காவல்துறையினர் குற்றவாளிகளைப் பிடிக்க இயலாதபோது அப்பாவிகளை அடித்து, துன்புறுத்தி குற்றத்தை ஏற்றுக்கொள்ளச் செய்வார்கள் என்பது 'சுதந்திர இந்தியா'வில் காலம் காலமாக தொடரும் அவலமாக இருந்து வருகிறது. இந்த சீருடை ரௌடிகளின் சித்திரவதைக் கொடுமைகளையும், மனித உரிமை மீறல்களையும் தோழர் தியாகு, 'சோளகர் தொட்டி' ச.பாலமுருகன் உள்ளிட்டோர் புத்தகங்களாக எழுதி வெளிக்கொணர்ந்தபோது, மானுட விழுமியங்களின் மீது அக்கறை கொண்டோர் எல்லாம் அதிர்ச்சி அடைந்தனர். அத்தகைய புத்தகங்களில் ஒன்றுதான் தோழர் பூங்குழலி எழுதிய 'தொடரும் தவிப்பு'.
அடித்துத் துன்புறுத்தல், பாலியல் தாக்குதல்கள், மனரீதியான சித்திரவதைகள் இவைகளைப் பயன்படுத்தியே உலகப் புகழ் பெற்ற ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் மீதான குற்றப்பத்திரிக்கை தயாரிக்கப்பட்டது. அந்த விசாரணைக்குழுவுக்கு தலைமையேற்ற கார்த்திகேயன் இந்த வருடம் இந்திய அரசின் 'பத்ம விருது' பெறுகிறார் என்பதும், மானுட விழுமியங்களைக் குழிதோண்டிப் புதைத்து அவர் தயாரித்த குற்றப்பத்திரிக்கையினால் 19 ஆண்டுகள் சிறையில் வாடிய நளினி இப்போதும் விடுதலை செய்ய மறுக்கப்படுகிறார் என்பதும் வரலாற்றில் காணச் சகிக்காத காட்சிகளாக நம்முன் அரங்கேறுகின்றன.
நளினி உள்ளிட்ட பெண் கைதிகளை குற்றத்தை ஒப்புக்கொள்ளச் செய்வதற்கு கார்த்திகேயன் கும்பல் கையாண்ட கீழ்த்தரமான சித்திரவதைக் கொடுமைகளை 'தொடரும் தவிப்பு' நூலிலிருந்து இங்கு தருகிறோம். அனுமதித்த தோழர் பூங்குழலிக்கு நன்றி. - கீற்று ஆசிரியர் குழு
தன் கணவர் விஜயன் மற்றும் குடும்பத்தாருடன் வயிற்றில் குழந்தையோடு தமிழ்நாட்டு மண்ணில் காலடி வைத்தபோது செல்வ லட்சுமியின் மனமெங்கும் ஒருவித நிம்மதி பரவியது. குண்டு சத்தத்திற்கு நடுவேயான வாழ்விற்கு ஒரு முற்றுப்புள்ளி. இனி உயிருக்குப் பயந்து வாழ வேண்டியதில்லை. சுதந்திர மனிதர்களாகத் தாய் மண்ணில் வாழப் போகும் மகிழ்ச்சி.
தமிழ்நாட்டைத் தாய் நாடாகக் கொண்டபோதும் பிழைப்பிற்காக இலங்கை சென்ற குடும்பம் செல்வலட்சுமியுடையது. செல்வலட்சுமி, சுருக்கமாகச் செல்வி, பிறந்து வளர்ந்ததெல்லாம் ஈழ மண்ணில்தான் எனினும் தாய்நாட்டுத் தாகம் உள்ளூர இருந்தது. அங்கேயே விஜயனை மணந்து இன்று ஒரு குழந்தைக்குத் தாயாகும் சூழலில் போதிய வருமானமின்றி உயிருக்குப் பயந்து ஒவ்வொரு நொடியும் கழிப்பது கொடுமையாய் இருந்தது.
தாய் மண்ணிலே தன் குழந்தையை ஈன்றெடுத்த மகிழ்ச்சி செல்விக்கு. 6 மாதங்கள் நிமிடமாய் ஓடின. தூத்துக்குடி அகதிகள் முகாமில் பெரிதாக சிக்கல் என்று இல்லாவிட்டாலும் போதிய வருமானம் இல்லை.
சென்னை சென்றால் வாய்ப்புகள் அதிகம் இருக்கலாம் என்ற நம்பிக்கையில் சென்னை வந்து ஒரு வாடகை வீடமர்த்தி வசிக்கத் தொடங்கினார். செல்வி எதற்காகத் தாய்நாட்டிற்கு வரத் துடித்தாரோ அதற்கேற்றாற்போல் நிம்மதியான வாழ்க்கை. பொருளாதார சிக்கல்கள் இருந்தபோதிலும் சமாளிக்கக் கூடியதாகவே இருந்தது.
அகதிகள் முகாமில் உடன் இருந்தவர்கள் பழகியதுபோல் நட்புடன் சென்னைவாசிகள் பழகாதது செல்விக்கு ஒரு குறையாகவே இருந்தது. எப்போதாவது கணவர் அழைத்துவரும் ஈழத்து நண்பர்கள் ஒரு பெரிய ஆறுதல். முன்பின் அறியாதவர்களாயினும் தான் பிறந்த மண்ணைச் சேர்ந்தவர்கள் என்ற பாசத்தில் அவர்களை உபசரிப்பதில் தனி சுகம். அப்படி விருந்தோம்பிய சுகமே தனக்குப் பேரிடியாய் வரப்போவது செல்விக்கு முன்பே தெரிந்திருந்தால் ....?
அந்தக் கொடிய நாளும் வந்தது. சூலை 9, 1991. எட்டு மாதக் கைக்குழந்தையுடன் அவரைக் கொண்டு சென்றது சி.பி.ஐ. கணவர் தந்தை இருவரும் உடன் வந்ததால் சிறிதளவு மன தைரியத்துடன்தான் சென்றார். ஆனால் நடந்ததோ வேறு.
'மல்லிகை' – பூக்களில் மெல்லியதை இந்தக் கொடியவர்களின் இருப்பிடத்திற்குப் பெயராய்ச் சூட்டியது யாரோ!
