப்படுகிறான். அவனது புரட்சி எழுத்துக்கள் மூலமாக எழுச்சியினை ஏற்படுத்தும் நோக்கில்தான் அவன் ரகசியமாக இந்தியாவிற்கு (கேரளா) அனுப்பிவைக்கப்படுகிறான். வந்த இடத்தில் கொலை குற்றவாளியாக அவனை போலீஸ் தேடுகிறது. இதனிடையே தனது தாயை பார்க்க ஆசைப்படும் திருச்செல்வத்திற்கு இயக்கம் தடை போடுகிறது. அதனையும் மீறி தாயை பார்க்க செல்ல போகும் திருச்செல்வத்திற்கு காத்திருக்கிறது அதிர்ச்சி. தன்னை காதலித்த சிங்கள பெண் தனது அம்மாவிற்கு உதவியாக இருக்கிறாள்.

அம்மாவின் பாசம், காதலி, தாய்நாட்டு கனவு, போலீஸ் வேட்டை என தவிக்கும் திருச்செல்வம் ஒரு முடிவை எடுக்கும்போது இயக்கத்தின் ஆட்களாலேயே கொல்லப்படுகிறான்.அந்த குறிப்பில் கொடுக்கப்பட்ட கதை சுறுக்கம் இதுதான். ஆனால் கதை சுறுக்கத்திற்கும் படத்தின் காட்சியமைப்பு, வசனங்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தன.

இடைவேளை வரை ஈழ தமிழர்களுக்கு ஆதரவான எந்த காட்சிகளும் இடம்பெறவில்லை. மாறாக சிங்களர்கள் சாந்தமானவர்கள். சமாதானத்தை விரும்புபவர்கள், புத்தரின் அமைதி வழியை பின்பற்றுபவர்கள் என்பதுபோன்ற வசனங்களே திரைக்கதையை நிரப்பி வருகிறது.

பத்திரிகையாளர்கள் காட்சிக்கு சுரேஷ்கோபி, படத்தின் தயாரிப்பாளர் ராஃபி, இயக்குனர் பிஜு வட்டப்பாரா வந்திருந்தனர். இடைவேளையின்போது அவர்கள் நிருபர்களை சந்தித்தனர். அப்போது பேசிய சுரேஷ்கோபி, "ஒரு தமிழன் செய்யவேண்டியதை மலையாளிகளான நாங்கள் செய்திருக்கிறோம்" என மார்தட்டிக்கொண்டார்.

சுரேஷ் கோபி படத்தின் கதையை புரிந்துகொள்ளாமல் இப்படி பேசுகிறாரா? அல்லது எல்லாம் தெரிந்தும் எதோ ஒரு பின்னணி உந்தி தள்ள அதன்படி நாடகமாடுகிறாரா என்ற சந்தேகம் பத்திரிகையாளர்கள் மத்தியில் அப்போது எழுந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் கொடுக்கப்பட்டிருந்த கதை சுறுக்கத்தில் அப்படியொரு முகமூடி இருந்தது.

இடவேளைக்கு பிறகு ஒரே ஒரு இடத்தில் மட்டும் விடுதலைப்புலிகளில் போராட்டம் தொடரும் என்கிற ரீதியில் பேசுகிறார் சுரேஷ்கோபி. ஆனால் அதன் பிறகும் புலிகளை தவறாகவே சித்தரிக்கப்படுகிறார்கள். இது வெளிப்படையாக தெரிந்துவிடக்கூடாது என்பதிலும் கவனம் காட்டியுள்ளார் இயக்குனர். எனவே இந்த படம் உருவானதின் பின்னணியில் மிகப்பெரிய தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம் வழுத்துள்ளது.