கடந்த டிசம்பர் 6ம் தேதியன்று, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில், முதல்வர் கருணாநிதி “அரசியல், அமைச்சர் பதவி இவைகளையெல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு உங்களிலொருவனாக நான் என்னை இணைத்துக்கொள்வேன்“ சட்டமன்ற புதிய கட்டிடம் திறக்கப் பட்டதும், அண்ணா நினைவு நூலகம் திறக்கப் பட்டதும், கோவையில் செம்மொழி மாநாடு நிறைவு பெற்றதும் இவ்வாறு பதவிகளை துறந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்.
கருணாநிதியின் இந்த அறிவிப்புக்கு பலமான பின்னணி இருப்பதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நெடுங்காலமாகவே குடும்பத்தில் இருந்து வந்த புகைச்சல், இப்போது, கருணாநிதிக்கு கடும் நெருக்கடியைக் கொடுத்ததால், அந்நெருக்கடியிலிருந்து விடுபடவே, கருணாநிதி, தன் குடும்பத்தினரை எச்சரிக்க சூசகமாக இத்தகவலை விழாவில் வெளியிட்டதாக சவுக்கிடம் தகவல் வந்துள்ளது.
2006ம் ஆண்டு முதலே, கருணாநிதி குடும்பத்தில், புகைச்சல் ஆரம்பமாகி விட்டது. இரண்டு பெண்டாட்டி கட்டிய அனைத்து கணவர்களுக்கும் இருக்கும் அதே பிரச்சினை கருணாநிதிக்கு கூடுதலாகவே உண்டு.
ஏனெனில், பல இரு தார குடும்பங்களில், சண்டை போட்டுக் கொள்ள, சொத்துக்கள் குறைவாகவே இருக்கும். ஆனால், கருணாநிதி குடும்பத்தில் சொத்துக்களுக்கு பஞ்சம் இல்லை.
ஆனால், அதிகாரம் தொடர்பான பிணக்குகளும், சண்டைகளும், மன உளைச்சல்களும் மனஸ்தாபங்களும், கோபங்களும், தாபங்களும் மிக அதிகம்.
2004ம் ஆண்டு, மத்தியில் காங்கிரஸ் தலைமையில் அமைந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி மத்தியில் ஆட்சி அமைக்க திமுக வின் எம்பிக்களை பெரிதும் நம்பியிருந்ததால், கருணாநிதியின் செல்வாக்கு, டெல்லியில் கொடி கட்டிப் பறந்தது. குடும்பத்தின் வருமானத்துக்கும் குறைவில்லை.
கப்பல் போக்குவரத்து, தொலைதொடர்பு, சுற்றுச் சூழல் மற்றும் வனம் என்று அதிகாரம் படைத்த அனைத்து துறைகளையும் பெற்று வாழ்வாங்கு வாழ்ந்தனர்.
2006ல் மாநிலத்தில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன், குடும்பத்தின் குழப்பம் தீவிரமடைந்தது. மற்ற அமைச்சரவைகள் போல் இல்லாமல், முழுப் பெரும்பான்மை இல்லாமல் காங்கிரசின் தயவை கருணாநிதி நம்பி இருந்ததால், அவர் ஆசைப்பட்ட பல விஷயங்களை செய்ய முடியாமல் போனதும், கூட்டணிக் கட்சிகளின் இழுப்புக்கெல்லாம் இழுபட்டபடி இருப்பதும் வாடிக்கையாகிப் போனது.
முதல் மனைவி பத்மாவதியின் மகன், மு.க.முத்து, குடிப் பழக்கம் ஏற்பட்டு, மற்ற இரு குடும்பங்களின் அதிகாரப் போட்டியில் பங்கேற்காமல், மாதந்தோறும் செலவுக்கு பணம் வாங்கிச் செல்லும் அளவுக்கு தடம் மாறிப் போனதால், முத்துவையோ அவர் வாரிசையோ, யாரும் போட்டியாகவே கருதியதில்லை.