மல்லிகைக்குள் நுழைந்த நிமிடமே மூவரும் வெவ்வேறு திசையில் பிரிக்கப்பட்டனர். துவங்கியது கொடுமைப்படலம். உடல் ரீதியாக துன்புறுத்தாமலேயே இத்தனை கொடுமைகள் செய்ய முடியும் என்பது செல்விக்குப் பேரதிர்ச்சி. தான் எதற்காகக் கொண்டு வரப்பட்டிருக்கிறோம் என்பதுகூடப் புரியாத நிலையில் மேலும் பல புதிரான புரியாத கேள்விகள். ஏதேதோ பெயர்களைக் கூறித் தெரியுமா என்பதும், முன்பின் பார்த்திராத மனிதர்களைக் காட்டி இவன்தானே அவன்தானே என அடையாளம் காட்டச் சொல்வதும் செல்விக்கு ஏதோ ஒரு புதிய உலகத்திற்கே வந்ததுபோல் இருந்தது. சரியான உணவின்றி, உறக்கமின்றி 21 நாட்கள்... அழும் குழந்தையைச் சமாதானப்படுத்தக்கூடத் தெம்பின்றி ... உடலளவில், மனத்தளவில் முற்றிலும் சோர்ந்து துவண்டுவிட்டார்.
21ஆம் நாள் அந்தக் கட்டிடத்தைவிட்டு வெளியே அழைத்து வரப்பட்டதும் வந்த நிம்மதி, சில நிமிடங்களிலேயே காணாமல் போனது. ஒரு சிறையிலிருந்து மற்றொன்று என்பதுபோல், சி.பி.ஐ. பாதுகாப்பிலிருந்த சைதாப்பேட்டைச் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டார். ஒரே ஆறுதல் அங்கு ஏற்கனவே இருந்த அவருடைய மாமனார்தான். அவர்மூலம் தெரிந்த செய்திகள் மேலும் மனநிம்மதியை அழிப்பதாகவே இருந்தன. கிராமத்திலிருந்த உறவினர்கள் பலரும் இரண்டிரண்டு நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டுத் துன்புறுத்தப்பட்ட கோரம்.
மல்லிகையில் நடந்தது பெருமளவு இங்கும் தொடர்ந்தது. அங்குதான் அறிமுகமானார் சாந்தி. தன்னைப் போலவே கைக்குழந்தையுடன் இருந்த அவர்மீது இயல்பாக ஒரு நட்புணர்வு தோன்றியது. அந்தப் பெண்பட்ட துன்பங்கள் நட்பை இறுக்கியது. செல்வியின் கணவரைப் போலவே சாந்தியின் கணவரும் சி.பி.ஐ. பிடியில்.
தன்னைவிட அதிகமாய்ச் சாந்தியை அதிகாரிகள் துன்புறுத்தியது செல்விக்குச் சாந்தி மீது பரிதாபத்தை ஏற்படுத்தியது. அவரை சி.பி.ஐ. அதிகாரிகள் அழைத்துச் சென்ற நேரங்களில் தன் மகனைப் போல் அவர் மகனையும் பார்த்துக்கொள்ளத் தொடங்கினார்.
எத்தனையோ நாட்கள் மதியம் 2 மணிக்கு அழைத்துச் செல்லப்பட்டுச் சாந்தி மறுநாள் அதிகாலை 3 மணி வரை விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தப்பட்டுச் சக்கையாய் வெளிவரும் நிலை. முகாமிற்குள்ளேயே இருந்த ஒரு அறைதான் விசாரணை அறையாய்ப் பயன்படுத்தப்பட்டது. அந்த அறையிலிருந்து சாந்தியின் அலறல் வெளிப்படும் ஒவ்வொரு முறையும் அதன் எதிரொலியாய்ப் பயந்து அலறும் அவரது மகனின் குரல் அறைக்கு வெளியே.
மிகக் கொடுமையான காலகட்டங்கள்.
நாங்கள் கேட்பதை எழுதிக்கொடு உன்னை விட்டுவிடுகிறோம் என ஆசை வார்த்தைகள். செல்வி மிகுந்த தைரியத்துடன் மறுத்துவிட்டார். 'சுபாவும் தணுவும் என் வீட்டில்தான் தங்கியிருந்தனர். தணுவுக்குக் குண்டை நான்தான் கட்டிவிட்டேன். இதை மட்டும் ஒத்துக்கொள் உனக்கு அதிகம் சிக்கல் வராமல் நான் பார்த்துக்கொள்கிறேன்' என்றார் விசாரணை அதிகாரி.
'நீங்கள் கூறுபவர்களை எனக்குத் தெரியாது. நடக்காத ஒன்றை என்னால் எழுதித்தரமுடியாது' என செல்விப் பிடிவாதமாக மறுக்க.
'சரி! அப்படியானால் உன் கணவரையாவது நாங்கள் சொல்லும்படி நடக்கச்சொல். உன்னை விட்டுவிடுகிறோம். உன் குழந்தைக்கு வசதி வாய்ப்புகள் செய்து தருகிறோம்" – மீண்டும் ஆசைவார்த்தைகள்.
செல்விக்கு வேகமாக யோசனை ஓடியது... . தகப்பனும் சிறையில் .. மாமனார் தன்னுடன் சிறப்பு முகாமில் ... வெளியே தாயும் மாமியாரும் ஆதரவின்றி. . போதாதென்று உறவினர்களுக்கு வேறு அவ்வப்போது போலிசு தொல்லை... பிள்ளைக்கு வசதி செய்கிறார்களோ இல்லையோ இந்தக் கொடுமைகளுக்கெல்லாம் விடிவு வரக் கணவரிடம் பேசுவதுதான் ஒரே வழியென முடிவெடுத்தார். நாளும் அதிகாரிகளிடம் பட்ட கொடுமைகளால் மிகுந்த மனச்சோர்வுக்கு ஆளாகியிருந்த அவருக்கு இதைத் தவிரவும் வேறு முடிவு தோணவில்லை.
அவர் சம்மதித்த மறுநிமிடமே விசாரணை அதிகாரி மல்லிகையிலிருந்த விஜயனுடன் தொலைபேசித் தொடர்பு ஏற்படுத்தித் தந்தார். விஜயனின் முதல் கேள்வி – குழந்தை நலமா? – நலமென உரைத்த செல்விக்கு நாக்கு வறண்டது. மீண்டும் விஜயனே பேசினார்... 'என்னதான் சொல்றாங்க?' அதற்கு மேல் அடக்கமுடியாது வெடித்த அழுகையூடே 'அவங்க சொல்றபடி செஞ்சிருங்க என்னால தாங்க முடியல..' எனக் கதறினார் செல்வி.. அடுத்த வார்த்தை பேசும்முன் தொடர்பு துண்டிக்கப்பட்டது. ஆனால் செல்விக்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. அதிகாரிகளின் விசாரணைக் கொடுமைகள் தொடரவில்லை எனினும் சிறப்பு முகாம் சிறைவாசம் தொடர்ந்தது.
