என்ன செய்வது  ஆறு  நாள்  தாமதமாகத்தான் படித்தேன் பதிகிறேன். படித்த இடம் மண்ணுரிமை பதிவு.
 
 
 செம்மொழி மாநாடு  தொடங்கிவிட்டது. நிறைய பேருக்கு ஒரு நடுநிலையாக இதை பார்க்க விருப்பம்  என்கிறார்கள். அது ஒரு தமிழ் வளர்ச்சிக்கான மாநாடு என்று நினைத்து அதை  ஆதரிக்க வேண்டுமாம்.அதுவும் அதிர்வு வெளியிட்ட புலிகளின் அறிக்கை வந்ததும்  இந்த நடுநிலையாளர்கள் கொஞ்சம் தைரியம் வந்தவர்களாய் கிளம்பிவிட்டார்கள்.  எங்களை பொறுத்தவரை இரண்டும் கெட்டான் எந்த விதத்திலும் பயனற்றவர்களே.  தி.மு.க வினரை பற்றி சொல்லவும் தேவை இல்லை.
 
 
 செம்மொழி மாநாடு  நடத்துகிற கருணாநிதியும் தி.மு.கவும் ஐந்து முறை தமிழ்நாட்டு  ஆட்சிப்பொறுப்பை ஏற்று முதலமைச்சர் இருக்கையை தேய்த்ததை தவிர வேறொன்றும்  செய்துவிடவில்லை என்பதே உண்மை. 1965-ல் மொழிப்போராட்டத்தை மாணவர்கள்  கையிலிருந்து பிடுங்கிக்கொண்டு போராட்டத்தின் தீவிரத்தைக்கட்டுப்படுத்தி,  பயன்படுத்தி ஆட்சிக்கு வந்த காலத்தில் இருந்தே தி.மு.க வின் தூரோக வரலாறும்  தொடங்கிவிட்டது. இருமொழிக்கொள்கை மும்மொழிக்கொள்கை என்ற மோசடி  வார்த்தைகளைத்தவிர வேறொன்றையும் தமிழ்நாடு கண்டது இல்லை.எங்கும் தமிழ்  எதிலும் தமிழ் என்று வார்த்தைகளால் ஏமாற்றிக் கொண்டே எங்கேயும் தமிழின்றி  செய்து முடித்தவர்கள்தான் இந்த கூட்டம்.
 
 
 செம்மொழிக்கான  அனைத்துத்தகுதிகளும் இருந்தும் தமிழ் மொழி உண்மையான செம்மொழிக்கான  தகுதிகளுடன் செம்மொழியாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. தமிழை செம்மொழியாக்குவதை  ஏற்றுக்கொள்ள முடியாத இந்திய அரசு வஞ்சனையுடன் தனிப்பட்டியலில் செம்மொழியாக  அறிவித்து இருக்கிறது. ஏற்கனவே 2000-ம் ஆண்டுகள் பழமையானது என்ற தகுதியை  1000-ம் ஆண்டுகள் பழமையானது என்று குறைக்கப்பட்டு 1000-ம்  ஆண்டுகளுக்குட்பட்ட மொழிகளுடன் சேர்க்கப்பட்டே செம்மொழியாக  அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோசடியைத்தட்டிக்கேட்க முடியாத கருணாநிதி  (இதில் கருணாநிதியும் கூட்டுக்களவாணி) அன்று அய்யா மணவை முஸ்தஃபா  போன்றவர்களைக் கட்டுப்படுத்த முயற்சி செய்தார். ஆனால் விளம்பரம் மட்டும்  செம்மொழி கொண்டான்...! என்றே போட்டுக்கொள்கிறார்கள்...
 
 இந்த செம்மொழி கொண்டான்  உண்மையில் செம்மொழி கொன்றான் என்றே சொல்லவேண்டிய ஆள்..இதற்கான காரணம் ஒன்று  இரண்டல்ல ஏராளம். தமிழ் மொழிக்கு, இனத்திற்கு என்று செய்த துரோகம்  மறக்கக்கூடியது இல்லை. அதனை மறந்து இந்த மாநாட்டுக்கு ஆதரவு தெரிவிக்கவோ,  வாழ்த்துக்கூறவோ, எந்த நியாயமும் இல்லை.ஏனெனில் அதில் வெறும் கருணாநிதி  துதி பாடல்களே நடக்கப்போகிறது.
 