இரண்டாவது மனைவி தயாளு, அவர் வாரிசுகள் மற்றும் ராசாத்தி அம்மாள் அவர் வாரிசு ஆகியோருக்கு இடையேதான் போட்டி. ராசாத்தி அம்மாளுக்கு தயாளு அம்மாளின் வாரிசுளுக்கு கிடைக்கும் அதிகாரம் தனக்கோ தன் மகளுக்கோ கிடைப்பதில்லை என்று மனக்குமைச்சல்.
கருணாநிதி, பகலில் ஆலிவர் சாலையில் உள்ள தயாளு அம்மாள் வீட்டிலும், இரவில் சிஐடி காலனியில் உள்ள ராசாத்தி அம்மாள் வீட்டிலும் தங்குவது வழக்கம். இரண்டு வீடுகளிலுமே, முதலமைச்சரின் வீடு என்பதற்கான தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளும், அவசர அலுவல்களை கவனிக்க 24 மணி நேர அலுவலகமும் உண்டு.
இரண்டு குடும்பங்கள் இருப்பதால், அரசுக்கு இத்தோடு செலவு முடிந்தது. ஐந்து குடும்பங்கள் இருந்தால் அரசுக்கு எத்தனை செலவு என்று யோசியுங்கள். “இரண்டுக்கு மேல் எப்போதும் வேண்டாம்“ என்ற அரசின் குடும்பக் கட்டுப்பாட்டு திட்ட வாசகத்தை, கருணாநிதி குழந்தைகளுக்கு பதிலாக குடும்பத்துக்கு என்று நினைத்து விட்டார் போலும். பரவாயில்லை, இரண்டோடு நிறுத்தினாரே.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தின் முதல் ஆட்சியில் ராசாத்தி அம்மாளின் மகள் கனிமொழியை அமைச்சராக்க வேண்டும் என்று சிஐடி காலனி தரப்பில் இருந்து கடும் நெருக்கடி வந்தது. இந்நெருக்கடியை தாங்க முடியாமல், ராஜ்ய சபைக்கு ஏற்பட்ட காலியிடத்தில், கடந்த மே 2007ல் கனிமொழியை ராஜ்ய சபை எம்.பி ஆக நியமனம் செய்தார்.
கனிமொழி எம்பி ஆனதும், அவரை அமைச்சராக ஆக்க வேண்டும் என்று கடும் நெருக்கடி ஏற்பட்டது. கனிமொழி மந்திரி ஆக வேண்டும் என்றால், கழகத்தில் நெடுநாட்களாக மந்திரியாக இருப்பவர்களின் பதவியை பறிக்க வேண்டும் என்பதால், மவுனம் காத்தார் கருணாநிதி.
இந்த நேரத்தில் தினகரன் நாளேடு, கருணாநிதியின் வாரிசு யார் என்ற சர்ச்சைக்குரிய கருத்துக் கணிப்பை வெளியிட, இதனால் ஆத்திரமடைந்த அழகிரியின் ஆதரவாளர்கள், மதுரையில் அந்நாளேட்டின் மூன்று ஊழியர்களை படு பொலை செய்தனர்.
இந்த வன்முறை சம்பவம் நடந்து கொண்டிருக்கையில், அப்போது மத்திய மந்திரியாக இருந்த தயாநிதி மாறன், தமிழக உள்துறை செயலாளர் மாலதியை தொலைபேசியில் அழைத்து, “கவர்மெண்ட் இருக்கனுமா டிஸ்மிஸ் பண்ணணுமா ? நடவடிக்கை எடுக்கப் போறீந்களா இல்லையா ? “ என்று மிரட்டியதாகவும், மாலதி இவ்வுரையாடலை பதிவு செய்து வைத்திருந்ததாகவும், கருணாநிதியிடம் இவ்வுரையாடலை வழங்கியதாகவும், இதைக் கேட்டு ஆத்திரமடைந்த கருணாநிதி, நான் பார்த்து வளர்ந்த பையன், என் கவர்மெண்டையே டிஸ்மிஸ் பண்ணுவேன்னு சொல்றானே என்று ஆத்திரமடைந்ததாகவும், இதனால்தான் குடும்பத்தில் பெரும் பூசல் வளர்ந்ததாகவும் கூறுகின்றனர்.