மேலும் ஒரு 8 மாதம். இதற்கிடையே செங்கல்பட்டுச் சிறைக்கு மாற்றப்பட்டிருந்த விஜயனுக்கு வழக்கறிஞர் துரைசாமி பரிச்சயமானார். அவர் மூலமாக வழக்குத் தொடுத்துச் செல்வி சிறப்பு முகாமிலிருந்து வெளியே வந்தார். 10 நாட்கள் ஊருக்குச் சென்று அத்தை வீட்டில் தங்கிவிட்டுப் பொருட்களை எடுத்துச் செல்ல மீண்டும் சைதைச் சிறப்பு முகாமுக்கு வந்த செல்விக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அவருக்கு முன்பே அங்கு வந்து காத்திருந்தனர் சி.பி.ஐ. அதிகாரிகள். உடனே தங்களுடன் கிளம்புமாறு உத்தரவிட்டனர். செல்விக்கு அடி வயிறு கலங்கியது. இந்த முறை எத்தனை நாட்களோ? என்ன என்ன சித்ரவதைகளோ நினைக்கையிலேயே பகீரென்றது. எதற்கும் மாற்றுடை எடுத்துக் கொள்ளலாமென நினைத்தார். ஆனால் எதற்கும் நேரம் கொடுக்கவில்லை அவர்கள். இழுத்துச் சென்றுவிட்டனர். இந்த முறை ஏதோ ஒரு புதிய இடம். எங்குச் செல்கிறோம் என்பது செல்விக்குப் புரியவில்லை. இறுதியில் வந்து சேர்ந்த இடம் பூந்தமல்லிச் சிறை என்பதை அவர்கள் பேச்சிலிருந்து ஒருவாறு புரிந்து கொண்டனர். மல்லிகையோ, சிறப்புமுகாமோ – விசாரணைக் கூடங்கள். ஆனால் இந்த முறை சிறைக்கு ஏன் கூட்டிச் செல்கிறார்கள்? ஏதோ விபரீதம் நடக்கப் போகிறதென்று மட்டும் செல்விக்குப் புரியத் தொடங்கியது.
சிறையில் ஒரு தனி அறையில் அவரையும் குழந்தையையும் வைத்துப் பூட்டிவிட்டுச் சென்றனர். பசித்தது. குழந்தையும் பசியால் அழத் துவங்கினான். ஒன்றரை வயது பாலகனுக்கு என்ன தெரியும்? அவனுக்குக் கூட உணவளிக்காமல் சென்றுவிட்டனரே கிராதகர்கள். பெற்ற மனம் பதறியது. அழுது அழுது சோர்ந்து உறங்கியே விட்டான் பிள்ளை. அவன் மீது மொய்த்த கொசுக்களை விரட்டும் வகையறியாது தவித்தார். சட்டெனத் தன் சேலையைக் களைந்து அதில் மகனைக் கிடத்தி அதையே மேலே போர்த்தியும் விட்டார். இரவு முழுவதும் உறக்கமில்லை.
ஏன் இந்த நிலைமை நமக்கு? நாம் என்ன செய்தோம்? யாரோ செய்த தவறுகளுக்கு நாம் ஏன் அவதிப்படவேண்டும்? நினைக்க நினைக்க அழுகைப் பொங்கியது. உண்மையிலே செல்விக்கு எதற்காக தான் சித்ரவதை செய்யப்படுகிறோம் என்பது நீண்ட நாட்களுக்குப் புரியவில்லை. இந்த வழக்கிற்கும் நமக்கும் என்ன தொடர்பு, ஏன் வீணாக நம்மைத் தொந்தரவு செய்கிறார்கள்? இவர்கள் குறிப்பிடும் யாரையுமே நமக்குத் தெரியவில்லையே? ஈழத்திலிருந்து வந்தவர்கள் என்பதற்காகவா இந்தக் கொடுமை? இல்லை ஆதரவிற்கு யாருமற்ற ஏழைகள் தானே எது வேண்டுமானாலும் செய்யலாம் என்ற துணிவா? ஒன்றும் புரியாது இருந்தார். அப்போதுதான் ஒருநாள் சி.பி.ஐ. அதிகாரிகள் வந்து அவருடன் சாந்தியையும் மற்றுமொருவரையும் சைதை சிறப்பு முகாமிலிருந்து அழைத்துக்கொண்டு சென்றனர். வெகுதூரப் பயணம். எங்கு செல்கிறோம் என்று கேட்கக்கூட அஞ்சியவர்களாக அமர்ந்திருந்தனர். இறுதியில் பெங்களுர் நகரை வந்தடைந்து ஒரு மருத்துவமனைக்குள் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்குக் கிடத்தப்பட்டிருந்த ஒரு மனித உடலைக் காட்டி யாரெனக் கேட்டனர். 'சொல் இவன்தானே சிவராசன்?, அதட்டலாக வந்த அதிகாரியின் குரல் பயமுறுத்தினாலும் தெரியாததைத் தெரியாது என்றுதானே சொல்லமுடியும். அதிகம் வற்புறுத்தவில்லை அதிகாரிகள்.
பின்னர் அங்கிருந்து மற்றொரு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு இரண்டு மூன்று உடல்கள் கிடத்தப்பட்டிருந்தன. முதல் உடலின் துணியை விலக்கி மீண்டும் அதே அதிகாரத் தோரணையோடு ஒலித்தது அந்தக் குரல்... 'சொல் – சிவராசன் தானே? ...'
அருகில் சென்று பார்த்த செல்விக்கு அந்த முகத்தைப் பார்த்த நினைவு வந்தது. சட்டென நினைவு வந்தது... 'இவர் ஒரு முறை விஜயனோடு நம் வீடு வந்துள்ளாரே நான்தானே உணவளித்தேன்...' செல்வியின் முகமாற்றத்தைக் கவனித்த அதிகாரி 'சொல்லு இவன் தானே' – என்றார். பிணநெடி தாங்காது சேலைத் தலைப்பால் முகத்தை மூடியவாறே ஆமென தலையசைத்தார். 'என்ன செத்துபோயிட்டான்னு அழறியா?' – எகத்தாளமாகக் கேட்டார். இல்லையென்றவாறே மெல்லப் பின்வாங்கினார் செல்வி.
