தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

2009ம் ஆணடில் இந்தியா: முக்கிய நிகழ்வுகள்

ஜனவரி

1 - கபில்தேவ், கவாஸ்கர், பிஷன் சிங் பேடி ஆகியோர் ஐசிசியின் சர்வதேச புகழ் பெற்றோர் பட்டியலில் இடம் பெற்றனர்.

- அஸ்ஸாமில் குண்டுவெடித்து 5 பேர் பலி.

4 - ஐக்கிய முற்போக்குக் கூட்டணியுடனான உறவை துண்டித்துக் கொள்வதாக ஜம்மு காஷ்மீரின் மக்கள் ஜனநாயகக் கட்சி அறிவித்தது.

- நாடு முழுவதும் லாரிகள் ஸ்டிரைக் தொடங்கி நாட்டையே ஸ்தம்பிக்க வைத்தது.

5 - பாகிஸ்தான் தூதர் ஷாஹித் மாலிக்கை அழைத்து மும்பைத் தீவிரவாதத் தாக்குதல் குறித்த ஆதாரங்களை வழங்கியது இந்தியா.

7 - அஜ்மல் கசாப் பாகிஸ்தானிதான் என்று பாகிஸ்தான் அரசு முதல் முறையாக ஒப்புக் கொண்டது.

10 - மிகப் பெரிய பண மோசடியை ஒப்புக் கொண்ட சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவன தலைவர் ராமலிங்கராஜு கைது செய்யப்பட்டார்.

12 - இடைத் தேர்தலி்ல தோல்வி அடைந்ததால் ஜார்க்கண்ட் முதல்வர் சிபு சோரன் பதவி விலகினார்.

15 - பிரபல இயக்குநர் தபன்சின்ஹா மரணமடைந்தார்.

19 - ஜார்க்கண்ட் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

20 - உ.பி. முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் பாஜகவிலிருந்து விலகினார்.

24 - பிரதமர் மன்மோகன் சிங்குக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில், இருதய ரத்தக்குழாய் அடைப்பு அறுவைச் சிகிச்சை மூலம் நீக்கப்பட்டது.

25 - மங்களூர் பப்பில் மதுவுடன் நடனமாடிய பெண்களை ஸ்ரீராம்சேனா அமைப்பினர் தாறுமாறாக அடித்து விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

27 - முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன் மரணமடைந்தார்.

31 - தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லாவை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று கோரி, தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலசாமி, குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதி பரபரப்பை ஏற்படுத்தினார்.

பிப்ரவரி

2 - தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லாவை நீக்க மாட்டோம் என மத்திய அரசு கூறியது. தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலசாமியின் கோரிக்கையை நிராகரித்தது.

12- மும்பைத் தாக்குதல் சதித் திட்டம் பாகிஸ்தானில்தான் தீட்டப்பட்டது என்று அந்த நாடு ஒப்புக் கொண்டது.

13 - ஒரிசாவில் ரயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்தனர்.

25 - மும்பைத் தாக்குதல் வழக்கில் 11,000 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

மார்ச்

2 - நாடாளுமன்றத்திற்கு ஏப்ரல் 16 முதல் மே 13ம் தேதி வரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

6 - நியூயார்க்கில் ஏலத்தில் விடப்பட்ட மகாத்மா காந்தியடிகள் பயன்படுத்திய பொருட்களை தொழிலதிபர் விஜய் மல்லையா ரூ. 9.25 கோடிக்கு ஏலத்திற்கு எடுத்தார்.

7 - ஒரிசாவில் பாஜக - பிஜூ ஜனதாதளம் இடையிலான கூட்டணி முறிந்தது.

17 - மத உணர்வைத் தூண்டும் வகையில் பேசியதாக வருண் காந்தி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

23 - டாடா நிறுவனத்தின் ரூ. 1 லட்சம் மதிப்பிலான நானோ கார் அறிமுகம் செய்யப்பட்டது.

26- காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக லாலு பிரசாத் யாதவ், முலாயம் சிங் யாதவ், பாஸ்வான் ஆகியோர் புதிய கூட்டணியை அமைத்தனர்.

31 - லோக்சபா தேர்தலில் நடிகர் சஞ்சய் தத் போட்டியிட முடியாது என்று கூறி சுப்ரீம் கோர்ட் தடை விதித்து விட்டது.