மாறன் சகோதரர்கள் பிரிந்து சென்றவுடன், கட்சியில் நீண்ட நாட்களாக அமைச்சர்களாக இருக்கும், ஆற்காடு வீராசாமி மற்றும் துரை முருகன் ஆகியோர் கருணாநிதிக்கு மிக நெருக்கமானதாகவும், குடும்பத்தினரையும் மீறி, இவர்கள் இருவருக்கும் செல்வாக்கு வளர்ந்ததாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.
குடும்பம் பிரிந்திருந்த நேரத்தில், புதிதாக கலைஞர் டிவி என்று ஒன்று தொடங்கப் பட்டதும், செயற்கை கோள் தொலைக்காட்சியில் மாறன் சகோதரர்களின் இரும்புப் பிடியை உடைக்க, அரசு கேபிள் கார்ப்பரேஷன் துவங்கப் பட்டதும் நடந்தது.
ஜனவரி 2008 தொடங்கியே, கனிமொழியை மந்திரி ஆக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து, கருணாநிதி, பல நாட்கள் சிஐடி காலனி செல்வதையே தவிர்த்தார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், டெக்கான் க்ரோனிக்கிள் நாளிதழில், இரண்டு அதிகாரிகளுக்கிடையேயான உரையாடல் வெளியாகி, சட்டசபையில் பெரும் அமளியைக் கிளப்பியது. உடனடியாக இந்த விஷயத்தை மூட, கருணாநிதி, ஒரு விசாரணைக் கமிஷன் அமைத்தார்.
இந்தக் கமிஷன் விசாரணை நடத்திக் கொண்டிருக்கும் போதே, டாக்டர் சுப்ரமணியண் சுவாமி, அமைச்சர் பூங்கோதை, ஊழல் வழக்கில் சிக்கிய தன்னுடைய உறவினரை காப்பாற்ற, லஞ்ச ஒழிப்பு இயக்குநர் உபாத்யாயிடம் பேசிய உரையாடலை வெளியிட்டார்.
இந்த உரையாடல் வெளியானதும், அமைச்சர் பூங்கோதையிடம் இருந்து ராஜினாமா கடிதத்தை பெற்றார் கருணாநிதி.
இதே உரையாடலை வேறு யாராவது வெளியிட்டிருந்தால், கருணாநிதி, முரசொலியில் கடிதம் எழுதுவதோடு விஷயத்தை முடித்திருப்பார். ஆனால் சுப்ரமணியன் சுவாமி என்றால், கருணாநிதிக்கு நள்ளிரவில் கூட நடுக்கம் வரும். ஏனெனில், சுப்ரமணியன் சுவாமி யார் என்பதை நம் அனைவரையும் விட, நன்கு அறிந்தவர் கருணாநிதிதான். 1990ல் கருணாநிதி ஆட்சி கலைக்கப் பட்டதற்கு முழு காரணம், டாக்டர்.சுவாமிதான்.
இதனால் தான், ஏறக்குறைய 2 மாதங்களாக நீதிமன்ற புறக்கணிப்பு, கருணாநிதி, சோனியா படம் எரிப்பு உள்ளிட்ட பல போராட்டங்களை நடத்தி வந்த வழக்கறிஞர்களை கண்டு கொள்ளாமல் இருந்த கருணாநிதி, டாக்டர்.சுப்ரமணியன் சுவாமி மீது முட்டை வீச்சு என்றவுடன், ஆயிரக்கணக்கான போலீசை விட்டு, வழக்கறிஞர்கள் மீது கடும் தாக்குதல் நடத்த உத்தரவிட்டார்.