அன்றுதான் தன்னை இந்த வழக்கிற்காகத் துன்பப்படுத்துவதன் காரணம் புரிந்தது செல்விக்கு, வீட்டிற்கு வந்த விருந்தினரை உபசரித்து உணவளித்ததுதான், தான் செய்த பெரும் குற்றம் என்பதை அவரால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
சிறப்பு முகாமிலிருந்து விடுதலை கிடைத்தபோது மகிழ்ந்துதான் போனார். கணவரும் தந்தையும் சிறையில் இருந்தாலும் தானாவது வெளியே இருந்து குழந்தையை நன்கு வளர்க்க ஒரு வாய்ப்புக் கிடைத்ததே என்று மன நிம்மதி கொண்டார். இதோ அதுவும் இன்று பறிபோனது. இன்னும் என்னவெல்லாம் காத்திருக்கிறதோ? பயம்! மனம் முழுக்க பயம்.
மறுநாள் ஒரு அதிகாரி வந்தார்.
'நீ ஒப்புதல் வாக்குமூலம் கொடு. கொடுத்தால் உன்னை சாட்சியாக்கிவிட்டு வழக்கில் சேர்க்காமல் விட்டுவிடுகிறோம்' என்றார்.
இந்த அதிகாரியைப்பற்றிச் சிறையில் பார்த்தபோது ஏற்கெனவே கணவர் கூறியிருந்தது நினைவுக்கு வந்தது. வழக்கில் சேர்க்கப்பட்ட அனைவரிடமும் பலவித வழிமுறைகளைக் கையாண்டு ஒப்புதல் வாக்குமூலம் என்ற பெயரில் ஏற்கெனவே எழுதப்பட்ட தாள்களிலும் வெற்றுத் தாள்களிலும் கையெழுத்து வாங்கியவர் இவர்தான். அது தெரிந்ததால் வாக்குமூலம் கொடுக்க மறுத்துவிட்டார் செல்வி. செல்விக்கு முன் உள்ளே சென்றுவந்த சாந்தியும் 'கொடுக்க முடியாது. இப்படித்தானே எல்லோரிடமும் ஏமாற்றி வாங்கினீர்கள்' எனச் சண்டை பிடித்து வந்ததைக் கேட்டவுடன் செல்விக்கும் தைரியம் வந்தது. சாந்தி கூறியதைப் போலவே கூறி கையெழுத்திட மறுக்க . . 'சரி அப்ப வெற்றுத் தாள்களிலாவது கையெழுத்துப் போடு' என மிரட்டினார். அதற்கும் முடியாது எனப் பிடிவாதமாக மறுக்க, 'கொடுக்க முடியாது என்றாவது எழுதிக்கொடு' என்றார். 'என்ன எழுதினாலும் அதை மாற்றி விடுவீர்கள் நான் எதுவும் எழுத மாட்டேன்' – என உறுதியோடு மறுத்தார் செல்வி.
'அப்படியானா இங்கயே பட்டினியா கிடந்து சாவு' என்று கோபமாக எழுந்துசென்றுவிட்டார்.
3 நாட்கள் 3 நெடிய நாட்கள் உணவின்றிச் சோர்ந்து பசியால் அழும் குழந்தையைச் சமாளிக்கவும் தெரியாது, வார்த்தைகளே சரியாக வராத அந்தப் பச்சிளம் பாலகன், அங்கிருந்த காவலர்களை அழைத்து 'மாமா சோறு தா மாமா' – எனக் கெஞ்ச – அந்தக் குரல் செல்வியின் மனத்தை அறுத்தது. 'ஐயோ என் பிள்ளைக்கு ஒரு வாய் சோறுகூடக் கொடுக்க முடியாத பாவியாயிட்டேனே..' கதறியது அந்தத் தாயுள்ளம்... பேசாமல் அவர்கள் கேட்பதை எழுதிக்கொடுத்துவிடலாம் என்ற முடிவுக்கே வந்துவிட்டார் எனினும் மனதோரம் ஒரு குரல்... . 'இன்று குழந்தையின் பசியைத் தீர்க்க எழுதிக் கொடுத்து அவன் எதிர்காலத்தையே வீணாக்கிவிடாதே....
அந்தக் குரலின் வீரியமும் நேரமாக ஆகக் குறையத் தொடங்கியது. மிக பலவீனமாகியிருந்த அந்தக் குரலுக்குச் செவிசாய்க்கும் மனநிலையில் அவர் இல்லை. எழுதிக் கொடுத்துவிடலாம் என முடிவெடுத்தபோது அந்த அறையின் கதவுகள் திறந்தன. உணவுத் தட்டை நீட்டியவாறு ஒரு காவலர் நின்றிருந்தார். செல்விக்குத் தன் கண்களையே நம்பமுடியவில்லை.
அவசரமாக அந்தத்தட்டை வாங்கி முதலில் குழந்தைக்கு ஊட்டத் தொடங்கினார். மயங்கியிருந்த பிள்ளைக்குச் சோறு இறங்கவில்லை. நீரும் சோறுமாக மாற்றி மாற்றிக் கொடுத்து ஒரு வழியாகப் பிள்ளைக் கண் திறந்து சிரித்த பிறகுதான் செல்விக்குத் தானும் சாப்பிடவில்லை என்பதே உறைத்தது. மீதியிருந்ததை உண்டு முடிப்பதற்குள் அதிகாரிகள் வந்துவிட்டனர். 'கிளம்பு கோர்ட்டுக்கு..' தனக்கு உணவளிக்கப்பட்டதன் காரணம் புரிந்தது செல்விக்கு. அமைதியாக எழுந்து குழந்தையையும் தூக்கிக்கொண்டு அவர்களுடன் சென்றார். நீதிபதி கூறியபின்தான் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாற்றுகளைப் பற்றித் தெரிந்தது செல்விக்கு.
நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார் நீதிபதி.