ஏப்ரல்

1 - சேது சமுத்திரத் திட்டத்திற்காக உண்ணாவிரதம் என்ற பெயரில் பந்த் நடத்தியதாக கூறி முதல்வர் கருணாநிதி தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

6 - டெல்லி மருத்துவமனையில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கோவிந்த் சிங் குர்ஜார் மரணமடைந்தார்.

10- தேர்தல் ஆணையராக தமிழகத்தைச் சேர்ந்த சம்பத் நியமிக்கப்பட்டார்.

21 - தலைமைத் தேர்தல் ஆணையராக நவீன் சாவ்லா பதவியேற்றார்.

28 - போபர்ஸ் ஊழல் வழக்கிலிருந்து இத்தாலிய தொழிலதிபர் குவாத்ரோச்சியின் பெயரை சிபிஐ நீக்கியது.

மே

8 - வருண் காந்தி மீது பிரயோகிக்கப்பட்ட தேசிய பாதுகாப்புச் சட்டம் ரத்து செய்யப்பட்டது.

9 - இலங்கைத் தமிழர்கள் சம உரிமையுடன் வாழ இந்தியா நடவடிக்கை எடுக்கும் என பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்தார்.

16 - நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி 256 இடங்களையும், பாஜக கூட்டணி 161 இடங்களையும், 3வது அணி 68 இடங்களையும், 4வது அணி 28 இடங்களையும் பெற்றன.

19 - மீண்டும் பிரதமராக மன்மோகன் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

20 - மன்மோகன் சிங் ஆட்சியமைக்குமாறு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் அழைப்பு விடுத்தார்.

22 - மன்மோகன் சிங் 2வது முறையாக பிரதமராக பதவியேற்றார். அவருடன் 18 அமைச்சர்களும் பதவியேற்றனர்.

25 - மேற்கு வங்கம், வங்கதேசம், சிக்கிம், ஒரிசாவை அய்லா புயல் தாக்கியது.

31 - பிரபல எழுத்தாளர், கவிஞர் கமலாதாஸ் மரணமடைந்தார்.

ஜூன்

3- லோக்சபாவின் முதல் பெண் சபாநாயகராக மீரா குமார் பொறுப்பேற்றார்.

8 - லோக்சபா துணை சபாநாகராக பாஜகவின் கரியமுண்டா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

- கர்நாடக மாநிலம் கெய்கா அணு நிலையத்தில் பணியாற்றி வந்த தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி மகாலிங்கம் காணாமல் போனார். பின்னர் ஐந்து நாட்கள் கழித்து பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.

13 - பாஜகவுக்குள் உட்கட்சிப் பூசல் வெடித்தது. யஷ்வந்த் சின்ஹா, அருண் ஜெட்லி ஆகியோர் கட்சிப் பொறுப்புகளை ராஜினாமா செய்தனர்.

16 - மேற்கு வங்க மாநிலம் லால்கர் உள்ளிட்ட பகுதிகளை மாவோயிஸ்ட் நக்சலைட்டுகள் கைப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

- வேலைக்காரப் பெண்ணை இந்தி நடிகர் ஷைனி அகுஜா கற்பழித்தது உண்மை என்பது உறுதி செய்யப்பட்டது.

23 - உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக தோல்வி அடைந்ததற்குப் பொறுப்பேற்று அம்மாநில முதல்வர் பி.சி.கந்தூரியை பாஜக மேலிடம் கட்டாயப்படுத்தி விலக வைத்தது.

25 - இந்தியா முழுவதும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்வது குறித்து அரசு பரிசீலிப்பதாக மத்திய அமைச்சர் கபில் சிபல் தெரிவித்தார்.

28 - மலையாள இயக்குநர் லோஹிததாஸ் மரணமடைந்தார்.

29 - அம்பேத்கர், கன்ஷிராம் மற்றும் தனக்கு சிலைகள், நினைவிடங்களை அமைக்க ரூ. 2000 கோடியில் திட்டமிட்ட உ.பி. அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம், நோட்டீஸ் அனுப்ப உத்தரவு.

30- பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பான விசாரணை அறிக்கையை நீதிபதி மன்மோகன் சிங் லிபரான், பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தாக்கல் செய்தார்.

- மும்பையில், பிரமாண்ட கடல் பாலத்தை சோனியா காந்தி திறந்து வைத்தார்.

ஜூலை

2 - மனது ஒருமித்து, ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது குற்றமல்ல என்று டெல்லி உயர்நீதிமன்றம் பரபரப்புத் தீர்ப்பை அளித்தது.