சுப்ரமணியன் சுவாமிக்குப் பதில், வேறு யாராவது ஒருவர் மீது, ஆசிட் வீசியிருந்தால் கூட கருணாநிதி கண்டு கொண்டிருக்க மாட்டார். வழக்கம் போல, ஒரு கவிதை எழுதி விட்டு கதையை முடித்திருப்பார்.
பூங்கோதையிடம் ராஜினாமா கடிதத்தைப் பெற்ற கருணாநிதிக்கு, அக்கடிதத்தை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று சிஐடி காலனி தரப்பில் இருந்து கடும் நெருக்கடி. அந்த சம்பவம் நடந்து கொண்டிருக்கையில் ஒரு நாள் சிஐடி காலனியில் தங்கியிருந்த கருணாநிதி, கடும் சண்டையிட்டு விட்டு, நள்ளிரவில் கிளம்பி, ஆலிவர் ரோடு வீட்டிற்கு திரும்பி இருக்கிறார். கருணாநிதி.
நெருக்கடி முற்றியதும், பிரச்சினையை தள்ளிப் போட, ராமச்சந்திரா மருத்துவமனையில் போய் படுத்துக் கொண்டார் கருணாநிதி. அப்போதும் பிரச்சினை தீராததால், வேறு வழியின்றி, பூங்கோதையின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்டார் கருணாநிதி.
இதற்கு பிறகு, பூங்கோதையைத்தான் ராஜினாமா செய்து விட்டீர்கள், கனிமொழியை மந்திரி ஆக்குங்கள் என்று கடும் நெருக்கடியை சந்தித்து வந்துள்ளார் கருணாநிதி.
இதற்குப் பிறகு, 2008 டிசம்பரில் நடந்த மாநாட்டில் கழகக் பொருளாளராக இருந்த ஆற்காடு வீராசாமியிடமிருந்து அந்தப் பதவி பறிக்கப் பட்டு ஸ்டாலினிடம் வழங்கப் பட்டது.
ஸ்டாலினிடம் முதல்வர் பொறுப்பு வழங்கப் படும் என்ற பெரும் எதிர்ப்பார்ப்பு பொய்த்துப் போனது.
ஜனவரி முதல், ஈழத் தமிழர் பிரச்சினை தமிழகத்தில் பெரிய அளவில் போராட்டமாய் உருவெடுத்ததும், ஈழப் பிரச்சினையையும், தேர்தலையும் காரணம் காட்டி, குடும்பப் பிரச்சினைக்கு தற்காலிக தீர்வு கண்டார் கருணாநிதி.
தம்பி பொருளாளர் ஆனதால் ஆத்திரமடைந்த அழகிரியை சமாதானப் படுத்த, அழகிரிக்கு பாராளுமன்ற தேர்தலில் எம்.பி பதவி அளித்து, பின்னர் மந்திரி ஆக்குகிறேன் என்று உறுதியளித்து சமாதானப் படுத்தினார்.
டிசம்பரில் மாறன் சகோதரர்கள் மீண்டும் கருணாநிதி குடும்பத்தோடு இணைந்தனர். இந்த இணைப்பு விழாவுக்கு, ராசாத்தி அம்மாளுக்கும், அவர் மகள் கனிமொழிக்கும் அழைப்பு வழங்கப் படவில்லை.
இதனால் தாங்கள் முழுவதும் புறக்கணிக்கப் படுவதாக சிஐடி காலனியினர் உணரத் தொடங்கினர்.
பிரிந்த குடும்பங்கள் இணைந்து, கருணாநிதிக்கு “இதயம் இனித்து, கண்கள் பனித்ததும்“ இதுவரை, கருணாநிதியோடு நெருக்கமாக இருந்த ஆற்காட்டாரும், துரை முருகனும் விலக்கப் பட தொடங்கினர்.