செல்வி, அவர் தந்தை பாஸ்கரன், மூவரும் அங்கிருந்து செங்கல்பட்டுச் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். வழியெங்கும் பொங்கி வந்த கண்ணீரை அடக்கியபடி குழந்தையை மார்போடு அணைத்தவாறே வந்தார் செல்வி. 'இறுதியில் நம்மையும் வழக்கில் மாட்ட வைத்துவிட்டார்களே இந்தப் பாவிகள். இவர்களுக்கு இரக்கம் என்பதே கிடையாதா? இவர்கள் பேச்சை நம்பி விஜயனை வேறு நீட்டிய இடத்தில் கையெழுத்திடச் சொல்லிவிட்டோமே. இப்போது இருவரும் இந்தச் சதியில் சிக்கிக்கொண்டோமே. அய்யோ என் பிள்ளையின் எதிர்காலம் என்னவாகப் போகிறதோ.. சாதாரண வழக்காக இருந்தாலும் பரவாயில்லை. இது அரசியல் வழக்காயிற்றே. இன்னும் என்னவெல்லாம் நடக்கப்போகிறதோ?' மனத்திற்குள் அரற்றியவாறே வந்தார்.
செங்கைச் சிறையுள் வழக்கமான நடைமுறைகள் முடிந்து பெண்கள் சிறையுள் தனியே விடப்பட்ட அடுத்த கணமே அத்தனை நேரமும் அடக்கி வைத்த அழுகை பீறிட்டுக் கிளம்பியது. மகனைக் கட்டியணைத்து அப்படியே தரையில் அமர்ந்து கதறத் தொடங்கினார். உடன் வந்த சாந்திக்கும் அழுகையை அடக்க முடியவில்லை. அம்மாக்கள் அழுவதைப் பார்த்துப் பிள்ளைகளும் கதற அந்த வளாகமே இவர்கள் அழுகைக் குரலால் நிரம்பியது.
யாரோ தன் தோளைத்தொட்டு சமாதானப்படுத்துவது தெரிந்ததும் நிமிர்ந்து பார்க்கும் சுய நினைவின்றி அவரது அழுகை தொடர்ந்தது. ஒரு வழியாக மெது மெதுவாய் அழுகை அடங்கி நிமிர்ந்தபோது எதிரே தன் வயதொத்த ஒரு பெண் நீர்க்குவளையுடன் நிற்பது தெரிந்தது. அமைதியாக நீரை வாங்கி அருந்தினார். சாந்திக்கு ஒருநடுத்தர வயது பெண் நீர் அளிப்பதும் தெரிந்தது.
மெதுவாக செல்வியின் கரம் பற்றிய அவ்விளம்பெண் 'இராசீவ் கேசா?' என்றார். யார் இவர்கள்? பதில் சொல்வதா வேண்டாமா ...? ஒருவேளை விசாரிக்க சி.பி.ஐ அதிகாரிகளே இப்படி யாரையும்அனுப்பி இருப்பார்களோ? பலவித சந்தேகங்கள். செல்வி இருந்த மனநிலையில் அவர் யாரையும் நம்பத் தயாராக இல்லை.
அவரது முகத்தில் தெரிந்த சந்தேகக் குறிகளைக் கவனித்த அப்பெண்– 'பயப்படாதீங்க ...நானும் உங்கள மாதிரி அந்த வழக்குல இருக்கிறவதான். என் பேரு நளினி. இவங்க என் அம்மா பத்மா' அந்த நடுத்தர வயதுப் பெண் நட்போடு புன்னகைத்தார். நளினி பின் சற்று தள்ளி நின்றிருந்த மற்றொரு பெண்ணைக் காட்டி 'அது ஆதிரை' – என்றார்.
இந்த வழக்கில் தொடர்பு படுத்தப்பட்டபிறகு அது தொடர்பான செய்திகளை ஓரளவு படித்து அறிந்து வந்ததால் சட்டென அவர்களைப் புரிந்தது. ஆனாலும் மனத்தில் ஒரு இனம் புரியாத கோபம் அவர்கள் மீது எழுந்தது. 'இவங்கல்லாம் தப்பு செஞ்சிட்டு உள்ள வந்திருக்காங்க– ஆனா நாம் இவங்க செஞ்ச தப்புக்காக அநியாயமா உள்ள வந்திருக்கோமே' என்ற உணர்வுதான் முதலில் தோன்றியது செல்விக்கு. தன் தோளைப் பற்றியிருந்த நளினியின் கையை மெதுவாக விலக்கினார்.
அதற்குள் எங்கிருந்தோ ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்க நளினி விரைந்து எழுந்து உள்ளே போனார். அப்போதுதான் நளினிக்குச் சிறையிலேயே குழந்தை பிறந்தது செல்விக்கு ஞாபகம் வந்தது. பெண்ணுக்குப் பெண் ஒரு இரக்கம் தோன்றியது.
'ஒன்றுமே செய்யாத நம்ம மேலே பொய் வழக்குபோட்டு இந்தப் பாடு படுத்தினார்களே– கைக்குழந்தையோடு இருந்த நம்மாலேயே அதைத் தாங்க முடியவில்லையே. பாவம் அந்தப் பொண்ணு வயத்துல பிள்ளையோட எத்தனை துன்பப்பட்டுச்சோ? ஒருவேளை அந்தப் பொண்ணையும் இப்படி சித்ரவதைப் பண்ணித்தான் வழக்குல சேர்த்தாங்களோ என்னவோ. நம்ம பிள்ளைக்காகதான நாம விஜயனை கையெழுத்துப் போடச் சொன்னோம். அந்த மாதிரி இந்தப் பொண்ணும் வயித்துப் பிள்ளைக்காக என்ன துன்பத்தையெல்லாம் தாங்குச்சோ. இத்தனை துன்பத்துக்கு நடுவுல சேதமில்லாம பிள்ளையப் பெத்து எடுத்ததே பெரிய விசயம்தான். அந்தப் பொண்ணு மேலபோய் அநாவசியமா கோபப்பட்டுட்டோமே?'
அதற்குள் சாந்தி பத்மாவிடம் தங்கள் இருவரின் கதையையும் கூறத் தொடங்கியிருந்ததைக் கவனித்தார். அமைதியாக அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தார். சாந்தி கூறி முடித்ததும் பத்மா அவர்கள் இருவரையும் ஆறுதல் படுத்தினார்.
'அவனுங்களுக்கு இதயமே கிடையாதும்மா'– என்றவாறே தாங்கள் அனுபவித்த சித்ரவதைகளைக் கூறினாள். கேட்ட செல்வியின் மனம் பதைத்தது. அவர்கள் அனுபவித்தவற்றில் தனக்கு நேர்ந்தது ஒன்றுமேயில்லையெனப் பட்டது. படுபாவிகள்.
