தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

உயர்கல்விதுறைக்கும் கல்லூரி களிற்கும் இடையிலான அரசியல் அல்லது போட்டியில் மாணவர்கள் பாதிப்பு.



ஏ.ஐ.சி.டி.இ.,யின் புதிய விதிமுறைகள் தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால், 300க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளுக்கு ஏ.ஐ.சி.டி.இ., இந்த ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கவில்லை. அக்கல்லூரிகளில் ஆய்வுப் பணிகள் கூட மேற்கொள்ளவில்லை. இதனால், அக்கல்லூரிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை சிக்கலாகி உள்ளது.

தமிழகத்தில் தற்போது 446 பொறியியல் கல்லூரிகளில், ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 870 பி.இ., - பி.டெக்., இடங்கள் உள்ளன. ஒன்பது ஆர்கிடெக்ட் கல்லூரிகளில் 620 பி.ஆர்க்., இடங்கள் உள்ளன. இவற்றில், ஒரு லட்சத்து 7,850 பி.இ., - பி.டெக்., இடங்களும், 415 பி.ஆர்க்., இடங்களும் மாநில அரசு ஒதுக்கீட்டில் நிரப்பப்படுகின்றன.

பொறியியல் கல்லூரிகள் மாணவர் சேர்க்கையை நடத்த, அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலின் (ஏ.ஐ.சி.டி.இ.,) அனுமதி பெற வேண்டும். கல்லூரியில் உள்ள அடிப்படை கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர்கள், ஆய்வுக்கூடம், நூலகம் ஆகிய வசதிகளை ஏ.ஐ.சி.டி.இ., ஆய்வு செய்து அனுமதி வழங்கும்.இந்த அனுமதி, ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. பல ஆண்டுகளாக செயல்படும் பொறியியல் கல்லூரிகளுக்கு இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு மாணவர் சேர்க்கை அனுமதி வழங்கப்படுகிறது.


இதன் பிறகு, கல்லூரிகள் அண்ணா பல்கலைக் கழகத்தில் இணைப்பு பெற்று, மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன.பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்க, இந்த ஆண்டு முதல் ஏ.ஐ.சி.டி.இ., புதிய நடைமுறைகளை உருவாக்கியுள்ளது. அதன்படி, பொறியியல் கல்லூரிகள் தங்களைப் பற்றிய முழு தகவல்களையும் இணையதளத்தில் தெரிவிக்க வேண்டும். மற்ற மாநிலங்களில் உள்ள பொறியியல் கல்லூரிகள் இதை ஏற்றுக்கொண்ட போதும், தமிழக கல்லூரிகள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன.வழக்கு நிலுவையில் இருப்பதால், தமிழகத்தில் இந்த ஆண்டு புதிதாக பொறியியல் கல்லூரிகள் துவங்க வந்த விண்ணப்பங்களை, ஏ.ஐ.சி.டி.இ., தாமதமாகவே பரிசீலித்தது. மற்ற மாநிலங்களில் புது கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கிவிட்ட நிலையில், தமிழகத்தில் தற்போது தான் பரிசீலனை நடந்து வருகிறது.ஏற்கனவே செயல்பட்டு வரும் 300க்கும் மேற்பட்ட தனியார் பொறியியல் கல்லூரிகள், இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையை நடத்த ஏ.ஐ.சி.டி.இ.,யில் அனுமதி பெற வேண்டியுள்ளது.


இந்த அனுமதி கிடைத்த பிறகே, பல்கலைக் கழக இணைப்பு பெற்று மாணவர் சேர்க்கையை நடத்த முடியும்.வழக்கு நிலுவையில் இருப்பதால், ஏ.ஐ.சி.டி.இ., பழைய கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு இன்னும் அனுமதி வழங்கவில்லை; அனுமதி வழங்குவதற்கான ஆய்வுப் பணிகளையும் துவக்கவில்லை. வரும் 28ம் தேதி கவுன்சிலிங் துவங்கவுள்ள நிலையில், இக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.ஏ.ஐ.சி.டி.இ., அனுமதி இல்லாமல், அண்ணா பல்கலைக் கழகம் இணைப்பு வழங்க முடியாது. தற்காலிக இணைப்பு வழங்கினாலும், ஏ.ஐ.சி.டி.இ., அனுமதி இல்லாமல் மாணவர் சேர்க்கையை நடத்த முடியாது. இதனால், இந்த ஆண்டு பொறியியல் கவுன்சிலிங்கில் புது கல்லூரிகள் இடம்பெறுமா என்ற கேள்வியுடன், தற்போது ஏற்கனவே உள்ள 300க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளும் கவுன்சிலிங்கில் இடம்பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.


இதனால், சமீபத்தில் நடந்த தனியார் பொறியியல் கல்லூரிகளின் நிர்வாகிகள் கூட்டத்தில், கோர்ட் வழக்கை வாபஸ் பெற்றால், தமிழக அரசு ஏ.ஐ.சி.டி.இ.,யுடன் இப்பிரச்னை குறித்து பேசும் என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். ஆனால், வழக்கை வாபஸ் பெற தனியார் கல்லூரிகள் தயாராக இல்லை.பிரச்னையின் தீவிரத்தை உணராமல், மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் முக்கியமான இந்த விஷயத்தில் உயர்கல்வித் துறை அலட்சியமாக இருந்து வருகிறது. உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்தால் தான், இந்த ஆண்டு பொறியியல் கவுன்சிலிங்கே நடக்கும் நிலை உள்ளது.


ஏ.ஐ.சி.டி.இ., ஏன் ஆய்வு நடத்தவில்லை?

பொறியியல் கல்லூரியில் குறிப்பிட்ட பாடப்பிரிவைத் துவங்க, குறிப்பிட்ட அளவு இடம், ஆசிரியர்கள், ஆய்வுக்கூடம், இதர வசதிகள் வேண்டுமென விதிமுறைகள் உள்ளன. ஊழல் புகாரில் சிக்கி, சி.பி.ஐ., அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ஏ.ஐ.சி.டி.இ., அதிகாரிகள் இருந்த காலத்தில், பல கல்லூரிகள் அனுமதி பெற்றன.ஏ.ஐ.சி.டி.இ.,க்கு பொறுப்பேற்ற புதிய நிர்வாகம், பொறியியல் கல்லூரி அனுமதி நடைமுறைகளில் மாற்றங்களை கொண்டு வந்தது.

இந்த புதிய நடைமுறைகளை எதிர்த்து, தமிழக தனியார் பொறியியல் கல்லூரிகள் வழக்கு தொடர்ந்தன. இவ்வழக்கில், புதிய நடைமுறைகளை அமல்படுத்த ஐகோர்ட் இடைக்கால தடை விதித்தது. இதை எதிர்த்து ஏ.ஐ.சி.டி.இ., ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. தற்போதைய நிலையே நீடிக்க கோர்ட் உத்தரவிட்டது.தமிழக பொறியியல் கல்லூரிகளில் எந்த விதிமுறைகளின் அடிப்படையில் ஆய்வு செய்வது என்பதில் ஏற்பட்ட குழப்பத்தால், ஆய்வுப் பணியை ஏ.ஐ.சி.டி.இ., மேற்கொள்ளாமல் உள்ளது. ஆய்வு நடத்தப்படாததால், இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையை நடத்த 300க்கும் மேற்பட்ட கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கவில்லை. ஏ.ஐ.சி.டி.இ., மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகள் இரு தரப்பும் சுமூக முடிவிற்கு வந்தால் மட்டுமே இப்பிரச்னையில் தீர்வு ஏற்படும்.