 கருணாநிதியின் உண்மை முகத்தை  தெரிந்துகொண்டால் இதை எளிதாக புரிந்துகொள்ளலாம்.
அய்யா தேவநேயப்பாவாணர் அவர்கள் தனது வாழ்நாளை அர்ப்பணித்துக்கொண்டு தமிழர் வரலாற்றை வெளிக்கொண்டுவந்தவர். அவரை விட சிறப்பான தமிழறிஞர் இன்றளவும் இல்லை. அவர் கடைசிக்காலத்தில் கருணாநிதிக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். அந்தக் கடிதத்தில் கருணாநிதியிடம் அய்யா தேவநேயப் பாவாணர் வேண்டியது கொஞ்சக் காலத்துக்கு உணவுக்கும் தங்கும் இடத்திற்கும் வழிசெய்யவேண்டும், நான் எனது கடைசி ஆய்வுகளை முடிக்கும் வரை இந்த உதவியை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்த உதவிகளை செய்து இருந்தால் தமிழுக்கும் இனத்துக்கும் அவர் இன்னும் சிறப்பான பணிகளை செய்து இருப்பார். முதலமைச்சராக இருந்தும் கயவன் கருணாநிதி கடைசிவரை கண்டுகொள்ளவே இல்லை. கடைசிக்காலத்தில் தமிழனின் வரலாற்றை எழுதிய அய்யா வறுமையில் வாழ்ந்தார். இது ஒரு தமிழறிஞரை கருணாநிதி போற்றிய விதம்..!.
 
 மொழிப்போருக்கு உரிமை  கொண்டாடும் தி.மு.க. மொழிப்போர் வரலாற்றை இதுவரைக்கும் அடுத்த தலைமுறை  படிக்கும் விதத்தில் பாடத் திட்ட்த்தில் சேர்க்காதவர் தான் இந்த  செம்மொழிகொண்டான். எத்தனை தமிழறிஞர்களின் வரலாறு மாணவர்களுக்கு  போய்ச்சேர்கிறது. கண்டவனுக்கெல்லாம் மணிமண்டபம் கட்டும் கருணாநிதி  மொழிப்போர் தியாகிகளுக்கு செய்தது எதுவுமே இல்லையே..இதன் பொருள் என்ன..?  மொழிப்போராட்டத்தாலும் , மொழிப்போராட்ட தியாகிகளாலும் கருணாநிதியின் புகழ்  மங்கிவிடும் என்பதால் தானே இவற்றையெல்லாம் கண்டுகொள்ளவில்லை....
 
பக்கத்தில் உள்ள கர்நாடகாவில் பத்தாம் வகுப்புவரை கன்னடமொழியை ஒரு மொழிப்பாடமாக கட்டாயம் படித்தே ஆகவேண்டும் என்ற சட்டம் இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் கருணாநிதி ஐந்து முறை ஆட்சிபொறுப்பில் இருந்தும் சட்டம் இயற்றவில்லை. ஐந்தாம் வகுப்புவரை தமிழை தமிழ்நாட்டில் பயிற்று மொழியாக்க ஒரு அரசாணை வெளியிட்டார். இந்த அரசாணை என்பது சட்டம் இல்லை .ஆதலால் தி.மு.க.வின் ஒன்றிய செயளாலர் ஒருவராலயே நீதிமன்றத்தில் தடையாணை வாங்கப்பட்டுத் தோற்கடிக்கப்பட்டது. தமிழ் நாட்டில் மட்டும் தான் ஒருவன் தமிழ் மொழியைப் படிக்காமலே உயர்படிப்புவரை படிக்கலாம். இது இன்றும் தொடர்கிறது. இந்த நிலை தொடர பொறுப்பானவர் ஐந்துமுறை முதலமைச்சராக இருந்த கருணாநிதி இல்லையா..?
 
 தமிழை தமிழ்நாட்டில் பயிற்று  மொழியாக்க ஒரு அணுவளவேனும் முயற்சி செய்யாமல் செம்மொழி மாநாடு நடத்தி  தமிழ்மொழி வளர்ச்சிக்கு என்றால் இதன் பெயர் என்ன...? மோசடி இல்லையா..?
 
 வேலை வாய்ப்பில் தமிழ்வழியில்  படித்தவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும். அப்போதுதான் தமிழ் மொழியில்  படிப்போருக்கு வேலை உறுதிசெய்யப்படும் என்று கோரிக்கை வைத்து  போராடிக்கொண்டே இருக்கிறோம் . இதை ஏன் இன்னும் செயல்படுத்த எண்ணம் இல்லை..?  இது தமிழ் மொழி வளர்ச்சியில் சேர்க்கமுடியாததா..?
 