5- வருண் காந்தி உள்ளிட்ட 3 முக்கியத் தலைவர்களை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

12 - சிபிஎம் பொலிட்பீரோவிலிருந்து கேரள முதல்வர் அச்சுதானந்தன் நீக்கப்பட்டார்.

- டெல்லி மெட்ரோ ரயில் பாலம் இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழந்தனர்.

21 - பிரபல இந்துஸ்தானி இசைப் பாடகி கங்குபாய் ஹங்கல் மரணமடைந்தார்.

- முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை, அமெரிக்க விமான நிறுவன பாதுகாவலர்கள் செருப்பைக் கழற்றுமாறும், காத்திருக்க வைத்தும் பாதுகாப்பு சோதனை என்ற பெயரில் கெடுபிடி செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

26 - இந்தியாவின் முதலாவது அணு சக்தி நீர்மூழ்கிக் கப்பல் அரிஹாந்த்தை பிரதமர் மன்மோகன் சிங் நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார்.

28 - சோபியான் கற்பழிப்பு மற்றும் கொலையில், தொடர்புப்படுத்தி குற்றம் சாட்டப்பட்டதால் கோபமடைந்த முதல்வர் உமர் அப்துல்லா முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். ஆனால் அதை ஆளுநர் ஏற்க மறுத்து விட்டார்.

29 - மலையாள நடிகர் ராஜன் பி தேவ் மரணமடைந்தார்.

ஆகஸ்ட்

3 - இந்தியாவில் முதல் பன்றிக் காய்ச்சல் பலியாக புனேவைச் சேர்ந்த ரீட்டா ஷேக் என்ற 14 வயது சிறுமி உயிரிழந்தாள்.

9 - பெங்களூரில் திருவள்ளுவர் சிலையை கர்நாடக முதல்வர் எதியூரப்பா முன்னிலையில் முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார்.

19 - ஜின்னாவைப் புகழ்ந்து நூல் எழுதியதற்காக ஜஸ்வந்த் சிங் பாஜகவிலிருந்து நீக்கப்பட்டார்.

29 - சந்திரயான் விண்கலத்துடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. சந்திரயான் செயலிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

செப்டம்பர்

2 - ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்.

8 - தினசரி ரூ. 1 லட்சம் வாடகை கொடுத்து ஆடம்பர ஹோட்டலில் தங்கியிருந்த மத்திய அமைச்சர்கள் எஸ்.எம்.கிருஷ்ணா, சசி தரூர் ஆகியோர் பிரணாப் முகர்ஜியின் உத்தரவைத் தொடர்ந்து ஹோட்டலை விட்டு வெளியேறினர்.

11 - ரூ. 2500 கோடி செலவில் தலைவர்களுக்கு சிலைகள், நினைவிடங்கள், பூங்காக்கள் அமைக்க மாயாவதி அரசுக்கு சுப்ரீம் கோர்ட் தடை.

- நிதாரி படுகொலை வழக்கில் மனீந்தர் சிங் விடுதலை. வேலைக்காரருக்கு மட்டும் தூக்குத் தண்டனை.

15 - சிக்கண நடவடிக்கையின் ஒரு பகுதியாக ராகுல் காந்தி ரயிலில் பயணம் செய்து, சாதாரண சாப்பாட்டை சாப்பிட்டு ஸ்டண்ட் அடித்தார்.

24- நிலவில் தண்ணீர் இருப்பதை சந்திரயான் விண்கலத்தில் இடம் பெற்றிருந்த அமெரிக்க செயற்கைக் கோள் கண்டுபிடித்தது.

29 - தன்னைத் தாக்க வந்த தீவிரவாதிகளை அவர்களிடமிருந்த ஏ.கே. 47 துப்பாக்கியைப் பறித்து சரமாரியாக சுட்டார் காஷ்மீர் பெண் ருக்ஷானா. இதில் ஒரு தீவரவாதி உயிரிழந்தான்.

30 - ஏர் இந்தியா விமானிகள் தங்களது வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்றனர்.

அக்டோபர்

3- போபர்ஸ் வழக்கிலிருந்து குவாத்ரோச்சியின் பெயரை நீக்கும் மனுவை கோர்ட்டில் சமர்ப்பித்தது சிபிஐ.