பத்மாவிற்கு மூன்று பிள்ளைகள். மூத்தவர் நளினி. இரண்டாவது மகன் பெயர் பாக்கியநாதன். கடைக்குட்டி மகள் – கல்யாணி. இவர்களில் பத்மா, நளினி, பாக்கியநாதன் மூவரும் வழக்கில் மாட்டப்பட்டுச் சிறையில். போதாததற்கு நளினியின் கணவர் முருகனும். மீதம் உள்ள கல்யாணி மீது வழக்கில்லையே தவிர அவரும் சித்ரவதைகளுக்குத் தப்பவில்லை. சட்டத்திற்குப் புறம்பாக மல்லிகையில் வைத்து விசாரணை என்ற பெயரில் கொடுமைப்படுத்தப்பட்டார். ஒட்டுமொத்தக் குடும்பமும் பட்ட கொடுமைகள் சொல்லில் அடங்கா. அதிலும் வாக்குமூலம் பெறுவதற்காய் அந்த கொடியவர்கள் நடந்துகொண்டவிதம் இருக்கிறதே.
'உன் பிள்ளைகளைக் கொன்றுவிடுவோம்' – என மிரட்டியே பத்மாவிடம் கையெழுத்து வாங்கிவிட்டனர்.
பாக்கியநாதனிடம் வாங்கிய முறை மிகக் கேவலமானது. அடிக்கும் உதைக்கும் அஞ்சாது, எந்தவித மிரட்டலுக்கும் மசியாது இருந்த அவரின் மன உறுதியையே பொடிப்பொடியாக்கும் வகையில் ஒரு மிரட்டலை அவர் முன் வைத்தனர். ஆம்! பெற்ற தாயையும் உடன் பிறந்த சகோதரிகளையும் கண் முன் நிர்வாணம் ஆக்குவதாகக் கூறினால் எந்த ஆணுக்குத்தான் மனம் பதைக்காது? இத்தனை கீழ்த்தரமாய் நடந்து கொண்டவர்களை அதிகாரிகள் என்று கூறாமல் கொடியவர்கள் எனக் கூறுவது சாலப் பொருந்தும் தானே!
இது எல்லாவற்றிலும் உச்சக்கட்டம் நளினிக்கு நேர்ந்ததுதான். கைது செய்யப்பட்டபோது நளினி இரண்டு மாத கர்ப்பிணி. கைதான நொடி முதலே கொடுமைகள் துவங்கிவிட்டன. கைதான இடத்திலிருந்து மல்லிகைக்குக் கொண்டுவரும் வழியெங்கும், கணவனின் கண் முன்பே, கூட வந்த அதிகாரி நளினியிடம் தவறாக நடந்துகொள்ள முயல, பெரும் மன அதிர்ச்சிக்கு ஆளானார். மல்லிகையில் நடந்த கொடுமைகள் ஒவ்வொன்றும் வெளியே சொல்வதற்கே நாக் கூசும் அளவில் இருந்தன. கர்ப்பவதி என்றும் பாராமல் அவரை அடித்துத் துன்புறுத்தினர் பாவிகள். கணவன் கண் முன் மனைவியை நிர்வாணமாக்கி அடிப்பதும் மனைவி கண் முன் கணவனை நிர்வாணமாக்கி அடிப்பதும். இது போல எத்தனையோ ... ஒரு பெண்ணாக மற்றொரு பெண்ணிடம், ஏன் பெற்ற தாயிடம், கூட அதைச் சொல்வதற்குக் கூசினார் நளினி. அதையும் மீறிச் சொன்னவை போக, இன்னும் அவர் மனத்திற்குள் புதைந்து கிடப்பது எத்தனையோ?
போதாததற்கு, தாங்கள் சொன்னபடி கேட்காவிட்டால் அவள் கணவனைக் கொன்றுவிடுவதாக மிரட்டி இருக்கின்றனர். இவை எதுவும் பலிக்காமல் போகவே அடுத்த கட்டமாக இருவரையும் தனித்தனியாகப் பிரித்து உளவியல் ரீதியான தாக்குதல்களைத் தொடங்கி இருக்கின்றனர். நளினி அவர் கணவர் முருகனைவிட 5 வயது பெரியவர். இதை வைத்தே அவர்களிடம் விளையாடி இருக்கிறார்கள்.
'முருகன் உன்னைவிடச் சிறியவன், மேலும் வெளிநாட்டுக்காரன். அதனால் உன்னை ஏமாற்றிவிடுவான். அவனுக்குக் காரியம்தான் முக்கியம். அதற்காகத்தான் உன்னைக் காதலிப்பதாக நடித்திருக்கிறான். உன்னைப் போலப் பல பெண்களிடம் அவனுக்குத் தொடர்பு உண்டு. அதனால் நீ அவனை மறந்துவிட்டு அப்ரூவராகிவிடு. அப்படிச் செய்தால் உனக்குக் காவல்துறையிலிருக்கும் ஒரு அதிகாரியையே திருமணம் செய்து வைக்கிறோம். அரசாங்க வேலை தருகிறோம். அதோடு அரசு வீடு, அரசு பாதுகாப்பு என வசதியாக வாழலாம்' – இப்படியெல்லாம் பலவிதமாகப் பேசியிருக்கின்றனர்.
அதே நேரம் முருகனிடம் சென்று 'நளினி உன்னைவிடப் பெரியவள். உன்னை நன்றாக ஏமாற்றுகிறாள். அவள் நடத்தை சரியில்லை. பலருடன் தொடர்பு வைத்துள்ளது எங்கள் விசாரணையிலிருந்து தெரியவந்தது. நீ விரும்பினால் அதையெல்லாம் உனக்கு நிரூபித்துக் காட்டுகிறோம் – என்று கூறியுள்ளனர். இதற்கும் இவர்கள் மசியாதபோது பத்திரிகைகளுக்குப் பலவாறாக பொய்ச் செய்திகள் கொடுத்துள்ளனர்.
'நளினியின் குழந்தைக்குத் தந்தை யார்?'
'விடுதலைப் புலிகளின் உயர்மட்டத் தலைவருடன் நளினிக்குத் தொடர்பா?'