டி.ஆர்.பாலு மத்தியில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்த போது தமிழ்நாட்டில் மைல்கற்களில் ஹிந்தியில் எழுதப்பட்டதே.? அப்போது இவர்கள் சொன்ன பதில் இன்றும் நினைவில் இருக்கிறது. வட இந்தியக்காரன் சரக்குந்து ஓட்டிவருகிறான் என்பதற்காக தமிழ்நாட்டு மைல்கல் ஹிந்தி எழுத்துக்களை சுமக்க வேண்டும் என்று நாக்கூசாமல் சொன்னார்களே..? இவர்ளால் வேறு மாநிலத்தில் இப்படி பேச முடியுமா..? இவர்கள் நடத்தும் செம்மொழி மாநாடு தமிழை வளர்க்கும் என்று நாங்கள் நம்பவும் வேண்டுமோ...?
 
 இன்றளவும் இந்திய அரசு தனது  திட்டங்களுக்கு ஹிந்தியில் பெயர் சூட்டி தமிழ்நாட்டு குக்கிராமங்களுக்கும்  (படம் இனைக்கப்பட்டுள்ளது) சென்று விளம்பரம் வைக்கிறதே. கருணாநிதி அரசின்  கவனத்துக்கு வராமல்தானா இந்த ஹிந்தி திணிப்பு நடக்கிறது..?.
 
 
 தமிழ்நாடு அரசின் அரசு  விரைவுப் பேருந்துகள் முழுவதிலும் ஆங்கிலத்தில் S.E.T.C என்ற எழுத்துக்கள்  தானே பெரிய அளவில் எழுதப்படுகிறது. வணிக நிறுவனங்களின் பெயர்கள் தமிழில்  இருக்க வேண்டும் , பெயர்பலகைகளில் முதன்மையாக தமிழே இருக்கவேண்டும் என்று  எத்தனையோ கோரிக்கைகள் அனுப்ப பட்டும், போராட்டங்களும் நடாத்தப்பட்டும்  இருக்கிறது. இதை நடைமுறை படுத்தாமல் ஆட்சி நடத்தும் தி.மு.க அரசுதானே.இந்த  செம்மொழி மாநாடு நடத்துகிறது. இதை எப்படி ஆதரிக்க முடியும்.
 
 
 கருணாநிதி சொந்த  விசயத்துக்கும் ,புகழுக்கும் எடுக்கும் சிரத்தை தமிழ் மொழியின்  வளர்ச்சிக்கு எடுத்தது இல்லை என்பதுதான் உண்மை. இப்போது நடக்கும்  வழக்கறிஞர்களின் போராட்டத்துக்கும் அப்படியே சால்சாப் பதில் தான் வந்து  இருக்கிறது. அவர்கள் என்ன செம்மொழி மாநாட்டுக்கு எதிராகவா போராடுகிறார்கள்.  தாங்கள் வாதாடும் சென்னைஉயர்நீதிமன்றத்தின் மொழியாக தமிழை ஆக்க வேண்டும்  என்கிறார்கள். அவர்களின் போராட்ட வீரியத்தை பயன்படுத்தி சட்டத்தை  நிறைவேற்றி இருக்கலாம்.. இதற்கு மட்டும் கருணநிதியிடம் இருந்து சட்டம்,  நீதி, நீதிமன்றம் என்று பதில் வருகிறதே, அமைச்சரவையில் பங்கு கேட்கும்  போர்க்குணத்தில் ஆயிரத்தில் ஒரு பங்கைக்கூட இதில் காட்டவில்லையே..?  அப்படியே இவர்களால் முடியாது இதெல்லாம் மத்திய அரசின் கையில் உள்ளது என்று  சொல்வார்களானால் தமிழ் மொழி தில்லிக்காரனிடம் அடிமையாக இருக்கிறது என்று  தானே பொருள். இந்த மாநாட்டில் இந்த உண்மையை அறிவித்து தமிழ் மொழியின்  விடுதலைக்கு வழி வகுக்க போகிறாரா கருணாநிதி. இப்படி கனவிலும் நினைக்க  முடியாது. அப்படி இருக்க இந்த மாநாட்டை எப்படி ஆதரிக்க முடியும்.
 
