தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

கருணாஸின் முக்குலத்தோரின் முகவரி என்ற இசை ஆல்பம்


கலைத் துறையில் இருக்கும் பலரும் தங்களுடைய சாதி அடையாளங்களை வெளிப்படுத்திக் கொள்வதை விரும்புவதில்லை. மீறி வெளிப்படுத்திக் கொள்ளும் பலரும் பொதுவான ரசிகர்களால் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள். அப்படி அடையாளப்படுத்திக் கொண்டவர்களின் வரிசையில் சமீபத்திய சேர்க்கை நடிகர் கருணாஸ். சமீபமாக முக்குலத்தோர் சங்கக் கூட்டங்களில் கலந்து கொள்ளத் தொடங்கியிருக்கிறார். கூடவே அவர் வெளியிட்டிருக்கும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரைப் பற்றிய பாடல்கள் அடங்கிய முக்குலத்தோரின் முகவரி என்ற இசை ஆல்பம் அவருடைய நிலையை இன்னும் வெளிப்படையாக்கியிருக்கிறது.


இங்கு அவரின் ஜாதி நிலையினை பேட்டியாக அளித்துள்ள பதிலை பாருங்கள் ....


திடீரென தேவர் பேரவைக்கூட்டங்களில் கலந்துகொள்ள ஆரம்பிச்சிருக்கீங்களே?

“பிறப்பிலிருந்து இறப்பு வரை மனிதனுக்கு சாதி தேவைப்படுகிறது. இடைப்பட்ட காலத்திலும் எந்தெந்த ரூபத்திலோ சாதி அடையாளம் உபயோகிக்கப்படுகிறது. ஆனால், சினிமாவில் இருக்கிற பலரும் ஏனோ சாதி சாயல் வந்துவிடக்கூடாது என நினைக்கிறார்கள்.அப்படி பயப்படவேண்டிய அவசியம் இல்லை.


கருணாஸ் எல்லோருக்கும் பொதுவான நடிகர்தானே, அவருக்கு இதுமாதிரியான சாயம் தேவையா? என்பது போன்ற விமர்சனங்களைச் சந்திக்க நேரிடுமே?


சாதிக்கும் கலைக்கும் என்னசம்பந்தம்? கலை என்பது இனம், மொழி கடந்தது. கமல்ஹாசன் தேவர்மகனில் நடித்தபோது அவரை ஐயராகவா பார்த்தார்கள்? தென் மாவட்டங்களில் அந்த படம் முந்நூறு நாட்கள் ஓடவில்லையா?... எனக்கு இது தேவையா என நினைப்பவர்கள்தான் சாதி வெறி பிடித்தவர்கள். எந்த விஷயங்களிலும் சாதியை பயன்படுத்தாமல் இருக்கச்சொல்லுங்கள் பார்ப்போம். அதுமட்டும் இங்கு சாத்தியமேயில்லை.


பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜாதி தலைவர் இல்லை. அரசியல்வாதிகளில் அப்பழுக்கற்றவர் தேவர். சுதந்திர போராட்ட வீர்ர், கடைசிவரை திருமணமே செய்துகொள்ளாமல் தனது சொத்துக்களை மக்களுக்கே கொடுத்த தியாகி. 57-ல்பார்வர்டு பிளாக் கட்சியை தென்னகத்தில் கொண்டுவந்து 30 எம்.எல்.ஏக்களை கொடுத்தவர். அடுத்தவரின் பணம் ஒரு ரூபாய்க்கு கூட ஆசைப்படாத ஆன்மீகவாதி. தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் என்று சொன்ன அற்புத மனிதர். இப்படிப்பட்ட ஒருவரை இனி உலகம் காணாது. இந்த தேசியத் தலைவரை, அரசியல் தலைவரை சிலர் தங்களின் சுய லாபத்திற்காக ஜாதித்தலைவராகத் திரித்துவிட்டது எனக்கு வருத்தம் தரும் விஷயமாக இருக்கிறது.


இவ்வளவு சொல்லும் நீங்கள், ’முக்குலத்தோரின் முகவரி’ என்னும் பெயரில் ஆல்பம் வெளியிட்டுள்ளீர்களே?


இன்றைய சமுதாயம் மறைந்த மூத்ததலைவர்களை மதிக்கணும். முன்னோர்களை நினைப்பது நமது கடமை. அந்த வகையில்தான் நான் அந்த ஆல்பத்தை வெளியிட்டேன். இதற்கும் சாதிக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? நான் யாருக்கும் தாழ்ந்தவனல்ல, எனக்கு தாழ்ந்தவரும் இல்லை என்று நினைப்பவன் இந்த கருணாஸ். இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர். இந்த மூவர்தான்முக்குலம் என்பது எனது கருத்து.


தேவர் பேரவையிலிருந்து பதவிகொடுத்தால் ஏற்றுக்கொள்வீர்களா?


ஒருபோதும் ஏற்கமாட்டேன். சிறு வயதிலிருந்தே எனக்கு அரசியல் தெரியும். காசு வாங்கிக்கொண்டு ஓட்டுபோடுவதும், ஓட்டு வாங்கிக்கொள்பவர்கள் மக்களை மறப்பதும் ஜனநாயகம் கிடையாது. இதில் நான் பதவிக்கு வந்து நான் என்ன கிழிக்கப்போறேன்?


வருங்காலத்தில் இதற்கான சாத்தியம் உண்டா?


மனிதனும் மாற்றத்திற்கு உட்பட்டவன், உலகமும் மாற்றத்திற்கு உட்பட்டது. மாற்றம் ஒன்றே மாறாதது. எனினும் என்னை பற்றி மற்றவர்களைவிட எனக்கு நன்றாகவே தெரியும். நான் ஒரு போராளி. ஒன்றைஅடைவதற்கு நான் சாக வேண்டுமென்றால் அதற்கும் நான் தயார். என் வீட்டில் ஐந்துகார்கள் இருந்தது. திடீரென ஒரு கார்தான் இருக்கிறது. எதுவும் இங்கே நிரந்தரம் இல்லைஎன்பதை நான் உணர்ந்த தருணம் அது. இது நிலையில்லாத உலகம். எதன் பேரிலும் ஜனங்களை ஏமாற்ற முடியாது. அப்படி ஏமாற்றுபவர்கள் பின் விளைவுகளை நிச்சயம் சந்திப்பார்கள்.


யாரை மனதில் வைத்துக்கொண்டு இதனைச் சொல்கிறீர்கள்?


யாரையும் நான் குறிப்பிட்டுச் சொல்ல விரும்பவில்லை. அப்படி பேசினால், நிறை பேசவேண்டியிருக்கும். இப்போதைக்குவேண்டாம்.


வேறு திட்டம் ஏதும் மனதில் இருக்கிறதா?


இருக்கு. ஜாதி,மதம் கடந்தவராகத்தான் நான் தேவரை பார்க்கிறேன். தேவர் ஜெயந்தி விழாவுக்கு சென்றபோது, தனித்தனி அமைப்புகளாக அவரது சமாதிக்கு மாலை போட்டதை நான் பார்த்தேன். அந்த நிமிஷம் ரத்தக் கண்ணீர் வராத குறைதான். அந்த அமைப்புகளை ஒற்றுமைப்படுத்தும் முயற்சியை வருங்காலத்தில் எடுக்கவேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது.


விரைவில் கருணாஸை வேறொரு முகத்தோடு பார்க்கப் போகிறோம் என்றுமட்டும் தோன்றுகிறது.

என்று இந்த ஜாதி ரீதியலான செயல்கள் தடை செய்யப்படுமோ ?

....பகலவன்....