'நளினி குழந்தையைக் கொல்ல முயன்ற முருகன்!' – இப்படிப் பொய்ச் செய்திகள் பத்திரிகைகளில் வரத் தொடங்கின. நளினியின் வயிற்றில் முருகனின் குழந்தை உள்ளவரை அவர்கள் இருவரையும் பிரிக்க முடியாது என நினைத்து அக்குழந்தையைக் கருவிலேயே அழிக்கப் பல விதங்களில் முயன்றனர். நளினியின் தாய் பத்மாவையும், தம்பி பாக்கியநாதனையும் துன்புறுத்தி நளினியிடம் குழந்தையை அழிக்க வற்புறுத்துமாறு மிரட்டினர்.
எதுவும் நடக்காமல் போகவே உடல்ரீதியாக மட்டுமல்லாமல், மிக மோசமான வார்த்தைகளால் வசைபாடுவதன் மூலமும், தங்கள் ஆத்திரத்தைத் தீர்த்துக் கொண்டனர்.
முருகனையும், நளினியின் தாய் பத்மாவையும் மிகக் கேவலமாகத் தொடர்புப்படுத்தி வசைபாடும் அளவிற்குத் தரம் இறங்கினர். எல்லாக் கொடுமைகளையும் பொறுத்துக்கொண்டு, சரியான உணவின்றி உறக்கமின்றி அந்தக் குழந்தையைப் பெற்றெடுக்க நளினி பட்ட சிரமங்களைக் கேட்ட செல்வியின் நெஞ்சம் உருகியது. அவர்கள் மீது கோபப்பட்டதற்காக மீண்டும் வருந்தினார்.
நளினி, பத்மா, செல்வி, சாந்தி, ஆதிரை ஐவரும் ஒருவருக்கொருவர் ஆறுதலாக ஒரு குடும்பமாகச் சிறைவாழ்வைக் கழித்தனர். நளினி, சாந்தி, செல்வி, மூவரின் குழந்தைகளும் வேறுபாடின்றி ஒன்றாக வளர்ந்தன.
சி.பி.ஐ.யின் வன்கொடுமைகளிலிருந்து தப்பித்துவிட்டபோதும் சிறை வாழ்க்கை அவர்கள் மன நிலையை மிகவும் பாதித்தது. அதிலும் குழந்தைகள் வளர வளர, அவர்களுக்குச் சரியானபடி உணவளிக்க முடியாமல் போவதும், அவர்களின் மனநிலை பாதிக்கப்பட்டுவிடுமோ என்ற பயமும் அந்தத் தாயுள்ளங்களை அறுத்தன. மாற்றுடைகள் கிடையாது. தேவையான பொருட்களை வாங்கித்தர உறவினர்கள் கூடக் கிடையாதென அவதியடைந்தனர். அதிலும் செல்விக்குப் பொருளாதார ரீதியாக உதவக்கூட யாருமில்லை. ஏனெனில் செல்வியின் உறவினர்கள் மிகுந்த ஏழ்மை நிலையிலேயே இருந்தனர். இந்த நிலையில்தான் ஒரு தெய்வம்போல வந்து உதவியவர் அறிவு அம்மா. உள்ளே அறிவும் ஆதிரையும் உதவினால் வெளியே பல வகைகளில் உதவியவர் அறிவு அம்மா. வேறு யார் நம் அற்புதம்தான். செல்விக்கு மட்டுமன்று உள்ளேயிருந்த அனைவருக்கும் தன்னால் இயன்ற வரையில் என்றில்லாது, சிரமப்பட்டேனும் பல உதவிகளைச் செய்தார் அந்தத் தாய்.
சேலம் சிறைக்கு மாற்றப்பட்டவுடன் தன் மகனைக் கணவரின் அண்ணனோடு அனுப்பிவிட்டார் செல்வி. அந்தக் குடும்பம் ஒரு அகதிகள் முகாமில்தான் வாழ்ந்து வந்தது. அவருக்கு இரண்டு பிள்ளைகள். அதோடு மூன்றாவதாகச் செல்வியின் மகனையும் வளர்க்கச் சம்மதித்தார். ஆனால் வறுமைச் சூழல் காரணமாக வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே வந்து பார்த்துச் செல்லும் நிலை. ஒரு முறை இரண்டு ஆண்டு கழித்துத்தான் பார்க்க முடிந்தது மகனை. பெற்ற பிள்ளையின் வளர்ச்சியை அருகிலிருந்து காண கிடைக்காது போயினும் அந்த ஒருநாள் சந்திப்பின் ஒவ்வொரு நொடியையும் நினைவில் பொக்கிஷமாய்க் காத்து நினைத்து, நினைத்து மகிழ்ந்து அவனது அடுத்த வரவிற்காகக் காத்திருப்பதிலேயே நாட்கள் சென்றன.
பூந்தமல்லிச் சிறைக்கு மாறிய பிறகுதான் இன்னமும் கொடுமை. தனித்தனி அறைகளில் 24 மணி நேரமும் பூட்டிவைக்கப்பட்டிருந்தனர்.
பொதுவான பிரச்னைகளோடு பெண்களுக்கே உரிய பிரச்னைகள் வேறு. 'நாங்களாவது பரவாயில்லை. திருமணமானவர்கள், குழந்தை பெற்றவர்கள். ஆனால் ஆதிரைதான் பாவம். மிக சின்னப்பெண். திருமணமாகாதவர். மாதவிலக்கு நாட்களில் வயிற்றுவலியால் அவர்படும் வேதனை சொல்லி மாளாது. தனித்தனி அறைகளில் பூட்டப்பட்டிருப்பதால் அருகில் போய் அவருக்கு உதவவோ ஆறுதல் சொல்லவோ முடியாது. அதிகாரிகளிடம் கெஞ்சினாலும் அனுமதிக்கமாட்டார்கள். அவரது அறையிலிருந்து அவர் வலியில் துடிக்கும் சத்தம் கேட்டு எங்களது அறைகளில் நாங்கள் துடித்துக் கொண்டிருப்போம்.'
பூந்தமல்லிக்கு மாற்றப்பட்ட சிறிதுநாட்களிலேயே நளினியும் சாந்தியும் கூடத் தம் குழந்தைகளை வளர்க்க வெளியே அனுப்பிவிட்டனர். ஆனால் அந்தச் சிறிது நாட்களிலே குழந்தைகள் பட்ட துன்பம் கொடுமையானது. 24 மணி நேரமும் அடைத்து வைக்கப்பட்டுக் குழந்தைகள் முடங்கி விட்டனர். அதிகாரிகளிடம் காலில் விழாத குறையாகக் கெஞ்சியும் ஒரு மணிநேரம்கூட அறையில் இருந்துவெளிவர அனுமதிக்கப்படவில்லை.