பிப்ரவரியில் குடும்பத்தில் நெருக்கடி முற்றத் தொடங்கியது. கனிமொழி கடும் அதிருப்தியில் இருந்தார். மாறன் சகோதரர்கள் கொஞ்ச கொஞ்சமாக தங்கள் அதிகாரத்தை மீண்டும் நிலைநாட்டத் தொடங்கினர்.
இதனால் குடும்பத்தில் சிக்கல் அதிகமாவதை உணர்ந்த கருணாநிதி, குடும்பச் சிக்கலைத் தீர்க்கவும், தமிழகத்தில் தீவிரமாகி வரும் இலங்கைத் தமிழர் பிரச்சினையை ஆறப் போடவும், கடும் முதுகு வலி என்று ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். ஆனால் மருத்துவமனையில் அனுமதிக்கப் படுவதற்கு முதல்நாள், தனக்கு நடந்த பாராட்டு விழாவையும் கலை நிகழ்ச்சிகளையும், 4 மணி நேரம் உட்கார்ந்து பார்த்துக் கொண்டு இருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
இந்த நேரத்தில்தான் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் கடுமையாக தாக்கப் பட்ட சம்பவம் நடைபெற்றது. தமிழகமே பரபரப்பாகி, தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் குதிக்க அனைத்து நீதிமன்றங்களும் ஸ்தம்பித்தன.
இந்த நேரத்தில் கருணாநிதிக்கு அறுவை சிகிச்சை என்ற தகவல் வந்தது. கருணாநிதியின் நாடகங்களை பல முறை பார்த்த அனுபவம் மிக்க வழக்கறிஞர்கள் கருணாநிதியின், சுயபச்சாதாபத்தையும், கழிவிரக்கத்தையும், ஒரு கிழட்டு நரியின் புலம்பலாக ஒதுக்கித் தள்ளி தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.
அந்த நேரத்தில் அவசர அவசரமாக கருணாநிதி செய்த காரியம் என்ன தெரியுமா ? மருத்துவமனையில் இருந்தபடியே மீண்டும் பூங்கோதையை தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக ஆக்கியது தான்.
மருத்துவமனையில் இருந்த படியே, மீண்டும் கருணாநிதி செய்த காரியம் தான் அனைவரையும், எரிச்சல் மூட்டியது.
தமிழகம் முழுவதும், ஈழத் தமிழருக்கான போராட்டம் தீவிரமடைந்திருந்தது. ஈழத்தில் தமிழர்கள் மீது விஷவாயு குண்டுகள் வீசப்பட்டுக் கொண்டிருந்தன. தமிழகமெங்கும் வழக்கறிஞர்கள் போராட்டங்கள் நடத்திக் கொண்டிருந்தனர்.
இந்தச் சூழ்நிலையில் கருணாநிதி கலைமாமணி விருதுகளை அறிவித்தார். விருது பெற்ற கலைமாமணிகள் யார் யார் தெரியுமா ?
நயன்தாரா
அசின்
மீரா ஜாஸ்மின்
சரோஜா தேவி
ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா
பரத்
அனு ஹாசன்
பட்டியல் எப்படி இருக்கிறது பார்த்தீர்களா ? இதுதான் கருணாநிதி மருத்துவமனையிலிருந்த படி வெளியிட்ட அறிவிப்பு.
மேலும் ஒரு திடுக்கிடும் தகவல். கருணாநிதிக்கு அறுவை சிகிச்சையே நடக்கவில்லை என்று தகவல் அறிந்தவர்கள் கூறுகிறார்கள். ராமச்சந்திரா மருத்துவமனையில் பணியாற்றும் பணியாளர்கள் உட்பட ஒருவரும் கருணாநிதி இருக்கும் தளத்திற்கே அனுமதிக்கப் படவில்லை. கருணாநிதிக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்களுக்கு இந்த விபரம் நன்றாகத் தெரிந்தாலும், எப்படி பேசுவார்கள் ?
