தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

பின்தங்கும் தமிழ்நாடு. உண்மையான நிலவரம் இங்கே.

               கடந்த 2008-09ம் ஆண்டு கணக்கீட்டின்படி, தென்மாநிலங்களிலேயே பொருளாதார வளர்ச்சியில் மிகவும் பின்தங்கிய மாநிலமாக தமிழகம் ஆகியுள்ளது. மேலும், தொழில் துறையில் ஒரே 1 சதவீதம் மட்டுமே வளர்ச்சியை எட்டியுள்ளது. இந்நிலையில், வரும் 7ம் தேதியன்று தமிழகத்துக்கான நிதி பங்கீட்டை பெறுவதற்கு, முதல்வர் கருணாநிதி டில்லி செல்லவுள்ளார். 

அனைத்து மாநிலங்களுக்கும் ஒவ்வொரு ஆண்டும் நிதி ஒதுக் கீட்டை மத்திய திட்டக்கமிஷன் வழங்கி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் வழங்கும் நிதியை மாநில அரசுகள் எவ்வாறு பயன்படுத்தியுள்ளன; எந்தெந்த துறைகளில் என்னென்ன மாதிரியான வளர்ச்சியை இந்த நிதியின் மூலம் எட்டியுள்ளன என்பது குறித்தெல்லாம் மத்திய திட்டக்கமிஷன் ஆராய்வது வழக்கம்.கடந்த 2009-10ம் ஆண்டில் தமிழகத்துக்கு 17 ஆயிரத்து 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப் பட்டது. இந்த நிதி முழுவதும் அதாவது 100 சதவீதம் வரை தமிழக அரசால் செலவிடப் பட்டுள்ளது. இதில், அதிக பட்சமாக மின்சாரத் துறைக்கு 2 ஆயிரத்து 751 கோடியும், போக்குவரத்துத் துறைக்கு 2 ஆயிரத்து 91 கோடி ரூபாயும் செலவிடப்பட்டுள்ளது. சமூக நலத்துறைக்கு 8 ஆயிரத்து 70 கோடி ரூபாய் செலவிடப் பட்டது.கல்வித் துறைக்கு திட்டமிடப் பட்ட செலவு 936.81 கோடி; ஆனால், செலவிடப்பட்டதோ 837.11 கோடி ரூபாய் மட்டுமே என்றும் தெரிய வந்துள்ளது. கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்ததை விட ஏன் குறைவாக செலவிடப்பட்டது என்பதற்கான காரணம் தெரியவில்லை.  

பொருளதார வளர்ச்சியைப் பொறுத்தவரை தமிழகம் வெறும் 4.6 சதவீதம் மட்டுமே பெற்றுள்ளது. கேரளா 7 சதவீதமும், ஆந்திரா 5.5 சதவீதமும், கர்நாடகா 5.1 சதவீதமும் பொருளாதார வளர்ச்சியை எட்டியுள்ள நிலையில் தென்மாநிலங்களிலேயே தமிழகம் தான் கடைசியில் உள்ளது.கடந்த நிதியாண்டில் இந்திய அளவில் விவசாயத்துறை தான் கேட்பாரற்று கிடக்கிறது என்றால் தமிழகத்திலும் அதே நிலை தான். விவசாயத் துறையில் வளர்ச்சி மைனஸ் 1.9 சதவீதம் என்ற நிலையில் உள்ளது. தொழில் வளர்ச்சியில் கடந்த 2006-07ம் ஆண்டில் 9.4 சதவீதம் வரை தமிழகம் இருந்தது. ஆனால், 2008-09ம் ஆண்டில் வெறும் 1 சதவீதம் மட்டுமே தொழில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. சேவைத் துறையில் கடந்த 2008-09ம் ஆண்டுகளில் 8.2 சதவீதம் வரை இருந்த வளர்ச்சி தற்போது குறைந்து 7.6 ஆக ஆகிவிட்டது. 

கடந்த ஆண்டு ஆய்வின்படி, தனிநபர் வருமானத்தைப் பொறுத்தமட்டில் தென்மாநிலங்களில் கேரளா 49 ஆயிரத்து 310, தமிழகம் 45 ஆயிரத்து 58, கர்நாடகா 40 ஆயிரத்து 998, ஆந்திரா 39 ஆயிரத்து 590 ரூபாய் என உள்ளதாக தெரிய வந்துள்ளது.கடந்த நிதியாண்டில் ஜவகர்லால் நேரு நகர்ப்புற கட்டமைப்பு திட்டத்தின் மூலம் தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை ஆகிய மூன்று நகரங்களுக்கும் 3 ஆயிரத்து 980 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. மதிய உணவுத் திட்டத்தின் மூலம் தமிழகத்தில் 50.22 லட்சம் மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர். நதிகளை இணைக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு 25 சதவீதமும், மாநில அரசுகள் 35 சதவீதமும் பங்களிப்பதாக தற்போது உள்ளது. இதை மாற்றி இரு தரப்பும் 50 சதவீதம் அளவுக்கு ஏற்றுக்கொள்ள வேண்டுமென தமிழகம் வலியுறுத்தியுள்ளது. 

அடுத்த 2010-11ம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டை இறுதி செய்வதற்கு தமிழக முதல்வர் கருணாநிதி, வரும் 6ம் தேதி டில்லி வருகிறார். முதல்வரின் வருகை அதிகாரப்பூர்மாக இறுதி செய்யப்படவில்லை. கடந்த ஆண்டு துணை முதல்வரும் அதற்கு முந்தைய ஆண்டு நிதி அமைச்சர் அன்பழகனும் டில்லி வந்திருந்தனர்.இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, நிதி ஒதுக்கீட்டை பெற முதல்வர் வரவுள்ளார். 7ம் தேதியன்று திட்டக்கமிஷன் அலுவலகம் சென்று முறைப்படி நிதி ஒதுக்கீட்டை இறுதி செய்துவிட்டு, 8ம் தேதி சென்னை திரும்புவார் என்று தெரிகிறது. மேலும், டில்லியில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகியோரையும் முதல்வர் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் வெற்று மாய வேலைகளில்தான் தமிழக அரசு செய்து கொண்டுள்ளது எனபது தெளிவாகிறது. உள் கட்டமைப்பு வேலைகளில் காட்டிய தீவிரத்தை , உண்மையான தொழில் வளர்ச்சியில் மற்றும் விவசாய முன்னேற்றத்தில் காட்டவில்லை எனபது உண்மை.