அதற்காக ஒரு வழக்கும் போட்டே அதைப் பெற முடிந்தது. இப்படி ஒவ்வொரு சிறு சிறு விசயங்களுக்கும் போராட்டம், உண்ணாவிரதம் இருந்துதான் பல காரியங்கள் நிறைவேறின. இத்தனைக்கும் அச்சமயம் அவர்கள் வெறும் விசாரணைக் கைதிகள்தாம். குற்றவாளிகள் அல்லர். ஒரு கொடுங்கோலாட்சியின் அரசியல் கைதிகள் போல, போர்க் கைதிகள் போல நடத்தப்பட்டனர். ஆறு நெடிய ஆண்டுகளுக்குப்பின் ஒரு வழியாக விசாரணைத் தீர்ப்பு நாளும் வந்தது.
காலையில் வந்த நீதிபதி, மதியத்திற்கு ஒத்திவைத்த உடனேயே மனமெங்கும் திகில் பற்றிக் கொண்டது. கண்டிப்பாக விடுதலையாகி விடுவோம் என்று அதுவரை இருந்த நம்பிக்கை வழக்கறிஞர்களின் முகத்தைப் பார்த்தவுடன் குறையத் தொடங்கியது.
மாலை முதலில் நளினிக்குத் தூக்கு என்று வாசிக்கப்பட்டவுடன் அங்கு நிலவிய நிசப்தத்தை உடைத்துக்கொண்டு நளினியின் விசும்பல் கேட்டது. மனம் கலங்கியபோதும் 'சரி, முதன்மையாகக் குற்றஞ் சாற்றப்பட்டவர் என்பதால்தான் இப்படி இருக்கும். நமக்கெல்லாம் இருக்காது' என்று அந்த வேதனையான கணத்திலும் நம்பிக்கை மனதோரம்.
அடுத்து வரிசையாக சாந்தன், முருகன் . . எல்லோருக்கும் தூக்கு, தூக்கு என, அப்போதும் செல்வியின் மனத்தில் நம்பிக்கை மீதமிருந்தது. இருந்த அந்தத் துளியையும் துடைத்து எறிந்தது ஏழாவது குற்றம் சாற்றப்பட்டவரான கனகசபாபதிக்கும் தூக்கு என்ற தீர்ப்பு.
கனகசபாபதி வயது முதிர்ந்தவர். அதைக் கருத்தில் கொண்டாவது அவருக்குத் தூக்கு அளிக்க மாட்டார்கள் என்ற நினைப்புக்கு மாறாக அவருக்கும் தூக்கு என்றவுடன் நம்பிக்கை முழுவதுமாகத் தொலைந்து போனவராக தனக்கான தீர்ப்பை எதிர்நோக்கினார்.
ஆயிற்று ... 26 பேருக்கும் தூக்கு. வரலாறு காணாத தீர்ப்பு முடிந்தவுடன் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர். மறுநாள் 26 பேரையும் குழுக் குழுவாகப் பிரித்து வேறு வேறு சிறைகளுக்கு அனுப்பினர். நல்ல காலமாகப் பெண்கள் ஐவரும் ஒன்றாக வேலூர் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அனைவருக்கும் கைதிகளுக்கான உடை கொடுக்கப்பட்டது. அந்த உடை அணிந்தவுடன் அது வரை அடக்கிவைத்த கண்ணீர் பீறிட்டுக் கிளம்ப ஒருவரையொருவர் கட்டிப் பிடித்து அழுதனர்.
- பூங்குழலி
"தோழர் லீலாவதியைக் கொன்ற கொலை பாதகர்களுக்கு அண்ணாதுரை பிறந்த நாளில் விடுதலை, அதுவும் நன்னடத்தை விதிகளின் கீழ்...... தினகரன் அலுவலகத்திற்குள் நுழைந்து மூன்று ஊழியர்களை உயிரோடு எரித்துக் கொன்ற அட்டாக் பாண்டி என்னும் திமுக ரௌடிக்கும் விடுதலை. விடுதலை மட்டுமல்ல மதுரை மாவட்ட விவசாயத்துறை ஆலோசனைக் குழு வாரியப் பதவி. தா.கிருட்டிணனை அழகிரி கொல்லவில்லை என்று நீதிமன்றம் அவரை நிரபராதி என்று விடுதலை செய்து விட்டது. அப்படியானால் தா.கிருட்டினனை கொன்றது யார்? ஆமாம் யார்தான் கொன்றார்கள்? இந்தக் குற்றவாளிகள் எல்லாம் வெளியே வந்தபின்பு கெடாத சட்டம் ஒழுங்கு, நளினி என்ற பெண் வெளிவருவதால் கெட்டு விடப்போகிறாதா?" – யாழ்மகன்
நளினி விடுதலை - அரசியல் சிக்கலும் சட்ட சிக்கலும்: ஒரு விவாதம்
நாள்: 04-04-2010, ஞாயிறு மாலை 5 மணி,
இடம்: தெய்வநாயகம் பள்ளி, தி.நகர், சென்னை
வரவேற்புரை: பிரபாகரன், கீற்று.காம்
கருத்துரை
எழுத்தாளர் பூங்குழலி
பத்திரிகையாளர் அருள் எழிலன்
ஆவணப்பட இயக்குனர் பாரதி கிருஷ்ணகுமார்
பாடலாசிரியர் தாமரை
விடுதலை இராசேந்திரன் (பொதுச் செயலாளர், பெரியார் திராவிடர் கழகம்)
வழக்கறிஞர் சுந்தரராஜன்
வழக்கறிஞர் பாண்டிமாதேவி
நன்றியுரை: ப்ரியா, கீற்று.காம்
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: கீற்று இணையதளம்
நீங்களும் வாருங்கள்! உங்கள் நண்பர்களுக்கும் இந்நிகழ்வு குறித்து தெரியப்படுத்துங்கள்!!
என்றும் அன்புடன்
கீற்று ஆசிரியர் குழு
தொடர்புக்கு: 98840 68321
--
....நன்றி....
தூங்கும் புலியைப்
பறைகொண்டு எழுப்புவோம்...
தூய தமிழரைத்
தமிழ்கொண்டு எழுப்புவோம்!'