இலங்கைப் பிரச்சினையிலிருந்து தப்பிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் தான் கருணாநிதி இந்த “ஆபத்தான அறுவை சிகிச்சை” என்ற நாடகத்தை நடத்தியதாக தகவல்கள் கூறுகின்றன.
தேர்தல் முடிந்ததும், தமிழகத்தில் ஓரளவுக்கு திமுக வெற்றி பெற்றாலும், காங்கிரஸ் அதிக இடங்களை பிடித்ததால் திமுகவுக்கு கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் கிடைத்த அதிகாரம் கிடைக்காது போனது.
தனது குடும்பத்தில் அனைவருக்கும் கேபினெட் அமைச்சர் பதவி என்ற கனவோடு டெல்லி சென்ற கருணாநிதி, காங்கிரசின் கெடுபிடியை பார்த்து, மனம் உடைந்து, பதவி ஏற்பு விழாவில் கூட பங்கேற்காமல் சென்னை திரும்பினார்.
அழகிரியை மந்திரி ஆக்காவிட்டால் மதுரை பற்றி எரியும். மாறனை மந்திரி ஆக்காவிட்டால், சன் டிவி கைவிட்டு விடும், ராஜாவை மந்திரி ஆக்காவிட்டால் ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம் யாருக்குச் சென்றது என்ற விபரம் வெளியே வரும் என்பதால், சமாதான உடன்படிக்கையாக இவர்கள் மூவரை மட்டும் மந்திரி ஆக்கி விட்டு, கனிமொழிக்கு வழக்கம் போல, இதயத்தில் இடம் அளித்தார்.
ஈழத் தமிழர் மறுவாழ்வுக்காக இலங்கை சென்ற எம்.பிக்கள் குழுவில் இடம் பெற்றிருந்தாலும், மந்திரி சபையில் இடம் பெறாததால் கனிமொழி, காய்மொழியானார்.
மத்தியில் ராசாவுக்கு அதே தொலைதொடர்புத் துறை வழங்கப் பட்டாலும், பழைய மாதிரி எதுவுமே செய்ய முடியவில்லை என்பதால் கருணாநிதிக்கு மேலும் மனப்புழுக்கம் ஏற்பட்டது.
இந்நிலையில், மத்திய அமைச்சராக பதவியேற்ற அழகிரி டெல்லியில் தரையில் விழுந்த மீனாக துடித்துக் கொண்டிருக்கிறார் என்பது ஊரறிந்த விஷயம். ஆங்கில அறிவுக் குறைவாலும், இந்தி சுத்தமாக தெரியாததாலும், வளம் கொழிக்கும் துறையாக இருந்தாலும், ரசாயனம் மற்றும் உரத்துறையில் அழகிரியால் சம்பாதிக்க முடியாமல் போனது மட்டுமல்ல வேலையே பார்க்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
தனக்கு செயலாளராக தமிழகத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ஏ.கே.விஸ்வநாதனை நியமித்தால் டெல்லியில் காலம் தள்ள முடியும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த அழகிரியின் கனவில், மன்மோகன் சிங் மண்ணை அள்ளிப் போட்டார்.
ஊழல் புகார் காரணமாக ஏ.கே.விஸ்வநாதனின் நியமனத்தை மன்மோகன் சிங் தள்ளுபடி செய்தார்.
ஏ.கே.விஸ்வநாதன், ஐபிஎஸ்
இதனால், ஏற்கனவே தண்ணீரில் இருந்து தரையில் விழுந்த மீன், கொதி வெயிலில் காய்வது போன்ற நிலைக்கு ஆளானார்
பாராளுமன்றத்தில் அமைச்சர்களுக்கு ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே பேச அனுமதி என்ற விதி, அழகிரியின் வெந்த புண்ணில் உப்பைத் தேய்த்தது.
எழுத்து பூர்வமாக, தமிழில் பேச வேண்டும் என்று அழகிரி அளித்த மனுவும் விதிகளைக் காரணம் காட்டி நிராகரிக்கப் பட்டது. இதனால், பாராளுமன்றம் செல்வதையே அழகிரி தவிர்க்கத் தொடங்கினார்.
