பென்னாகரம் தேர்தல் எப்படி நடந்தது ? ஒரு அதிர்ச்சியான செய்தி இங்கே
பென்னாகரம் தொகுதியில் போட்டியிட்ட 31 வேட்பாளர்களும் தலா 10 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் மூன்று கோடியே 10 லட்சம் ரூபாய் வரை தான் செலவு செய்ய வேண்டும் என்பது தேர்தல் விதிமுறை. ஆனால், தமிழகத்தில் நடந்த இடைத்தேர்தல்களிலேயே, பென்னாகரம் இடைத் தேர்தலில் 75 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆர்வலர்களின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.பென்னாகரம் இடைத் தேர்தலில் தி.மு.க.,- அ.தி.மு.க., -பா.ம.க.,- தே.மு.தி.க., மற்றும் சுயேச்சைகள் உள்ளிட்ட 31 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தி.மு.க.,- பா.ம.க., ஆகிய இரு கட்சி நிர்வாகிகள், ஜனவரி மாதம் முதலே பென்னாகரம் தொகுதியில் முகாமிட்டு தேர்தல் பணியாற்ற துவங்கினர்.
முதல் கட்டமாக அனைத்து கட்சியினருமே, அவர்கள் தங்கும் பகுதியில் தலா ஒரு வீட்டை 10 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை கொடுத்து வாடகைக்கு பிடித்தனர். முக்கியத் தலைவர்கள், வசதி மிக்க சில மாவட்ட செயலர்கள் உள்ளிட்டவர்கள் தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய நகரங்களில் உள்ள நட்சத்திர அந்தஸ்துள்ள ஓட்டல்களில் தங்கினர்.
வாக்காளர்களை கவருவதற்காக அனைத்துக் கட்சியினரும் ரொக்கத்தை வாரி இறைத்தனர். இதில், ஆளுங்கட்சியின் பங்கு அதிகமாக இருந்தது. பென்னாகரம் தொகுதி வாக்காளர் ஒவ்வொருவருக்கும் பணம் மட்டுமே தலா 2,000 ரூபாய் அரசியல் கட்சிகள் மூலம் கிடைத்துள்ளது. இதன் மூலம் பணம் மட்டும் தனிப்பட்ட வாக்காளர்களுக்கு வழங்கிய வகையில் மொத்தம் 40 கோடி ரூபாய் பட்டுவாடா செய்யப்பட்டள்ளது. பென்னாகரம் தொகுதியில் 300க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக் குழுவிற்கும் தி.மு.க.,- அ.தி.மு.க., மற்றும் பா.ம.க., சார்பில் 35 ஆயிரம் ரூபாய் வரை ரொக்கப் பணமாகவும், வங்கி கணக்குகள் மூலமும் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், ஒரு கோடி ரூபாய்க்கு மேல் பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிகளின் சார்பில் வாக்காளர்களுக்கு வேட்டி, சேலை, பேன்ட், சர்ட் மற்றும் கட்சி கரைப் போட்ட சால்வைகள், துண்டுகள் வழங்கிய வகையில் 10 கோடி ரூபாய் வரை செலவு செய்யப்பட்டுள்ளன.அரசியல் கட்சிகள் ஒவ்வொரு கிராமத்திலும் கட்சி அலுவலகங்கள் அமைத்த இடத்திற்கு வாடகை வழங்கியது, கட்சி கொடிகள், தோரணங்கள், பெயர் பலகைகள் உள்ளிட்டவைகளுக்காக தொகுதி முழுவதும் பிரதான கட்சிகள் நான்கும் சேர்த்து ஒரு கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்துள்ளது.
மேலும் காதணி விழா, திருமண வரவேற்பு நிகழ்ச்சிகள் நடத்தி மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி உள்ளிட்ட கறி விருந்து படைத்த வகையில் தி.மு.க., மற்றும் பா.ம.க., சார்பில் 50 லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்யப்பட்டுள்ளது.ஆரத்தி எடுத்து வரவேற்பு கொடுப்பது, கூட்டத்திற்கு ஆள் சேர்ப்பது உள்ளிட்ட பணிகளுக்காகவும், தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட கட்சி தலைவர்களை வரவேற்க விளம்பரங்கள், போஸ்டர்கள், துண்டு பிரசுரங்கள், கொடிகள், தோரணங்கள், கட்-அவுட்டுகள், ஒலி பெருக்கிகள், தலைவர்கள் வரும் வரை கூட்டத்தினர் கலையாமல் இருக்க குத்தாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.அதோடு, கூட்டத்திற்கு அழைத்து வரப்பட்ட வாக்காளர்களுக்கு தலா 100 ரூபாய் முதல் 150 ரூபாய் மற்றும் பிரியாணி பொட்டலம் வழங்கியது உள்ளிட்ட பிரசாரத்திற்காக 10 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் வெளிமாவட்டங்களை சேர்ந்த 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள், கடந்த ஒரு மாதமாக தங்கி தேர்தல் வேலை பார்த்த வகையில் அவர்கள் பயன்படுத்திய நூற்றுக் கணக்கான கார்களுக்கு டீசல் செலவு, நட்சத்திர அந்தஸ்தில் உள்ள லாட்ஜ்கள் மற்றும் சொகுசு வீடுகளில் தங்கிய வாடகை, அவர்களுக்கு சாப்பாடு செலவு, மதுபாட்டில்கள் செலவு என ஐந்து முதல் 10 கோடிக்கு மேல் செலவு செய்துள்ளனர்.இதை தவிர மத்திய, மாநில போலீசார் மற்றும் கர்நாடக போலீசார் என 2,000க்கும் மேற்பட்டோர் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இதன் மூலம் அவர்களுக்கு சாப்பாடு, போக்குவரத்து செலவு உள்ளிட்டவை செய்யப்பட்டுள்ளது.
மேலும் தேர்தல் நடத்திய அலுவலர்களான தலைமை தேர்தல் அலுவலர், தேர்தல் மேற்பார்வையாளர்கள், கலெக்டர், டி.ஆர்.ஓ., தாசில்தார்கள் உள்ளிட்ட வருவாய் துறையினர், மத்திய, மாநில அரசு ஊழியர்கள் மற்றும் மைக்ரோ அப்சர்வர்கள் உள்ளிட்டவர்கள் பயன்படுத்திய கார், அவர்களுக்கான கூடுதல் சம்பளம் உள்ளிட்டவைகள் சேர்த்து மூன்று கோடிக்கு மேல் செலவு செய்யப்பட்டுள்ளது. மொத்தத்தில் இதுவரை நடந்த இடைத்தேர்தல்களில் அதிக கரன்சிகளை புழங்க விட்டதன் மூலம் பென்னாகரம் புதிய சாதனை படைத்துள்ளது.