 
 இந்திய அரசு  வெளிநாடுகளில் வாழும் தமிழர்களை எல்லம் NRI-களாக காட்டி அவர்கள் இருக்கும்  நாடுகளிலெல்லாம் அந்த நாடுகளின் உதவியை பெற்று ஹிந்தி  மொழியைப்பரப்பிவருகிறது. அதற்கான நிதியையும் அதிகரித்து வருகிறது. இதை  தடுத்து தமிழ் மொழிக்கு நிதி வழங்கவும் தமிழ் மொழியை காப்பாற்றவும் ஏதேனும்  திட்டம் தமிழ் நாட்டு அரசின் கொள்கைகளில் இருக்கிறதா ? அல்லது  தி.மு.க.வின் கொள்கைகளில்தான் இருக்கிறதா..?அல்லது கூட்டாளியான தில்லி  அரசிடம் வலியுறுத்திய கடிதாமவது இருக்கிறதா..?ஏனென்றால் இவர்கள் காட்டும்  செயல்பாடு எப்போதும் தில்லிக்கு எழுதும் கடிதம் தான்.
 
 இதுவரைக்கும் நெடுமாறன் அய்யா  நடத்தும் உலகத்தமிழர் பேரமைப்பு மாநாட்டுக்கான அனுமதியை தமிழ்நாடு அரசு  கொடுத்ததே இல்லை. ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தின் கதவுகளை தட்டியே  அனுமதிபெற்று வருகிறார். தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு முன் பல தமிழ்  உணர்வளர்கள் கைது செய்யப்பட்டார்கள். தமிழ் உணர்வாளர்களை நசுக்கும்  கருணாநிதி அரசா தமிழ் மொழியை வாழவைக்கப்போகிறது..?
 
 
 ஒப்பற்ற திருவள்ளுவருக்கு  இணையாக ஏதோ ஒரு துக்கடா கவிஞரான கன்னட சர்வஞர் சிலையை தமிழ்நாட்டில்  அனுமதித்த கருணாநிதியின் விவேகம் எவ்வளவு சிறுமைகொண்டது என்பது எளிதாக  புரிந்துகொள்ளக்கூடியதே.
 
 உயர்கல்வியில் தமிழை பயிற்று  மொழியாக்க இதுவரை அரசு செய்த முயற்சிகள் என்னவென்றுபார்த்தால் எதுவும்  இல்லை. ஆனால் உண்மையில் மருத்துவமொழி, இராணுவமொழி, பயிற்றுமொழி, ஆட்சிமொழி  எல்லாமே தமிழில் உருவாக்கி செயற்படுத்திக் காட்டிய தமிழீழத்  தேசியத்தலைவர்தான் இந்த தமிழனத்தின் ஓரே தலைவர். அதை பொறுக்காமல் தனது  தமிழின தலைவர் பட்டத்தை காப்பற்றிக் கொள்ள இந்திய பார்பனிய அரசின்  கைக்கூலியாக இருந்து தமிழ் இனத்தை காட்டிக்கொடுத்து சாகடித்தவர்தான்  கருணாநிதி. இன்று நானும் தமிழினத்தலைவன் ! நானும் தமிழினத்தலைவன் ! என்று  வடிவேலு நகைச்சுவை போல( நானும் ரொளடி.. நானும் ரொளடி) சொல்லிக்கொண்டு  சொம்மொழி மாநாடு நட்த்துகிறார். இனவெறியன் இராசபக்சே தமிழர்களின்  மீள்குடியேற்றம், வேலை கொடுக்கிறேன் என்று சொல்வதை எப்படி மோசடி என்கிறோமோ,  அதே போன்றுதான் கருணாநிதியின் செம்மொழி மாநாடும். இந்த மாநாடு  கருணாநிதிக்கு ஒரு பட்டம் சூட்டு விழாவே அன்றி தமிழுக்கும் இனத்துக்கும்  ஒரு கடுகளவும் உதவாது என்பது கருணாநிதியின் கழுத்தறுப்பு வரலாற்றை  அறிந்தவர்களுக்கு நன்கு தெரியும்.
 