தனது அமைச்சரவை கேள்விகளுக்கு கூட பதில் சொல்லாமல் துணை அமைச்சரை அனுப்பினார் அழகிரி.
இதனால் மீண்டும் மாநில அரசியலுக்குத் திரும்புவது என்று முடிவெடுத்த அழகிரி, திருச்செந்தூர் இடைத் தேர்தலில் போட்டியிடுவது என்ற தன் விருப்பத்தை கருணாநிதியிடம் தெரிவித்தார்.
அழகிரி, மாநில அரசியலுக்கு வந்தால், கருணாநிதிக்கு அறவே பிடிக்காத “சகோதர யுத்தம்“ தமிழகம் கண்டிராத அளவுக்கு தொடங்கி, மதுரையில் ரத்த ஆறு ஓடும் என்பதை நன்றாக அறிந்த கருணாநிதி, அழகிரியின் கோரிக்கையை நிராகரித்தார்.
மேலும், ஸ்டாலினுக்கு கைத்தடிகளை வைத்து ஆர்ப்பாட்ட அரசியல் பண்ணத் தெரியாது என்பதாலும், அழகிரி மாநில அரசியலுக்கு வந்தால், ஸ்டாலின் ஏற்கனவே இருப்பதை விட, மேலும் “மங்குணிப் பாண்டியாக“ ஆகி அரசியலை விட்டே ஒழிக்கப் படுவார் என்பதாலும், கருணாநிதி அழகிரியின் கோரிக்கையை மறுத்தார்.
அனிதா ராதாகிருஷ்ணன்
அழகிரியின் கோரிக்கையை நிராகரித்து விட்டு, லஞ்ச ஒழிப்புத் துறையின் சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்த தப்பிக்க கட்சி மாறிய அனிதா ராதாகிருஷ்ணனுக்கு இடைத் தேர்தலில் வாய்ப்பு அளித்தார். கட்சி மாறுகையில், வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்ற நிபந்தைனையை நிறைவேற்ற வேண்டும் என்பதால், அவ்வழக்கை முடிக்க லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநருக்கு உத்தரவிட்டார்.
இதற்கு நேர்மையான அதிகாரி ராமானுஜம் மறுத்ததாகவும் இதனாலேயே ராமானுஜம் மாற்றப் பட்டதாகவும், சவுக்குக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத அழகிரி கடும் அதிருப்தியில் இருப்பதாகவும், குடும்பத்திலும், அழகிரியை மாநில அரசியலுக்கு அழைத்து விட்டு, கனிமொழியை மத்திய மந்திரி ஆக்க வேண்டும் என்ற நெருக்கடி அதிகரித்திருப்பதாலுமே, கருணாநிதி, இந்த “ஓய்வு“ அறிவிப்பை வெளியிட்டுள்ளதாகவும் சவுக்குக்கு தகவல்கள் வந்துள்ளன.
கருணாநிதியின் ஓய்வு அறிவிப்பை பற்றி ஸ்டாலினிடம் கருத்து கேட்கப் பட்ட போது ஸ்டாலின் அளித்திருக்கும் பதில் கவனிக்கப் பட வேண்டியது. முதல்வர் பதவியை நீங்கள் ஏற்கத் தயாரா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு இந்தக் கேள்வியை முதல்வரிடமே கேளுங்கள் என்று பதிலளித்துள்ளார் ஸ்டாலின்.
ஆனால், புகழ்ச்சியையும், துதிபாடலையும், அதிகாரத்தையும், ஆக்சிஜன் போல சுவாசித்துக் கொண்டிருக்கும் கருணாநிதி, ஸ்டாலின் பேரனை இளைஞர் அணித் தலைவராக்கி அழகு பார்க்கும் வரை, கருணாநிதி அரசியலில் இருந்து ஓய்வு பெற வாய்ப்பே இல்லை என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.