தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

உலகையே உலுக்கும் ஊடகவியலாளர்கள் கொலை - அதிர்ச்சி தகவல்

ஊடகம் என்பது ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்பார்கள். அந்த நான்காவது தூண் சரியான முறையில் பேணப்படுகிறதா என்பது கேள்விக்குறிதான். எல்லைகளைத் தாண்டிய ஊடகவியலாளர் அமைப்பு இன்று வெளியிட்டுள்ள அறிக்கை இதற்கு நல்லதொரு சான்றாகும். வாசிக்கும் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் பல்வேறு தகவல்களை உள்ளடக்கி அதன் வருடாந்த அறிக்கை வெளிவந்திருக்கிறது.


உலக நாடுகளில் 2009 ஆம் ஆண்டில் 86 ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளார்கள். 33 பேர் கடத்தப்பட்டுள்ளார்கள். 573 பேர் கைது செய்யப்பட்டதுடன் 1456 பேர் உடல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளார்கள். 2008 ஆம் ஆண்டில் 60 ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டனர். 2009 ஆம் ஆண்டில் 26 வீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளமை சர்வதேச ஊடக அமைப்புகளின் கடுமையான நடவடிக்கைகளின் தேவையை உணர்த்தியுள்ளது.


யுத்தம் மற்றும் தேர்தல்கள் விடயம் தொடர்பில் 2009 ஆண்டில் ஊடகவியலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். உண்மையான செய்திகளை வெளிக்கொணர்வதில் உலக அளவில் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பாரிய பாதிப்புகளை உண்டுபண்ணியுள்ளன. பெரும்பாலான ஊடகவியலாளர்கள் அவர்களது சொந்த நாட்டிலேயே கொலை செய்யப்பட்ட கோரச் சம்பவங்கள் பல இடம்பெற்றுள்ளன. ஆப்கான் நாட்டிலும் மெக்சிகோ, சோமாலியா ஆகிய பகுதிகளிலும் அதிகமான ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டுள்ளார்கள்.


உடல் ரீதியாகத் தாக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் எண்ணிக்கை 2008 ஆம் ஆண்டு 929 ஆக இருந்தது. எனினும் இவ்வாண்டு 1456 ஆக உயர்வடைந்துள்ளது. இதில் 364 முறைப்பாடுகள் ஆசிய நாடுகளில் பதிவாகியுள்ளன. பாகிஸ்தான், இலங்கை, நேபாளம் ஆகிய நாடுகளில் இவ்வாறான சம்பவங்கள் அதிகமாக இடம்பெற்றுள்ளன.


தேர்தல் வன்முறை காரணமாக பிலிப்பைன்ஸ் நாட்டில் 30 ஊடகவியலார்கள் கொலை செய்யப்பட்ட சம்பவமே இவ்வாண்டில் அநேகரது விமர்சனத்துக்கு உள்ளானது. ஒரே நேரத்தில் மிக அதிகமான ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்ட இச்சம்பவத்தை உலக நாடுகள் பல கண்டித்திருந்தன. அதேவேளை, தமது சுயகருத்துக்களை இணையத்தில் வெளியிட்ட நூற்றுக்கும் அதிகமான வலைப்பதிவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.


எகிப்து நாட்டின் வலைப்பதிவர் கரீம் அமீர் தனது சொந்த கருத்தினை வெளியிட்டமைக்காக சிறைவாசம் அனுபவித்து வருகிறார். அத்துடன் வலைத்தளத்தினூடாக பிரசித்தி பெற்ற சர்கனர் என்ற நகைச்சுவை நடிகர் இன்னும் 34 வருடங்கள் சிறையில் கழிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.


உலகம் முழுவதும் 167 ஊடகவியலாளர்கள் இதுவரை சிறைவாசம் அனுபவித்து வருகிறார்கள். மத்திய கிழக்கு நாடுகளில் சராசரியாக ஊடகவியலாளர் ஒருவரேனும் ஏதோ ஒரு காரணத்துக்காகத் துன்புறுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. ஈராக்கில் மாத்திரம் 60 ஊடகவியலாளர்கள் உடலளவில் தாக்கப்பட்டுள்ளார்கள். உண்மையான செய்திகளை வெளியிட்ட காரணத்துக்காக பலாத்காரமாக நாட்டை விட்டு வெளியேற்றப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பிலும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


ஊடகங்களின் பங்களிப்பு இல்லை எனின், உலக நகர்வும் பூஜ்ஜியமாகவே இருக்கும். ஊடகவியலாளர்கள் சமுதாயம் சார்ந்தவர்கள். சமுதாயத்துக்காக உழைப்பவர்கள். சமுதாயத்துக்காகப் பாடுபடும் ஊடகவியலார்கள் குறுகிய நோக்கங்களை அடைந்து கொள்வதற்காக துன்புறுத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும்.


இலங்கையில் இரண்டு ஊடகவியலாளர்கள் 2009 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டுள்ளார்கள். பிரபலமான ‘சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை, உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவமாகும். அதே போன்று, மற்றுமொரு ஊடகவியலாளர் திஸ்ஸநாயகம் யுத்த காலத்தில் உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டுக்காகத் தற்போது 20 வருட கடூழியச் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றார்.


பெரும்பாலான நாடுகளில் ஊடக சுதந்திரம் இருப்பதாக வெறும் பேச்சளவில் மாத்திரமே கூறப்பட்டு வருகிறது. எனினும் உண்மைச் செய்திகளை வெளிக்கொணர்வதில் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கும் மாற்றுத்தரப்புகளிடமிருந்து வரும் சவால்களுக்கும் தீர்வு காணப்பட்டதாகத் தெரியவில்லை.


மேற்கூறப்பட்ட புள்ளிவிபரங்களைப் பார்க்கும்போது உலக நாடுகளில் ஜனநாயகத்துக்குக் கிடைத்த தோல்வியாகவே எண்ணத் தோன்றுகிறது. இனி வரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க உலக நாட்டுத்தலைவர்கள் ஒன்றுபட வேண்டியது காலத்தின் தேவையாகும்.