ஒபாமாவை நம்பலாமா..?
முழுப்பணத்தையும் இழந்தவனுக்கு தான் அதோட வலியும்,வேதனையும் புரியும்னு சொல்வாங்க.., பின்னாளில் பணத்தை எடுத்தவனுக்கு பறிகொடுத்தவன் பாடம் புகட்டும்போது அவன் எவ்வளவு சந்தோசப்படுவானோ அதே மாதிரி தான் அமெரிக்க அதிபர் ஒபமா அந்நாட்டின் பிரதமராக பதவி ஏற்றபோதும் எல்லோரும் சந்தோசப்பட்டார்கள்.
அவர் சார்ந்த இனமக்களை விட உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் எல்லையில்லா மகிழ்ச்சியில் திளைத்தனர்.காரணம்,சிறுபான்மைஇன மக்களுக்கு உரிமைகள் மறுக்கப்படும் போது அதற்கு எதிராகவும்,மேலும் உலகில் எந்த பகுதியில் மனித உரிமை மீறல்கள் நடந்தாலும் அதையும் எதிர்த்து குரல் கொடுக்கப்போவதாகவும்,அதற்கு ஆதரவாக தான் இருப்பதாகவும் அவர் சொன்னார்.
தான் சார்ந்த இனம் நிறவெறியால் எங்கு ஒதுக்கப்பட்டதோ அதே நாட்டில் உள்ள மக்களை தனக்கு கீழ் கொண்டு வந்து ஆட்சி செய்யும் அவருடைய தன்னம்பிக்கையை பார்த்து எல்லோருமே வியந்து தான் போய் விட்டார்கள்.
ஆனால்,பதவி நாற்காலியில் உட்கார்ந்தவுடன் அவரும் ஒரு முழுமையான அமெரிக்க வெள்ளைக்காரராகவே மாறிவிட்டார்.ஒட்டு மொத்த உலகத்துக்கும் போலிஸ்காரனாக இருந்து வரும் அமெரிக்கா இலங்கையில் நடந்துவரும்
ஒரு இனத்திற்கெதிரான உரிமை மீறல்களை இதுவரை தட்டிக் கேட்டதில்லை,ஆனால் ஒபாமா இதற்கு ஒரு தீர்வை தருவார் என்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள்.
ஆனால் நடந்தது என்ன?
தமிழக முதல்வரைப் போல் ஒன்றுக்கு மூன்று முறை அறிக்கை விட்டதோடு சரி,ஒரு துரும்பை கூட அசைக்கவில்லை. உலகம் முழுக்க எத்தனையோ இனமக்கள் வாழ்ந்து கொண்டிருந்தாலும் அவர்களில் எங்கு போனாலும் எப்போதும் உடலாலும்,மனதாலும் பெரிதும் பாதிக்கப்படுவது தமிழும்,தமிழர்களும் தான்.
பதவியை பிடிப்பதற்காக செய்ய விருப்பமில்லாத வாக்குறுதிகளை சொல்லி வெற்றிபெற நினைக்கும் சுயநல அரசியல்வாதியாகத்தான் ஒபாமாவும் இருக்கிறார்.தன் இனத்தை சேர்ந்தவர்களை விட ஈழத்தமிழர்கள் ஒபாமாவைத்தான் அதிகம் நம்பினார்கள்.அதற்கு ஒரே காரணம் அவரும் ஒரு அடிமைபடுத்தப்பட்ட இனத்திலிருந்து வந்தவர்,அதனால் ஈழத்தமிழர்களின் வலிகளும்,வேதனைகளும் அவருக்கு கண்டிப்பாக புரியும் என்ற நம்பிக்கைதான்.
ஆனால் உலகத்தில் உள்ள ஒட்டு மொத்த தமிழர்களையும் நம்ப வைத்து கழுத்தறுத்துக் கொண்டிருக்கும் நாடுகளில் அமெரிக்காவும் சேர்ந்து விட்டதை உண்மையிலேயே ஒபாமா நிரூபித்து வருகிறார்.உலகத்தில் உள்ள எல்லா தமிழர்களும் வீதியில் வந்து புலிகளின் கொடிகளை கைகளில் ஏந்தியும்,விடுதலைப்புலிகள் தான் எங்களின் பிரதிநிதிகள் என்று வாய் வலிக்க கத்தியும் உலகத்தில் உள்ள எந்த நாடும் அதை கொஞ்சம் கூட காதில் வாங்கிக்கொள்ளவில்லை.
மாறாக இன்னும் கூடுதலாக ஆயுதங்களையும் ,பண உதவிகளையும் இலங்கை இனவெறி அரசுக்கு வழங்கி ஒரு இனம் முழுமையாக அழிக்கும் பாவத்தை கூட்டாக சேர்ந்து செய்து விட்டார்கள்.சரி, விடுதலைப்புலிகள் அமைப்பை விட்டு விடுங்கள்,அங்கு உள்ள தமிழர்களை காப்பதற்கோ அல்லது விடுதலைப்புலிகள் அமைப்பை முற்றாக ஒழித்து விட்டோம் என்று இலங்கை அரசு அறிவித்த பிறகோ இதுவரையிலும் ஒபாமா உட்பட எந்த உலகநாடுகளும் தமிழர்களுக்கு ஒரு தீர்வை வாங்கித்தர முன்வரவில்லை.
ஆக ஈழத்தமிழர்களுக்கு இப்போது அல்ல. எப்போதோ புரிந்து விட்டது நாம் ஒபாமா மற்றும் உலக நாடுகளால் ஏமாற்றப்படுகிறோம் என்று.
தொகுப்பு
ஈழத் தமிழர் வரலாறு