5 - முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டுவதற்கான ஆய்வை மேற்கொள்ள மத்திய அரசு வழங்கிய அனுமதியை நிறுத்தி வைக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டை அணுகுவோம் என முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.

6 - ஜார்க்கண்ட் மாநிலத்தில் போலீஸ் அதிகாரியை தலையைத் துண்டித்து கொடூரமாகக் கொன்றனர் மாவோயிஸ்ட் நக்சலைட்டுகள்.

7 - தமிழகத்தில் பிறந்தவரான வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

9 - மாயாவதி, கன்ஷிராம் உள்ளிட்டோரின் சிலைகளை நிறுவும் நினைவிடப் பணிகளை உடனடியாக நிறுத்த சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு.

10- உ.பியில் வளரும் கிரிக்கெட் வீரர் ககந்தீப் சிங் சுட்டுக் கொல்லப்பட்டார்.

13 - மகாராஷ்டிரா, ஹரியானா, அருணாச்சல் பிரதேசத்தில் சட்டசபைத் தேர்தல் நடந்தது.

19 - புதிய அணை தொடர்பான ஆய்வுப் பணியை தொடங்கியது கேரளா.

21 - புதிய அணை தொடர்பான கேரளாவின ஆய்வுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுத்து விட்டது.

22 - மகாராஷ்டிரா, அருணாச்சல் பிரதேசத்தில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைப் பிடித்தது. ஹரியானாவில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

27 - ஒரிசாவிலிருந்து சென்ற பயணிகள் ரயிலை மாவோயிஸ்டுகள் சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 4 மணி நேர போராட்டத்திற்குப் பின்னர் ரயில் மீட்கப்பட்டது.

29 - கர்நாடக அரசியல் நெருக்கடி முற்றி போட்டி எம்.எல்.ஏக்கள் 20 பேர் ஹைதராபாத் கொண்டு போகப்பட்டனர்.

30- பாஜக ஆட்சியில் ரூ. ஒன்றரை லட்சம் கோடி அளவுக்கு ஸ்பெக்ட்ரம் அலை வரிசை ஒதுக்கீட்டில் ஊழல் நடந்ததாக ராசா குற்றம் சாட்டினார்.

31 - 2 வார கால ரெட்டி சகோதரர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது. சமரசத் திட்டம் முடிவானது. எதியூரப்பா தொடர்ந்து முதல்வர் பதவியில் நீடிப்பார் என அறிவிக்கப்பட்டது.

- இஸ்ரோவின் புதிய தலைவராக ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்றார்.

நவம்பர்

2 - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 21 நீதிபதிகள் சொத்துக் கணக்கை வெளியிட்டனர்.

5 - உச்சநீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல் அவசரச் சட்டம் இயற்றியது ஏன் என்று கேரளாவுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

9 - மகாராஷ்டிர சட்டசபையில் சமாஜ்வாடிக் கட்சி எம்.எல்.ஏ அபு ஆஸ்மி தாக்கப்பட்டார்.

7 - மகாராஷ்டிர முதல்வராக அசோக் சவான் 2வது முறையாக பதவியேற்றார்.

10 - முல்லைப் பெரியாறு அணை வழக்கை அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றி உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.

19 - கரும்பு விலை நிர்ணய சட்டத்தை எதிர்த்து நாடாளுமன்றத்தில் பெரும் அமளி.

22 - மும்பை அருகே நடந்த நிகழ்ச்சியில் ஷில்பா ஷெட்டியும், ராஜ் குந்த்ராவும் கல்யாணம் செய்து கொண்டனர்.

23 - பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக விசாரணை நடத்திய லிபரான் கமிஷன் அறிக்கை ரகசியமாக வெளியானதால் நாடாளுமன்றத்தில் புயல் வீசியது. வாஜ்பாய், அத்வானி உள்ளிட்டோரைக் குற்றம் சாட்டியிருந்தார் நீதிபதி மன்மோகன் சிங் லிபரான்.

25 - சுகோய் போர் விமானத்தில் பறந்து சாதனை படைத்தார் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல்.

29 - தனி தெலுங்கானாவுக்காக சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க்க கிளம்பிய தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் கைது. தெலுங்கானா முழுவதும் பெரும் வன்முறை.

30 - பல ஆயிரம் கோடி ஊழல் தொடர்பாக ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மது கோடா கைது.

