தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

டி.ராஜேந்தரின் வடகிழக்கு பருவ மழை

கால் நூற்றாண்டுக்கும் மேலாக எழுத்தையே சொத்தாக நினைத்த பத்திரிகையாளர் ராதாராஜ், கால் காசு கூட சொத்து சேர்க்காமல் கண்ணை மூடிவிட்டார். சாகும் போது அவருக்கு வயது 47. போலீஸ் செய்தி, (பழைய)தினசரி, டி.ராஜேந்தரின் உஷா, நியூ பிலிமாலயா என்று எழுதிக் கொண்டே இருந்தவர், கண்ணை மூடுகிற கடைசி நாட்களிலும் டி.ராஜேந்தரின் குறள் டி.வி நிருபராக பணியாற்றினார்.


11 ம் வகுப்பும், 9 ம் வகுப்பும் படிக்கும் இரு மகள்கள். காதல் மணம் செய்து கொண்ட மனைவி என்று கச்சிதமான குடும்பம் அவருக்கு. நாலைந்து தினங்களுக்கு முன் ரத்த வாந்தி எடுத்தவரை பதறியடித்துக் கொண்டு வந்து விஜயா ஆஸ்பிடலில் சேர்த்தது குடும்பம். அவரது இன்னொரு குடும்பம் பத்திரிகைதானே?


பத்திரிகை நண்பர்கள் பிஸ்மி, தமிழன்பன், மதுரை செல்வம், விக்னேஷ் ராஜா, நெல்லை பாரதி என்று செய்தியை கேள்விப்பட்ட அடுத்த நொடியே ஆஸ்பிடல் வாசலில் கூடினார்கள் நண்பர்கள்.


பி.ஆர்.ஓ. மவுனம் ரவி, கையில் கிடைத்த 20 ஆயிரத்தோடு மருத்துவமனைக்கு ஓடோடி வந்தார். இயக்குனர் சசிகுமார் காதுக்கு தகவல் போனதும், அடுத்த வினாடியே 10 ஆயிரம் ரூபாய் வந்து சேர்ந்தது. யூனிட் யூனிட்டாக ரத்தம் ஏற்றிய மருத்துவர்கள் அரை மணிக்கொரு தரம் நிலைமையின் தீவிரத்தை சொல்ல சொல்ல, பில்லின் கனம் கூடிக் கொண்டே இருந்தது.


அஜீத் 15, சரத்குமார் 30, சத்யராஜ் 20 என்று நாலா புறத்திலிருந்தும் உதவியும், அக்கறையும் வந்து சேர கண்விழித்து அதையெல்லாம் பார்க்கதான் போகிறார் என்ற எதிர்பார்ப்பில் நாமெல்லாம் நின்றோம். முதல் நாள் மருத்துவமனையில் சேர்க்கும்போது சொன்ன தகவல். நாலைந்து முறை நினைவுபடுத்திய பின் மறுநாள் பிற்பகல் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தார் முதலாளி டி.ராஜேந்தர்.


சரக்கென்று அழுகை பொத்துக் கொண்டது அவருக்கு. `நான் இருக்கேன்யா. அவனை போக விடமாட்டேன்` என்ற பெரும் கூச்சலோடும். பெரும் கண்ணீரோடும் ஐ.சி.யூ.விற்குள் போனவர் அதே வடகிழக்கு பருவ மழையோடு வெளியே வந்தார். ஒரு ஓரமாக செய்வதறியாமல் நின்று கொண்டிருந்த திருமதி ராதாராஜின் கைகளில் ஒரு கவரை திணித்துவிட்டு கண்ணீரை துடைத்துக் கொண்டே காரேறி போய்விட்டார். கவருக்குள் இருந்தது எவ்வளவு? வெறும் இரண்டாயிரம்! இந்த கொடுமையை காண சகிக்காமல் அடுத்த அரை மணி நேரத்தில் விடைபெற்றுக் கொண்டார் ராதாராஜ்.


இந்த இடத்தில் இன்னொரு விஷயத்தை சொல்லியாக வேண்டும். டி.ஆர் பற்றியோ, சிம்பு பற்றியோ சக பத்திரிகையாளர்கள் தவறாக எழுதியபோதெல்லாம் அவர்களோடு பல முறை சண்டைக்கு நின்றிருக்கிறார் இந்த மனுஷன். மறுநாள் சீமான், அமீர், கருணாஸ், கஞ்சா கருப்பு, என்று திரையுலகைச் சேர்ந்த பலரும் வந்திருந்தார்கள்.


அண்ணே, நான் அவங்க குடும்பத்துக்கு ஒரு லட்சம் தர்றேண்ணே` என்றார் கருப்பு. `என் பங்குக்கு நிறைய முடியாது. ஒரு லட்சம் நிச்சயம்` என்றார் கருணாஸ். இங்கேயும் வந்தார் முதலாளி. மறுபடியும் ஒரு கவர். பிரித்தால் ஐந்தாயிரம்!


ஏதோ, அவரவரால் முடிந்தது என்று எடுத்துக் கொண்டிருக்கலாம். இந்த விவகாரத்தை. `வாழ்ந்தவர் கோடி. மறைந்தவர் கோடி. மக்களின் மனதில் நிற்பவர் யார்` என்ற வரிகளை படித்து தொலைத்ததால் வந்த வினைதான் இந்த புலம்பல்!