 
 புலிகளின்  அறிக்கையைப்பொறுத்தவரை அவர்கள் எப்போதும் தமிழ்நாட்டு அரசியல் சூழலில்  தங்கள் கருதுக்களைப்பதிவு செய்தது இல்லை..எல்லோரையும் ஆதரவு சக்தியாகவே  வைத்து இருக்க விரும்பினர். முள்ளிவாய்க்கால் இழப்பிற்குப் பிறகும்  அப்படியே தொடர்வது சரியான அரசியல் பார்வை இல்லை. ஏனென்றால் தற்போது  தமிழ்நாட்டில் இளைஞர்கள் தன்னெழுச்சியாக பல போராட்டங்களை முன்னெடுத்து  வருகிறார்கள். உளவு நிறுவனங்கள் இதைப்பார்த்து திணறி போய் பழைய செருப்பு  மாலை பாணியை கைவிட்டு குண்டுவைக்க தொடங்கி இருக்கின்றன. இது போன்ற அரசியல்  பார்வை அந்த இளைஞர்களை தளர்வுற செய்ய வாய்ப்பு இருக்கிறது. இந்த அறிக்கை  சில நல்ல நோக்கங்களுக்காக வெளியிடப்பட்டாலும் தமிழ்நாட்டு அரசியல் சூழலில்  எதிர்ப்பிற்குரியதே.
 
 
 தமிழை ஆட்சி  மொழியாக்காமல் , கல்வி மொழியாக்காமல் , நீதிமன்ற மொழியாக்காமல் மாநாடு  நடத்தினால் தமிழ் மொழியின் வளர்ச்சி என்பது ஒரு முட்டாள்தனம். அதை  ஆதரிக்கவும் முடியாது..ஆக்கப் பூர்வமாக எந்த செயலும் ஆட்சி பொறுப்பில்  இருந்து செய்யாத ஒரு நபர் தன் புகழுக்காக நடத்தும் ஒரு கூத்து தமிழ்  வளர்ச்சிக்காக என்று சொல்வதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. தி.மு.க தனது  மாநாடுகளில் அறுபதுகளில் இருந்தே சில தீர்மானங்களை இயற்றி வருகிறது. அதில்  அன்றிலிருந்து மாறாத இரண்டு :1. மாநில சுயாட்சி, 2.சேது சமுத்திரத்திட்டம்.  இவற்றில் தி.மு.க எள்ளளவும் முன்னேற்றத்தை கண்டது இல்லை. இதே நிலைதான்  கலந்து கொள்ளும் தமிழறிஞர்களின் ஆய்வுக்கட்டுரைகளுக்கும் , இந்த மாநாட்டு  தீர்மானங்களுக்கும் என்பது திண்ணம். எனக்கு கொஞ்சமும் இந்த செம்மொழி மாநாடு  பற்றி வெற்று சந்தோசப்படுவதற்கான காரணங்கள் கிடைக்கவில்லை.
 
 
 அன்பான தமிழ் உறவுகளே  உலகத்தில் எந்த இனத்துக்கும் இல்லாத நெருக்கடி தமிழினத்துக்கு இன்று. நாம்  தமிழ் இனத்தை காத்து தமிழ் மொழியையும் காக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.  இந்திய சிங்கள அரசுகள் தற்ப்போது செய்துகொண்டுள்ள ஒப்பந்தம் தமிழ், தமிழர்  என்ற வார்த்தையை எதிர்காலத்தில் இல்லாமல் செய்யப்போகிறது. தமிழ் நாட்டில்  தமிழ் உணர்வாளர்களை ஒடுக்க உளவு நிறுவனங்களுடன் கைகோர்த்து வேட்டையை  தொடங்கிவிட்டது கருணாநிதி அரசு . இதையெல்லாம் முறியடித்து வெற்றிகொள்ளும்  வேட்கையுடன் விழிப்புடன் இருப்போம். வெற்று ஆராவாராங்களையும்  இனத்துரோகிகளையும் புறக்கனித்து தமிழ்தேசிய இலக்கு நோக்கி பயனிப்போம்.  இதுவே ஒவ்வொரு தமிழனுக்கும் இன்றைய கடமை.
தோழர் சிவா.
http://www.thozharsiva.blogspot.com/

தொடர்புகொண்ட  சிவாஜிலிங்கம், பார்வதியம்மாள் கருணாநிதிக்கு அப்படியொரு கடித்ததையும்  எழுதவில்லை எனக் குறிப்பிட்டார்.
எந்த சந்தர்ப்பத்திலும்  இது கருணாநிதிக்கு எழுதப்படும் கடிதம் என்றோ அல்லது கடிதத்தின் உள்ளடக்கம்  குறித்தோ அவரிடம் கூறப்படவில்லை.
பாதிக்கப்பட்ட ஒரு  முதியவரை முன்வைத்து நடத்திய கேவலமான அரசியல் நாடகம் சீரழிந்து போன திராவிட  இயக்கத்தின் கோர முகத்தைக் காட்டுகிறது.
 