டிசம்பர்

2 - நதி நீர் இணைப்புத் திட்டம் கைவிடப்படுவதாக அறிவித்தது மத்திய அரசு.

5 - மறைந்த ராஜசேகர ரெட்டியின் மனைவி விஜயலட்சுமி, புலிவெந்துலா தொகுதியிலிருந்து போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

6 - இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் வென்று, டெஸ்ட் தர வரிசையில் முதல் முறையாக முதலிடத்தைப் பிடித்தது இந்திய கிரிக்கெட் அணி.

7 - கச்சத்தீவை திரும்பப் பெறுவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் திட்டவட்டமாக அறிவித்தது.

9 - பூரி விழாவில் பங்கேற்கச் சென்ற குடியரசுத் தலைவரின் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. பிரதீபா பாட்டீல் உயிர் தப்பினார்.

12 - உ.பியைப் பிரித்து பூர்வாஞ்சல் மாநிலம் அமைக்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்குக்கு மாயாவதி கடிதம் எழுதினார்.

18 - லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து எல்.கே.அத்வானி விலகினார்.

- பி.டி.தினகரனை உச்சநீதிமன்ற நீதிபதியாக்கும் பரிந்துரை நிறுத்தி வைக்கப்படுவதாக உச்சநீதிமன்றம் அறிவித்தது.

19 - பாஜக தலைவராக நிதின் கட்காரி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

- இந்திய கிரிக்கெட் கேப்டன் டோணிக்கு 2 ஒரு நாள் போட்டிகளில் ஆட தடை விதிக்கப்பட்டது.

21 - மும்பை சித்திவிநாயக் கோவிலுக்கு வெளியே படுத்துத் தூங்கிய அப்பாவி பக்தர்களை கடுமையாகத் தாக்கினர் மகாராஷ்டிர நவ நிர்மான் சேனா கட்சியினர்.

- ஹேமந்த் கர்கரே, அசோக் காம்தே, விஜய் சலஸ்கர் என எந்த அதிகாரியையும் நான் சுட்டுக் கொல்லவில்லை என்று தனி கோர்ட் நீதிபதியிடம் கூறினான் அஜ்மல் கசாப்.

23 - தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ், அக்கட்சியின் சார்பில் எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட விஜயசாந்தி ஆகியோர் தங்களது எம்.பி பதவிகளை ராஜினாமா செய்தனர். இவர்கள் தவிர 82 தெலுங்கானா பகுதி எம்.எல்.ஏக்களும் பதவிகளை ராஜினாமா செய்தனர்.

25 - பாஸ்போர்ட், டிக்கெட் எதுவுமில்லாமல் விமானத்தின் கழிவறையில் பதுங்கியபடி, சவூதியில் இருந்து ஜெய்ப்பூருக்கு வந்த உ.பி.யைச் சேர்ந்த ஹபீப் என்பவர் கைது செய்யப்பட்டார்.

26 - பெண்களுடன் உல்லாசமாக இருந்து கையும் களவுமாக பிடிபட்ட என்.டி.திவாரி, ஆந்திர மாநில ஆளுநர் பதவியிலிருந்து விலகினார்.

27 - ஆந்திர மாநில ஆளுநராக சட்டீஸ்கர் ஆளுநர் நரசிம்மன் கூடுதல் பொறுப்பேற்றார்.

- பெரோஷா கோட்லா மைதான பிட்ச் அபாயகரமானதாக மாறியதால் இந்தியா-இலங்கை இடையிலான 5வது ஒரு நாள் போட்டி ரத்து செய்யப்பட்டது. ரசிகர்கள் வன்முறையில் இறங்கினர்.

29 - பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் நடந்த பயங்கர தீவிபத்தில் 2 பேர் பலி

- டெல்லியில் நடந்த கிரிக்கெட் சங்க கூட்டத்தில் கலந்து கொண்ட கீர்த்தி ஆசாத் தாக்கப்பட்டதாக பரபரப்பு.

30 - தெலுங்கானாவில் பந்த். ஹைதராபாத், தெலுங்கானா பிராந்தியம் ஸ்தம்பித்தது.

- கன்னட நடிகர் விஷ்ணுவர்த்தன் மரணமடைந்தார்.

- நடிகர் முகேஷ், சரிதா, பரஸ்பர விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல கோர்ட்டை அணுகினர்.

- ஜார்க்கண்ட் முதல்வராக சிபு சோரன் பதவியேற்றார்.

....பகலவன்....